தமிழகக் கட்சிகளுக்கு தமிழ் உயிர் மூச்சு என்பதால் இன்று தமிழர்கள் உயிர் வாழப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்நிய நாட்டு ரசாயன உரங்கள், மலட்டு விதைகள் தொடங்கி ரசாயனத் தொழிற்சாலைகள், அணு உலைகள், அந்நிய நாட்டு குளிர்பான நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து தமிழ் நிலத்தை அரைப் பாலைவனமாக்கிவிட்டன. தற்போது தமிழகம் மற்றும் புதுவைக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 45 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரப் போகின்றன. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தமிழ் நிலத்தின் மிச்சச் சொச்ச வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பன்னாட்டுக் கொள்ளையர்களை நம் அரசாங்கம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

இவர்கள் கொள்ளையடிக்க வரிச்சலுகை. பூமியை துளையிட்டு கணக்கு வழக்கில்லாமல் வேண்டியத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளலாம். இடஒதுக்கீடா? தொழிலாளர் உரிமையா? தொழிலாளர் நலனா? யூனியன் கார்படைடு நிறுவனம் போல் ஒரே இரவில் விஷவாயுக் கசிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தாலும் நிறுவனத்தாரை நம் சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது. விபத்துகள் நடந்தால் இழப்பீடோ நிவாரணமோ இன்றி தலைமுறை தலைமுறையாக நாம் ஊனத்துடன் நோயாளிகளாக நீதிகேட்டு நீதிமன்றங்களில் போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து அரசாணை நிறைவேற்றியது திமுக அரசு. ஆனால் இதை நடைமுறைப்படுத்த போதுமான நிலம் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பிறகு எங்கிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு தரிசு நிலம் கிடைக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நாம் உருவாக்காவிட்டால் உலகளவில் பின்தங்கி போய்விடுவோம் என்று ஆள்பவர்கள் கூசாமல் பொய் சொல்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் நாம் நமக்கென்று சுதேசியான தொழில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவுமில்லை மற்றும் இருந்த இயற்கை சார்ந்த மரபு தொழில்களை ஊக்கப்படுத்தவுமில்லை. அந்நியநாட்டு நவீன விஞ்ஞானத் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை கண் மூடித்தனமாகப் பின்பற்றி 60 ஆண்டுகாலமாக இன்னும் நம்மால் 40 சதவீத மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இது ஒரு பன்னாட்டு வணிக போர். இந்தப் போரில் முன்றாம் உலக நாடுகளின் அரசியல் தலைமை மிக கவனமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டு அரசியல்வாதிகள் கமிஷனுக்காக பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை குத்தகை விடுவதை நாகரிகமாக தொழில் வளர்ச்சி என்கிறார்கள். இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் நன்நீர் வளம் பாதியாகக் குறைந்துவிடும் என்று மனித நேயமிக்க சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். தமிழக மேற்கு மற்றும் வடமாவட்ட நதிகளும் நிலமும் சாயப்பட்டறைகளாலும் ரசாயன ஆலைகளாலும் கழிவுநீர் சூழ்ந்த உயிர்க்கொல்லி மண்டலமாக மாறிவிட்டன. நிலத்தைச் சார்ந்து வாழும் விவசாயிகளும் நீரைச் சார்ந்து வாழும் மீனவர்களும் உள்நாட்டிலேயே அகதிகளாகி அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து நடைபாதை வாசிகளாகிவிட்டார்கள். தற்போது தெற்கு மாவட்ட ஆறுகளையும் நிலத்தையும் தரைவார்க்க பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. சேது கால்வாய் திட்டம், பெப்சி கோலா நிறுவனங்கள், அணுஉலைகள் என தமிழர்களுக்குக் கூட்டுக் கல்லறைகளை திராவிடக் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு எழுப்புகின்றன.

உள்நாட்டு தமிழர்களுக்குத்தான் கல்லறைக் கட்டுவதில் நம் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள் இல்லை. வெளிநாட்டுத் தமிழர்களுக்கும்தான். சர்வதேசச் சமூகங்கள் ஈழத்தமிழர் நலனில் செலுத்தும் அக்கறையில் ஒரு பத்து சதவீதம்கூட நம் ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து கிடைப்பதில்லை. மத்திய, மாநில, உள்ளாட்சி என்று எங்கு அதிகாரம் இருந்தாலும் அது தமிழர் நலனுக்காகப் பயன்படாது போலிருக்கிறது. ஏதோ நிறுவனம் நடத்தி லாபம் எடுக்கும் வணிகமாக அரசியல் ஆகிவிட்டது. அப்பாவித் தமிழர்களைக் கொல்ல சிங்களப் படைவீரர்களுக்கு இந்தியாவில் ஆயுதப்பயிற்சி அளிப்பதையோ, ஆயுதங்களை வழங்குவதையோ நம் தமிழக ஆட்சியாளர்களால் தடுக்க முடியாது.

இந்த ஆண்டு மட்டும் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேல் ஈழத் தமிழர்கள் தமிழகக் கொட்டடிகளுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கான அகதிச் சலுகையை ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்த நிதி மற்றும் மனித உரிமை வரம்புக்குள் கொண்டுவர நம் தமிழ் ஆட்சியாளர்களால் முயற்சி மேற்கொள்ள முடியவில்லை. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்லி கோட்டையைப் பிடித்தவர்கள், வடக்கோடு சேர்ந்து தமிழர்களுக்குக் குழிபறித்துக் கொண்டிருகிறார்கள். இந்தியா முழுவதும் திபெத், நேப்பாளம், வங்கதேச அகதிகள் சுதந்திரமாக வாழவும் கல்வி பெறவும் தொழில் செய்யவும் வேலை செய்யவும் வழியிருக்கும் போது ஈழத் தமிழர்கள் மட்டும் மாட்டுத் தொழுவத்திலும் கேடான கூடாரத்திலும் வாழ நிர்பந்திக்கப்பட்டது ஏன்?

இலங்கையில் செஞ்சோலை சிறார் முகாம் மீதான தாக்குதலில் 61 குழந்தைகள் கொல்லப்பட்டது, பிரெஞ்சு நாட்டுத் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 15 பேரைச் சுட்டுக்கொன்றது, தமிழர்கள் தஞ்சமடைந்த தேவாலயத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது உட்பட பல யுத்த வரம்பு மீறிய செயல்களை பட்டியலிட்டு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுவரை இந்திய அரசு இதற்கு தனது கண்டனத்தையோ வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. நம் தமிழக அமைச்சர்கள் இதற்காக நிர்பந்திக்கவுமில்லை. இலங்கையில் தமிழர்கள் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதை சிங்கள அரசு விரும்பாததை போலவே தற்போதைய இந்திய அரசும் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது. இந்தியா வந்த இலங்கை தமிழ் மந்திரிகளை நம் பிரதம மந்திரி சந்திக்க மறுத்ததன் உள்நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தினால்தான் நாம் ஈழப் போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்று தமிழர்களாகிய நாம் கருதினால் நம்மைப் போன்ற அரசியல் அறிவற்ற முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு விடுதலைப் போராட்ட அரசியலில் சில தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது. அரசியல் சூழ்நிலைகள் மாறும் போது இவை மன்னிக்கப்படலாம் அல்லது வேறு ஒரு மாற்று அரசியல் நிலைப்பட்டை எடுக்க முடியும். அதற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை நாம் பலியிட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? மகாத்மா காந்தியைக் கொன்ற ஆர். எஸ். எஸ் இயக்கம் இன்று வரை சுதந்திரமாக அரசியல் நடத்திக்கொண்டு தானே இருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர் சீக்கியர் என்பதற்காக நாம் சீக்கியர்களை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டோமா என்ன? இன்று நம் பிரதமரே சீக்கியர் சமூகத்திலிருந்து வந்தவர் தானே.

சின்னத்திரை, பெரியத்திரை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு நிஜ துயரங்களும் படுகொலைகளும் போர்களும் பொம்மை சண்டைகளாகிவிட்டன. தமிழர்கள் உயிரைவிட கற்பை மேலாக மதிப்பவர்கள். தமிழர்கள் தானே செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பெண்களின் கையில் துடப்பத்தையும் செருப்பையும் கொடுத்து தெருவில் போராட அனுப்ப முடியுமா என்ன?

இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரிலாவது மகளீருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா என்று பெண்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். உள் ஒதுக்கீடு அற்ற இடஒதுக்கீடு என்பது மேட்டுக்குடி பெண்கள் அதிகாரத்தில் பங்கெடுக்க மட்டுமே வழிவகை செய்யும். உள் ஒதுக்கீடுடன் கூடிய இட ஒதுக்கீடு மட்டுமே அனைத்து சாதி அடுக்குகளிலும் உள்ள பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு வழிவகுக்கும். இதில் தமிழகக் கட்சிகள் ஒற்றுமையுடன் உறுதியாக நிற்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.

அணங்கு முதல் இதழ் உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களின் கவனத்தையும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இணைய தளத்தில் அணங்கை கொண்டுச் சென்ற கீற்று டாட் காம் அமைப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இரண்டாம் இதழ் குறித்த பருவத்தில் வெளிவரத் தாமதமாகிவிட்டது. இக்காலத் தாமதம் அடுத்த இதழிலிருந்து சரிசெய்யப்படும்.

Pin It