கவிஞனாகவே
வாழ நினைத்து
கவிஞனாகவும்
வாழ முயற்சித்து
யாராகவோ
ஆகிவிட்ட கவிஞன்
தனது நாட்குறிப்பை
திரும்பிப்பார்க்கிறான்...

அது வரவு செலவு
கணக்குகளாய்
நிரம்பிக்கிடக்கிறது...

இரவு நேர பணியாலும்,
கூடுதல் நேர வேலையாலும்
கவிஞனுடைய
மொட்டை மாடியும்,
நிலவொளியும்
துணிகள் உலர்த்தவும்,
செல்போன்-ல்
சிக்னல் குறைவிட்குமாய்
காவு வாங்கப்பட்டிருந்தன..

வேலை  நிமித்த
வெளியூர் பயணங்களில்
ஓயாத 'அழைப்புகளில்'சிக்கி
கவிஞனின் ஜன்னலோரங்கள்
வாந்தி எடுக்கவும்,
எச்சில் துப்பவும்,
வேண்டாதவை
வீசியெறியவுமாய்
கிழித்தெறியப்பட்டிருந்தன .

அலுவல் கடிதங்களையும்,
வரைவுகளையும்
மேலேழுதுவதன் மூலம்
அடிபட்டு மறைந்து போயிருந்தன
எழுதப்படாமல் விடப்பட்ட
கவிதைகள் ...

மொழிபெயர்க்க ஆளின்றி
கண்ணெதிரில்
நிகழ்ந்துகொண்டேயிருந்தன
அங்கீகரிக்கப்படாத
எத்தனையோ கவிதைகள்...

- யோவ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It