ஒரு சமூகத்தின் நினைவுகளை அழிக்க நினைப்பவர்கள் முதலில் அதன் மனிதர்களைத் தாக்குவதில்லை; அதன் நினைவுச் சின்னங்களைத் தாக்குகிறார்கள். ஏனெனில், மனிதன் இறந்துவிடலாம்; ஆனால் நினைவுகள் உயிரோடு இருந்தால், அந்தச் சமூகத்தின் வரலாறும் எதிர்ப்பும் தொடர்ந்து வாழும். அதனால்தான் உலக வரலாற்றில் போர்களும், மத மோதல்களும், இனப்படுகொலைகளும், அரசியல் புரட்சிகளும் நிகழ்ந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலைகள், நினைவிடங்கள், நூலகங்கள், கல்வெட்டுகள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
ஒரு சிலை என்பது வெறும் கல், வெண்கலம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட உருவம் அல்ல. அது ஒரு சிந்தனையின் பொதுவெளி இருப்பு; ஒரு காலத்தின் அரசியல்; ஒரு சமூகத்தின் சுயமரியாதை; ஒரு மக்களின் போராட்ட வரலாறு. அதனால்தான் சிலைகள் நிறுவப்படுவதும் அரசியலாகிறது; சிலைகள் உடைக்கப்படுவதும் அரசியலாகிறது; சிலைகள் திறக்கப்படாமல் தடுக்கப்படுவதும் அரசியலாகிறது.
இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் மீதான தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அவை இந்தியச் சமூகத்தின் ஆழத்தில் இன்னும் தீராத சாதி உறவுகள், அதிகார மனநிலைகள் மற்றும் சமத்துவத்தை ஏற்கத் தயங்கும் சமூக உளவியலின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. அம்பேத்கரின் சிலை மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், கல்லின் மீது நடத்தப்படும் தாக்குதலாக மட்டும் வாசிக்க முடியாது. அது இந்திய அரசியலமைப்பின் சமூக நீதி, மனித சமத்துவம் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் குறியீட்டுத் தாக்குதலாகவே பலரால் புரிந்துகொள்ளப்படுகிறது.
இதையே தமிழகத்தின் சமகால அரசியலும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது. அம்பேத்கரின் சிலைகள் திறக்கப்படுவதையே சில இடங்களில் சமூகப் பதற்றத்தின் காரணமாகக் காட்டுகிறார்கள். சிலைகள் அவமதிக்கப்படுகின்றன; திறப்பு விழாக்கள் தடுக்கப்படுகின்றன. அதேபோல், தந்தை பெரியாரின் சிலைகள் மீது வண்ணம் பூசுவது, அவற்றைச் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்த இரு தலைவர்களும் பல தசாப்தங்களுக்கு முன்பே மறைந்துவிட்டவர்கள். அவர்கள் இன்று யாருடைய அரசியல் பதவிக்கும் போட்டியாளர்கள் அல்ல. இருந்தபோதிலும், அவர்களது சிலைகள் ஏன் இன்னும் சிலருக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் உருவாக்குகின்றன? இந்தக் கேள்விக்கான பதிலைச் சிலைகளில் தேட முடியாது; இந்தியச் சமூகத்தின் வரலாற்றிலும் அதிகார அமைப்புகளிலும்தான் தேட வேண்டும்.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக் காரணம் செய்தித்தாள்களில் படித்த ஒரு செய்தி மட்டுமல்ல. அது நான் தினமும் கடந்து செல்லும் ஒரு காட்சியும்கூட. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் என் ஊருக்கு அடுத்த கிராமம். என் அலுவலகத்திற்குச் செல்லும் பாதை அந்த ஊரின் வழியாகத்தான் செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தகரத் தடுப்பால் மூடப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் தினமும் பார்த்துக்கொண்டே நான் கடந்து செல்கிறேன். தகரத்தின் இடைவெளியில் அவரது முகம் மட்டும் சற்றுத் தெரியும். அரசியலமைப்பை எழுதிய மனிதர், தனது நாட்டிலேயே தனது சிலையின் பின்னால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது ஒரு குடிமகனாக என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.
அதே இடத்தில் காமராஜரின் சிலையும், ராஜீவ் காந்தியின் சிலையும் எந்தத் தடையும் இன்றி நிற்கின்றன. அவை சமூகப் பதற்றத்தின் அடையாளங்களாகக் கருதப்படவில்லை. ஆனால், அம்பேத்கரின் சிலை மட்டும் "சமூகப் பதற்றம்" என்ற காரணத்தால் மூடப்பட்டது. ஒரு சிலை மட்டும் எப்படி பதற்றத்தின் குறியீடாக மாறுகிறது? அப்படியானால் பதற்றத்தை உருவாக்குவது சிலையல்ல; சமத்துவத்தின் குறியீடாக நிற்கும் அம்பேத்கர்தான் என்ற எண்ணம் ஏன் உருவாகிறது?
இந்த விவாதத்தைப் புரிந்துகொள்ள நாம் வரலாற்றிற்குத் திரும்ப வேண்டியுள்ளது.
இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை அவமதிக்கும் கொள்கை புதியதல்ல. சாதி அமைப்பு அதைச் சமூக மரபாக மாற்றியிருந்தால், ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சி அதைச் சட்டமாகவும் மாற்றியது. 1871-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட Criminal Tribes Act — தமிழில் "குற்றப் பரம்பரைச் சட்டம்" என்று அழைக்கப்பட்டது — அதற்கு மிகக் கொடூரமான எடுத்துக்காட்டு. இந்தச் சட்டத்தின் கீழ் பல சமூகங்கள், அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் அல்ல; அவர்கள் பிறந்த சமூகத்தின் அடிப்படையிலேயே "பிறவிக் குற்றவாளிகள்" என வகைப்படுத்தப்பட்டனர். ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்தே குற்றவாளியாக அரசின் பதிவேட்டில் இடம்பெற முடியும் என்ற அளவுக்கு மனிதாபிமானமற்ற சட்டமாக அது இருந்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் வாழ்ந்த மக்கள் காவல்துறையின் நிரந்தர கண்காணிப்பில் இருந்தனர். எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அனுமதி தேவைப்பட்டது. காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டிய கட்டாயம் இருந்தது. வேலை தேடுவதும் கடினமாகியது; சமூக மரியாதை பறிக்கப்பட்டது. குற்றம் செய்ததற்காக அல்ல; பிறந்ததற்காகத் தண்டிக்கப்பட்ட மக்களின் வரலாறு அது.
இந்தப் பிறப்புவழி அநீதிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுவதும் சிந்தித்தவர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். மனிதனை அவனது பிறப்பு தீர்மானிக்கக் கூடாது; அவனது உரிமைகளும் வாய்ப்புகளுமே அவனை நிர்ணயிக்க வேண்டும் என்பதே அவரது அரசியல் தத்துவத்தின் மையமாக இருந்தது. பிறப்பு ஒருவரின் குற்றமாக இருக்க முடியாது; பிறப்பு ஒருவரின் தகுதியையும் தீர்மானிக்க முடியாது; பிறப்பு ஒருவரின் மனித கண்ணியத்தைப் பறிக்கவும் முடியாது என்பதே அவரது சிந்தனை.
அதனால்தான் இந்திய அரசியலமைப்பில் சட்டத்தின் முன் சமத்துவம், பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு செய்யத் தடை, தனிநபரின் சுதந்திரம், மனித கண்ணியம் ஆகியவை அடிப்படை உரிமைகளாக இடம் பெற்றன. சுதந்திர இந்தியாவில் குற்றப்பரம்பரைச் சட்டம் ரத்து செய்யப்பட்டபோது, காலனித்துவத்தின் அந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறைக்கு எதிராக இந்திய அரசியலமைப்பு ஒரு புதிய ஒழுக்கநெறியை நிறுவியிருந்தது. அந்த ஒழுக்கநெறியை வடிவமைத்தவர்களில் மிக முக்கியமானவர் அம்பேத்கர்.
இந்த வரலாற்றை அறிந்த பிறகு ஒரு கேள்வி நம்மை விடாமல் துரத்துகிறது. ஒருகாலத்தில் பிறப்பின் பெயரால் அவமதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அறிவாலும் சட்டத்தாலும் போராடிய மனிதரின் சிலை, இன்று ஏன் சில இடங்களில் எதிர்ப்பின் பொருளாக மாறுகிறது? அந்த எதிர்ப்பு உண்மையில் ஒரு சிலைக்கு எதிரானதா, அல்லது அந்தச் சிலை நினைவூட்டும் சமத்துவத்தின் அரசியலுக்கா? அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடாமல், சிலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது வரலாற்றையே பார்க்க மறுப்பதாகிவிடும்.
அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக மட்டும் சுருக்கிப் பார்ப்பது, இந்திய வரலாற்றை மிகவும் குறுகலாக வாசிப்பதாகும். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய தலைவர் மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகளைக் கட்டமைத்த அரசியல் சிந்தனையாளர். அவர் எழுதிய அரசியலமைப்பு பட்டியல் சாதியினருக்கு (SC) மட்டுமல்ல; இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளை வழங்கியது. சட்டத்தின் முன் சமத்துவம், பேச்சுச் சுதந்திரம், மதச் சுதந்திரம், வாழ்வுரிமை, மனித கண்ணியம், அரசின் முன் சமமான அணுகுமுறை—இவை அனைத்தும் எந்த ஒரு சாதிக்கும் சொந்தமானவை அல்ல; இந்தியக் குடியரசின் அடித்தளங்கள்.
அம்பேத்கரின் அரசியல் சிந்தனையின் மையத்தில் இருந்தது சமூக நீதி. சமூகத்தில் நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட வாய்ப்புகளை, "அனைவருக்கும் ஒரே சட்டம்" என்று சொல்லி சரிசெய்துவிட முடியாது என்பதை அவர் புரிந்திருந்தார். சம வாய்ப்பு என்பது போட்டியின் தொடக்கக் கோடு அனைவருக்கும் ஒன்றாக இருக்கும் போதுதான் சாத்தியம். ஒருவர் நூறு அடிகள் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இன்னொருவர் தொடக்கக் கோட்டில் நிற்கிறார் என்றால், இருவரையும் ஒரே நேரத்தில் ஓடச் சொல்வது சமத்துவமல்ல; அது அநீதியைச் சட்டப்பூர்வமாக்குவதாகும். அதனால்தான் அரசின் தலையீடு, பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவை சமூக நீதியின் கருவிகள் என்று அவர் வலியுறுத்தினார்.
அம்பேத்கரின் அரசியல் சிந்தனையின் தாக்கம் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மட்டுமல்லாமல் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிற சமூகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிய அரசியலமைப்புச் சூழலை உருவாக்கியது. இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC/MBC) பிரதிநிதித்துவம், கல்வி வாய்ப்புகள், சமூக நீதி ஆகியவற்றைப் பற்றி நாம் பேச முடிகிறதென்றால், அதற்கான அரசியலமைப்பின் சமத்துவத் தத்துவத்தை உருவாக்கியவர்களில் அம்பேத்கர் முக்கியமானவர். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் மற்றொரு சமூகத்தின் வீழ்ச்சி அல்ல; அனைவருக்கும் சமமான மனித கண்ணியம் கிடைப்பதே உண்மையான ஜனநாயகம் என்ற எண்ணமே அவரது அரசியலை வழிநடத்தியது.
இந்த வரலாற்றை முழுமையாக அறிந்த ஒருவர், அம்பேத்கரின் சிலையைப் பார்க்கும்போது ஒரு மனிதரை மட்டும் பார்ப்பதில்லை; பிறப்பை விட மனிதனை உயர்த்திய அரசியல் தத்துவத்தையே பார்க்கிறார். ஆனால், வரலாறு மறக்கப்படும் போது, நன்றியுணர்வின் இடத்தைத் தவறான புரிதல்கள் நிரப்பத் தொடங்குகின்றன. நமக்காகப் போராடியவரை நமக்கு எதிரானவர் என்று நம்பும் முரண்பாடும் அங்கிருந்தே உருவாகிறது.
ஒதியத்தூரில் நடந்த சம்பவமும் இதே கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தகரத்தால் மூடப்பட்டிருந்த சிலை, சட்டப்படி அனுமதி கிடைத்த பிறகும் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. பொதுவெளியில் நிறுவப்படவிருந்த சிலையைத் திறக்கக்கூடாது என்று சிலர் வலியுறுத்தினர். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஆனால், அரசின் அனுமதி வழங்கப்பட்ட பிறகும், அதற்கு எதிராகப் பொதுப் போராட்டங்கள் நடைபெறுவது, சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது காவல்துறையின் தடியடி நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கதறி அழுத காட்சிகளும், பதற்றமான சூழ்நிலையும் பலரது கவனத்தை ஈர்த்தன. மேலும், பதினைந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தக் காட்சிகள் ஓர் அடிப்படைக் கேள்வியை எழுப்புகின்றன. அரசின் அனுமதி பெற்ற ஒரு சிலையை நிறுவுவதற்காகக் குரல் கொடுத்த மக்களுக்கு, ஜனநாயகத்தின் பதில் தடியடியும் கைதும்தானா? இல்லை உரையாடலா? கருத்து வேறுபாடுகளை ஜனநாயகத்தின் வழியாகத் தீர்க்க வேண்டிய இடத்தில், வலுவைப் பயன்படுத்துவது சமூக நம்பிக்கையை வலுப்படுத்துமா, அல்லது மேலும் சிதைக்குமா?
இந்தக் கேள்வி ஒதியத்தூரை மட்டுமே பற்றியது அல்ல. இந்திய அரசியலமைப்பு உறுதியளித்துள்ள அமைதியான கூடுகை, கருத்து வெளிப்பாடு மற்றும் சம உரிமை போன்ற ஜனநாயக மதிப்புகள் நடைமுறையில் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்ற பரந்த விவாதத்தையும் அது நமக்குமுன் நிறுத்துகிறது. சட்டம்-ஒழுங்கைப் பேணுவது அரசின் கடமை. ஆனால், அதே நேரத்தில், அரசியலமைப்பு வழங்கிய சம உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பே.
தமிழ்நாடு சமூகநீதி அரசியலின் மண்ணாகப் பெருமைபடுகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் சமூகநீதி, சமத்துவம், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சிந்தனை ஆகியவற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள். அமைச்சரவையிலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர் இடம்பிடித்திருப்பது முன்னேற்றத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒதியத்தூர் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, அதே சமூகநீதியின் குரல் பொதுவெளியில் போதுமான வலிமையுடன் ஒலித்ததா என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர். இந்தக் கேள்வி ஒரு கட்சியை மட்டும் நோக்கியதல்ல; சமூகநீதியைத் தங்கள் அரசியல் அடையாளமாகக் கூறும் அனைத்து அரசியல் இயக்கங்களையும் நோக்கியதாகும்.
அம்பேத்கரை மேடைகளில் புகழ்வது எளிது; அவரது படத்திற்கு மாலை அணிவிப்பதும் எளிது; அவரது பிறந்தநாளில் நினைவேந்தல் நடத்துவதும் எளிது. ஆனால், அவரது சிந்தனைகள் சோதனைக்கு உள்ளாகும் தருணங்களில், அவரது அரசியலமைப்புச் சிந்தனையைப் பாதுகாக்கும் தைரியம் காட்டப்படுகிறதா என்பதே உண்மையான அளவுகோல். ஒரு தலைவருக்குச் செலுத்தப்படும் மிகப்பெரிய மரியாதை அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது அல்ல; அவர் நம்பிய கொள்கைகளைச் சமூக வாழ்வில் காப்பதே.
இந்தியாவின் பிற பகுதிகளைப் பார்த்தால் வேறொரு காட்சி தெரிகிறது. ஹைதராபாத்தில் நிறுவப்பட்ட மிகப்பெரிய அம்பேத்கர் சிலை தேசிய அளவில் நினைவுச் சின்னமாகக் கொண்டாடப்பட்டது. லண்டனில் அவர் வாழ்ந்த வீடு நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அம்பேத்கரின் சிலைகள் எந்தச் சமூகப் பதற்றமும் இல்லாமல் நிற்கின்றன. இந்தியாவின் பல நகரங்களிலும் அம்பேத்கர் நினைவிடங்கள் பொதுமக்களின் மரியாதையைப் பெறுகின்றன. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மட்டும் அவரது அமர்ந்திருக்கும் தோரணை ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறுகிறது? இந்தக் கேள்வி ஒதியத்தூருக்கான கேள்வி மட்டுமல்ல; இந்தியச் சமூகத்தின் ஆழ்மனதை நோக்கிய கேள்வியாகவும் மாறுகிறது.
ஒரு சமூகத்திற்கு நன்மை செய்த தலைவரின் சிலையையே அதே சமூகத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பது என்பது வெறும் அரசியல் முரண்பாடு அல்ல; அது வரலாற்று மறதியின் விளைவு. வரலாற்றை மறந்த சமூகங்கள் தங்களுக்காகப் போராடியவர்களையே சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குகின்றன. தங்களது உரிமைகளின் வரலாற்றை அறியாத தலைமுறைகள், அந்த உரிமைகளை உருவாக்கிய மனிதர்களின் நினைவுச் சின்னங்களையே எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இது இந்தியாவில் மட்டும் நிகழ்வதல்ல; உலகம் முழுவதும் வரலாற்று நினைவுகள் அரசியல் மோதல்களின் மையமாக மாறியிருக்கின்றன. ஆனால், இந்தியாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கு நினைவுகளின் மீதான மோதல்கள் பெரும்பாலும் சாதி அமைப்பின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
அம்பேத்கரின் சிலையை எதிர்ப்பவர்களில் பலர், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றின் விளைவாக இருக்கலாம். ஆனால், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் கீழ்தான் இன்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கிறார். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவம் குறித்து அவர் முன்னிறுத்திய சிந்தனைகள், இந்திய ஜனநாயகத்தின் திசையை மாற்றின. மனிதனை அவனது பிறப்பு தீர்மானிக்கக் கூடாது என்ற அவரது வாதம், சாதிக்கு எதிரான அரசியல் வாதம் மட்டுமல்ல; அது மனித நாகரிகத்தின் அடிப்படை அறமாகும்.
இன்றும் அம்பேத்கரின் சிலைகளைச் சுற்றியே அதிகமான சர்ச்சைகள் உருவாகின்றன என்றால், அது அம்பேத்கரின் அரசியல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. சமத்துவத்தைப் பற்றிய விவாதம் இன்னும் முடிவடையவில்லை; சாதி ஆதிக்கத்தின் மீதான கேள்விகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால்தான் அம்பேத்கர் இன்று ஒரு வரலாற்று நபராகமட்டுமல்ல; நிகழ்கால அரசியலின் உயிருள்ள குறியீடாகவும் இருக்கிறார்.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளைச் சுற்றியும் இதே குறியீட்டு அரசியல் வெளிப்படுகிறது. சிலைகளின் மீது காவி நிறம் பூசுவது, அவற்றைச் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள், ஒரு கருத்தியலை நேரடியாக விவாதிக்க முடியாதபோது அதன் அடையாளங்களைத் தாக்கும் அரசியலை நினைவூட்டுகின்றன. அம்பேத்கரும் பெரியாரும் உயிருடன் இல்லை; அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வரமாட்டார்கள். ஆனால், அவர்களது சிலைகளை எதிர்ப்பவர்கள், உண்மையில் அவர்களது சிந்தனைகளோடும் சமூக நினைவுகளோடும் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயகச் சமூகத்தில் கருத்துக்கு எதிராகக் கருத்து பேசலாம். அம்பேத்கரை விமர்சிக்கலாம்; பெரியாரை விமர்சிக்கலாம். அவர்களது எழுத்துகள், அரசியல் நிலைப்பாடுகள், வரலாற்றுப் பங்களிப்புகள் குறித்து ஆய்வு செய்து எதிர்கருத்துகளை முன்வைக்கலாம். அதுவே ஜனநாயகத்தின் வலிமை. ஆனால், சிலையை அவமதிப்பது, சிலையை மூடிவைப்பது, சிலையைத் திறக்க விடாமல் தடுப்பது அல்லது சிலையைச் சேதப்படுத்துவது ஆகியவை எந்தக் கருத்தையும் வெல்லாது. அவை உரையாடலை முடக்குகின்றன; சமூகத்தில் புதிய காயங்களை மட்டுமே உருவாக்குகின்றன.
ஒரு சிலையை உடைப்பதால் ஒரு சிந்தனையை உடைக்க முடியாது; ஒரு சிலையை மறைப்பதால் ஒரு வரலாற்றை மறைக்க முடியாது; ஒரு சிலையின் மீது வண்ணம் பூசுவதால் ஒரு அரசியலை அழிக்க முடியாது. மாறாக, ஒவ்வொரு தாக்குதலும் அந்தத் தலைவரின் வரலாற்றைப் பற்றி மேலும் பலர் அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவே மாறுகிறது. வரலாறு இதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதுதான் இன்னமும் சிலருக்குப் பிரச்சினையாக இருந்தால், அது அம்பேத்கரின் தோரணையின் பிரச்சினையல்ல; சமமாக அமர்ந்திருக்கும் மனிதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையின் பிரச்சினை. நூற்றாண்டுகளாகத் தலைகுனிந்து நிற்கச் செய்யப்பட்ட மனிதன், "நானும் இந்த நாட்டின் சமமான குடிமகன்தான்" என்று தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கும் காட்சியே சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறதென்றால், அந்த அசௌகரியத்தை மாற்ற வேண்டியது சிலையை அல்ல; சமூக மனநிலையைத்தான்.
அப்படியானால் இனி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு பொதுவெளியிலும் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் நிறுவப்படட்டும். அது யாரையும் இழிவுபடுத்துவதற்காக அல்ல; இந்த நாட்டில் எந்த மனிதனும் இனி தலைகுனிந்து வாழ வேண்டியதில்லை என்பதை நினைவூட்டுவதற்காக.
சிலை வன்முறை என்பது கல்லின் மீதான தாக்குதல் அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவின் மீதான தாக்குதல்; அது வரலாற்றின் மீதான தாக்குதல்; அது அரசியலமைப்பு உருவாக்கிய சமத்துவக் கனவின் மீதான தாக்குதல். ஆனால், வரலாறு ஓர் உண்மையை மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது — சிலைகளை உடைக்க முடியும், சிலைகளை மூடிவைக்க முடியும், சிலைகளை அவமதிக்க முடியும்; ஆனால் சிந்தனைகளை உடைக்க முடியாது, மனித கண்ணியத்தை அழிக்க முடியாது, சமத்துவத்தை நிரந்தரமாகத் தோற்கடிக்க முடியாது.
எனவே, வருங்கால தலைமுறைகள் இந்தக் காலத்தை நினைவுகூரும்போது, அவர்கள் உடைக்கப்பட்ட சிலைகளைப் பற்றி மட்டும் பேசமாட்டார்கள். அந்தச் சிலைகள் எதற்காக அச்சத்தை ஏற்படுத்தின என்பதையும் கேட்பார்கள். அந்தக் கேள்விக்கான பதில்தான் நமது காலத்தின் அரசியல், சமூக மனநிலை மற்றும் ஜனநாயக முதிர்ச்சியை வரலாற்றின் முன் சாட்சியமாக நிறுத்தும்.
- கோபி சேகுவேரா