கல்வி, சுகாதாரம் ஆகியனவற்றில் அதிக முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 158 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் ஆயுத இறக்குமதியில் உலகளவில் மிகப் பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.95 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பெரிய அளவில் ஊழலும் நடைபெறுகிறது.

modi and anil ambaniஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி ஊராரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, ஊரறியாமல் பல்வேறு பரிமாணங்களில் ஊழலில் ஈடுபட்டு வந்தது.(பண மதிப்பு நீக்கத்தை விடவும் பெரிய ஊழல் ஒன்று இருக்க முடியுமா?) இப்போது ஊரறிந்த ஊழல் ஒன்று உருவெடுத்திருக்கிறது.

அதுதான் ரஃபேல் பேரம்.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக பரத்வாஜ மகரிஷி என்பவர் விமானங்களைக் கண்டுபிடித்ததாகவும், நவீனத் தொழில்நுட்பங்கள் கூட அருகில் வரமுடியாதென்றும், இந்திய அறிவியல் மாநாட்டில் (Indian Science Congress) கேப்டன் ஆனந்த் போடாஸ் தெரிவித்தார்.

இப்பேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் கொண்ட நாடு, விமானப் படைக்குப் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டை நாடியது.

இரகசிய பேரம் நடத்தியது.

ரூ.59,000 கோடி பெறுமானமுள்ள இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸ்ஸோ நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. அதன் இந்தியத் தொழிற்கூட்டாளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அனில் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனம். பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பெற வேண்டிய ஒப்பந்தம் தான் மோடி நடத்திய பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றது.

‘நவரத்னா’ அந்தஸ்த்து பெற்ற நிறுவனம் வேண்டாமாம். ஒப்பந்தம் செயவதற்குச் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு, நடைபழகும் நிறுவனம் (ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிடெட்) தான் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு வேண்டுமாம். ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 1 இலட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கின்றன. அவர்களைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள், மோடியைத் தவிர.

126 விமானங்கள் வாங்க வேண்டிய ஒப்பந்தம் 36 ஆகக் குறைக்கப்பட்டது. இது அரசின் உயர் அதிகாரிகளுக்கே தெரியாது. அதே போல் விமானங்களுக்கு அதீத விலை கொடுக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.21,000 பெறுமான ஒப்பந்தம் கிடைக்கிறது. மேக் இன் இந்தியா (Make in India)) அல்ல மேக் இன் அம்பானி (Make in Ambani).

இந்த ஒப்பந்தம் விமானப்படையில் விமானங்களைப் பெருக்குவதற்காகச் செய்யப்பட்டதா அல்லது அம்பானியின் வியாபாரத்தைப் பெருக்குவதற்காகச் செய்யப்பட்டதா என்பதுதான் அடிப்படையான கேள்வியாக இருக்கிறது.

இந்தப் பேரத்தைப் பற்றி, பா.ஜ.க வெளிப்படையாகப் பேச வேண்டும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் பா.ஜ.க விற்குக் கோரிக்கைகள் விடப்படுகின்றன.

யாருடைய வங்கிக் கணக்கிலிருந்து யாருடைய வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் நடைபெற்றது என்பதை ஆய்வது, தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சிபிஐ சோதனை செய்வது, அவர்களைப் பொறுப்பேற்று பதவி விலகச் சொல்வது, அரசிற்கு பல இலட்சம் கோடி இழப்பு என்று தொடர்ந்து ஊடகங்களில் பரப்புரை செய்வது, குல்லா அணிந்து கொண்டு அண்ணா ஹசாரே உண்ணா விரதம் இருப்பது, இது போன்ற செயல்களெல்லாம் காவிகளுக்கு மட்டும் விதிவிலக்கு.

ஊழல் எதிர்ப்பில் கூட ஊழல் செய்யும் நாடு இந்தத் திருநாடு தான்.

Pin It