தொன் போஸ்கோ (Don Bosco) வடக்கு இத்தாலியில் கி.பி.1815 இல் பிறந்தவர். சமய அறிஞர்களும் துறவிகளுமான பிலிப் நேரி, பிரான்சிஸ் டி சேல்ஸ் ஆகியோர்களை முன்னோடியாகக் கொண்டவர். கிறித்தவத்தின் கத்தோலிக்கச் சமயப் பிரிவைச் சார்ந்த துறவி. வெற்றிகரமான கல்வியாளர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் என்னும் பன்முக அடையாளங்களைக் கொண்டவர். அவரது கட்டுரைகள் மட்டும் பல தொகுதிகளுக்கு மேல் நூலாக வெளிவந்திருக்கின்றன. ‘சல்லேசியன்ஸ் ஆப் தொன் போஸ்கோ’ (Salesians of Don Bosco) என்னும் துறவற சபையின் நிறுவனர். அது இன்று உலகமெங்கும் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
காலனியம் மேற்கிலிருந்து உலகின் பல பகுதிகளுக்குப் பரவி நிலைகொண்டுவிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் உலகின் அனைத்துப் பிரதேசத்தினருக்கும் பொருந்துகிற வகையில், ஒருவரை அவர்தம் ஏழ்மை நிலையில் இருந்து விடுவிப்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர் என்கிற முறையில் தொன் போஸ்கோ குறிப்பிடத்தக்கவராவார். அக்காலத்தில் தான் அவர் ஏழைகள், வீடற்றவர்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றத் தொடங்கினார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸில் நிகழ்ந்த தொழில்புரட்சியின் விளைவால் இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுக்கல் முதலிய நாடுகளில் உருவாகிய புதிய சூழ்நிலையும் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் தன்மையில் அமைந்துவிட்டிருந்த படியால் அதுவும் தொன் போஸ்கோவின் சமூகப் பணிக்குப் பக்கபலமாக அமைந்தது.
‘கல்வி ஒருவரை ஏழ்மையில் இருந்து விடுவிக்கும்’ என்பது தொன் போஸ்கோ உள்ளிட்ட பலரின் எடுத்துரைப்பாக இருந்தாலும் அவற்றுள் தொன் போஸ்கோவின் பார்வை வேறுபட்டதாக இருந்தது. ‘தண்டனைக் கல்விமுறை’யை முற்றாக மறுதலித்த அவர் அன்பு சார்ந்த கல்வி முறையை முன்வைத்தார். அதற்கு அவர் வரைந்த விதிகள் கூட அன்புசார் கல்வியை வலியுறுத்திய பலரிடமிருந்து அவரைப் பிரித்தும் தனித்தும் காட்டியது. இன்றைய கற்றலில் மாணவர்களின் ஏற்புத்திறனும் கற்பித்தலில் ஆசிரியர்களின் புலப்பாட்டுத் திறனும் வெகுவாக மாறியிருக்கும் சூழலில் தொன் போஸ்கோவின் ‘சல்லேசியன் (தண்டனை) தடுப்பு (கல்வி) அமைப்பு’ (Salesian preventive system) முக்கியத்துவம் பெறுகிறது.
தண்டனையற்ற கல்வி
கி.பி.1877 இல் தொன் போஸ்கோ தமது கற்பித்தல் முறையைப் பற்றி ‘இளைஞர்களின் கல்வியில் தடுப்பு அமைப்பு’ (The Preventive System in the Education of the Youth) என்னும் கட்டுரையில் விளக்கினார். இந்தச் சிறிய கட்டுரை தான் அவருக்கு மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. பகுத்தறிவு, சமயம், கருணை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கல்வி வழிகாட்டலைச் செய்திருந்த அக்கட்டுரை அக்காலத்திய கல்வியாளர்களால் கடல் கடந்தும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, அக்கட்டுரை குறித்துக் கூறும்போது ‘தொன் போஸ்கோவின் கல்வியியல் அனுபவம்’ என்ற நூலின் ஆசிரியர் பியட்ரோ பிரைடோ (Pietro Braido) ‘கல்வித்துறையின் சீர்திருத்தத்திற்கு அவசியமான புதிய பார்வைகளைக் கொண்டிருக்கிறது’ என்றார்.
கற்றலில் தவறு செய்யும் மாணவர்களை ஒறுக்கும் தண்டனை முறை அவர்களை மேலும் மோசமாக்கும் என்பது தொன் போஸ்கோவின் முக்கியமான நிலைப்பாடாகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை வன்முறையை ஒத்ததாக இருக்கும்போது அது மாணவர்களை ஒதுபோதும் பக்குவப்படுத்தாது என்று அவர் தீர்மானகரமாக நம்பினார். அதற்கு மாற்றாக அவர் பல விஷயங்களை முன்வைத்தார். அவற்றுள், இரண்டை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். ஒன்று, மாணவர்களிடம் வெளிப்படும் ஆபத்தான அணுகுமுறையைக் கண்டு அவை பாதிப்பை உருவாக்குவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குதல், இரண்டு, தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளித்தல் என்பனவாகும். இந்த இரண்டு அணுகுமுறைகளும் வேறு பல நுணுக்கமான வேலைத்திட்டங்களை உள்ளடக்கியவையாக இருந்தன. குறிப்பாக, மாணவர்களின் ஆற்றலை அவர்களுக்கு உணர்த்தி சுயமாகவே அவர்களை மேம்பாடு அடையச் செய்வது, மாற்று வேலை வாய்ப்புகளின் சாத்தியங்களை உணர்த்துவது ஆகியவை குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களாகும். இதன் வழி ஒரு மாணவர் விரும்பத்தகாத தன்மை, தண்டனை, அவமதிப்பு ஆகியவற்றிலிருந்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுக் காப்பாற்றப்படுவார் என்பது தொன் போஸ்கோவின் எண்ணம். மாணவர்களை மட்டும் மையப்படுத்திய இது பின்னாளில் இளைஞர்களுக்கும் விரித்துக் கொள்ளப்பட்டது.
அடக்குமுறையை விட தடுப்புமுறை மேலோங்க வேண்டும். சமயமும் பகுத்தறிவும் இணைந்த கல்வி ஒரு மாணவர் தமது இலக்கை அடையத் துணைசெய்யும். மாணவர்களைக் கண்காணிப்பவர் மாணவர்களுடனே இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு இடையூறாக இருக்கும் வேறெந்தப் பணியையும் அந்தக் கண்காணிப்பாளருக்கு வழங்கக்கூடாது. ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களுக்குப் பிடித்த மாதிரி செயல்பட வேண்டும். மாணவர்களை வெறுமனே வேலையற்று இருக்கும்படி வைத்திருக்கக் கூடாது. அவர்கள் விரும்பியபடி ஓடவும் சத்தமிடவும் அனுமதிப்பது நல்லது. ஓய்வுநேரங்களை விளையாட்டு, கலை, இலக்கியம் முதலியவற்றுக்காகச் செலவழிக்க வேண்டும். அவை தனிநபர் ஒழுக்கத்தைப் பெறுவதற்குப் பயனுள்ள வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்து அதன்வழி நெறிப்பட்ட சமூகத்தை உருவாக்க வழி சமைக்கும். கதைகள், கதாபாத்திரங்கள் வழி உரையாடலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் விரும்புகின்ற யாவற்றையும் செய்யலாம். பாவம் மட்டும் செய்யாதிருக்க வேண்டும் என்பன தொன் போஸ்கோவின் கல்வி வழிகாட்டி முறையாகவும் சமயச் சிந்தனையாகவும் இருந்தது. மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி ஊக்குவியுங்கள். அதன்வழி அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். கல்விப்புலத்தில் இருக்கும் நல்லதொரு ஆசிரியர் மாணவர்களின் பொக்கிஷமாக அமைகிறார் என்பதைக் கல்வி தொடர்பாக அவர் எழுதிய யாவற்றிலும் சிறிதும் பெரிதுமாகக் குறிப்பிட்டே வந்திருக்கிறார்.
அரிதான நிகழ்வுகளில் தண்டனை வழங்கல்
ஒரு மாணவரைத் தண்டித்தே ஆக வேண்டுமென்றால் அதற்கான அளவுகோல் என்ன என்பது பற்றியும் தொன் போஸ்கோ குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தூங்கச் செல்லும் போது அவர்களுக்குச் செய்ய வேண்டியன, தவிர்க்க வேண்டியன குறித்து அவர்களின் கண்காணிப்பாளர் அன்பான வார்த்தைகளில் பொதுவாகச் சொல்ல வேண்டும். சிறப்பாகச் செயல்படும் மாணவரைப் பாராட்டுவதும் அவ்வாறில்லாத மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதுமே மாணவர்கள் உலகில் மதிப்பு வாய்ந்த தண்டனை தான். மிகவும் அரிதான நிகழ்வுகளில் தண்டனை வழங்கும் போது அது பலரது கண்ணில் படாமல் தனியாக அழைத்து தவறைப் பகுத்தறிவின் துணைகொண்டு அம்மாணவரே புரிந்துகொள்ளுமாறு விவேகத்தோடும் பொறுமையோடும் எடுத்துரைக்க வேண்டும் என்கிறார். அடிப்பது, மண்டியிட வைப்பது, காதுகளைப் பிடித்து இழுப்பது போன்ற தண்டனைகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அது மாணவர்களைச் சரி செய்ய உதவுவதில்லை. மாறாக அவர்களை எரிச்சலூட்டவே செய்கின்றன. கல்வி நிலையங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் மாணவர்களிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதை தமது நாற்பது ஆண்டுகாலக் கல்விப் பணியின் அனுபவத்தில் இருந்து கூறினார். இந்தச் சிந்தனைப் போக்கிற்குத் தொன் போஸ்கோ தன்னளவில் ஒருவித வடிவம் கொடுத்திருந்தாலும் பலரது சிந்தனைகளின் தாக்கம் அவர்தம் சிந்தனையின் வடிவமைப்பிற்கு உதவியதை அவர் குறிப்பிடவும் தவறவில்லை.
சலேசியன் துறவற சபையைச் சேர்ந்தவரும் பேராசிரியருமான கார்லோ நன்னி (Corlo Nanni) என்பார் சமகாலத்தில் தொன் போஸ்கோவின் கல்வியியல் சிந்தனையின் பொருத்தப்பாடுகளைப் பற்றி 2003 ஆம் ஆண்டில் ‘தொன் போஸ்கோவின் தடுப்பு அமைப்பு - இன்று மீண்டும் படிக்கும் சோதனைகள்’ (Il sistema preventivo di don Bosco - Prove di rilettura per l'oggi) என்னும் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட நூலில் தொன் போஸ்கோவை ‘மாபெரும் அறிஞரைக் காட்டிலும் செயல்திறன் கொண்டவர்’ என மதிப்பீடு செய்கிறார். காலனியம் தனது அடக்குமுறைகளையும் சுரண்டலையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் கல்வியின் வழி ஏழைகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பணிசெய்த தொன் போஸ்கோவை கார்லோ சரியாகவே மதிப்பிட்டிருக்கிறார் எனலாம்.
(ஆகஸ்ட் 16 தொன் போஸ்கோவின் பிறந்த நாள்)
- ஞா.குருசாமி