lady_384உனக்கும் 
எனக்குமான இடைவெளியை
மௌனங்களால்
இட்டு நிரப்புகிறேன்.

பிறந்த குழந்தையின்
பிஞ்சுப் பாதங்களைப் போல
அதி அற்புதமானது
நம் நேசம்.
அலாதியானதும்கூட.

சிறு முத்தத்தில்
வேர்கொண்ட நம் காதல்
புரிதலற்று நீள்கிறது
இரயில் தண்டவாளத்தைப் போல.

உகுத்துப் பெருகுகிறது
கண்ணீரும்
சில கவிதைகளும்
புறக்கணிப்பின் வலியை
நீ உணராதபோது.

புது வருடத்தின்
முதல் முத்தத்தையும்
ஊழிக்காலத்தின்
கடைசி முத்தத்தையும்
உடலெங்கும் தீட்டிக்கொள்வோம்
ஓர் அழகிய ஓவியத்தைப் போல.

காதலற்ற முத்தங்களைச்
சுவைக்க நேரும் தருணங்கள்
தனிமை படர்ந்த
இராத்திரியின் நீளத்தை விட
கொடியது.

திரும்பும் திசையெங்கும்
நஞ்சு தோய்ந்த
வார்த்தைகள்.
இனி
மௌனித்திருப்போம்.
மிஞ்சட்டும்
மீதமுள்ள காதலும்
சில முத்தங்களும்.

Comments

4 comments

4
amayadi a mahesh
மிகவும் அருமை
சோமா
எளிய வார்த்தைகளில் மிகுந்த வலியை உணர்கிறேன். என் கல்லூரிக் காலம் நினைவில் வந்து செல்கிறது. நன்றி.
இல.சைலபதி
மனத்தில் முளைக்கும் துயரங்களை வார்த்தைப் படுத்தியிருக்கும் கவிதை. ஆடம்பரமற்ற சொல்லாட்ல்களுடனான கவிதைகள் எத்தனை வலிமையானவைகளாக இருக்கமுடியும் என்பதற்கான உதாரணமாக இக்கவிதையைச் சொல்லமுடியும்.
மனுஷிக்கு வாழ்த்துக்கள்
gkmoeye
superb.......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.