cuba girls armyகியூபப் புரட்சியின் கிளர்ச்சிப் படைகளில் பெண்கள் 5% மட்டுமே இருந்தனர் என்ற போதும் அதன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முன்னணியில் இருந்து நீக்கமற நிறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறங்களில் தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், சியரா மேஸ்ட்ராவிலும் கிளர்ச்சிப் படையில் அங்கம் வகித்து புரட்சிக்காக எல்லாவிதமான வேலைகளிலும் ஈடுபட்டனர்.

பெண் போராளிகள் காயமடைந்தவர்களுக்குச் செவிலியர்களாக மருத்துவ உதவிகளை செய்தனர், கல்வி கற்பித்தனர், தூதுவர்களாக இருந்தனர், ஆயுதங்கள் கடத்தினர், நிதி திரட்டினர், சமைத்தனர், ஆனால்  பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவது மட்டுமே அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை, அவர்கள்  ஆயுதங்கள் ஏந்திப் போராட விரும்பினர். பாலின அடிப்படையிலான பிரிவினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர்.

புரட்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாகவே மரியனா கிரஜலெஸ் என்ற பெயரில் பெண்களுக்கான ஆயுதப் படை உருவாக்கப்பட்டது. போராட்டத்தில்தான் அதுவும் பிறந்தது. அதனை உருவாக்குவதற்கு கடும் எதிரிப்புத் தெரிவித்த ஆண்களுடன் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.

நிராயுதபாணியாக ஆண்கள் இருக்கும் போது, ஒரு பெண்ணுக்கு ஏன் துப்பாக்கியை கொடுக்க வேண்டும் என்று அவர்களில் சிலர் கேட்ட போது “ஏனென்றால் அவர்கள் உங்களை விட கட்டுக்கோப்புடைய சிறந்த வீரர்கள்!” என்று ஃபிடல் காஸ்ட்ரோ பதிலளித்தார். விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பைப் பெரிதும் வலியுறுத்திய ஃபிடல் அவர்களின் துணிவிலும் வீரத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஃபிடலின் நன்னம்பிக்கையின் சின்னமாக மரியனா கிரஜலெஸ் திகழ்ந்தது.

மரியனா கிரஜலெஸ்:

ஸ்பானிய அடிமைத்தனத்திலிருந்து கியூபாவை விடுதலை செய்வதற்கான போராட்டத்தில் தன்னையும் தனது குழந்தைகளையும் அர்ப்பணித்த மாண்புமிக்க தாயான மரியனா கிரஜலெஸின் நினைவாகவே இப்பெயரை மகளிர் ஆயுதப் படைக்கு ஃபிடல் சூட்டினார். மரியனா கிரஜலெஸும் (ஜூலை 12, 1815 - நவம்பர் 23, 1893) அவரது குடும்பத்தினரும் தாய் நாட்டைக் காக்க 1868இல் ஆரம்பித்து 1878 வரை  தொடர்ந்த பத்து வருடப் போரிலும், 1895ஆம் ஆண்டுப் போரிலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர்.

மரியனாவின் மகன்களான ஜோஸும், அன்டோனியோ மேசியோ கிராஜலெஸும் 1868 முதல் 1878 வரை விடுதலை இராணுவத்தில் தளபதிகளாக பணியாற்றினர். மரியனா போர்க் களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உதவிசெய்து வந்தார். காயமடைந்த அன்டோனியோவை மீட்பதற்காக மரியனா கிராஜெலெஸும், அன்டோனியோவின் மனைவி மரியா கப்ரேல்ஸும் போர்க் களத்திற்குள் நுழைவதைக் கண்ட கியூபாவின் புரட்சித் தலைவர் ஹொசே மார்த்தி, இத்தகைய பெண்கள் இருக்கும் போது வீரராவது எளிது என்று குறிப்பிட்டுள்ளார்.

”அவர் என் இதயத்தை மிகவும் தொட்ட பெண்" என்று மரியனாவை போற்றிய மார்த்தி அவரை "தணிக்க முடியாத நெருப்பு" என்றும் "இதயத்தின் வேர்" என்றும் வர்ணித்துள்ளார். 1957இல் ஹவானாவின் மேயர் ஜஸ்டோ லூயிஸ் போசோ டெல் புவேர்ட்டோ, மரியனா கிரஜலெஸை "கியூபாவின் தாய்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துச் சிறப்பித்துள்ளார்.

மரியனா கிரஜலெஸ் ஆயுதப்படை:

1958 செப்டம்பர் நான்காம் நாள்  மகளிருக்கான சிறப்பு ஆயுதப்  படையாக மரியனா கிரஜலெஸ் உருவாக்கப்பட்டது. 13 இளம் பெண்களைக் கொண்ட மரியனா கிரஜலெஸ் படைப்பிரிவு புரட்சிகர இராணுவத்தில் தனித்துவமான அங்கம் வகித்தது. படைப்பிரிவின் உறுப்பினர்களான மரியனாக்கள் எம்-1 கார்பைன் ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.

மரியனாக்கள்:

1. இசபெல் லுய்சா ரீலொ ரோட்ரிக்ஸ் (தலைவர்)
2. டெல்சா எஸ்தர் பியூப்லா வில்ட்ரெஸ் (துணைத் தலைவர்)
3. ஓல்கா எஸ்தர் குவேரா பெரெஸ்,
4. எவா ரோட்ரிக்ஸ் பால்மா,
5. லிலியா ரீலொ ரோட்ரிக்ஸ்,
6. ரிட்டா கார்சியா ரெய்ஸ்,
7. ஏஞ்சலா அன்டோலின் எஸ்கலோனா, ஏஞ்சலினா
8. எடெமிஸ் தமாயோ நீஸ்,
9. நார்மா ரொசாஃபெரர் பெனிடெஸ்,
10. ஃப்ளோர் செலெஸ்டெ பெரெஸ் சாவேஸ்,
11. ஜுவானா பௌடிஸ்டா பேனா பீனா
12. ஒரொசியா சொடொ சர்டினா
13. அடா பெல்லோ அகொஸ்டொ பொம்பா

ஆயுதந்தரித்த மரியானா கிரஜலெஸ் வீராங்கனைகள்  பங்கேற்ற முதல் போர் தென்கிழக்கு மாகாணமான கிரான்மாவில் உள்ள செரோ பெலாடோவில் நடைபெற்றது. அதில் சற்றும் பின்வாங்காமல் எதிரிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். குய்சாவில் 10 நாள் தொடர்ந்த கடுமையான போரில் மிகச் சிறப்பாகப் போரிட்டு தங்களின் முழு ஆற்றலையும் காட்டினர். ஆரம்பத்தில் பெண்களுக்கான ஆயுதப் படை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அத்திட்டத்தை நிராகரித்த எடி சுனொலிடமே நற்சான்றிதழ் பெற்றனர்.

1958 செப்டம்பர் 28ஆம் நாள் பாத்திஸ்டா படைகளுக்கு எதிராக செரோ பெலாடோவில் மூன்று நாள் போரில் வெற்றி பெற்றதில் மரியானா கிரஜலெஸ் படைப்பிரிவு முக்கியப் பங்காற்றியது.

இசபெல், லிலியா, காலெகெ, டெட்டெ ஆகியோர் சிறப்பாகத் துப்பாக்கி சுடுவதால் அவர்களைக் கொண்டு ஹோல்குய்னில் சிமன் பொலிவர் படை உருவாக்கப்பட்டது. அக்டோபர் 21இல் ஹொல்குய்னின் லா பிரெசாவில், அவர்கள் பங்கேற்ற போரில் மற்ற கெரில்லாப் படைகளிலிருந்து பிரிந்து தனிமைபடுத்தப்பட்டிருந்த போதும், கடுமையாகப் போரிட்டனர். அதே போல் குய்சாவில் 2 சரக்குந்துகளில் காவலாளர்கள் திரண்டிருந்தனர், எடி சுனோல் காயமடைந்திருந்தார், என்ற போதும் இறுதி வரை போரிட்டு வெற்றி பெற்றனர்.

லொஸ் குய்ரொஸ், வெலஸ்கொ, செடெனா, கிபரா, நானாஸ், பியுர்தொ பத்ரெ, குய்சா, மாஃபொ எனப் பல இடங்களில் நடைபெற்ற சண்டைகளிலும் பங்கேற்றனர்.

ஜனவரி 1959இல் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கிழக்கு கியூபாவின் மலைப் பகுதியில் பள்ளிகள் அமைக்கும் வேலைகளிலும், மரியனாக்கள் பங்கேற்றனர். புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அவர்கள் நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இசபெல் லூயிசா ரியோ ரோட்ரிக்ஸ் (1927-1989):

இசபெல் லூயிசா ரியோ ரோட்ரிக்ஸ் கியூப வரலாற்றின் மிகச் சிறந்த வீராங்கனை. மரியனா கிரஜலெஸ் ஆயுதப் படையின் இன்னொரு வீராங்கனையான லிலியா ரியலொ ரோட்ரிகஸ் 1925இல் பிறந்தவர், இசபெல் லூயிசாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார். அவர்கள் சாண்டியாகோவில் சான் லூயிஸ் பகுதியில் ஒரு  விவசாயக் குடும்பத்தில் பிறந்தனர்.

அவரோடு பிறந்த எட்டுக் குழந்தைகளில் இசபெல் மட்டுமே பல்கலைக்கழகத்தில் படித்தவர். கிரான்மா கரையேறிய போது மருந்தியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்த இசபெல் தனது கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டின் நடுப் பகுதியில் ஜூலை 26 இயக்கத்தில் சேர்வதற்காகப் படிப்பைத் துறந்து வெளியேறினார். 

அவர் 1957இல் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்தார், 1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவரும் லிலியாவும் சியரா மேஸ்ட்ராவுக்குச் சென்று கெரில்லாப் போராளிகளுடன் இணைந்தனர். இசபெல் கிளர்ச்சிப் படையில் முதலில் தளபதி சே குவேராவின் தலைமையிலும், பின்னர் ஃபிடலின் தலைமையில் இருந்த முதல் படையான ஹொசே மார்த்தி படையிலும் செயல்பட்டார். பிறகு பெண்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பிற்குரிய மரியனா கிரஜலெஸ் ஆயுதப் படையில் தலைவராகச் செயல்பட்டார்.

சிமோன் பொலிவர் நான்காம் முன்னணி தொடங்கப்பட்ட போது இசபெலின் மிகச் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். கியூபப் புரட்சியின்  வெற்றிக்காக அயராது உழைத்த அவர் 1961ஆம் ஆண்டில் லிடியா டோஸ் என்ற இராணுவப் பள்ளியை நிறுவினார், அதன் இயக்குனராகவும் செயல்பட்டார். 1980களில், அவர் ஹெர்மனோஸ் அமீஜிராஸ் மருத்துவமனையின் மருந்து சேவைப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார் . வியட்நாம் சோசலிசக் குடியரசுடன் சர்வதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.

இசபெல் 1966இல் கியூப கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்தார்,  1974 முதல் கியூப மகளிர் கூட்டமைப்பின் மாகாணக் குழுவிலும் இணைந்தார். (அதன் முதல், இரண்டாம் மற்றும் நான்காவது காங்கிரஸில் கலந்து கொண்டார்). மேலும் பிளாயா நகராட்சியின் மக்கள் அதிகார நிர்வாகக் குழுவின் சுகாதார ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்

கியூபப் புரட்சிக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக அனா பெட்டான்கோர்ட், காமிலோ சியென்ஃபுகோஸ் போன்ற பல்வேறு விருதுகளாலும் சிறப்பிக்கப்பட்டார். 1989 ஏப்ரல் 9 அன்று அவர் இறந்தபோது, ​கர்னல் பதவியில் இருந்தார்.

ஓல்கா எஸ்தர் குவேரா பெரெஸ் (1932-1986):

ஓல்குயிடா என்று அழைக்கப்பட்ட ஓல்கா எஸ்தர் குவேரா பெரெஸ் கிரான்மாவில் உள்ள பிலானில் 1932இல் பிறந்தார். ஓல்கா புரட்சி இராணுவப் படையில் 1957ஆம் ஆண்டில் சேர்ந்தார். கெரில்லாப் படைகளின் ரெபெல்டே ஸ்பானிஷ் வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் ஒலித்த முதல் பெண் குரல் அவருடையதே. ரெபெல்டே வானொலி நிலையத்தின் வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றிய அவர் முடிதிருத்துபவராகவும், செவிலியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். 

ரீட்டா கார்சியா ரெய்ஸ் (1922-2008):

ரீட்டா கார்சியா ரெய்ஸ் கிரான்மாவின் ஜிகுவானில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர்.

ஏஞ்சலா அன்டோலின் எஸ்கலோனா:

ஏஞ்சலினா என்றழைக்கப்பட்ட ஏஞ்சலா அன்டோலின் எஸ்கலோனா. 1925இல் கிரான்மாவின் காம்பெச்சுவேலாவில் பிறந்தவர்.

1958 நவம்பர் 27 அன்று, குயிசா போரில் லோமா டி எல் மார்டிலோவில், எதிரிப் படையைச் சேர்ந்தவரால் தளபதி பிரவுலியோ கொரோனாக்ஸின் உயிர் பறிக்கப்பட்ட போது அவருக்கு அடுத்தபடியாக ரீட்டா கார்சியா, ஏஞ்சலா அன்டோலின் எஸ்கலோனா (ஏஞ்சலினா), ஈவா ரோட்ரிக்ஸ் பால்மா, அடா பெல்லா அகோஸ்டா பொம்பா மற்றும் ஃப்ளோர் செலஸ்டே பெரெஸ் சாவேஸ் ஆகியோர் இருந்தனர். எதிரிகளின் தாக்குதலினால் ஈவாவும், ஏஞ்சலினாவும் முழங்கால் ஆழத்திற்கு நிலத்தடியில் புதைந்தனர்.  ஏஞ்சலினா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவா ரோட்ரிக்ஸ் பால்மா: (1940-1993):

ஈவா ரோட்ரிக்ஸ் பால்மா கிரான்மாவின் பியூ அரிபாவில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர்.
ஜுவானா பாடிஸ்டா பேனா பேனா:

ஜுவானா பாடிஸ்டா பேனா பேனா 1943ல் கிரான்மாவின் பிலோனில் பிறந்தவர்.

அடா பெல்லா அகோஸ்டா பொம்பா:

அடா பெல்லா அகோஸ்டா பொம்பா 1938இல் கிரான்மாவின் காம்பெச்சுவேலாவில் பிறந்தவர்

நார்மா ரோசா ஃபெரர் பெனிடெஸ்:

நார்மா ரோசா ஃபெரர் பெனிடெஸ் 1944ஆம் ஆண்டில் கிரான்மாவின் யாராவில் பிறந்தவர்.

ஃப்ளோர் செலஸ்டே பெரெஸ்: (1941-2013):

ஃப்ளோர் செலஸ்டே பெரெஸ் சாவேஸ் கிரான்மாவின் யாராவில் 1941இல் பிறந்தவர்.

எடெமிஸ் தமயொ நுனெஸ் (1943):

எடெமிஸ் நண்பர்களால் கல்லேகா என அழைக்கப்பட்டார். எடெமிஸ் 1943 பிப்ரவரி 1 அன்று கிரான்மாவின் பார்டோலோமா மாஸேவில் உள்ள ஜார்ஸலில் பிறந்தார். சியரா மேஸ்ட்ராவில் பள்ளிகளும், ஆசிரியர்களும் பற்றாக்குறையாக இருந்ததாலும், பள்ளி செல்வதற்கான உடைகளும் காலணிகளும் எடெமிஸிடம் இல்லாததாலும் நான்காம் வகுப்பைக்  கூட அவரால் எட்ட முடியவில்லை. விவசாயப் பிண்ணனியில் வளர்ந்ததால், மலைகளும், கிராமப்புறங்களுமே அவரின் நெஞ்சுக்கு  நெருக்கமானவையாகின.

புரட்சிகரப் பாதை:

எடெமிஸ் 1958 ஜனவரி இறுதியில், 15 வயதுப் பெண்ணாக இருந்த போதே ​​சியரா மேஸ்ட்ராவுக்குச் சென்று கிளர்ச்சிப் படையில் சேர முடிவு செய்தார்.

ஜிபாகோவாவின் லாஸ் வேகாஸ் பகுதியில் அரசுக்கு எதிராக அவர் புரட்சிப் படையில் இணைந்து போரிட்டார். மே மாதம் வரை அங்கேயே இருந்து பின்னர் ப்ராவிடென்சியாவில் இடம் பெற்ற ஒரு முகாமிலிருந்து தூதராகப் பணியாற்றினார். அவரது போராட்ட வரலாறு கிரான்மா பிராந்தியத்திற்கு அப்பால் ஹோல்குயின் சியரா டி கிபாரா வரை நீண்டது, அங்குதான் அவர் எடி சுனோலின் 14ஆம் படையின் உறுப்பினராக இணைந்து செயல்பட்டார்.

1959 புரட்சியின் வெற்றிக்கு பின்னர், அவர் பல்வேறு அமைச்சகங்களில் பதவிகள் வகித்தார், கிராமப்புறங்களில் மருத்துவமனைகளை திறப்பதில் பங்களித்தார், முதியோருக்கான கலாசாரத் திட்டத்திலும் பங்களித்தார், கிரான்மா மாகாணத்தில் கியூபப் புரட்சிப் போராளிகள் கூட்டமைப்பு துவங்கியதிலிருந்தே அதன் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

ஒரோசியா சோட்டோ சர்தீனா:

ஒரோசியா சோட்டோ சர்தீனா கிரான்மாவின் புயுனா விஸ்டாவில் 1939ஆம் ஆண்டில் பிறந்தார். கொடுங்கோலன் பாத்திஸ்டா தப்பி ஓடிய பின், 1959 ஜனவரி 2ஆம் தேதி சாண்டியாகோவில் மக்களின் முன் ஃபிடல் ஆற்றிய உரையை மரியானாக்களில் ஒருவரான ஓரோசியா சோட்டோ பின்வருமாறு நினைவு கூர்ந்துள்ளார்: "... ஏனெனில் கியூபாவில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் போரிட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்டது, இதற்குச் சிறந்த ஆதாரமாக மரியானா கிரஜலெஸ் படைப்பிரிவு திகழ்ந்தது, இந்தப் படைப்பிரிவு பல போர்களில் தன் தனித்துவத்தைக் காட்டியுள்ளது. கியூபப் பெண்கள் நம் சிறந்த ஆண் வீரர்களைப் போலவே சிறப்புமிக்க வீராங்கனைகளாக உள்ளனர்."

1988 செப்டம்பர் 4 அன்று, மரியானா கிரஜலெஸ் பெண்கள் ஆயுதப் படையின் 30ஆம் ஆண்டு நினைவு நாளில், மகளிர் விமான எதிர்ப்பு பீரங்கி படைப்பிரிவின் தலைமையகத்தில் சிறப்பான முறையில் நினைவு விழா நடைபெற்றது. கியூப மகளிர் கூட்டமைப்பின் தலைவரான வில்மா எஸ்பின், அப்போதைய வியட்நாமின் துணைத் தலைவரும் வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான நுயான் தோன் மற்றும் புரட்சிகர ஆயுதப் படைகளின் தலைவர் ஜூலியோ காசாஸ் ரெகுயிரோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

கியூபப் புரட்சி வரலாற்றின் வீராங்கனைகளான மரியானாக்களின் பங்கேற்பைக்  கதையாக்கி “ஃபிடலுடன் கெரில்லா வீராங்கனைகள்” என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார் கியூபாத் தொலைக்காட்சி தகவல் அமைப்பின் பத்திரிகையாளரான வில்மர் ரோட்ரிகஸ் பெர்னாண்டஸ்.

இப்படமானது ஹவானா பல்கலைக்கழகத்தில்  கியூப இளைஞர் மன்ற  நிகழ்வில் மரியனா கிரஜெலஸின் 61 ஆண்டுக் கால வரலாற்றைப் போற்றும் வகையில், ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்த நாள் நினைவாக 2019ல் வெளியிடப்பட்டது .இதில் மரியானாக்களான டெல்சா எஸ்தர் பியூப்லா வில்ட்ரெஸ் (டெட்டே), ஓரோசியா சோட்டோ சர்தினா மற்றும் அடா பெல்லா அகோஸ்டா பொம்பா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவர்களுடன் புரட்சி இராணுவத் தளபதிகளான ஜூலியோ காமாச்சோ அகுலேரா, டெலியோ கோமேஸ் ஓச்சோவா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜூலியோ காமச்சோ அகுலேரா இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம் என்றும், இதில் புரட்சியின் வரலாறு நினைவுகூரப்பட்டு அதில் பெண்களின் பணிகளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் அன்றைய பெண்களை போல் இன்றைய கியூபப் பெண்களும் நமது சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடர்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

"பெண்களும் ஆண்களுமாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள் வெல்லப்பட முடியாதவர்கள்" என்று அந்நிகழ்வில் பங்கேற்ற கியூபக் குடியரசின் நாயகி டெட்டே குறிப்பிட்டுள்ளார்.

கியூப வரலாற்றில் விடுதலைக்கான பெண்களின் போராட்டத்தை, புரட்சிக்குள் நிகழ்ந்த புரட்சியாக ஃபிடல் காஸ்ட்ரோ போற்றினார். உலக வரலாற்றில் பெண் விடுதலையின் முன்னோடிச் சின்னமாகத் திகழ்ந்த மரியனா கிரஜெலஸின் வீராங்கனைகளை என்றென்றும் போற்றிடுவோம்.

(தொடரும்)

- சமந்தா

Pin It