புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பெரிய கிராமம். அங்குள்ள மலையான் ஊரணிக் கரையோரம் இயற்கையான சூழலில் கரகாட்டக் கலைஞர் பொன்னமராவதி கல்யாணியின் வீடு உள்ளது. அவருடைய நேர்காணலுக்காகச் சென்ற என்னையும் புகைப்படக்காரர் ஆர். மோகன்ராமையும் அன்போடு வரவேற்ற கல்யாணி, கயிற்றுக் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். சராசரிக்கும் கூடுதலான கறுப்பு நிறம்.

கிராமத்துப் பெண்ணுக்கே உரித்தான முக அமைப்பு. அந்த அறையைச் சுற்றிலும் ஏகப்பட்ட கேடயங்கள் கண்ணாடி பீரோவினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிரபலங்கள் சால்வை போர்த்திவிட சிரித்துக் கொண்டிருக்கும் கல்யாணியின் ஃபோட்டோக்கள். கலைமாமணி உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

தென்மாவட்டங்களில் பொன்னமராவதி கல்யாணி என்ற பெயர் கரகாட்ட உலகில் மக்களிடையே வெகு பிரபல்யம். அவருக்கு வயது அறுபது இருக்கலாம். அவருடைய கணவர் பெயர் ராமசாமி தேவர். அவரது மகள்களின் பெயர்கள் விசித்ரா, ஜெகதாம்பாள். இருவரும் தாயைப் போலவே கரகாட்டத்தில் சிறப்பாக ஆட வல்லவர்கள். மூத்த மகள் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

உங்கள் பூர்வீகம் பற்றி...

எங்க சொந்த ஊர் பொன்னமராவதிக்குப் பக்கத்தில் இருக்கிற திருக்களம்பூர். அப்பா பெயர் வெள்ளைச்சாமி. அம்மா பெயர் சிட்டம்மாள்.

உங்க அப்பா என்ன தொழில் செய்தார்?

அப்பா சிங்கப்பூர்ல நாடக நடிகர். அஞ்சரைக் கட்டையில பாடுவார். கலையில ஆர்வம் மிக்கவர். அப்பா பானை வாசிப்பார். ஏதாச்சும் பாடுவார். அவர் பாட்டுக்குத் தக்க மாதிரி அஞ்சு வயசு பிள்ளையாக இருந்த என்னை ஆடச் சொல்லுவார். எங்கப்பா வச்சிருந்த நிலம் போனப்பிறகு கூலி வேலை செய்ய எங்களைக் கூட்டிட்டு நாட்டரசன் கோட்டை போனார். அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். எங்கப்பா எனக்கு ஆட்டம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்ப அந்தப் பக்கம் நடந்துபோன வீரசிங்கக்கோனார்ன்றவர் அதைப் பார்த்துக்கிட்டே போயிருக்கார். பிறகு வந்து எங்கப்பாகூட பேசி எனக்குக் கரகாட்டம் சொல்லிக் கொடுத்தார்.

உங்கள் குருநாதர் எப்படிப்பட்டவர்?

என் குருநாதர் வீரசிங்கக்கோனார் காளையார்கோவிலைச் சேர்ந்தவர். அவரு புது வீடுகளில் படம் போடுவார், கரகாட்டமும் ஆடுவார். அவரு எனக்கு முந்தி பனிமலைப் பட்டியைச் சார்ந்த தங்கம்கிற குறக்குலப் பெண்ணுக்கு கரகம் ஆடச் சொல்லிக் கொடுத்திருந்தார். அவர்தான் பெண்ணுக்குக் கரகாட்டம் ஆடச் சொல்லிக்கொடுத்த முதல் கலைஞர். அவரோட ரெண்டாவது மனைவி அரிசனப் பெண். அவரு சாதி வித்தியாசம் பார்க்கமாட்டார்.

உங்களோட கரகாட்டம் எப்பொழுது அரங்கேற்றமானது?

நாட்டரசன் கோட்டையில குருநாதர் கோயிலில் வச்சு எனக்கும் என் குருநாதர் பெண் 12 வயசான அம்சவள்ளிக்கும் அரங்கேற்றமாச்சு. அப்ப எனக்கு 8 வயசு இருக்கும்.

அன்று கரகாட்டம் எப்படி இருந்தது?

கரகாட்டங்கிற கலையே ராமநாதபுரத்துக் கலைதான். நையாண்டி மேளமும் அங்கேதான் சூப்பராக இருக்கும். கரகாட்டத்துடன் பந்தம் சுற்றுதல், காவடி ஆட்டம், புலி ஆட்டம், சைக்கிள் பேலன்ஸ் மாதிரி ஐட்டங்களும் இருந்தன.

அதென்ன நையாண்டி மேளம்?

ராஜமேளங்கிறது உட்கார்ந்து வாசிப்பது. மேளக்காரர்களும் நாயணக்காரர்களும் ஆடிக்கொண்டும் குதித்துக் கொண்டும் வாசிப்பது நையாண்டி மேளம். ஊதிவிட்டு சிரிப்பது, கேலி பண்ணுவது, ஆட்டக் கலைஞர்களுடன் சேர்ந்து ஆடுவது... இப்படி நையாண்டியாக இருக்கும்.

கரகம் ஆடுவது எப்படி உங்களுக்குத் தொழிலாக ஆனது?

கொல்லங்குடி வெட்டுடைய காளிக்கோவிலில் எட்டு நாள் திருவிழா நடக்கும். சாமி சின்னத் தேர்ல ஊரணியைச் சுத்தி வரும். ராத்திரி நேரம் எங்க வாத்தியார், அவருடைய மகள், நான் எல்லாம் ஆடுவோம். ஒருநாள் நான் ஆடாம தூங்கிட்டேன். எங்க வாத்தியார் அடிச்சதனால என் காலில காயம் ஏற்பட்டிடுச்சி. அதனால எங்க அம்மா என்னயைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கேயிருந்து எங்க அப்பா அம்மாவுடன் ஒக்கூர் போனேன். எங்க அப்பாவும் அம்மாவும் நகைக் கடையில தூசி குப்பையை வாங்கி தண்ணியில அலசி தங்கத்தினைத் தனியாக எடுப்பாங்க. அந்த ஊர்ல முத்தையாகோனார், செல்லையா ஆசாரிகிட்டே ஆட்டம் கத்துக்கிட்டேன். செல்லையா வாத்தியார் ஏணி விளையாட்டு, பந்தம் ஆடச் சொல்லிக் கொடுத்தார்.

தனியாக எப்ப ஆட ஆரம்பிச்சிங்க?

காரைக்குடி, கொப்புடைய நாயகி அம்மன் பூத்திருவிழாவில கைவண்டி தொழிலாளர் நடத்திய மண்டபப்படியில் ஆடினேன். என்கூட என் வாத்தியாரும் சேர்ந்து ஆடினார். அப்ப எனக்கு 16 வயசு இருக்கும். வருசம் 1962ஆக இருக்கும்னு நினைக்கிறேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு அப்ப எவ்வளவு பணம் வாங்கினிங்க?

எனக்கு அது தெரியல. மொத்தக் குழுவுக்கும் 300 ரூபாய் கொடுத்திருப்பாங்க.

கரகாட்டம் எவ்வளவு நேரம் ஆடுவீங்க?

விடிய விடிய ஆடுவோம். இப்பவும்தான்.

தனியாக ஆட ஆரம்பிச்சப்ப முதன் முதலாக வாங்கிய தொகை நினைவிருக்கிறதா?

என் 18 வயசுல 10 ரூபாய் வாங்கினேன்.

இரவு முழுக்க ஆடும்போது உடலில் வலி ஏற்படாதா?

எனக்கு டீ, காபி பழக்கம் கிடையாது. எங்க அம்மா புகையிலை போடுவாங்க. அதனால லேசாக கிள்ளி வாயில வச்சுக்கிடுவேன். பின்னாடி அதையும் விட்டுட்டேன். ஒருநாள் மட்டும் ஆடிட்டு வீட்லயிருந்தா அலுப்பு வரும். தொடர்ந்து ஆடிக்கிட்டிருந்தா அலுப்பு வராது.

உங்க ஆட்ட நிகழ்ச்சிக்கு சீசன் இருக்கா?

தை மாசம் தொடங்கி வைகாசி வரைக்கும் நல்ல சீசன்தான்.

கரகாட்டம் ஆடும்போது உங்க மனதில் என்ன தோன்றும்?

கலையினால ஆடுகிறவங்க, பார்க்கிறவங்க ரெண்டு பேருக்குமே புத்துணர்ச்சி வரும். உயிருக்குப் போராடுகிறப்பக்கூட இசையைக் கேட்டா உயிர் கொஞ்ச நேரம் தங்கியிருக்கும். ஆடிக்கிட்டு திரும்புறப்ப இந்த உலகமே எங்கையில இருக்கிற மாதிரி நினைப்பேன் (சிரிக்கிறார்). நாதசுர இசையில தேவன்கூட மயங்கிறப்ப பாவம் மனுசன் என்ன பண்ணுவான்.

பெண்கள் கரகம் ஆடுவது பற்றி என்ன சொல்லுகிறீர்கள். அது ஆண்கள் ஆடும் ஆட்டம் என்பதுபோல ஒரு கருத்து இருக்கிறதே..?

கரகம்னாலே சக்தி கரகம்தான். கரகம் ஆடுற பெண் அம்பாள் வேசம் போட்டுக்கிட்டுத்தான் ஆடுறாள். அம்பாள் என்றாலே மாயாதான். காற்று வீசுதே அதுக்கு உருவம் இருக்கா. அதுபோலத்தான் சக்தியும். கும்பம், கரகம்ங்கிறது பெண்களுக்கானது. பெண்ணே கும்பம்தான். அது பெண்ணோட அடையாளம். உலகமும் பெண்தான். அதுக்கு வாயில்லை. கும்பத்துக்கு வாய் இருக்கு. கும்பத்தைத் தூக்கி ஆண்கள் ஆடினால், சக்தியைத் தூக்கி தலையில வச்சிக்கிட்டு ஆடினதாகத்தான் அர்த்தம். சிவனுக்குள்ள சக்தி வந்த பிறகுதான் எல்லாம் இயங்குது. தன்னைத்தானே அழிச்சிக்கிறது சக்திக்கு மட்டும்தான் இருக்கு. பெண்ணை வைச்சுக்கிட்டுத்தான் உலகமே இயங்குது.

கரகாட்டத்தில உங்க சாதனை என்ன?

பெண்கள் சிலம்பம் விளையாடுவது கிடையாது. நான் பொன்னமராவதியில மாடுகளுக்கு லாடம் கட்டுகிற முஸ்லிம் ஒருத்தர் கிட்டேயிருந்து சிலம்பம் கத்துக்கிட்டேன். சின்னக்குச்சி, சல்லிக்குச்சி வச்சு பதினைந்து அடி போடுவேன். சினிமாவுல எம்.ஜி.ஆர் ஆடின சிலம்பாட்டம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எம்.ஜி.ஆர் மலைக்கள்ளன் படத்தில வர்ற மாதிரி ஆம்பள வேஷம் கட்டிக்கிட்டு சிலம்பாடுவேன். என்கூட வருகிறவர்கள் அல்லது ஊர்க்கராங்க கூட சேர்ந்து சிலம்பம் சுத்துவேன். பொன்மலைங்கிற ஊரில் எனக்கு கறுப்பு எம்.ஜி.ஆர், சின்ன எம்.ஜி.ஆர் என்று பட்டம் கொடுத்தாங்க.

நீங்க கறுப்பா இருக்கிறது உங்க ஆட்டக் கலைக்கு இடைஞ்சலாக இருந்திருக்கா?

அம்பாளே கறுப்புத்தான். அவளைப்போல அழகி உலகில் வேறு யாருமில்லை. கறுப்புலதான் எல்லா நன்மையும் இருக்கு. கருமேகத்தை விட உலகத்துல வேறு என்ன நன்மையிருக்கு? கறுப்பா இருக்கிறதப் பத்தி நான் ஒன்றும் நினைக்கிறது இல்லை. கறுப்பும் அழகு, சிவப்பும் அழகு, எல்லாமே அழகுதான். என்கிட்டே பல்லும் நீண்ட முடியும்தான் இருக்கு. பிறகு வித்தைதான்.

உங்க கூட சேர்ந்து ஆடின கலைஞர்கள் பற்றி சொல்லுங்கள்.

எங்க அக்கா மகள் கொப்பாத்தாள் என்கூட ஆடுச்சு. அப்புறம் சண்முக வடிவுன்னு கேரளாப் பெண். பார்க்க ரொம்ப லட்சணமா அழகா இருக்கும். நல்ல சிவப்பு. நான்தான் அந்தப் பெண்ணுக்குக் கரகாட்டம் சொல்லிக் குடுத்தேன். அது கத்துக்கிட்டு ரொம்ப நல்லா ஆடுச்சு. வாத்தியாரான என்னையே மிஞ்சுற அளவுக்குப் போயிடுச்சு. திடீர்ன்னு என்னை விட்டு விலகிப்போய் ரெண்டாந் தாரமாக கல்யாணம் பண்ணிக்கிடுச்சு. அப்புறம் தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப்போச்சு. அதற்கப்பறம் என்கூட ஆடினவங்க எல்லாம் போட்டிக் கரகம்தான்.

உங்களுக்கு இசை ஞானம், இசைப் பயிற்சி உள்ளதா?

அதெல்லாமில்லை. ஏழெட்டு ராகங்களை வாசித்தால் அவற்றை அடையாளம் தெரியும். சாமி தேர்ல ஊர் சுத்தி வரும்போது மல்லாரி ராகம் வாசிப்பாங்க. மல்லாரியில திரண்டு, மல்லாரி இருட்டுன்னு சொல்வாங்க. தேவதாஸ் சினிமாவுல வர்ற துணிந்த பின் மனமே சோகம் கொள்ளாதே என்ற பாடலுக்கு மிதிக்கிறது ரொம்ப கஷ்டம். அது மெலோடிக்கும் கீழே. நான் பயிற்சியினால அதுக்கும் மிதிப்பேன்.

நீங்கள் ஏதாவது புதுசாக கரகாட்டதில சேர்த்து இருக்கிறீர்களா?

புன்னைவெளி ராகத்துக்கேற்ப உடம்பை பாம்பு மாதிரி வளைச்சு ஆடினது. கரகாட்டக் கலைஞர்களில் நான்தான் முதன் முதலாக ஆடினேன்.

இளவயதில் நீங்க ஆடும்போது ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி...

ஆயிரக்கணக்கா இருக்கு. ஒருநாள் ஸ்ரீவைகுண்டத்தில ஆடப் போயிருந்தேன். கிட்டப்பா மேளம் சூப்பராக இருக்கும். அப்ப எனக்கு இளவயசு. அந்த ஊர்ல முக்கியமான தேவர் ஒருத்தர் வந்து பகலில் ஆடணும்ங்கிறார். நான் ஆட முடியாதுன்னு சொல்லிட்டேன். பாரு உன்னைய உதைப்பேன்னு வந்தாங்க. அப்புறம் போலீஸ் ஸ்டேசன் போயி என் டயரியைக் காமிச்சேன். அதில என் கண்டிசன்கள் எல்லாம் எழுதி பார்ட்டிகிட்டே கையெழுத்து வாங்கி வச்சிருப்பேன் அட்வான்ஸ் வாங்குறப்ப. அப்புறம் சமாதானமாகி ராத்திரி ஆடினேன். என் வித்தையைப் பார்த்துப் பாராட்டி தங்க மெடல் போட்டாங்க.
அதென்ன கண்டிசன்கள்?

கரகம் ஆடும்போது எனக்குன்னு சிலது இருக்கு. மாலையைக் கழுத்தில போடக்கூடாது. தங்க மெடலானாலும் கையிலதான் தரணும். உடையில ரூபாய் நோட்டைக் குத்தக்கூடாது. ஊர் சுத்தி ஆடமாட்டோம். பகலில் ஆடமாட்டோம். நான் என் வித்தையைக் காட்ட மேடை போடணும், இல்லாட்டி சுத்தி கயிறு கட்டி கீழே தார்ப்பாய் விரிச்சு தரணும். அதுல நல்ல போகஸ் லைட் இருக்கணும். மது அருந்திட்டு ஆட்டக் களத்துக்குள்ளே வரக்கூடாது... இப்படி. அப்புறம் பாருங்க குறத்தியாக ஆடுகிறவங்கள் ஆடியன்ஸ் மேலபோய் விழுகிறது, வேட்டியை உரியிறது, அவனுகளும் இவள்களைத் தூக்கி வைச்சுக்கிட்டு ஆடுறது. இப்படி ஆட்டம் ஆபாசமா போய்த் தரங்கெட்டுப் போயிடுச்சு. ஆனால் எனக்கு கண்டிசன்தான் முக்கியம்.

இப்படி செய்வதால் உங்களுக்குப் பிரச்சினை வராதா?

கல்யாணி மேடையிலதான் ஆடுவான்னு தெரிஞ்சவங்கதான் என்னைத் தேடி வர்றாங்க. ஒருநாள் பாருங்க. திருச்செந்தூர்ல ஆடப் போயிருந்தேன். பகலில் கோயிலைச் சுத்தி ஆடணும்னு சொல்றாங்க. மதுரையில இருந்து வந்த பெண் ஆடத் தயாராகி ஆட ஆரம்பிச்சுடுச்சி. நான் ஆடமாட்டேன்னு சொல்லிட்டேன். அப்பவும் பிரச்சினையாகிப் போலீஸ் ஸ்டேசனுக்குப் போனேன். அன்னக்கி இரவு என் வித்தைகளைக் காமிச்சு ஆடினப்ப பெரிய ரூபாய் நோட்டு மாலை போட்டு என்னைப் பாராட்டினாங்க.

ஏன் பகலில் ஆட மறுக்கிறீர்கள்?

பூமியிலே இயற்கையாக இரவு, பகல் என்று ஏன் உருவாகியிருக்கு? பகலில் மனுசன் உழைக்கணும். கலைங்கிறது ராத்திரியிலதான். பகலில் ஆடினால் அது அரிதாரத்துக்கு மரியாதை இல்லை. நாங்க கலைஞர்கள் சந்திரன் மாதிரி. சந்திரனைப் பார்த்து மயங்காதவர்கள் யாருமே இல்லை. பகலில் நிலவைப் பார்த்தால் அழகாயிருக்குமா? ராத்திரிதான் நிலாவின் அழகு தெரியும். நான் பகல் நிலவு அல்ல. இயற்கை அழகு நிலா. நிலா ஜொலிக்க மேடை வேணும். அடிக்கடி ஆடைகளை மாற்றிக்கிட்டு வந்து ஆடுவேன். சும்மா கரகத்தைத் தூக்கித் தலையில வைச்சுக்கிட்டு பகல் வேளையில சாமிக்கு முன்னால போர்றது சரியில்லை என்பது என் கருத்து.

ஊர் விட்டு ஊர் போய் ஆடும்போது தகராறு ஏற்பட்டால் பயமாக இருக்காதா?

பயமா? எதுக்கு பயம். எது நடந்தாலும் அவன் செயல்தான். நியாயம் நம்ம பக்கம் இருக்கிறப்ப எதுக்குப் பயப்படணும்?

ஆட்டம் ஆடுறப்ப யாரையாது அடிச்சிருக்கீங்களா?

பலரை அடிச்சிருக்கேன். ஆடிட்டு ஓரத்தில ஓய்வா உட்கார்ந்திருப்பேன். யாராவது தண்ணியைப் போட்டுகிட்டு பைய வந்து இடிச்சிக்கிட்டு உட்காருவானுக. முதலில் ‘தள்ளுங்க' என்று மரியாதையாகச் சொல்வேன். திரும்ப ஒட்டி உட்காருவான். பட்டென்று அடிச்சு ‘தள்ளுய்யா' என்பேன். அப்புறம் காலையில பெரிய தகராறு வரும். இப்படித்தான் வேப்பங்குடிங்ற ஊர்ல வருசப் பிறப்பு அன்னக்கி ஆடினேன். இடையில பாடினேன். அப்பக் கொஞ்சப் பேர், ‘பாடாதே ஆடு'ன்னாங்க. இன்னங் கொஞ்சப் பேர் ‘ஆடாதே பாடு'ன்னாங்க. நான் பாடிக்கிட்டிருந்தேன். இதனால சிலர் என்மீது மண்ணை அள்ளிப் போட்டுட்டு போயிட்டானுக. நான் கோபமாக ‘இப்படி அக்கிரமம் நடக்குது. இந்த ஊர்த் தலைவன் எங்கேயோ போய்ப் படுத்துக்கிட்டானே' என்று சொன்னேன். மறுநாள் காலையில நான், எங்க அம்மா, தம்பி, ஆட்டக்காரப் பிள்ளைகள் கிளம்பினோம். ஊருக்குத் தள்ளி ரோடு மீது பனைமரம் கிடந்துச்சு. பிளசருக்கு வெளியே எட்டிப் பார்த்தால் ஏழெட்டு ஆட்கள் நின்றனர். ஒருத்தன் சொன்னான் : "இறங்குடி பறச்சி'' என்று. நான் சொன்னேன், "என்னைத் தொட்டீங்க... தூக்கு மாட்டிச் செத்துப்போவேன்'' என்று. அதுக்குள்ள விசயம் ஊர்க்காரர்களுக்குத் தெரிஞ்சு கும்பலாக வந்தாங்க. அந்த ஏழு பேரும் ஊர்ப் பஞ்சாயத்துல ஆளுக்கொரு தேங்காய் உடைச்சிட்டு என்கிட்டே மன்னிப்புக் கேட்டாங்க.

உங்களைப் ‘பறச்சி' என்று சொன்னதைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்?

அப்படிச் சொன்னதுல எனக்கு மன வேதனைதான்.

சாதிரீதியாக கலைஞர் என்ற முறையில் அனுபவத்தைச் சொல்லுங்க.

ஆட்டமாடுற பெண் என்றாலே பல பிரச்சினை இருக்கு. நான் ஒரு அரிசனப் பெண். தேவர் ஒருத்தரைக் கலப்புத் திருமணம் பண்ணியிருக்கேன். அதனால எனக்கு ஆடப் போகிற ஊர்களில் வீட்டுக்குள்ளே சோறு போடுவாங்க. எங்க கூட வர்ற மேளக்காரர்களுக்கு திண்ணயிலயும்; சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்துல வீட்டுக்கு வெளியல வச்சுத்தான் சோறு போடுறாங்க. "நான் பறைச்சி. பறைய வீட்டுப் பிள்ளை'' என்றுதான் யாரு கேட்டாலும் சொல்லுவேன். இதில என்னங்க கேவலம். எனக்குத் தெய்வ நம்பிக்கை இருக்கு.
பறச்சின்னு சொல்ல ஏன் வெட்கப் படணும்? அப்படின்னா அவங்களே அந்தச் சாதியைத் தாழ்த்திக்கிறாங்கன்னு அர்த்தம். பறையன்னு சொல்ல சங்கடப்பட்டால் அது என்ன கெட்ட சாதியா? எல்லோருமே மனுசர்கள்தானே.

கரகாட்டம் ஆடப்போகும்போது ஆண்களால் தொல்லை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?

என்னுடைய காதல் முழுக்கக் கலைதான். ஆளைக் காதலிக்கவே மாட்டேன். ஆனால் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுவேன். என் சிரிப்பு மோசமான சிரிப்பு (சத்தமாகச் சிரிக்கிறார்) அதுவந்து இயற்கையாக சிரிச்சுப் பேசுவேன். அதனால இவ ஒரு ஆள் மயக்கி. நம்ம பக்கம் வந்திடுவான்னு நினைப்பாங்க. அது கிடையாது. அதுவந்து வெள்ளந்தியான சிரிப்பு. பொதுவா எனக்குக் கோபம் ரொம்ப அதிகமாக வரும். அதுதான் பாதுகாப்பு. நம்மை விட்டு ரெண்டு போயிட்டால் திரும்ப வராது. ஒன்று உயிர், இன்னொன்று கற்பு.

நீங்க ஆடத் தொடங்கிய கரகாட்டத்திற்கும் இன்றைய ஆட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

முந்தி சல்லாடம், காலில் பனியந்து மாராடி போட்டு ஆடுவோம். மரிக்கொழுந்து, மல்லிகை, சந்தனம் அணிந்து கரகம் ஆடும்போது ஒரே மணமாக இருக்கும். தெய்வமே அங்கு வந்து நிற்கும். இப்ப ஆடும்போது கண்ட கண்ட வாசனைகள் வருது. அதை என்னால சொல்ல முடியாது. கரகம் என்ற கிராமியக் கலை தெய்வீகமானது. அம்பாள் மாதிரி ஆடை உடுத்தி, நகை அணிந்து ஆடணும். இப்ப ஆடுகிற பெண்களில் சிலர், தலையில குறத்திபோல கொக்கு இறகுகளைச் சொருகிட்டு ஆடுறாங்க. ஆடைகளைப் பத்திச் சொல்லவே வேண்டாம்.
உடம்பு தெரியுற மாதிரி ஆடை உடுத்தினால் பார்க்கிறவங்க உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி ஆயிடும்.
கோயில் கொடை, திருவிழாவில ஆடும்போது குடும்பப் பெண்கள் எல்லாம் ஆட்டம் பார்க்க வராங்க. அவங்க மனசுல ஆபாசத்தைத் திணிப்பது கலைஞனின் வேலை இல்லை. இப்படியே போனால் கொஞ்ச காலத்துல கரகாட்டக் கலை மெல்ல அழிஞ்சிடும்.

இந்த மாதிரி சூழல் மாறியதற்குக் கரகாட்டக் கலைஞர்கள் மட்டும் பொறுப்பாக முடியுமா?

நான் ஆடவந்த காலத்தில எங்க ஆட்டத்தை ரசிச்சுப் பார்த்தாங்க. என் அழகைக் கண்ணால் ரசித்ததுடன் போயிட்டாங்க. இப்ப அப்படி இல்லை, இவளை எப்படியாவது அனுபவிக்கணும்னு நினைக்கிறாங்க. ஒருசில கலைஞர்கள் எல்லோரையும் சொல்லவில்லை - அதுக்கு ஒத்துக்கிடறதால எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்கிறாங்க. படுகுழியில தள்ள முயளுறாங்க. ‘நூறைக் கெடுக்குமாம் குருணி'ங்கிற மாதிரி ஆயிப்போச்சு. ஒருசிலர் செய்யுற தவறுனால எல்லோரும் இப்படித்தான் இருப்பாங்க என்று கலைஞர்கள் கேவலப்படுத்தப் படுகிறார்கள்.

இந்த மோசமான நிலை மாற வாய்ப்பு உண்டா?

விசம் தலைக்கேறிவிட்டது. மாறுமா என்று தெரியலை. கலைஞர்களாகப் பார்த்தால்தான் மாறும். செக்ஸாக ஆடுகிற பெண்ணுக்கு வருசத்துக்கு 200 ஆட்டம். வித்தையைக் காண்பித்துத் திறமையாக ஆடுகிற பெண்ணுக்கு 25 ஆட்டம். இதுதான் இன்றைய நிலை. மக்களை இப்படி செக்ஸ் ஆட்டம் பார்க்கத் தூண்டிவிட்டது
கலைஞர்கள்தான். இப்ப அவஸ்தைப் படுறதும் அவுங்கதான். கிராமியக் கலை ஆடுகிற பெண்களோட பொருளாதார வசதி கம்மிதான். ஒரு ஆட்டத்துக்கு 1500 ரூபாய் வாங்குற பொண்ணுங்க இருக்காங்க. ஆனால் தினமும் மட்டன், மது என்று செலவழிச்சுப் புடுறாங்க. கரகம் ஆடுற பெண்ணுகூட கணவன் என்று சொல்லிக்கொண்டோ அல்லது சேர்ந்து வாழ்கிற ஆம்பிளங்க பெரும்பாலும் சோம்பேறியாகத் தான் இருப்பானுங்க.

மொத்தத்தில் புருசனாக வர்ற இருக்கிறவன் இவளே வச்சு சம்பாதிச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருப்பான். கொஞ்ச நாளில் அவளை விட்டுட்டு ஓடிவிடுவான். அப்புறம் அந்தப் பிள்ளைங்க ஒவ்வொரு கலப்புக் கடையாச் சாப்பிட்டு பார்க்கிற மாதிரி, கரகம் ஆடுறதுக்கு துணைக்கு வர்ற இவனாவது நல்லா இருப்பானான்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாள். கரகாட்டக்காரிக்கு மட்டுமில்ல இந்தப் பிரச்சினை. சினிமா நடிகையில இருந்து குறத்தி வேசம் போடுற பெண் வரைக்கும் இதே பிரச்சினைதான். பெண் கலைஞர்கள் ஓய்ந்த நேரத்தில கூடை பின்னுதல், எம்ப்ராய்டரி போடுதல், டிரஸ்க்கு ஜமிக்கி வைத்தல், தையல் தைத்தல் போன்றவற்றைக் கத்துக்கிட்டால் வருமானம் வராத காலத்துல தாக்குப் பிடிக்கலாம். தன்மானத்துடன் கலைஞர்களால் வாழ முடியுங்கிறதக் காட்ட முடியும்.

இப்ப கரகாட்டம் ஆடுகிற பெண்கள் முன்னர் போல பல வித்தைகள் ஆடுவதில்லையே ஏன்?

வெறுமன கரகத்தை மட்டும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடினால் மக்கள் ரசிக்க மாட்டாங்க. ஏதாவது வித்தியாசமா செய்து காட்டினால் மக்கள் நிச்சயம் வரவேற்பாங்க. இப்ப வித்தியாசமா செய்துகாட்ட செக்ஸ் மட்டும் தானிருக்கு. கொக்கோக சாஸ்திர புத்தகத்துல இருக்கிற படங்களை அப்படியே கலை உலகத்தில நடத்திக் காட்டுறது நடக்குது. இந்த மாதிரி ஆபாசத்தைக் கண்டிக்கனும். நான் ஆடும்போது அடிப்பக்கம் குழிவான மதுபாட்டிலில் துணியைச் செருகி உச்சந்தலையிலிருந்து நெற்றிக்கு இறக்கி மீண்டும் உச்சிக்குக் கொண்டுபோவேன். அதை மந்திரம், மை வேலைன்னு சிலர் சொல்வாங்க. இதெல்லாம் செய்ய திறமையும் பயிற்சியும் வேணும். புதுசு புதுசாக ஏதாவது செய்து மக்களை நம்ம பக்கம் கவந்தாத்தான் கரகாட்டக் கலை வளரும். ஆனால் இப்ப சிலர் பாதியிலே மேக்கப்பை அழிக்கிறது, பாதியிலே போய்த் தூங்குறது, பாதியிலே போய்த் தண்ணியடிக்கிறது என்று செய்யுறாங்க. அவங்களுக்கு வித்தை மீது அக்கறை இல்லை. வெறுமன செக்ஸைத்தான் நம்புறாங்க.

ஏழு வயதில் ஆடத் தொடங்கிய உங்கள் கலை வாழ்க்கை எப்படி இருக்கிறது?

கலை என்னோட உயிர். அதனால எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி கலங்கமாட்டேன். இன்னொரு பிறவின்னு இருந்தா அதிலயும் கரகாட்டக் கலைஞராகத்தான் பிறக்கணுன்னு நினைக்கிறேன். என்னோட மகள்கள் விசித்ரா, ஜெகதாம்பாள் ரெண்டு பேருமே என்னோட வழியைப் பின்பற்றி அற்புதமா ஆடுறாங்க. இந்தப் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில சேர்த்துவிட்டு வேறு மாதிரி ஆக்கிவிடலாம்னு நினைச்சேன். அது நடக்கவில்லை. அவர்கள் தேர்ந்த ஆட்டக்காரியாக ஆயிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் தபால் மூலம் எம்.ஏ. படிச்சிட்டாங்க. ஆனா பாருங்க அவங்களுக்கு இன்னும் நல்ல மாப்பிள்ளை அமைய மாட்டேங்குது. அதுதான் எனக்குக் கவலையா இருக்கு. (கண்கள் கலங்கிட சில நிமிடங்கள் பேசவில்லை). சரி அதை விடுங்க. அதைக் கடவுள் பார்த்துகிடும். நான் இந்தக் கலைக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோசப்படுறேன். மீண்ட சொர்க்கம் படத்துல பத்மினி பாடின பாட்டு எனக்குன்னு நினைச்சுக்குவேன். அந்தப்பாட்டு

"மனநாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாழ்கிறேன்
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே''

உங்களுக்குத் தெரியுமில்லே. என் கலை வாழ்க்கை அப்படித் தானிருக்கு.

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும். நல்ல கலைஞருக்குச் சாவு என்பதே கிடையாது. அவள் இறந்த பிறகு மக்கள், கலைஞரைச் சொல்லிக்கொண்டே இருப்பாங்க.

சந்திப்பு : ந. முருகேசபாண்டியன்

Pin It