பாரதியும் தாகூரும் பெருங்கவிஞர்கள்; மனிதகுல முன்னேற்றம் குறித்துச் சிந்தித்தவர்கள்; மனிதனைப் பாதிக்கும் பிரச்சினைகளை அக்கறை யோடும் ஆழமாகவும் பரீசிலித்துத் தீர்வு தேடி யவர்கள். இந்த வகையில் அவர்களது படைப்புக் களில் பொருளாதாரத்தோடு தொடர்புடைய கருத்துக்கள் ஆங்காங்கே பதியப் பெற்றுள்ளன. அவற்றை ஒருங்கு திரட்டிக்கொண்டு அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் பொருளாதார வல்லுநர்கள் அல்லர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளத் தவறக் கூடாது. ‘இந்தியாவில் தேசியம்’ என்ற கட்டுரையின் இறுதிப் பத்தியில் தாகூர் தான் ஒரு பொருளாதாரவாதியல்ல’ என்று குறிப்பிடுகிறார். பாரதியும் தன்னைப் பொருளாதாரவாதி என்று எங்கேயும் கூறிக் கொண்டதில்லை.
ஏகாதிபத்தியச் சுரண்டல்
ருஷியக் கடிதங்களின் முடிவுரையில் தாகூர், “அப்போது (கி.பி.15 ஆம் நூற்றாண்டு வாக்கில்) ஐரோப்பாவிலிருந்து வாணிகக் கப்பல்கள் வந்து சேர்ந்ததும் மனித வரலாற்றில் ஒரு புதிய யுகம் தொடங்கியது. க்ஷத்திரியர்களின் (வீரர்களின்) செல்வாக்குப் போய் வைசியர்களின் (வியாபாரி களின்) செல்வாக்கு ஓங்கியது” என்று கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை அடிமைப்படுத்தியதைப் பற்றி எழுதுகிறார்.
இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் நிகழ்ந்த பெருந்திருப்பத்தை இன்னொரு இடத்திலும் தாகூர் எடுத்துக் காட்டுகிறார்.
“இங்கே வந்து ஆண்டவர்கள் அந்தச் செல் வத்தை அனுபவித்தார்கள்; ஆனால் அதைப் பாழாக்க வில்லை. இந்த வணிகர்கள் கூட்டமோ தங்குதடை யின்றித் தன் வியாபாரம் நடப்பதற்காக ஆட்சிப் பீடத்தில் ஏறி அமர்ந்து விட்டது... முன் காலத்தில் நாடாள வேண்டுமென்ற ஆசை கொண்டவர்களும் அட்டூழியம் புரிந்துதான் இருக்கிறார்கள். இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் நம் நாட்டிலேயே தங்கியிருந்தார்கள். அதன் ஓர் அம்சமாக இருந்தார்கள். நாட்டின் செல்வம் தங்கு தடையின்றிப் பெருகியே வந்தது. ஏன், நவாப்புகளும் பாதுஷாக்களும் உள்நாட்டுத் தொழில்களுக்குப் பேராதரவு காட்டியே வந்திருக்கிறார்கள். இன்னும் கேட்டால், அதனாலேதான் நம் நாட்டின் செல்வ வளம் பற்றிய புகழ் வெளிநாடுகளிலெல்லாம் பரவியது என்று சொல்ல வேண்டும். பின்னே பாலைவனத்திலா வெட்டுக் கிளிகள் பயிரை அழிக்கும்?”
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியச் சுரண்டலாளர் களுக்கும் பிற படையெடுப்பாளர்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தாகூர் கவித்துவம் பொங்க இப்படிப் புலப்படுத்துகிறார். பிரிட்டிஷ் வெட்டுக் கிளிகள் இந்தியச் செல்வப் பயிரை எப்படியெல்லாம் சுரண்டிக் கொழுத்தன எனப் பாரதியார் பலபடப் பேசியுள்ளார். ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ’ என வ.உ.சி. சீறுவதாகக் கவிதை வடிவத்திலும் ‘வருஷத்துக்கு 45 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து (ஆங்கிலேயர்கள்) உறிஞ்சி விடுகின்றனர்’ என்றும் பால் கறக்கும் மார்லி தமக்குள்ளே சொல்லிக் கொள்கிறார். அடே! அப்பா இந்த இந்தியப் பசு எவ்வளவு பால் கறக்கிறது. குடம் குடமாக நமது வீட்டுக்கனுப்பியும் இன்னும் வற்றவில்லையே! இப்படிப்பட்ட பசுவின் வயிற்றில் பிறந்த கன்றுகள் எத்தனை சிறந்த அதிர்ஷ்டமுடையன’ என்றும் கருத்துப் படங்கள் மூலமும் பாரதியார் ஏகாதிபத்தியக் கொள்ளையைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.
மேலும், பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் தீவிர வாதப் பிரிவைச் சேர்ந்தவரும் இந்திய நண்பருமான ழ.ஆ.ஹைன்டுமன் என்பவர் தனது ஜஸ்டிஸ் என்ற ஏட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டியும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அடித்த கொள்ளை சாதாரண கொள்ளையல்ல; பகாசுரக் கொள்ளை என்று பாரதியார் நிறுவுகிறார்.
‘டைம்ஸ்’ இதழில் மாக்கி என்பவர் அன்றைய இந்தியாவின் வறுமைக்குக் காரணமாக இளவயதுத் திருமணம், அதிகமான குழந்தைகளின் பிறப்பு ஆகியவற்றைக் காரணமாக்கிக் காட்டியதை மறுத்து எழுதும் தாகூர் 1871லிருந்து 1921க்குள் அதாவது ஐம்பது ஆண்டுகளில் இங்கிலாந்தில் 667. மக்கள் தொகை அதிகரித்திருப்பதையும் ஆனால் அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் 33ரூ மட்டுமே மக்கள் தொகை அதிகரித்திருப்பதையும் எடுத்துக்காட்டி, “ஆனாலும் பசிக்கொடுமை அகன்ற பாடில்லை. ஆகவே மூல காரணம் ஜனத் தொகை பெருகியதன்று; உணவுப் பற்றாக்குறை தான் மூல காரணம். இந்த உணவுப் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது?” என்று கேள்வி எழுப்பி, “ஒருபுறம் இந்தியப் பொருளாதாரம் தேய்ந்துவர, மறுபுறம் பிரிட்டன் ஏராளமான செல்வத்தைக் குவித்து வருகிறது...... வங்காளத்து உழவர் சணலை அரும்பாடுபட்டு உற்பத்தி செய்ய அதன் பயனைத் தொலைத் தூரத்திலுள்ள ஆங்கிலச் சணல் வியாபாரிகள் அனுபவிக்கிறார்கள். இந்த இரு சாராரின் வாழ்க்கைத் தரத்துக்குமுள்ள வேறு பாட்டைப் பாருங்கள்” என்று எழுதுகிறார்.
சுதேசியம்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எவ்விதச் சமரசமுமின்றிப் பாரதியார் முனைமுகத்து நின்று போராடியது போலத் தாகூர் போராடினார் என்று சொல்ல முடியாது. எனினும் சுதேசிய முயற்சிகளில் தாகூரின் அண்ணன் ஜோதி அண்ணா ஈடுபட்டது பற்றித் தாகூர் எழுதியுள்ளார்.
“நம் தேசத்து வத்திக் குச்சியையே கொளுத்த வேண்டும் என அவர் பிரச்சாரம் செய்தார்... நம் நாட்டிலேயே யந்திரத் தறிகளை அமைத்து சுதேசி ஜவுளியைப் பரப்ப வேண்டும் என்பது அவர் (ஜோதி அண்ணா) அவா....” இந்த முயற்சிகளில் தோல்வியுற்றாலும் அவர் தளரவில்லை.
வ.உ.சி. கப்பல் ஓட்டியது போலத் தாகூரின் அண்ணனும் கப்பல் ஓட்டத் தொடங்கினார். ‘பிரபல சீமைக் கம்பெனி’யுடன் போட்டி போட வேண்டியிருந்தது. ‘போட்டி பலமாகவே கப்பலுக்கு மேல் கப்பல் வாங்கினார். நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்... கடைசியில் ஒருநாள் செய்தி வந்தது; அவருடைய ‘ஸ்வதேசி’ என்ற கப்பல் ஹால்டா பாலத்தில் மோதி மூழ்கிவிட்டதென்று...”
தாகூரின் இந்த நினைவுக் குறிப்பு பாரதியாரின் தந்தை மேற்கொண்ட ஆலை முயற்சியையும், வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் முயற்சி தோல்வியுற்ற போது பாரதி குமுறி எழுதியதையும் நமது நினைவில் எழுப்புகிறது.
முதலாளித்துவ எதிர்ப்பு
ஏகாதிபத்தியம் குறித்து குறிப்பாகக் கண்டித்துப் பேசிய இருவரும் முதலாளித்துவம் குறித்துப் பொதுவாகக் கண்டித்தும் எழுதியுள்ளார்கள்.
“இந்தியாவில் சமூக பரஸ்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற விதியின் அடிப்படையிலேயே பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டன. சமூகத் தேவைகளைப் பூரணமாகத் திருப்தி செய்வதையே நோக்கமாகக் கொண்ட கூட்டுறவே அதன் அடிப்படையாக விளங்கியது. ஆனால் மேற்குலகில் தொழில் போட்டியின் துடிப்பால் வழி நடத்தப்படுகிறது. அதனுடைய இலக்குத் தனிமனிதர்களின் பொருள் வளத்தைப் பெருக்குவதே” என்ற ஒரு கட்டுரையில் தாகூர் எழுதுகிறார். இங்கு தனிமனிதர்கள் என்பதை நாம் முதலாளிகள் என்று பொருள் கொள்ளலாம். சில தனி நபர்களது நலன்களுக்கு மாற்றாகக் கிராம சமுதாய நலன்களுக்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட முறையைத் தாகூர் போற்றுகிறார். இங்கு, “உற்பத்திப் பண்டங்களில் ஆலைப் பெரும் பகுதி சமுதாயத்தின் நேரடி உபயோகத்துக்கு உரிய தாகும். அது சரக்காக வடிவம் பெறுவதில்லை” என்ற மார்க்சின் பண்டைய இந்தியா பற்றிய கூற்று ஒப்பு நோக்கத்தக்கது.
ஓரளவிற்குத் ‘தன்னிறைவான’ வாழ்க்கை வாழ்ந்த கிராம சமுதாயத்தைச் சீரழித்த குற்றத்தைத் தாகூர் முதலாளித்துவத்தின் மீதும் எந்திரங்களின் மீதும் சுமத்துகிறார்.
“இயந்திர சாதனங்களின் மூலம் பொருளைப் பன்மடங்காகப் பெருக்க முடியும் என்று ருசி கண்ட பின் இடைக் காலத்தில் ஆங்கிலேயர்களின் புகழுக்குக் காரணமாக இருந்த வீரப் பண்பு, வணிகப் பண்பாக மாறிவிட்டது... கொள்ளைத் தொழில் ‘வாணிகம்’ என்று கௌரவப் பெயர் சூட்டிக்கொண்டு திரிந்தது” எனத் தாகூர் எழுது கிறார்.
மாற்றுத் திட்டம் தேடல்
பேரளவு உற்பத்திக்குக் காரணமாகி அதனால் உலகத்தின் போக்கையே மாற்றிவிட்ட எந்திரங்களைத் தாகூர் கடுமையாகச் சாடுகிறார். இது விஷயத்தில் பாரதி நேர் எதிர்நிலை எடுக்கிறார். அவர் எந்திரங் களைப் புகழ்கிறார். ஆனாலும் சோவியத் விஜயத்திற்குப் பின் தாகூரின் எந்திரங்கள் குறித்த கருத்தில் மாற்றம் ஏற்படுகிறது. ஆனாலும் முற்றிலுமாக, ‘கொடூரமான’ முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டார் எனக் கருத இயலவில்லை. அந்த அமைப்பை ஏற்பதில் சில தயக்கங்கள் தாகூருக்கு இருந்தன.
‘ஆஹா என்று எழுந்தது யார் யுகப் புரட்சி’ என்று உலகத்திலேயே முதன்முதலாக ருஷ்யப் புரட்சியை வரவேற்று வாழ்த்திப் பாடிய பாரதிக்கும் அந்த முறையை ஏற்றுக்கொள்வதில் சில தயக்கங்கள் இருந்தன என்பதை அவரது கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது.
தாகூர், பாரதி இருவரது எழுத்துக்களிலும் முதலாளி, தொழிலாளி என்ற வர்க்கப் போராட்டம் குறித்த பதிவுகள் உண்டு என்ற போதும் அரசியல் பொருளாதாரம் குறித்து அவர்கள் அறிந்து வைத் திருந்தார்கள் என்று நம்பச் சான்றுகள் இல்லை. ஆகவே தான் இருவரும் கிராமப் பின்னணியில் வைத்தே, இந்தியாவில் முதலாளித்துவம் தீவிரமாக வளர்ச்சி பெறாத சூழலில், முதலாளித்துவத்திற்கான மாற்றுத் திட்டத்தை முன் வைத்துள்ளனர். காந்தி யடிகளின் கை ராட்டையையும் - எந்திரங்களை எதிர்த்தது போலவே - எதிர்த்த தாகூர் கூட்டுறவு அடிப்படையிலான கிராமிய வாழ்க்கையை மாற்றத் திட்டமாக வைத்தபோது ஓரளவுக்குக் காந்தியடி களை நெருங்கி வந்தவர் எனில் ‘ஒரு வகையான’ தர்ம கர்த்தா. இது காந்தியடிகளின் திட்டத்திலிருந்து மிகவும் மாறுபட்டது - முறையை முன்வைத்துப் பாரதியாரும் காந்தியடிகளை நெருங்கி வந்தார்.
மனிதனின் பேராற்றலை அவனுக்கு உணர்த்தியதில், மனித நேயத்திற்கு எதிரான - மனித முன்னேற்றத்திற்கு எதிரான - சகலவற்றையும் எதிர்த்துக் குரல் கொடுத்ததில், சுரண்டல் முறைக்கு எதிராக மாற்றுத் தேடி முயன்றதில் பாரதியும் தாகூரும் ஆற்றிய பங்களிப்பு போற்றுதற்குரியது. அவர்கள் நமது வணக்கத்துக்குரியவர்கள். அவர் களால் உந்தப் பெற்று சோசலிஸத்திற்கான போராட்டங்களில், இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பலர் என்பதைக் கவனத்தில் கொண்டால் அவர்களது சிறப்பைப் புரிந்துகொள்ள முடியும்.