கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நான் நான்காவது படிச்சிக்கிட்டிருந்தப்போ எங்க வீட்டுல சித்தப்பா ஓட்டுன காரோட சாவிய எங்க தம்பி எங்கயோ போட்டுட்டான்னு வீடெல்லாம் தேடிக்கிட்டிருந்தோம். அப்ப எங்க ஊரு மேல்நிலைப் பள்ளியில எங்க அண்ணன் ஆறாவது படிச்சிட்டிருந்தாங்க. அவங்களோட பையில அந்த சாவிய தம்பி தெரியாம போட்டிருக்கலாம்னு என்னையப் போயி பாத்துட்டு வரச் சொன்னாங்க.            

school children india   அப்ப நான் படிச்சிக்கிட்டிருந்தது தொடக்கப் பள்ளியில, எங்க அண்ணன் படிச்ச பள்ளிக்குள்ள போகும்போதே எனக்குள்ள ஏதோ தோனுச்சி. நான் பாக்கப் போறது எங்க அண்ணனைத்தான். ஆனாலும் எங்க ஊரு பெரியாத்துக்கரை ரோட்டுல போயி பள்ளி கட்டடத்துக்கிட்ட இறங்குனப்போ எனக்குள்ள இருந்த மனநிலையை என்னால இப்பகூட விளக்க முடியல. ஒரு வழியா அவங்களப் பாத்து சாவி இல்லைனு தெரிஞ்சதுக்கப்பறம் வீட்டுக்கு வந்துட்டேன்.

               எதனால இத சொல்றேன்னா….

               இப்போ 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுறதுக்கான எல்லா ஏற்பாடும் மத்திய அரசின் பரிந்துரைப்படி தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு. இது சாதாரணமா கடந்து போகுற விசயம் இல்லை. இந்த இந்திய ஒன்றியத்தையே காவி மயமாக்குற முயற்சியில பாஜக அரசு தீவிரமா செயல்பட்டுக்கிட்டிருக்குறது நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான்.

               இந்த பொதுத்தேர்வு எப்படி குழந்தைங்களோட படிப்பை பாதிக்கும்? இது அவங்களோட திறனை மேம்படுத்துறதுக்கான திட்டம்னு ஆட்சியாளர்களால சொல்லப்பட்டாலும், இந்த பொதுத் தேர்வுங்குற விசயத்தை எடுத்துக்குவோமே! காலம் காலமா இந்த வார்த்தைக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில ஒருவித பய உணர்வு இருந்துக்கிட்டே இருக்கு. உயர்நிலை, மேல்நிலை படிக்கிற மாணவர்கள் பல பேருகூட இதோட பாதிப்பால படிப்பை பாதியில விட்டுடுறாங்க இல்லைனா தோல்வியடைஞ்ச வேதனையில தற்கொலை பண்ணிக்கிறாங்க. இதுக்குப் பின்னாடி இருக்குற நுகர்வுக் கலாச்சாரம், பெற்றோர்கள் மனதில் திணிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி மதிப்பெண் மோகம்னு ஏராளமா இருந்தாலும், இந்த 5வது மற்றும் 8வது படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்படி வருங்கால குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்குதுனு பாப்போம்.

               நாங்க பத்தாவது படிச்சிக்கிட்டிருக்கையில எங்க கூட பிரபுதேவானு ஒருத்தவங்க படிச்சாங்க. அவங்க குடும்பத்துலயிருந்து மட்டுமில்லை எங்க ஊர்ல இருக்குற அவங்க சமூகத்துலயிருந்து பத்தாவது வரைக்கும் படிக்க வந்த முதல் ஆளு அவங்கதான். அரசுப் பள்ளினாலும் தனியார் பள்ளினாலும் மதிப்பெண் சார்ந்த கல்வியா இது கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்களின் பொதுவான நடவடிக்கைபடி அவரு விரட்டப்படுறதுக்கான செயல்பாடுகள் நடந்துக்கிட்டிருந்துச்சு. அவங்களோட மனநிலையைப் பாதிக்கிற மாதிரியான நடவடிக்கைகள்தான் ஏராளம். அப்படி ஒருத்தர நம்ம எல்லாரோட வாழ்க்கையிலயும் கடந்து வந்துருப்போம். எங்க பிரபுதேவாவை தேர்ச்சி பண்ண வைக்க பசங்க எல்லாம் சேர்ந்து எவ்வளவோ முயற்சி பண்ணுனோம். ஆனாலும் ஆசிரியர்களோட நிலைப்பாட்ட தாண்டி எங்களோட முயற்சி ஜெயிக்கல. அவரு பாதியிலயே பள்ளிக்கு வர்றத நிப்பாட்டிட்டாரு. கடைசியா போன வருசம் நான் அவரைப் பார்த்தபொழுது அந்த ஊரு பெட்ரோல் பங்க்ல வேலை செய்துக்கிட்டிருந்தாரு.

கிராமப்புற, விவரம் அறியாத பெரும்பாலான பெற்றோர்களோட மனநிலை அவங்களோட குழந்தைகள் படிக்கலைனாலும் பரவாயில்ல, சீக்கிரமா வேலைக்குப் போயி சம்பாதிச்சா போதும்கிறதுதான். பத்தாவது படிச்சிக்கிட்டிருக்கையில பிரபுதேவாவுக்கு நேர்ந்த அதே நிலைமை இனி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடக்குறதுக்கான நடவடிக்கையா இந்த பொதுத் தேர்வு திட்டத்துக்கான செயல்பாடுகளில் தீவிரம் காட்டுது இந்த அரசு.

               பாஜக ஆட்சியில மக்கள் தங்களோட அடிப்படை உரிமைக்காக தினமும் போராடுற நிலமைக்கு தள்ளப்பட்டிருக்குறதும், அதை மறைக்க மக்களிடம் பரபரப்பை உண்டாக்க ஊடகங்கள் வெற்று விவாதங்களையும் வீணான செய்திகளையும் அதிகளவில் பரப்பிக்கிட்டிருப்பதும் நாம அறிஞ்சதுதான். நாம பேச வேண்டியது நம்ம குழந்தைங்களோட வருங்காலத்தை அழிக்கிற விசயத்தைப் பத்தி மட்டும்தான்;.

               அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அந்தத் திட்டத்தை எதிர்த்து கேள்வி கேக்காம அமைதியா இருக்காங்க. இந்தத் தேர்வால அவங்க வேலை செய்யிற பள்ளியில படிக்கிற மாணவர்களுக்கும்தான் பாதிப்புனு தெரிஞ்சிருந்தும் அமைதியா இருக்காங்கன்னா பெரும்பாலான ஆசிரியர்களோட மனநிலை எப்படி கட்டமைக்கப்பட்டிருக்குதுனு நாம தெரிஞ்சுக்கலாம்.

               இந்திய அளவில் மக்களின் பொதுவான உளவியல் நிலைப்பாட்டினை ஆராய்ந்தால், பார்ப்பனர்கள் இயல்பாகவே அறிவார்ந்தவர்கள், அவர்கள் வீட்டுக் குழந்தைகள் திறமையானவர்கள் எனும் மனநிலை அனைத்து மக்கள் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது. படித்த பெற்றவர்கள், கல்வி பயிலாத பெற்றவர்கள் வரை பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் பார்ப்பனர்களை விடத் தகுதி குறைவானவர்கள் என்கிற இருவித தாழ்வு மனப்பான்மையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வயது முதிர்ந்த பலரின் மனநிலையே இப்படியென்றால், நமது பிஞ்சுகளின் மனநிலையில் இந்த நடவடிக்கைகள் எந்த அளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

               எனக்குத் தெரிந்து மலைவாழ் பழங்குடியின குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர் தோழர் மகாலெட்சுமி அவர்கள் தினமும் இந்த பொதுத் தேர்வு திட்டத்தினை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். திருப்பூர் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டு பணியினை இந்த அரசு தீவிரமாக செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

               ஆம், நாம் சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது எனும் பார்ப்பனிய-இந்துமத விதியினை இன்றளவும் நடைமுறைப்படுத்த இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த பொதுத் தேர்வு திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

               பல தேசிய இனங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பே இந்த இந்திய ஒன்றியம். இதில் ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பார்ப்பன – பாஜகவின் முயற்சிகள் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகின்ற நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை ஒடுக்கும் இந்த அரசு அடுத்த நடவடிக்கையாக 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மூலம் குழந்தைகளின் கல்வியை முழுமையாக அழிக்கத் துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கை எனும் நவீன குலக் கல்வித் திட்டத்தினை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றபின், அதனை குறுக்கு வழியில் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. நமக்கு அரசியல் அறிவூட்டிய ஆசான்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என ஏராளம். இவர்களின் ஆதிக்கத்திற்கெதிரான போராட்டங்களே நமக்கான உரிமைகளை நம்மிடம் சேர்த்தன. இப்போது அதற்கு ஆபத்து வந்திருக்கும் நிலையில் நாம் அமைதி காப்பது  நல்லதல்ல. 

               இந்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று பாருங்கள். முழுமையான கல்வி கிடைக்காத, இன்றளவும் முதல் பட்டதாரிகளைப் பெறாத குடும்பங்கள் ஏராளம். அவர்கள் காலம்காலமாக கொத்தடிமைகளாகவும் தினக்கூலிகளாகவும்தான் வாழ வேண்டுமா? அதைத்தான் விரும்புகிறதா இந்த அரசு? எப்படியாயினும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது நமது அரசியலமைப்புச்சட்டத்தின்படி தவிர்க்க முடியாத ஒன்று. இதனை மறுக்கும் அரசினை துடைத்தெறிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

- சிவ.வசந்தன், மேற்பனைக்காடு