நவீன உலகில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், வெளியுறவுகளிலும் இந்தியா புதிய உயரங்களை எட்டியுள்ளது வெள்ளிடைமலை. ஆனால், இதற்கு நேர்மாறாக நாகரிகச் சமூகத்தின் அவலமாய் இந்தியச் சமூகக் கட்டமைப்பில் காணப்பெறும் சாதிய - பொருளாதாரப் படிநிலைகள் முன்பைவிட அதிகமாய்க் கெட்டி தட்டிக் கிடப்பது வெளிப்படை. மனிதநேயத்தின் கறைபடிந்த பக்கங்களாக இந்தியா முழுவதும் சாதி ஆணவப் படுகொலைகள் பரவலாகக் காணக்கிடக்கின்றன. காதலித்த குற்றத்திற்காகவும், விரும்பிய வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்ததற்காகவும் வாலிப உயிர்கள் படுகொலை செய்யப்படுவது தனிமனித உரிமைகளுக்கு மட்டுமல்ல, அரசமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கே விடுக்கப்படும் வெளிப்படையான சவாலாகும்.lovers 670ஆணவப் படுகொலை என்பது வெறுமனே கொலைக்குற்றம் மட்டுமல்ல. அது சாதி ஆதிக்கம், சமூகக் கட்டுப்பாடு, மனித உரிமை மறுப்பு போன்றவற்றின் கூட்டு வெளிப்பாடு ஆகும். இது தனிமனித உயிரை இழக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுதந்திரம், சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றின் மீதான மதிப்பீடுகளையும், சனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் சிதைக்கிறது. ஆணவக் கொலைகளின் பின்புலத்தைச் சமூக இயங்கியல், சமூகவியல் பார்வையில் உற்று நோக்கி, தற்போதுள்ள சட்ட விதிகளை மதிப்பீடு செய்து, ஆணவக் கொலைத் தடுப்பு, தண்டனை, மறுவாழ்வு ஆகியவற்றிற்கான வழிமுறைகளோடு தனித்துவமான, விரிவான சட்டத்திற்கான தேடலே இன்றைய தேவையாகும்.

சமூக இயங்கியல்

ஒரு சமூகத்தில் சாதி, பொருளாதாரம், பாலினம், மதம், பண்பாடு, அதிகாரம், சமூக உறவுகள் ஆகியன எவ்வாறு இயங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் சமூக இயங்கியலுக்கும் ஆணவப் படுகொலைக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு உள்ளதாகப் பல்வேறு சமூக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

அ. நேரடித் தொடர்புகள்:

  1. அகமண முறை: ஒரே சாதிக்குள் மட்டும் திருமணம் செய்யும் அகமண முறையைச் சமூகக் கட்டுப்பாடாகச் சாதி அமைப்புகள் தூக்கிப் பிடிக்கின்றன. அகமண திருமண முறையைப் பாதுகாக்கும் இந்த முயற்சியே ஆணவப்படுகொலைக்கு வழிவகுக்கிறது. அகமண முறையை மீறிச் சாதி மறுப்பு அல்லது கலப்புத் திருமணம் செய்பவர்கள் ஆணவப் படுகொலைக்கு இலக்காகின்றனர்.
  2. பொருளாதாரப் பின்னணி: சமூகக் கட்டமைப்பில் காணப்பெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆணவப் படுகொலைக்கு அடிகோலுகின்றன. சாதியப் படிநிலை தாண்டி நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, உட்சாதிப் பிரிவு போன்றவற்றின் காரணமாக ஒரே சாதிக்குள்ளும் ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன.
  3. ஆணாதிக்கம்: பெண்களின் வாழ்க்கைமுறை, திருமணத்தேர்வு, உடல் அசைவு, உடை ஆகியன மீது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கச் சிந்தனையே ஆணவப் படுகொலையின் அடிப்படையாக உள்ளது. ஆணவப் படுகொலை என்பது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; பெண்களின் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் மறுக்கும் ஆணாதிக்க மனப்போக்கின் மோசமான வெளிப்பாடாகும்.
  4. சமூகக் கட்டுப்பாடு: குடும்ப மரியாதை, சமூக மரியாதை என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் சமூகக் கட்டுப்பாடு அரசமைப்பு விதிகளை மீறி மேலோங்கி நிற்கிறது. சமூக அச்சம், அவப்பெயர் போன்ற காரணங்களால் பலர் தங்களின் தனிமனித விருப்பங்களை விட்டுக் கொடுக்க நேரிடுகிறது.
  5. சாதி ஆதிக்க அதிகாரம்: மேலாதிக்கச் சாதி அமைப்புகள் தங்களின் பாரம்பரிய அதிகாரத்தையும் சாதி ஆதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு வன்முறைகளை ஏவிவிடுகின்றன. அவற்றுள் ஆணவப்படுகொலை முதன்மையாக உள்ளது. சட்டத்தின் ஆட்சிக்கும் சனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கும் சாதி ஆதிக்க அதிகாரம் சவாலாக விளங்குகிறது.

ஆ. மறைமுகத் தொடர்புகள்:

  1. சமூக ஒதுக்கல்: சாதி அல்லது ஒட்டுமொத்தச் சமூக அமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மக்களிடையே ஆழமாக உள்ளது.
  2. பொருளாதார நலன்: சொத்து மற்றும் வாரிசுரிமையைப் பாதுகாக்க வேண்டிய நெருக்கடிகள் எதார்த்தமாக உள்ளன.
  3. சமூகமயமாக்கல்: சிறு வயதிலிருந்தே சாதி, பாலின மேலாதிக்க எண்ணங்கள் இயல்பாகக் கற்பிக்கப்படுகின்றன.
  4. அரசியல் ஆதரவு: சாதி அமைப்புகள் மறைமுகமாக அரசியல் ஆதரவைக் கோரும் மனப்போக்கு ஊக்குவிக்கப்படுகிறது.
  5. சட்டச் செயற்பாடுகளின் பலவீனம்: ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் வெளிப்படையாக நிலவுகிறது.

சமூகவியல் பார்வை

சமூக ஒழுங்கு, சமூக நெறிமுறைகள் ஆகியன தனிமனித நடத்தையை வெகுவாகப் பாதிக்கின்றன என்று பிரெஞ்சு சமூகவியலாளர் டேவிட் எமில் டர்க்ஹெய்ம் குறிப்பிடுகிறார். சமூக அதிகாரமும் பண்பாட்டு ஆதிக்கமும் சமத்துவமின்மையை மீண்டும் உருவாக்குகின்றன என்று பிரெஞ்சு சமூகவியலாளர் பியர் போர்டியூ உறுதிப்படுத்துகிறார். இந்தியச் சூழலில் சமூக உறவுகளை நிர்ணயிக்கும் காரணியாகச் சாதி அமைப்பே திகழ்கிறது என்று இந்தியச் சமூகவியலாளர் எம்.என். ஸ்ரீநிவாஸ் கூறுகிறார்.

தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு

ஆணவக் கொலைகளை ஒரு தனிப்பட்ட குற்றமாக வரையறுக்கும் ஒரு தனிச்சட்டம் தற்போது இந்தியாவில் இல்லை. மாறாக, இத்தகைய குற்றங்கள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) / இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகின்றன. அவற்றுள்:

  • கொலை (பிரிவு 302 IPC)
  • கொலை முயற்சி (பிரிவு 307 IPC)
  • குற்றச் சதி (பிரிவு 120B IPC)
  • பொது நோக்கம் (பிரிவு 34 IPC)
  • குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (2005)-இன் கீழ் உள்ள பிரிவுகள் மறைமுகமாகப் பொருந்தும்.

கூடுதலாக, இந்திய உச்ச நீதிமன்றம், சக்தி வாஹினி எதிர் இந்திய யூனியன் (2018) வழக்கில், ஆணவக் கொலைகளை அடிப்படை உரிமைகளின் கடுமையான மீறலாகக் குறிப்பிடுகிறது. அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தம்பதியருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் உட்படத் தடுப்பு வழிகாட்டுதல்களை நெறிப்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் இருந்தபோதிலும், அதன் செயலாக்கம் அரிதாகவே உள்ளது.

ஆணவக் கொலைகளைப் பெரும்பாலும் "இரண்டு குடும்பங்களுக்கிடையேயான தகராறுகள்" என்றே காவல்துறையினர் கருதுகின்றனர்; மேலும் தடுப்பு நடவடிக்கைகளும் பலவீனமாகவே உள்ளன. இதற்கென ஒரு பிரத்யேகச் சட்டப்பிரிவு இல்லாததால் குறைவான வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன; வழக்கு விசாரணையும் பலவீனமாகவே உள்ளது. இவையாவும் குற்றவாளிகளுக்குக் குறைந்த தண்டனை விகிதங்கள் கிடைக்க வழிவகுக்கின்றன.

தற்போதுள்ள சட்டம் ஏன் போதுமானதாக இல்லை?

தற்போதைய சட்டக் கட்டமைப்பு மூன்று விதங்களில் பலவீனமாக உள்ளது:

  • (அ) சட்ட அங்கீகாரம் இல்லாமை: ஆணவக் கொலைகள் ஒரு தனித்துவமான குற்றமாக வரையறுக்கப்படவில்லை. இது முறையான தரவு சேகரிப்பு மற்றும் இலக்கு நோக்கிய செயலாக்கத்தைத் தடுக்கிறது.
  • (ஆ) தாக்குதலைத் தடுத்தல் பலவீனம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான குற்றவியல் சட்டம் பலவீனமாகவே உள்ளது. குற்றம் நடந்த பின்னரே தலையீடு செய்யும் நிலை காணப்படுகிறது. எதிர்தரப்பின் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் முன்கூட்டியே அறியப்படுவதால், அவற்றைத் முன்கூட்டியே தடுத்தல் மிகவும் முக்கியமானதாகும்.
  • (இ) நிறுவன சார்புநிலை: பெரும்பாலும் வன்முறையில் ஈடுபடும் சாதி அமைப்புடன் இணைந்து காவல்துறையினர் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது பாதிக்கப்பட்டோரிடம் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது; விசாரணையின் போக்கில் காலதாமதம் அல்லது சமரசத்திற்கு வழிவகுக்கிறது. இதனால், தற்போதுள்ள சட்டம் ஆணவக் கொலைகளைச் சாதாரண கொலைகளாகக் கருதும் நிலையே தொடர்கிறது. சாதி அமைப்புகளும் அதிகார அமைப்புகளும் சில நேரங்களில் கூட்டாகச் செயல்படுவதால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை கண்டும் காணாமல் அலட்சியமாகப் புறக்கணிக்கப்படுகிறது.

தனிச்சட்டத்தின் தேவை

ஆணவக் கொலைகள் மீதான ஒரு தனிச்சட்டம் என்பது பெருகிவரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அதன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதற்கு அவசியமானதாகும். அத்தகைய சட்டம் பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  1. சட்ட வரையறை: சாதி அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து வன்முறையில் அல்லது கொலைக்குற்றத்தில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கும், முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கும் ஒரு தெளிவான சட்டப்பூர்வ வரையறை காலத்தின் தேவையாகும்.
  2. தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகள்: அச்சுறுத்தலுக்கு உள்ளான தம்பதியருக்குக் கட்டாயக் காவல் பாதுகாப்பு, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கெதிரான மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்தல், பாதுகாப்பான காப்பக இல்லங்கள் மற்றும் அவசரகால இடமாற்ற ஏற்பாடுகள் செய்தல் இன்றியமையாதன ஆகும்.
  3. புதிய தண்டனை முறைகள்: ஆணவக் கொலைகள் பெரும்பாலும் குடும்பக் குழுக்கள் அல்லது சாதிக்குழுக்கள் உள்ளடக்கிய கூட்டுச் செயல்களாகும். எனவே சதிகளுக்கும், கூட்டாகச் சேர்ந்து செய்யும் இந்தக் குற்றங்களுக்கும் உரிய கடுமையான தண்டனைகளைப் புதிதாக உருவாக்க வேண்டும்.
  4. சிறப்பு விசாரணை மற்றும் விரைவு நீதிமன்றங்கள்: சாதியப் படிநிலை, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் கொலைகளுக்குக் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தி, விரைவான நீதி வழங்க வேண்டும்.
  5. சாட்சிப் பாதுகாப்பு: இத்தகைய குற்றங்களின் பழிவாங்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, சாட்சிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  6. மறுவாழ்வு: ஆணவப் படுகொலை அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மறுவாழ்வு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

மீறப்பெறும் அரசமைப்பு நெறிமுறைகள்

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளில் பின்வருவனவற்றை ஆணவக் கொலைகள் அப்பட்டமாக மீறுகின்றன:

  • சரத்து 14: சட்டத்தின் முன் சமத்துவம் என்ற சம உரிமை.
  • சரத்து 19: தனிமனித சுதந்திரம் மற்றும் தேர்வு செய்யும் உரிமை.
  • சரத்து 21: வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனிதச் சுதந்திரம்.

ஒருவரின் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது தனிமனிதச் சுதந்திரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும், நடைமுறையில் சாதி நெறிகளின் சமூகச் செயல்பாடுகள் அரசியலமைப்பு நெறிமுறைகளைத் தொடர்ந்து மீறி வருகின்றன. எனவே, ஒரு தனிச்சட்டம் தண்டனைக்குரியதாக இருப்பது மட்டுமல்லாமல், சமூக நெறிமுறைகளைத் தாண்டி அரசமைப்பு நெறிமுறைகளை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

சமூக மாற்றமாகத் தனிச்சட்டம்

நவீன சனநாயக இந்தியாவில் சாதியப் படிநிலை, பொருளாதாரப் படிநிலை, ஆணாதிக்க அதிகாரம் ஆகியவற்றின் தொடர்ச்சியாய் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. அவை தனிப்பட்ட குற்றங்கள் அல்ல; மாறாகச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறைச் செயல்கள் ஆகும். தற்போதுள்ள சட்ட விதிகள் வழக்குத் தொடர பொதுவான சட்ட வழிமுறைகளை வழங்கினாலும், வன்முறைத் தாக்குதலோ, படுகொலையோ ஏற்படாமல் தடுக்கப் போதிய முன்னெச்சரிக்கைச் சட்டம் இல்லை. சாதிச் சங்கங்களும் காவல்துறையும் கூட்டாகச் செயல்படுவதைக் கண்காணித்துக் கண்டிக்க அல்லது தண்டிக்கப் போதுமான சட்டங்கள் இல்லை.

எனவே, ஆணவக் கொலைகளைத் தீவிரமான சமூகக் குற்றத்தின் ஒரு பிரிவாக வகைப்படுத்தி, முன்கூட்டியே தடுத்தல், தவறினால் அதிகார அமைப்புகளைப் பொறுப்புக் கூறச் செய்தல், நீதியை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஒரு தனிச்சட்டம் காலத்தின் கட்டாயமாகிறது. அத்தகைய சட்டம் குற்றவியல் நீதி வழிமுறைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிமனித மாண்பு, தன்னதிகாரம், சமத்துவம், தனிமனிதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான அரசமைப்பு வாக்குறுதியை மீண்டும் உறுதி செய்யும்.

இறுதியாக, ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சட்டச் சீர்திருத்தச் செயற்திட்டம் மட்டுமல்ல; அது ஒரு பரந்த சமூக மாற்றத் திட்டமாகும் — இதில் அன்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒரு அடிப்படை சனநாயக விழுமியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. விரும்பியவரைத் திருமணம் செய்யும் உரிமை அரசமைப்பு தந்த அடிப்படைச் சுதந்திரம் ஆகும். அந்த உரிமையைப் பறிப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது. ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தவெக அரசு விரைந்து தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். குற்றவாளிகள் அஞ்சும் நீதியாலும், மக்கள் நம்பும் சட்டத்தாலும் மட்டுமே ஆணவத்தை வீழ்த்த முடியும்.

- ச.மோகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.