நீ 'அழைத்து' பேசிய
வார்த்தைகளை,
துண்டித்த நொடி முதலே
அசைபோட்டு லயிக்க
தொடங்குகிறது
உன்னைச் சுற்றிய
என் மனது!

பல சமயங்களில்
நீ அழைக்க நினைத்து
கைவிட்ட
அழைப்புகளிலும் கூட
பேசாமல் விட்ட
உனது
வார்த்தைகளையும் சேர்த்து!

குறுஞ்செய்திப்
பரிமாற்றத்தில்
அன்பைப் பொழியும்
உன் வார்த்தைகளோடு
தகுந்த இடைவெளியில்
அடிக்கடி
கோர்த்தே அனுப்புகிறாய்
'நண்பன்'
எனும் சொல்லையும்!

தேநீர் விடுதிகளில்
மனம் விட்டுப் பேசி
எழுகையில்
பணம் கொடுக்க விடாது
முந்திக்கொள்ளும்
உன் முனைப்பும் கூட
எதேச்சையானதல்ல!

உடல்நிலை சரியற்ற
உன்னை
பார்க்க வராதபோது
எனக்கேற்பட்ட சங்கடமும்
பார்க்க வந்தபோது
உனக்கேற்பட்ட சங்கடமும்
வலி மிகுந்தது!

பல நாட்கள்
பட்டினியிட்டே
நிகழ்த்திச்செல்கிறாய்
என்றாவது ஒரு நாளில்
நேரில் நிகழும்
ஒரு உரையாடலை!

என்னை தவிர்ப்பதற்காக
நீ மேற்கொள்ளும்
ஒவ்வொரு சிரத்தைகளிலும்
மிகுந்தேயிருக்கிறது
என் மீதான
உனது அன்பு!

-யோவ்

Comments

1 comment

1
mani
very nice...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.