ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு நாங்கள் போராட்டம் நடத்தினோம்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த சான்றுமே இல்லை. என் மீது முறைகேடாக யாரையோ திருப்திப்படுத்த - தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுரைக் கழகத்தின் முன் கூறினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் 52 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் முன் ஜூன் 22 ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் நேர்நிறுத்தப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் - கைது செய்யப்பட்ட 3 வாரங்களில் இப்படி அறிவுரைக் கழகத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான அடிப்படை சட்ட காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முறையான சட்டக் காரணங்கள் இல்லாமல் இருக்குமானால், அறிவுரைக் கழகத்தினரே, விடுதலை செய்யவும் உரிமை உண்டு. ஆனால் தமிழக அறிவுரை கழகத்தினர் அந்த உரிமையை பயன்படுத்தியது இல்லை. அதனால் தான் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இதே அறிவுரை கழகத்தின் முன் எழுத்து மூலம் அளித்த அறிக்கையில் இந்தக் கழகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், கழக உறுப்பினர்களான நீதிபதிகள் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாகவே கருத்துகளை முன் வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட் டிணன் அறிவுரை கழகத்தின் தலைமை நீதிபதி நடராசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு தனது பதிலுரையை எழுத்து மூலமாவும் தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிரை:

நான் பெரியார் திராவிடர் கழகத்தில் பொதுச் செயலாளர். பெரியாரின் உண்மைத் தொண்டன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவசர நிலை (Emergency) அமுலில் இருந்த காலத்தில் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்தேன். ஆனாலும் மற்ற அரசியல்வாதிகளைப் போல் எந்த அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்ளவில்லை. பெரியார் சொன்னதுபோல எனது சொந்த காசை செலவு செய்துதான் பொதுத் தொண்டு செய்து வருகிறேன்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலையை அடுத்து கோவையில் வெடிகுண்டு தயாரித்ததாக என் மீது பொய் வழக்கு ஒன்றை தடா சட்டத்தின் கீழ் போட்டு 3½ ஆண்டுகள் சிறையில் வைத்தது அரசாங்கம். ஆனால் 3½ ஆண்டுகள் கழித்து நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுதலை செய்தது. நான் 3½ ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு என்ன பரிகாரம்?

இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறை என்ன குற்றம் செய்தததற்கு? இந்திய அரசே! இலங்கைத் தமிழனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொல்வதற்கு ஆயுதம் கொடுக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்ததற்கு! தமிழனை முதலமைச்சராக கொண்ட தமிழ்நாடு அரசு என்னை இந்த சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கிறது. ஆள்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போகட்டும். போட்ட உத்தரவு சட்டப்படியாவது செல்லுமா? என்பதை ஆராய்ந்து இந்த முறையாவது நியாயம் வழங்குங்கள்.

1989 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டு இந்தியா திருப்பிய இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று இன்றைய தமிழக முதலமைச்சரே சட்டமன்றத்தில் கூறினார். இவ்வாறாக ஈழத் தமிழர்களை கொன்ற இந்திய ராணுவத்திற்கு எதிராக சனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்ட கருத்து தெரிவிப்பது வழக்கம் தான். நாங்களும் அவ்வாராகவே ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய ராணுவத்திற்கு எதிராக எங்கள் மனவேதனையை தெரிவித்து வந்தோம்.

இலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு ழுழு அளவில் துணை நின்றது. அன்றாட நடவடிக்கைகளை இந்திய அரசுக்கு தெரிவித்து வந்தோம் என இலங்கை அதிபர் ராஜபக்சேவே கூறியிருக்கிறார். இலங்கையில் ஒரே நாளில் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட போர் குற்றங்களை அய்.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது இந்திய அரசு.

இவ்வாறாக இந்திய அரசு இலங்கைக்கு வெளிப்படையாகவே கொள்கை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி வந்தது. இதை எதிர்த்ததால் சூலூர் காவல் நிலைய குற்ற எண் 549/2009-ன் கீழ் நான் உட்பட 44 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைத்துள்ளனர். ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்பு காவலில் வைக்கவேண்டும் என்றால் அவரால் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த தடுப்புக் காவல் ஆணையை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எதிலும் நான் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தமாக நடந்து கொண்டதாக யாருமே சாட்சி கூறவில்லை.

அதனால்தான் மாவட்ட ஆட்சியர் அப்போராட்ட செய்திகளை தினமலர், தினத்தந்தி, தினகரன், இந்து பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார். ஆனால், அந்த பத்திரிகைகளில் பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். தவறை தவறு என்று சுட்டிக்காட்டிய என்மீது பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் ஆணையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் சென்னை கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்துக்குள் உள்ள அறிவுரைக் கழக அலுவலகத்துக்கு 22 ஆம் தேதி பகல் 11 மணியளவில் அழைத்து வரப்பட்டார். முதல் நாளே 21 ஆம் தேதி காலை கோவை சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு வேன் மூலம் அழைத்து வரப்பட்ட பொதுச்செயலாளர் முதல் இரவு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் கோவை சிறைக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

கழகத் தோழர்கள்: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், உமாபதி, தபசி குமரன், அன்பு. தனசேகரன், அண்ணாமலை, இராவணன், தீபக், சுகுமார், தியாகு, இராசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டு வந்து பொதுச்செயலாளரை சந்தித்தனர்.

Pin It