கீற்றில் தேட...

அவர்கள் தொலைந்து போனவர்களாகவே
அறியப்படுகிறார்கள்.

அவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஏதோ ஒரு திருமணத்தில்
எனக்கடுத்த இருக்கைகளில்

ஏதோ ஒரு திரையரங்கில்
எனக்கு முந்தைய வரிசைகளில்

எங்கேயோ செல்லும் பேருந்தில்
என்னைக் கடக்கும் தருணங்களில் ...

ஆம்.... நான் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும்
அவர்கள் தொலைந்து போனவர்களாகவே
அறியப்படுகிறார்கள்.

தொலைந்து போன பிரஞ்ஞையற்றவர்களாகவே
தொடர்ந்து திரிகிறார்கள்.

அனாயசமாய் புன்னகைத்து அப்படியே மறைகிறார்கள்
சம்பிரதாயமாய் மீண்டுவந்து சட்டெனவே விரைகிறார்கள்
தோள்களிலே கனத்தவர்கள் கைகளிலே கரைகிறார்கள்.

அதனால்
அவர்கள் தொலைந்து போனவர்களாகவே
அறியப்படுகிறார்கள்.

அப்படியே அறிவார்கள் அவர்களும் என்னை.

அவர்களாலேயே நிரம்பி இருக்கிறது
அவர்கள் நகரம்.

அடுக்குமாடி குடியிருப்பில்
அசைந்தாடும் மரங்களில் அந்தி சாய்கிறது.

பறவைகள் திரும்பி கொண்டிருக்கின்றன.
அசையாமல் பறவைகளை சுமக்கிறார்கள்
வெளிறிய கண்களில்.

பறவைகள் வெகுதொலைவு பறந்து போகின்றன.
ஆனால் தொலைந்து போவதே இல்லை.

ஆனால்,
அவர்கள் தொலைந்து போனவர்களாகவே
அறியப்படுகிறார்கள்.

- பித்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)