பத்தொன்பதாம் நூற்றாண்டு, இசை, இலக்கியம், நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்ற அனைத்துக் கலைகளுக்கும் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தது. மேற்கண்ட கலைகளில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுத்தி அவை வளமை காண வழி காட்டினார்கள் சில அறிஞர்கள். இவ்வகையிலேயே, நமது பழம் பெரும் இந்திய இசை மரபிலும் எளிமையும், இனிமையும் சேர்த்துப் புதுமை கண்டனர் சில இசை விற்பன்னர்கள். இதற்கு முன்னோடிகளாக ஜெயதேவர், புரந்தர தாசர், அன்னமாச்சாரியார் போன்றவர்களைக் கூறலாம். சங்கீத மும்மூர்த்தி களான முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் ஆகியவர்களும்கூட புதிய இசை மரபு களைத் தோற்றுவித்தவர்கள்தாம். பின்பு வந்த இராஜாராம் மோகன் ராய் ‘துருபத்’ இசை முறையில் இனிய மெட்டுக்களை உருவாக்கிப் பாடினார். புகழ்பெற்ற துறவியான சுவாமி விவேகானந்தர் 1887இல் ‘சங்கீத கல்பதரு’ என்ற இசையாராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். தமிழ்நாட்டில் தோன்றிய மகாகவி பாரதியார் கூடப் பல இசையாராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் இந்திய இசை மற்றும் மேற்கத்திய இசை ஆகியவற்றிலுள்ள இனிய அம்சங்களை உள்வாங்கி ஒரு புதிய இசை மரபையே உருவாக்கினார். அது ‘இரவீந்திர சங்கீதம்’ எனப் பெயர் பெற்றது.

இரவீந்திரநாத் தாகூர் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பாடல்களுக்கும் மேல் மெட்டமைத்து உள்ளார். அதில் பெரும்பாலான பாடல்கள் அவர் இயற்றியவை. சில வேத உபநிடதப் பாடல்கள் ஆகும். இரவீந்திர சங்கீதம் மற்ற இசைமுறைகளிலிருந்து வேறுபட்டதாய் விளங்குகிறது. இது வங்காளத்தில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது ‘துருபத்’ இசை முறையில் புதிய இசை வடிவங்களை உருவாக்கி அமைக்கப்பட்ட இசை மரபாகும். தாகூரின் இசைப்பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் (பஜன்கீதி), காதல் பாடல்கள் (பிரேம் கீதி), இயற்கைப் பாடல்கள் (பிரகிருதி கீதி) தேச பக்திப் பாடல்கள்) (தேஸ் பிரேம் கீதி) எனப் பலவகையில் அமைந்துள்ளன.

தாகூரின் குடும்பம் ஒரு இசைக்குடும்பமாக விளங்கியது. தாகூரின் அண்ணன் ஜோதீந்திரநாத் இசைக் கருவிகள் வாசிப்பதில் கைதேர்ந்தவர். அவர் பல நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்துள்ளார். தாகூர் சிறுவயதிலேயே இசையில் பேரார்வம் கொண்டிருந்தார். வைணவக் கீர்த்தனைகளையும், வேத கீதங்களையும், கிராமியப் பாடல்களையும் கூர்மையுடன் கேட்டுச் சுவைத்தார். விஷ்ணுபூர் பள்ளியைச் சார்ந்த ஜாடுபட்டா என்பவரிடம் தாகூர் முறையாக இசை பயின்றார். அவர் தன் வாலிபப் பருவத்திலேயே வங்காளத்தில் பிரபலமாய் விளங்கிய வைணவக் கீர்த்தனைகளுக்கு இசை யமைத்தார். 1880 இல் தாகூர் இலண்டன் சென்றிருந்த போது ‘தி ஆரிஜின் அண்ட் பங்ஷன் ஆப் மியூசிக்’ என்ற ஹெர்பட் ஸ்பென்சரின் மேல்நாட்டிசை நூலொன்றை வாங்கிப் படித்தார். இசையில் ‘மெலடி’ (இனிமை) எவ்வளவு முக்கியம் என்பது பற்றி ஹெர்பட் ஸ்பென்சர் அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது தாகூரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவாகப் பத்தொன்பது வயதேயுள்ள தாகூரின் மனதிலிருந்து ‘வால்மீகி புரோதிபா’, ‘கல் மிரிகயா’ என்ற நாட்டிய நாடகங்கள் உருவாயின. இந்நாட்டிய நாடகத்தின் இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசைகள் சங்கமித்து எழுந்த புதிய இனிய இசை வடிவமாய் அமைந்தது. இவ்விசை முறையே படிப்படியாக ‘இரவீந்திர சங்கீத’மாய் மலர்ந்தது.

தாகூர் தனது இசையமைப்பில், ரூபக், ரூபகடா, ஜம்பதாள், ஜாம்பக், ஏக்தாள், கவாலி, தும்ரி, அடதேகா, சதுர்தாள், தாத்ரா, யதா, காஷ்மீரி, கேம்தா, ஏகாதசி, நவமி ஆகிய பல தாளங்களைப் பயன்படுத்தியுள்ளார். இரவீந்திரநாத் தாகூர் மற்றும் தினேந்திர நாத் தாகூர் ஆகியோரின் மாணவரும் உறவினருமான சாந்தி தேவ் கோஷ் என்பவர், தாகூர் சுர்பக்தாள், அடசௌதாள் ஆகிய அபூர்வ தாளங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்னும் தாகூர் ஓர் இசைக் களஞ்சியம் என்றும் புகழ்ந் துரைக்கிறார்.

தாகூர் தம் இளம்வயதில் ஜாத்ரா, பாஞ்சாலி, கதாகட்டா, கவீர்கான் முதலிய கிராமிய இசைப் பாடல்களில் மனம் பறி கொடுத்தார். வைஷ்ணவ பதபாலிக் கீர்த்தனைகளையும், நாட்டுப்புற இசை வடிவங்களையும் ஸ்ரீகண்ட பாபு என்பவர் மூலம் அறிந்து கொண்டார். எங்கேயாவது ஒருவர் பாடக் கேட்டால் தாகூர் உடனே அதன் இசைக்குறிப்பை எழுதி வைத்துக்கொள்வாராம். இப்படி இசையறிவை வளர்த்துக் கொண்ட தாகூர், தனது சகோதரரின் இசைக் கருவிகளின் உதவியுடன் தன் பாடல்களுக்கு இனிமையான இசை மெட்டுகளை உருவாக்கு வாராம்.

தாகூரின் இசைப் பாடல்களில் சொல்லினிமை மற்றும் ராக, தாள பாவங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும்; அவற்றைப் பிரிக்க முடியாது என்கிறார் இரவீந்திர சங்கீதத்தில் பிரபலமாய் விளங்கும் திருமதி சுசீத்ராமித்ரா. தாகூர் இந்திய மற்றும் கிராமிய மேற்கத்திய இசை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு இசை வடிவங்களை அமைத்தாலும், அவ்விசை முறைகளை அப்படியே காப்பியடிப்பதையும், கடன் வாங்கு வதையும் விரும்பவில்லை. உணர்வோட்டமுள்ள சொற்களைக் கொண்ட பாடல்களுக்கு, உயிரோட்ட முள்ள எளிய, இனிய, புதிய இசை வடிவங்களை யாத்து இசையமைத்தார். பாடல்களில் இலக் கணத்திற்குப் பெரும்பங்களித்துவிட்டால், சொற் களின் பாவம் (மெய்ப்பாடு) கெட்டு விடுமென்று கருதினார். மரபு கெடாத இனிமை ததும்பும் இசை வடிவமே மேன்மை தருமென்றும் எண்ணினார். மேலும் இலக்கியத்திலும் சரி, இசையிலும் சரி கடன் வாங்குதல், காப்பியடித்தல் ஆகியவை மூலத்தின் உண்மையான சுவையை வெளிப்படுத்தாது என்று உறுதிபடக் கூறுகிறார் தாகூர்.

‘பங்கா கான்’ - என்ற இந்துஸ்தானி பாடல் களுக்கும் தாகூர் மெட்டமைத்தார். இதனால் அவர் கையாண்ட ‘துருபத்’ என்ற இந்துஸ்தானி முறையிலும் புதுமை ஏற்பட்டது. பல்வேறு இசை மரபுகளைத் தாகூர் ஒன்றிணைத்துப் புதிய இசை முறையை உருவாக்கியதன் மூலம் இந்திய ஒருமைப் பாடு மட்டுமின்றி, உலக ஒருமைப்பாடு கூட வலுப்பெற்றது என்று கூறலாம். தாகூரின் உன்னத இசைக்குக் கட்டியம் கூறும் விதமாக இந்திய, பங்களாதேஷ் நாடுகளின் தேசிய கீதங்கள் உலகறிய ஒலித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

Pin It