அவ்வளவு எளிதில் உன்னை
நான் எதிர்த்து பேசிவிட முடியாது
முடியாது என்பதல்ல முடிந்தாலும் பேசக்கூடாதென்பதே
இல்லற வாழ்வின் நியாயமாயிருக்கிறது
கணவனை எதிர்ப்பவள் குடும்பத்தை கட்டிக் காக்கமாட்டாளென்கிற
சமூக பழமையே மேலெழும்பவிடாது அமிழ்த்துகிறது என்னை
எதை நினைத்து நீ எனக்கு பொருத்தமானவனென
முடிவுக்கு வந்தார்களோ தெரியவில்லை
‘நம்ம சாதி சனத்துல யாரு இம்புட்டு
நஞ்ச புஞ்ச வசதியோட சர்க்காரு உத்தியோகத்துல இருக்காகன்னு’
சொல்லி சொல்லியே உனக்கு மனைவியாக்கி விட்டார்கள்
நல்லவனிடம் ஒப்படைத்து விட்டோமென்கிற பெருமிதம்
இன்றும் அவர்களிடத்தில் புரையோடிப் போயிருக்கிறது
இரணமும் வலியும் நிறைந்த வாழ்க்கையை மனநிறைவோடு
பண்பாடு மாறாமல் வாழ கற்றுவிக்கிறது திருமணபந்தம்
அவன் கட்டிய தாலிக்கும் காலில் போட்ட மிஞ்சிக்கும்
விசுவாசமாய் வாழ பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன் மனதை
சமையலறையும் படுக்கையறையுமே
வாழ்க்கையின் மையமாய் சுழல்கிறது
என் அனுமதியின்றி எதையும் செய்துவிடத் துணியும் உரிமை
எனைக் கேட்காமலேயே பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது
பிறந்த வீட்டில் நான் கொண்டிருந்த செல்வாக்கும் கல்வியும்
புகுந்த வீட்டில் காணாமற்போய் விட்டது
அன்று பெற்றவர்களுக்காய் கழுத்தை நீட்டினேன்
இன்று பெற்ற பிள்ளைகளுக்காய் உரிமையை துறக்கிறேன்
எனக்காக யாரும் வாழவில்லை
நானும் வாழவில்லை
எனக்காக நான் வாழாத வாழ்க்கையை
நாளை என் பிள்ளையும் வாழவேண்டியிருக்குமோ
- வழக்கறிஞர் நீதிமலர்