கீற்றில் தேட...

*

எதனூடும் பற்றிக் கொள்ளவியலாத
வேர்களைக் கொண்டிருக்கிறாய்
நித்தமும் ஒரு ரகசியக் குறிப்பென உன் இரவை

முகிழ்தலின் மகரந்தச் சேர்க்கையில்
ஈரம் உலர்தல் வாய்ப்பில்லையென்றே
நிழல் உருவிக் கொண்டாய் அந்தகாரத்தில்

தேன் உகுக்கும் மௌனச் செதில்கள்
நிரடும் இமைப் பீலியில்
கிறங்கிச் சிலிர்த்தலை கனவாக பகிர்ந்தாய்

சின்னஞ்சிறு பார்வைச் சாரல் பட்டு
கெட்டித்துப் படரும் பசலையாய் மருகி
வழிந்தோடுகிறாய் என் நிலமெங்கும்

காதல் மண்டபத்தின் தூண் சிற்பங்கள் தோறும்
உருவமென நிறைந்து கிடக்கிறாய்
யாதொரு முகாந்திரமும் அற்று

ஓர் அடர்ந்த யுகத்தின் மலர்தலில்
சிறு பனித்துளியாகி திரளும் யௌவனத்தை
ருசித்துவிடத் துடித்து  நடுங்கும் மையலாக
தாளமிட்டு உச்சரிக்கிறது உன் காமம்

*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )