கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கை விசாரித்த CB-CID-யின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி, விசாரணையின் தரம் இத்துடன் அரசின் பொறுப்புடைமை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
சாதிய ஆணவமும் தனிமனித உரிமையும்
காதலிப்பதும், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகள் ஆகும். சாதி, மதம், குடும்பப் பின்னணி ஆகியவற்றின் பெயரால் இந்த உரிமைகளை மறுக்க முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவு சட்டத்தின் முன் சமத்துவத்தையும், 15-ஆவது பிரிவு பாகுபாடின்மையையும், 21-ஆவது பிரிவு வாழ்வுரிமையையும் தனிமனித சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் நடைமுறைச் சமூகத்தில் சாதிய அதிகாரம் இந்த அரசமைப்புச் சட்ட விழுமியங்களைத் தொடர்ந்து சவாலுக்கு உள்ளாக்குகிறது. காதல் திருமணங்கள் சாதியக் கட்டமைப்புக்கு எதிரானவையாகக் கருதப்படும் இடங்களில் வன்முறை நிகழ்கிறது. குடும்பத்தின் கௌரவம் என்ற பெயரில் மனித உயிர்கள் பலியாகின்றன. ஒரு மனிதரின் உயிரைவிடச் சாதியப் பெருமை உயர்ந்ததாகக் கருதப்படும் சமூகத்தில் சனநாயகத்தின் அடித்தளமே கேள்விக்குள்ளாகிறது.
CB-CID விசாரணை: எத்தனை பக்கங்கள் என்பதல்ல
இந்த வழக்கில் CB-CID தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அதன் பக்க எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிடப்பட முடியாது. விசாரணையின் தரம் என்பது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் நம்பகத்தன்மையிலும், அவற்றின் அறிவியல் பூர்வமான ஆய்விலும், குற்றத்தின் பின்னணியை முழுமையாக வெளிப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
தொலைபேசி அழைப்புப் பதிவுகள், செல்போன் கோபுரத் தகவல்கள், தொடர்புடையவர்களின் நடமாட்டம், கண்காணிப்புக் கேமரா பதிவுகள், நேரடி சாட்சியங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள் ஆகியன முறையாக ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
குற்றவியல் விசாரணையில் ஒவ்வொரு ஆதாரமும் தனித்தனியாகவும், மற்ற ஆதாரங்களுடன் தொடர்புபடுத்தியும் மதிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக, திட்டமிடல், குற்றத்தின் நோக்கம், தொடர்புடையவர்களின் பங்கு ஆகியவற்றை நிறுவுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் முக்கியமானவை. இந்த அடிப்படைகளில் விசாரணை போதுமான அளவு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருப்பதே கவலைக்குரியது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது விசாரணையின் முடிவாக இருக்கலாம். ஆனால் அது நீதியை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதம் அல்ல.
நீதிமன்றத்தின் அதிருப்தியும் அரசின் பின்னடைவும்
விசாரணையின் குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பிய பின்னரும், தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டைத் தொடர்ந்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரித்திருப்பது அரசுக்குச் சட்டரீதியான பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கு ஒரு சட்ட நுட்பத்தைத் தெளிவுபடுத்துவது அவசியம். மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது என்பதாலேயே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குற்றம் அல்லது குற்றமின்மை இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியாது.
அதேபோல், விசாரணை தொடர்பாக நீதிமன்றங்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அரசு தனது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதற்கான சட்டக் காரணங்களை ஆராய வேண்டும்.
விசாரணையில் குறைபாடுகள் இருந்திருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான சட்டபூர்வமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தின் விமர்சனத்தை ஓர் அரசியல் சங்கடமாக மட்டும் கருதுவது பொறுப்புள்ள ஆட்சியின் அணுகுமுறையாக இருக்க முடியாது.
விசாரணை அமைப்பின் பொறுப்புடைமை எங்கே?
CB-CID போன்ற சிறப்பு விசாரணை அமைப்புகளிடம் மக்கள் வைப்பது சாதாரண நம்பிக்கை அல்ல. உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் எழும்போது, உண்மையை வெளிக்கொணர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் இத்தகைய அமைப்புகளிடம் வழக்குகள் ஒப்படைக்கப்படுகின்றன. குறிப்பாக, காவல்துறையுடன் தொடர்புடையவர்கள் குற்றஞ்சாட்டப்படும் வழக்குகளில் விசாரணையின் சுதந்திரமும் நடுநிலைத்தன்மையும் மிக முக்கியமானவை ஆகும்.
விசாரணை அமைப்பு எந்தவொரு அதிகாரத்தின் செல்வாக்கிற்கும் உட்படாமல் செயல்பட வேண்டும். சாட்சிகளின் பாதுகாப்பு, ஆதாரங்களின் பாதுகாப்பு, அறிவியல் விசாரணை, குற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்தல் ஆகியன அதன் அடிப்படைக் கடமைகள்.
இந்த வழக்கில் CB-CID-யின் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும். விசாரணை அதிகாரிகளின் பொறுப்பையும் மதிப்பிட வேண்டும். உண்மையான தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணை அமைப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அவற்றின் செயல்பாடுகள் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டியவை.
மனித உரிமையும் நீதியின் அறமும்
அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 3-ஆவது பிரிவு ஒவ்வொருவருக்கும் வாழ்வுரிமை, சுதந்திரம் இத்துடன் பாதுகாப்புக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. 7-ஆவது பிரிவு சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த உரிமைகள் பன்னாட்டு ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் வெறும் வாசகங்கள் அல்ல. ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை விழுமியங்கள் ஆகும்.
ஒரு கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பது என்பது குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டும் முடிவடைவதில்லை. உண்மையை அறியும் உரிமை, நீதியைப் பெறுவதற்கான உரிமை, மாண்புடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவையும் அதில் அடங்கும்.
அதே நேரத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் நியாயமான விசாரணைக்கான உரிமை உண்டு. இந்த இரு உரிமைகளையும் சமநிலைப்படுத்துவதே அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம்.
நீதியின் அளவுகோல் சாதியற்ற சமூகமே!
கவின் கொலை வழக்கு ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டும் சுருக்கப்படக் கூடாது. அது தமிழகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டிய நிகழ்வு. சாதிய ஆணவத்திற்கு எதிராகச் சட்டம் உறுதியாகச் செயல்பட வேண்டும். காவல்துறை, விசாரணை அமைப்புகள், அரசு என அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய அரசமைப்புச் சட்டப் பொறுப்புகளை உணர வேண்டும்.
ஒரு சனநாயக அரசின் வலிமை அதன் அதிகாரத்தில் இல்லை; அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும்போது அதைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நேர்மையில் தான் இருக்கிறது. கவினுக்கான நீதி என்பது கடந்த காலத்தின் ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும் பதில் மட்டுமல்ல. எதிர்காலத்தில் சாதியின் பெயரால் இன்னொரு உயிர் பலியாகக் கூடாது என்பதற்கான சமூக உத்தரவாதமாகவும் அமைய வேண்டும்.
முதல் கோணலை நேர் செய்க
இந்த வழக்கின் ஆரம்பத்திலேயே பாளையங்கோட்டை ஆய்வாளர் காசிப்பண்டியன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று கவின் குடும்பத்தார் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கு CB-CID-க்கு மாற்றப்பட்டது. CB-CID விசாரணையிலும் நம்பிக்கை இல்லை என்று ஆரம்ப நிலையிலேயே கவின் தாயாரும் உறவினரும் குற்றம் சாட்டினர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, 800 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தயாரித்த CB-CID, ஏறத்தாழ 300 நாட்கள் கழித்து மூன்றாவது குற்றவாளி கிருஷ்ணகுமாரியைக் கைது செய்தது.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் வைத்து வழக்குரைஞர் சுரேஷ் என்பவர் விசாரணைக்காக கிருஷ்ணகுமாரி CB-CID அலுவலகத்திற்கு வந்த போது அவரைக் கைது செய்யாதது ஏன் என்று டி. எஸ். பியிடம் நேரில் பலர் முன்னிலையில் கேட்ட போது, "அது எனக்குத் தெரியும்" என்று அவர் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார்.
குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இரண்டாம் நான்காம் குற்றவாளிகளைக் குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவித்தது.
கவின் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த, இரண்டாவது குற்றவாளி சரவணன் தாராபுரத்தில் கொலையுண்ட வழக்குரைஞர் முருகானந்தம் வழக்கின் முக்கிய சாட்சியைக் கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் இவர் கைது செய்யப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாதது வியப்பைத் தருவதாகவே உள்ளது.
குற்றப்பத்திரிகையில் இருந்து குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, குற்றப்பத்திரிகை பலவீனமாக உள்ளது என்று கூறி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
திருநெல்வேலி நகரில் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நடந்த ஆணவக் கொலையின் வழக்கை ஆரம்ப நிலையிலேயே உள்நோக்கத்துடன் பலவீனமாக்கியது இங்கே அம்பலமாகிறது.
சமூக நீதி அரசு இதை ஆரம்ப நிலையிலேயே கேள்விக்குட்படுத்தி, துறை ரீதியான விசாரணை செய்து துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு கொலை வழக்கில் உண்மையை நிறுவத் தவறுவது விசாரணையின் தோல்வி மட்டுமல்ல; அது நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியில் சமூகத்திற்குள்ள நம்பிக்கையையும் சிதைக்கிறது. ஒரு மனித உயிரின் இழப்பை எந்த நீதிமன்றத் தீர்ப்பாலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அந்த உயிரைப் பறித்த குற்றத்திற்கான உண்மையை வெளிக்கொணர்வதும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசின் அடிப்படைக் கடமை.
குறிப்பாக, சாதிய ஆணவத்தின் பின்னணியில் நிகழும் கொலைகள் தனிப்பட்ட குற்றங்களாக மட்டும் பார்க்கப்பட முடியாது. அவை அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் சமத்துவம், சுதந்திரம், மனித மாண்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் ஆகும்.
நீதியின் கதவுகள் திறக்கப்பட வேண்டுமானால் உண்மைகள் மறைக்கப்படக் கூடாது. விசாரணை அமைப்புகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும். விசாரணையே நம்பகத்தன்மையை இழப்பது சனநாயகத்திற்கு ஏற்படும் காயம் ஆகும்.
- ச.மோகன்