மனிதர்க்கு மனிதர் இடையிலான உறவில் ஆணுக்கும் மற்றொரு ஆணுக்குமான உறவை விட, ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு அதிகமான இயற்கைத்தன்மை கொண்டது என்பார் காரல் மார்க்ஸ். ஆனால் மொழி எனும் ஆறாவது புலனைக் கொண்ட எதுவும் மனிதர்களின் ஆட்காட்டி விரலுக்குக் கிடைப்பதில்லை. இத்தகைய மொழியினால் விளையாடப்படும் சங்க இலக்கியம், அகம் புறமென இரண்டாகப் பிரிக்கப்பட்டு மனித உறவுகளை அதிகாரத் தேவைக்கேற்பக் கட்டமைக்க முயல்படுவதாகப் படுகிறது. இயற்கையாய்க் கிடந்த நிலப்பரப்பை எல்லைக்குட்படுத்தி ஓர் இனத்திற்கான நாடு என்ற பேரில் உடைமைப் பொருளாக-துய்ப்புப் பொருளாகப் பெண்ணை வடிவமைக்கிற முயற்சிதான் அகமெனப்படுகிறது.

 நிலத்தை உடைமையாக்க ஆணின் உடலைக் கொண்டாடுவது புறத்தின் மொழியாடல் என்றால், பெண்ணை உடைமையாக்கப் பெண்ணின் உடலை ஒடுக்குவது அகத்தின் மொழியாடலாக அமைகிறது. அதிகாரம் செயல்படும் முதல் களமாக உடல்தான் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உடலை வைத்து ஆடப்படும் இந்த மொழியாடு களத்தில், பெண்களும் சங்க இலக்கியக்காலத்திலேயே பங்கேற்றிருக்கிறார்கள் என்பது சிறப்பாகச் சொல்லத்தக்க ஒன்றாகும். அந்தப் பெண் கவிஞர்களின் அகப்பாடல்களை மட்டும் இன்றையக் கலை இலக்கியக் கோட்பாடுகளில் பெரிதும் பேசப்படும் பெண்ணியல் பார்வையில் பார்க்க முயல்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள் குறித்த எண்ணிக்கையில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சங்க இலக்கிய அட்டவணை தயாரித்த ந.சஞ்சீவி 25 என்கிறார். பதிப்பாசிரியர் உ.வே.சா. 38 என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை 30 என்றும் புலவர் க.கோவிந்தன் 27 என்றும் கூறுகின்றனர். அவ்வை துரைச்சாமிப்பிள்ளை 34 என்கிறார். பெண்பாற் புலவர்களின் பாடல்களை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்த அவர் மகனார் அவ்வை நடராசன் 41 என்கிறார். நடராசனின் கணக்குதான் தர்க்கத்தோடு இருக்கிறது என்கிறார் ந.முருகேசப்பாண்டியன். அவர் தன்தொகுப்பில் 41 பெண் கவிஞர்களின் கவிதைகளாக 181 கவிதைகளைத் தந்துள்ளார். அவற்றுள் 113 கவிஞர்களின் அகப்பாடல்களாக அமைந்திருப்பதும் பிற்காலத் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தில் எளிய ஒரு செய்தியல்ல. கொஞ்சம் பழைய விதிகளைத் தளர்த்தினால் இன்னும் சில பாடல்களை அகத்தில் சேர்க்கலாம். மேலும் அறநெறிச்சிந்தனை செழித்த காலத்தில் சங்க இலக்கியத் தொகுப்பு நிகழ்ந்திருக்கிறது என்ற உண்மையும் மேலெழும்போது, இந்தப்பாடல் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்ற ஊகமே வலுப்பெறுகிறது.

இன்றையப் பெண்ணியக் கோட்பாட்டாளர்களில் குறிப்பிடத் தக்கவராக அறியப்படுபவர் கெலன் சீக்சு (1937) என்ற பெண்ணியலார் அவருடைய “மேடுசாவின் புன்னகை” என்ற கட்டுரை பெண்ணியத்தின் கொள்கைப் பிரகடனமாகவே கருதப்படுகிறது. ஆண் நலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலும் மொழிப்பரப்பிலும் வாழ நேர்ந்த பெண், தனக்கான அடையாளத்தை அடைய வேண்டுமென்றால் தனது எழுத்தில் (பெண்ணைப் பொறுத்தவரை எழுத்திற்கும் பேச்சிற்கும் வேறுபாடு இல்லை என்பது அவர் கருத்து) தனது உடலை முழுமையாய்ப்பெய்து வைக்கவேண்டுமென்கிறார்.

உன்னையே ந எழுது; உன் உடம்பின் குரல்களுக்குச் செவிசாய்; அப்பொழுதுதான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி மனத்தின் மூல வளங்கள் பொங்கிப்புறப்பட்டு வெளிவரும்”
(பெண்ணெலும் படைப்பு : ப.132)

இக்கூற்றிற்கு ஏற்பத் தன் குரலைப்பதிவு செய்யும் பெண் கவிஞர்களின் கவிதைகளைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. ஒளவையாரின் தலைவி ஒருத்தித் தன்னைப்படுத்தும் காமநோயின் நன்மையைத் தடையில்லாமல் பேசுகிறாள்.

சுழன்றபடி அசைந்து வருகிறது காற்று; என்னை அலக்கழிக்கின்றது. அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது நான் என்ன செய்யக்கூடும்! ஒன்றும் புரியவில்லை. ஏதாவது ஒன்றைச் சாக்காக வைத்துக் கொண்டு முட்டலாமா? தாக்கலாமா? அல்லது ஆ! ஓ! என்று குரலெடுத்து அலறலாமா? (குறு 28)

உடம்பின் அற்புத விளைச்சலான இந்தக்காம உணர்வு எனும் வெள்ளத்தைப் பதிவு செய்யும் போது, ஊரார் எனப்படும் ஆணின் அடக்குமுறை நிறுவனத்திற்கு எதிரான கலக்குரலைக் கேட்க முடிகிறது. எப்பொழுதும் சமூக ஒழுங்கிற்காகப் பாலியலை ஒடுக்க முயலும்போது, அது திரிபு நிலை கொள்வதும் வன்முறை வடிவம் எடுப்பதும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பாலியல் கொண்டதாகப் புனைவதும் நிகழ்கின்றன. பெண் கவிஞர்களின் கவிதைகளில் இவை வெளிப்படுத்துகின்றன. காற்று, கடல், நிலவு, மாலை, நேரம், பறவை, விலங்கு, மலர் என அனைத்தும் பாலியல் தன்மையோடு இணைக்கப்படுவதைச் சங்க இலக்கியப்பிரதி முழுவதும் காணலாம். வெள்ளி வீதியாரின் பாடலென்று உடம்பின் காமக்குரலை இவ்வாறு பதிவு செய்கிறது.

திங்கள் வானத்தில் தோன்றுகிறது; கடலும் பொங்கும் அலைகளோடு ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கடல் சார்ந்த சோலையில் தாழம்பூவும் சோறு எடுத்துச் சொரியும் அகப்பை போலக் கூம்பிய அரும்பு மலர்ந்து மோதுகிறது. பனை மரத்தின் உச்சியில் அன்றில் பறவையும் துன்புறுகிறது. இவையெல்லாம் போதாதென்று நள்ளிரவுவரை யாழ்வேறு விரலால் வாசிக்கப்படுவது. என் காமோ பெரிதாகிறது. அதைக் களைவதற்குத் தலைவர் இங்கில்லையே” நற் : 335

இதை விட இன்னும் தீவிரமாக ஒரு பெண், உடம்பு எழுப்பும் காமக்குரலை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்

என்னைக் கடிந்து கொள்ளும் கேளீரே! நான் கொண்ட காமநோயினால் என்னுடல் அழிவதற்கு முன்னால், அதைத்தடுக்க முயன்றால் நல்லது. கதிரவன் காய்ந்த வெம்மையான பாறையில் கையிழந்த ஊமையன் ஒருவன் தன் கண்ணில் காக்கும் உடலுக்குள் பரவுகிறது. (வெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கும் தானே) இனியும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

ஒடுக்கப்பட்ட பெண்ணுடல் எத்தகைய நிலைக்குச் செல்லும் என்பதை இவ்வாறு நுட்பமாக, கவித்துவமாக மொழிப்படுத்த இயலும் போது பெண் எழுத்து என்கிற வகையொன்று தோன்றி விடுகிறத. இவ்வாறு இன்னும் பல பாடல்களைக் காட்டிப் பெண்பாற் புலவர்களின் கவிதைகளை இன்றைய நோக்கில் பெண் எழுத்து என்ற வகையாக விளக்குவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஆண்நலம் சார்ந்த சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் பெண்ணின் உடலை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்டவை எனப்புனைந்து குறிப்பிட்ட ஒழுக்கத்திற்குள் கொண்டு வர முயல்வதை ஒருவர் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். உயிரை விட நாணம் சிறந்தது என்பது சங்க இலக்கிய மரபு. ஆனால் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் இந்த ஒழுக்கத்திற்கு எதிரான மீறல்கள் பதிவாகியுள்ளன. உடலை எழுதுதல் என்பதை நோக்கி நகரும் போது, காவல், கட்டு, விதி, வழக்கு, சாத்திரம் என்ற அதிகாரச் செயல்பாடுகள் காணாமல் போவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அதிகாரம் தனக்கு ஒரு “புனித முகத்தைப்” புனைந்து கொள்வதால் மீறுகிறவர்களின் மனத்தில் குற்றவுணர்வைக் கட்டமைத்து விடக்கூடிய தந்திரம் கொண்டது. இந்தக் குற்றவுணர்வையும் பெண் கவிஞர்களின் பாடல்களில் காணமுடிகிறது. அதிகாரத்தின் தன்னிகரில்லாத வெற்றியே, அதிகாரத்திற்கு உட்பட்டவர்களிடம் குற்றவுணர்வை இயல்பான ஒன்றுபோல் வடிவமைந்துவிடுவதில் தான் இருக்கிறது. ஒரு தலைவி காமமா? நாணமா?

அதாவது இயற்கையா? அல்லது சமூகம் புனைந்து விட்ட ஓழுக்கமா ? என்கிற இணைமுரணுக்குள் சிக்கித் தவிக்கிறாள். இறுதியில் இயற்கையே வெற்றி பெறுகிறது.

தோழி! இந்த நாணம் பெரிதும், இரங்கத்தக்கது; இது நமமோடு இருந்து நம்மை நீண்ட காலம் வருத்தியது. ஆனால் வெண்ணிறப் பூக்களுடைய கரும்பு வளர்ந்து நிற்கும் சிறுகரையில், இனிய அருவிப்புனல் விரைந்து பாய்ந்துக் கொண்டே இருந்தால் அந்தக் கரைதான் கரைந்து அழிவதுபோலத் தாங்கும் அளவிற்குத் தாங்கி இப்பொழுது தாங்க முடியாத அளவிற்குக் காமம் மிகுந்து தாக்குவதால் நாணம் என்னிடம் இல்லாமலேயே அழிந்து விட்டது. தோழி! இந்த நாணயம் பெரிதும் வருந்தத்தக்கது.
குறு.149

சமூகம் கட்டமைத்த பெண்மைக்கு நாணம் இன்றியமையாததாயிற்றே என்கிற குற்றவுணர்வோடு சேர்ந்து, நாணம் பெரிதும் இரங்கத்தக்கது என்ற எள்ளலும் வெளிப்படும் போது பெண்ணின் “மீறல்” மிக நுட்பமாக மொழிப் படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நற்றிணையிலும் ஒரு தலைவி இப்படித்தான் காமத்தைக் கரையை அரித்துச் செல்லும் நீரோடு இணைத்துப் பேசுகிறாள். “நிறை அடு காமம்” என்றே பேசுகிறாள். (நற்.369) அகநானூற்றுப் புலவர் ஒருவர், காம நோயைப் புலவர்கள் புகழும் நாணத்தை இழந்துவிட்ட பெரும்மரமாக உருவகிக்கிறார். (அகம் 273)

அதுபோலவே கண் உறங்காமல் தனிமைத் தீயில் தவிக்கும் பெண்ணொருத்தி, இந்த உலகமே ஒன்றாகத் திரண்டு நின்று தனக்கு எதிராகப் போர் தொடுக்கிறதோ? அல்லது தனது காமத்துயருறும் நெஞ்சம் தான் உலகத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறதோ? எனக் கேட்கிறாள்.

என்னோடு பொரும்கோல் இவ்வுலகம்?
உலகமொடு பொரும்கொல்? ஏன்அவலம்உறு நெஞ்சே !

இத்தகைய இடங்களில் ஒடுக்கப்படும் பெண் உடம்பின் மீறலுக்கான உந்துதலை உணர முடிகிறது. பெண் உடம்பின் காம நோய்க்கு ஓர் ஆணின் மார்பைத்தவிர வேறு மருந்தில்லை (குறி 68) என்கிறது ஒரு பாடல். இவ்வாறு இயல்பாக உடம்பில் உற்பத்தியாகும் காமத்தை நோயாகவும், அதற்கு எதிராக அமையும் இயற்கை ஆண் உடலை மருந்தாகவும் மொழியாட வேண்டிய சூழல், உடம்புகளை ஒடுக்கும் அதிகார அரசியலின் பக்க விளைவாகும். இத்தகையப்பக்க விளைவுகளில் குறிப்பிடத்தக்க மற்றொன்று நளவிலி மனத்திற்குள் இந்தக் காமம், நினைவு மண்டலங்களாய் இறங்கிப் பின்புத் தூக்கத்தில் கனவாய் மறுவுரு எடுத்து வெளிப்படும் பாங்காகும். பெண்பாற் புலவர்களின் கவிதைகளில் இத்தகைய கனவுகள் பதிவாகியுள்ளன.

அதையும் மாமரக் கிளையில் தலைகீழாகத் தொங்கும் வெளவாலின் கனவோடு ஒப்பிடும் போது, சமூக ஒழுங்கிற்கு ஆட்பட்ட பரப்பில் காம வயப்படும் மனித உடம்பும் மனமும் படும் பாட்டை உணர்ந்து விடமுடிகிறது.

தோழி! உள்ளூர் மாமரத்தின் உயர்ந்த கிளையில், முள் போன்ற பற்களை உடைய வெளவால், தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்கும் போது அழிசி என்ற சோழனின் அழகிய பெருங்காட்டில் விளையும் நெல்லிக்கனியின் புளிச்சுவையைக் கனவில் சுவைத்து மகிழ்வது போல, நானும் தலைவர் நாட்டிலுள்ள புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து, கடற்கரைத் துறையில் மேய்ந்து திரியும் சிப்பியின் குளிர்ந்த முதுகில் வீழும்படியான காட்சியைக் கண்டு மகிழும் சிறுகுடிப்பரதவர் மகிழ்ச்சியையும் பெரிய கானலையும் நினைத்த கணத்தில் அவரோடு இருப்பதாகக் கனவு கண்டு மகிழ்கிறேன்”. நற் 87

ஒளவையாரின் தலைவி ஒருத்தி இவ்வாறு பேசுகிறாள்: காமத்தை எண்ணத்தில் படர விட்டால் உள்ளம் வெந்து போகிறது. எண்ணாமல் இருக்க முயன்றால் அதுவும் நம் கட்டுக்குள் இல்லை. மாறாக நம்மை வருத்தி வானத்தின் அளவிற்குக் காமம் விரிகிறது. இவ்வாறு பெண் உடம்பின் குரலைப் பெண் கவிஞர்களின் பாடல்களில் இரண்டாயிரம் ஆண்டு கழித்து வந்துள்ள இன்றைய வாசகர்களும் கேட்க முடிகிறது. பெண்ணுக்குள் இருந்து புறப்பட்டு வரும் இந்தக் குரல்குறித்து கெலன் சீக்சூ மிக நுட்பமாக விளக்குகிறார்

அவளுக்கு எழுதுதல் என்பதும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பேச்சின் செயல்பாடே தவிர வேறொன்றும் இல்லை. ஒவ்வொரு பெண்ணின் பேச்சும், பேச்சு மட்டுமல்ல, அது அவளுடைய ஆழமான அடிமனத்தின் அடுக்கில் பொதுவாய்ப்புதைந்து கிடக்கும் குரலாகவும் கொள்ளத்தக்கதாகும். எனவே பெண்ணின் குரல் என்பது அவளது பூர்வீக ஆதிமனம் முதன்முதலில் கேட்ட குரலின் எதிரொலியாகும். அந்த ஆதிமனக்குரல் என்பதும், எல்லாப் பெண்களும் தங்கள் உயிரோடு பாதுகாத்து வைத்திருக்கும் அந்த முதன்முதலான அன்பின் (LOVE) குரல்தான். உயிரோடு பாதுகாத்து வைத்திருக்கும் அந்த முதன்முதலான அன்பின் (LOVE) குரல்தான். அந்தப் பெயரற்ற, மனிதர்களின் சட்டம் நடைமுறை வடிவம் எடுப்பதற்கு முன்பே உருவான காதலின் இசையைத் தான் ஒவ்வொரு பெண்ணும் குரலெடுத்துப் பாடிக் கொண்டிருக்கிறாள்.”

இந்தக்குரலை ஒடிபஸ் - குழந்தைப் பருவத்திற்கு முந்திய புதிர் உலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், எங்கும் நிறைந்த குரலான தாயின் குரல்தான் என்கிறார். இந்தக் குரலை என்றும் தீர்ந்து போகாத பால் என்கிறார். எனவே தான் பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலில் வெள்ளைநிறப் பாலை நிரப்பிக் கொண்டு எழுத வேண்டும் என்று உருவகப்படுத்துகிறார். சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் சீக்சூ சொல்வது போலத் தங்கள் எழுதுகோலைப் பாலில் தொட்டுத்தான் எழுதியுள்ளார்கள் போல் படுகிறது. ஒரு தலைவி இப்படிப் பேசுகிறாள்.

“தோழியே! என் தலைவர் குறித்து நீ கூறியதை நான் நகையென எடுத்துக் கொண்டேன்! நல்லவேளை! இல்லாவிட்டால் நான் உன்னை என்ன செய்வேனோ எனக்கே தெரியாது.” குறு : 96

மற்றொரு தலைவி, என் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை; அவர் எனக்கு அன்னையும் தந்தையும் அல்லவா என்கிறாள். குறு : 93

“நம்மை அவர் மறந்தாலும், நாம் அவரை மறக்கமாட்டோம்,” என்கிறாள் ஒரு தலைவி குறு : 200

இவ்வாறு அன்பில் ததும்பும் தாய்மையின் குரலைப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது. எவ்வளவுதான் அவள் இயற்கை உடம்பு ஒடுக்கு முறைக்குள்ளானாலும் அது தன்னை வேறு வேறு உருவில் தக்கவைத்துக் கொண்டே வருகிறது. பெண்ணின் இந்தத் தன்மையை சேக்பியரின் கிளியோபட்ராவை வைத்து சீக்சூ விளக்குகிறார்.

இந்தப் பூமியில் எந்த ஒன்றும் பெண்ணைப் புண்படுத்திவிட முடியாது. கிளியோபாட்ரா இதற்குச் சரியான சான்று; அவளுடைய புத்திக்கூர்மையும் வலிமையும் அவள் வேலைப்பாடுகள் அனைத்திலும் புலப்படுகின்றன. குறிப்பாக அவளிடம் வினைபுரியும் காதலில் அவைகள் அற்பதமாகப் வெளிப்படுகின்றன. அவள் இடைவெளிகளை வெளியே இழுத்துப் போட்டு அதைப் பொங்கி வழியும்படி நிரப்புகிறாள். உடம்பிற்கு ஊறு விளைவிக்கும் பிரிவுகளை அவள் பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பதில்லை.

சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின் பாடல்களிலும் இந்தத்தன்மை பெரிய அளவில் வெளிப்படுகிறது. பிரிவை சும்மா பார்த்துக் கொண்டு இருப்பதில்லை. தலைவி எதிர்வினை ஆற்றுகிறாள்.

“தோழி! நம் காதலர் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகமுடியாது. வானம் நோக்கி ஏறி விடவும் முடியாது. குறுக்கிடும் பெருங்கடலுக்குள்ளும் சென்று விடமுடியாது. எனவே நாடுதோறும், ஊர்தோறும், குடிதோறும், தேடிப்பார்த்தால் அகப்படாமல் தப்பி விடுவாரோ?” குறு : 130

இப்படிப்பல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. இவ்வாறு தீவிரமான இருப்பிற்கு தீவிரமான இருப்பிற்குள்ளும் இன்மைக்குள்ளும் தன்னைப் பொருந்திக் கொள்ளும் பெண்ணின் பேராற்றலைப் பெண் கவிஞர்கள் சிறப்பாய் கவித்துவமயப்படுத்தி உள்ளனர். இது எப்படி சாத்தியமாயிற்று?

அழகியல் எப்பொழுதுமே தன்னை மறைத்துக் கொள்வது மூலம் வெளிப்படுகின்றது. சங்க இலக்கியப் புலவர்கள் உள்ளுறை, இறைச்சி, குறி, நாடகமயப்படுத்துதல் முதலிய அரூபமான உத்திகளைப் பயன்படுத்தி, பிரதிக்குள் மெளனங்களை இடைவெளிகளைப் புதைத்து வைத்துள்ளனர்.

எனவே இன்றைக்கும் அள்ளக் குறையாத சுரங்கமாய்த் தொடர்கின்றன அவர்கள் படைப்பு.

பேரா. க. பஞ்சாங்கம்
புதுச்சேரி - 605 008.
9994391008.