1917 நவம்பர் 7. உலக வரலாற்றின் திசையை மாற்றியமைத்த ஒரு நாள். ரஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, அரசியல் அதிகாரம் யாருடைய கைகளில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை உலகத்தின் முன் எழுப்பியது. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளும் அதிகாரத்தைத் தங்களது கைகளில் எடுத்துக் காொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அது விதைத்தது. சுரண்டலற்ற சமத்துவச் சமுதாயம் சாத்தியமற்ற கனவல்ல என்ற அரசியலை உலகெங்கும் பரவலாக்கியது.

அந்தப் புரட்சி ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்துடன் முடிந்துவிடவில்லை. உழைப்பின் மதிப்பு, சொத்துடைமை, வர்க்க அதிகாரம், அரசின் இயல்பு, சமூக நீதி ஆகியவற்றைப் பற்றிய உலகளாவிய விவாதங்களுக்கு அது புதிய வாசல்களைத் திறந்தது. நூற்றாண்டைக் கடந்த பின்னரும் நவம்பர் 7 நினைவுகூரப்படுவதற்கான காரணம் இதுவே.nov 7 revolutionஆனால், 2026 நவம்பர் 7 அன்று உலக அரசியலைப் பார்க்கும்போது, 1917-இல் எழுந்த புரட்சிக் கனவுகளுக்கும் இன்றைய அரசியல் எதார்த்தத்திற்கும் இடையே ஆழமான இடைவெளி உருவாகியிருப்பதை உணர முடிகிறது.

ஒற்றுமையின் கனவும் பிளவுபட்ட உலகமும்

அக்டோபர் புரட்சியின் அடிப்படை அரசியல் நோக்கம் தொழிலாளி–விவசாயி ஒற்றுமை. உழைப்பவர்களின் உழைப்பைப் பிறர் அபகரிக்கும் பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை உலகளவில் உருவாக்குவதும் அதன் மையக் கனவுகளாக இருந்தன.

1927-ஆம் ஆண்டு புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவாக எழுதிய ஸ்டாலின், “முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புக்கு எதிராகப் புரட்சி உருவாக்கிய வரலாற்று மாற்றத்தையும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றதன் முக்கியத்துவத்தையும்” வலியுறுத்தினார. அன்றைய அரசியல் சிந்தனையில் தேசிய எல்லைகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து வலுவாக இருந்தது. ஒரு நாட்டின் தொழிலாளியினுடைய விடுதலை மற்றொரு நாட்டின் தொழிலாளியின் விடுதலையிலிருந்து பிரிக்க முடியாதது என்ற சர்வதேசியப் பார்வை அதில் அடங்கியிருந்தது.

ஆனால் இன்றைய உலகம் ஒற்றுமையை விடப் போட்டியையும், கூட்டுறவைவிட அதிகாரப் பேரத்தையும் முன்னிறுத்துகிறது. உக்ரைன் போர், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம், வர்த்தகத் தடைகள், சுங்க வரிக் கொள்கைகள் ஆகியன உலக அரசியலைப் பல்வேறு அதிகார மையங்களாகப் பிரித்துள்ளன.

உலக நாடுகளின் கூட்டமைப்புகள் கூட பொதுவான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. நாடுகளுக்கிடையிலான உறவுகள் பெரும்பாலும் பொருளாதார நலன்கள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இராணுவ வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

இதனால், 1917-இன் சர்வதேசியக் கனவு இன்று புவிசார் அரசியல் போட்டிகளுக்கு இடையே தனது இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.

பொதுவுடைமையின் மறுவடிவமும் இடதுசாரி அரசியலின் நெருக்கடியும்

பொதுவுடைமை என்பது ஒரு காலகட்டத்தின் அரசியல் முழக்கமாக மட்டும் புரிந்துகொள்ளப்படக் கூடாது. பொருளாதார வளங்கள் யாருக்குச் சொந்தம், உற்பத்தியின் பயன் யாரைச் சென்றடைகிறது, அரசின் கொள்கைகள் யாருடைய நலன்களைப் பாதுகாக்கின்றன என்பதற்கான மாற்றுப் பார்வையாகவே அது உருவானது.

இன்று மேற்கத்திய சனநாயக நாடுகளில் இடதுசாரி அரசியல் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் இளம் தலைமுறையினரிடையே பொதுவுடைமைக் கருத்துகள் புதிய வடிவத்தில் விவாதிக்கப்படுகின்றன.

உயர்ந்து வரும் வீட்டு வாடகை, உணவுப் பொருட்களின் விலை, வேலைவாய்ப்பின்மை, செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலைப் பாதுகாப்பின்மை ஆகியன இளைஞர்களின் அரசியல் கவனத்தை ஈர்க்கின்றன. செல்வந்தர்களுக்கு அதிக வரி விதித்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல், பொதுச் சேவைகளை விரிவுபடுத்துதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் 1917-இன் புரட்சிகர பொதுவுடைமைக்குச் சமமானவை அல்ல. இருப்பினும், பொருளாதாரச் சமத்துவமின்மைக்கு எதிரான புதிய தலைமுறையின் அதிருப்தியை அவை வெளிப்படுத்துகின்றன.

இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தனிமனிதனின் பொருளாதாரப் பாதுகாப்புக்கான கோரிக்கைகள், சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்கான அரசியல் இயக்கமாக மாறுமா? அல்லது அவை தேர்தல் கால வாக்குறுதிகளுக்குள் சுருங்கிவிடுமா?

இந்தக் கேள்விக்கான விடைதான் எதிர்கால இடதுசாரி அரசியலின் திசையைத் தீர்மானிக்கும்.

இந்திய அரசியல்: வர்க்கப் போராட்டத்திலிருந்து நிறுவனப் போராட்டம் வரை

இந்திய அரசியலிலும் 1917-இன் புரட்சிகர அரசியல் தர்க்கத்திற்கும் இன்றைய அரசியல் நடைமுறைகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படுகிறது.

இந்தியாவின் அரசியல் விவாதங்கள் இன்று தேர்தல் சனநாயகம், அரசமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம், வாக்குரிமை, சமூக நீதி, மத அடையாளம், இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சுற்றி நகர்கின்றன.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision – SIR), தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்குரிமை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகள் ஆகியன இந்திய அரசியலில் முக்கியமான விவாதங்களாகியுள்ளன. குறிப்பாக, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் சனநாயகப் பங்கேற்பைப் பாதிக்குமா என்ற கேள்வி கவனிக்கப்பட வேண்டியது.

இந்தியாவில் இன்று நடைபெறும் அரசியல் போராட்டங்கள் பெரும்பாலும் சனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பது, அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது, அடையாளங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவது ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. இவை முக்கியமான போராட்டங்கள்தான். ஆனால், உற்பத்தி வளங்களின் உடைமை, நிலப்பகிர்வு, தொழிலாளர்களின் உரிமைகள், பொருளாதார அதிகாரத்தின் மறுபகிர்வு போன்ற 1917-இன் அடிப்படையைக் கேள்விகள் அரசியல் விவாதங்களில் போதிய இடத்தைப் பெறுகின்றனவா என்பது ஆராயப்பட வேண்டும்.

இந்தியாவில் வர்க்கமும் சாதியும் தனித்தனியாக இயங்குவதில்லை. நிலவுடைமை, தொழில், கூலி, கல்வி, சமூக படிநிலை ஆகியவற்றில் சாதியின் தாக்கம் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, இந்தியச் சூழலில் வர்க்க விடுதலையைப் பற்றிய எந்தவொரு விவாதமும் சாதிய ஒடுக்குமுறையைப் புறக்கணித்துவிட முடியாது. அதேபோல, சமூக நீதிக்கான அரசியல் பொருளாதாரச் சமத்துவத்தையும் கைவிட்டுவிட முடியாது. இதுவே இந்திய இடதுசாரி அரசியல் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான அறிவார்ந்த சவாலாகும்.

புரட்சியின் சாதனைகளும் அதன் முரண்பாடுகளும்

நவம்பர் 7 புரட்சியை வரலாற்றின் ஒளிமயமான நிகழ்வாக மட்டுமே சித்தரிப்பதும், அதன் குறைபாடுகளை நிராகரிப்பதும் அறிவார்ந்த அணுகுமுறையாகாது. நிலவுடைமை அதிகாரத்திற்கும் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கும் மாற்றான அரசியல் அமைப்பை உருவாக்கப் புரட்சி முயன்றது. கல்வி, தொழிலாளர் உரிமைகள், பெண்களின் சமூகப் பங்கேற்பு, பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கும் வழிவகுத்தது.

அதேவேளையில், உள்நாட்டுப் போர், கட்சியின் ஒற்றை அதிகாரம், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், எதிர்ப்புக் குரல்களின் ஒடுக்குமுறை ஆகியன சோவியத் அனுபவத்தின் இருண்ட பக்கங்களாகவும் அமைந்தன.

சமத்துவத்தை உருவாக்கும் நோக்கத்தில் தொடங்கிய அரசியல் இயக்கம், அதிகாரத்தை ஒரு மையத்தில் குவிக்கும்போது எத்தகைய முரண்பாடுகளை உருவாக்குகிறது என்பதற்கான வரலாற்றுப் பாடமாகவும் இது இருக்கிறது.

எனவே, புரட்சியின் நோக்கங்களையும், அந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்திய அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகளையும் தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

செங்கொடி எழுப்பும் கேள்வி

1917-இல் எழுப்பப்பட்ட சுரண்டலற்ற சமூகத்தின் கனவு இன்றும் பொருத்தமற்றதாகி விடவில்லை. உலகின் ஒரு பகுதியில் உணவு உற்பத்தி மிகையாக இருக்கும்போது மற்றொரு பகுதியில் மக்கள் பசியால் வாடுகிறார்கள். செல்வம் சிலரிடம் குவியும்போது பெரும்பான்மையான மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி மனித உழைப்பை எளிதாக்க வேண்டிய நிலையில், பலருக்கு அது வேலைப் பாதுகாப்பின்மையையும் பொருளாதார அச்சத்தையும் உருவாக்குகிறது.

இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் சோசலிசத்தின் அடிப்படைக் கேள்விகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆனால், இன்றைய உலகில் புரட்சி என்பது பழைய அரசியல் வடிவத்தை அப்படியே மீண்டும் உருவாக்குவதல்ல. சனநாயகம், மனித உரிமைகள், சமூக நீதி, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய அரசியல் கனவு தேவைப்படுகிறது.

வர்க்க ஒற்றுமை என்பது சாதி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் ஒடுக்குமுறைகளை மறைப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, அவற்றை எதிர்கொள்ளும் பரந்த சமூக விடுதலைக்கான அடித்தளமாக அமைய வேண்டும்.

நவம்பர் 7 என்பது கடந்த காலத்தின் ஒரு புரட்சியை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல. நிகழ்காலத்தின் அரசியல் தோல்விகளையும் எதிர்காலத்தின் சமூகச் சாத்தியங்களையும் மதிப்பீடு செய்யும் நாளுமாகும்.

செங்கொடி இன்றும் பறக்கிறது. ஆனால் அது பறக்க வேண்டிய உலகம் மாறிவிட்டது.

1917-இல் மனிதகுலம் எழுப்பிய கேள்வி, அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இன்று அதனுடன் இன்னொரு கேள்வியும் இணைந்திருக்கிறது: அதிகாரம் யாரிடம் இருந்தாலும், அது யாருடைய நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது?

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதில்தான் 1917 நவம்பர் 7 இன் வரலாற்று நினைவு தனது சமகாலப் பொருளைப் பெறுகிறது.

- வழக்குரைஞர் சுதாகர் சண்முகம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.