இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர் பெரும் பேரழிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. மனித குலத்திற்கு எதிரான இந்த போரை இஸ்ரேல் பைத்தியக்காரத் தன்மையாக நடத்திக் கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை. உலக மக்கள் வெறுக்கும் ஓர் இனமாக இஸ்ரேல் மாறிக் கொண்டு இருக்கிறது

இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவிக்கிறது. கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் காசாவின் அனைத்து மருத்துவ வசதிகளையும் குறிவைத்து அழித்துள்ளது, நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்களைக் கொன்று மருத்துவ உதவி செய்வதை தடுத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பேரழிவை நாம் காண்கிறோம், கணக்கிட முடியாத இழப்புகளை,பெரும் இனப்படுகொலையை கண்டு கொண்டிருக்கிறோம்.இது போன்ற பெரும் அழிவை அமெரிக்கா, இஸ்ரேல், நாடுகளின் உதவியோடு சிங்கள அரசு தமிழீழ இனப்படுகொலையை நிகழ்த்தியது நினைவு இருக்கலாம்

உலகெங்கும் இருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் அனைவரும் இந்த மனிதத் தன்மையற்ற கொடூரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியும் எழுதியும் வருகிறார்கள்.

இந்த போர் எதிர்ப்பு எழுத்துக்கள் வல்லாதிக்கம் செய்கிற அரசுகளை கேள்வி கேட்கும் உணர்வுகளை மக்களிடம் உருவாக்கும். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் படைப்பிலக்கியங்கள்- ஓவியம், திரைப்படம்,இலக்கியம் ஆகியன புதிய பரிமாணத்தை அடைந்தது. கையறு நிலையை, வாழ்க்கையின் அபத்தத்தை, புதிய தத்துவத்தை பறைசாற்றியது. படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழியாக போர் எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.
அது போலவே அரபு இலக்கிய உலகத்தில் பாலஸ்தினியர்களின் ‘கவிதை இலக்கியம்’ எப்படி ஒரு போராட்ட ஆயுதமாக தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது!

ஒரு படைப்பிலக்கியம் மக்களோடு உரையாடும் போதும் மக்கள் படைப்பிலக்கியத்தின் சாரம்சத்தை உள்வாங்கிக் கொள்கிற போதும் அந்த படைப்பிலக்கியம் உன்னத நிலையடையும். போராட்டக் களத்தில் அன்பை வெளிப்படுத்தும் ஒரு காதல் கவிதை கூட ஒரு போர் எதிர்ப்பு கவிதையாய் மாற வாய்ப்புண்டு.

‘War poetry ‘ என்று சொல்லக்கூடிய ‘போர் கவிதைகள்’ வழக்கமான கவிதை மரபிலிருந்து சற்று விலகி புதிய பாடுபொருளை கொண்டதாக உள்ளது. நவீன காலனியத்தின் கொடூரத்திலிருந்து பிறப்பதால் அதன் அழகியலும் எதிர்மறை அழகியலாய் வெளிப்படுகிறது.இன்றைச் சூழலில் அரபு இலக்கிய உலகத்தின் பாலஸ்தீனப் படைப்புகளே அதிக போர் கவிதைகளை பிரசவிக்கிறது.

அரபு கவிதைகளின் உயிரோட்டமாக இருப்பது பாலஸ்தீனக் கவிதைகளே! ஏனென்றால் அதன் கருப்பொருளாக இருப்பது வாழ்க்கையின் அவலங்கள், அகதி மனநிலை, நிலம், போராட்டம், எதிர்ப்பு, இழப்பு, தியாகம், துரோகம் என நீள்வதுதான்.

பாலஸ்தீனத்தை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் என்பார்கள் உண்மையிலே துரோகமும் வன்மம் நிறைந்த வாழ்க்கைதான் அவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு கணமும் பாலஸ்தினியர்கள் துரோகத்தையும் ஏமாற்றத்தையும் தான் எதிர்கொள்கிறார்கள்.அதனால்தான் என்னவோ எதிர்ப்பு கவிதைகளே, படைப்புகளே அதிகம் வெளிவருகிறது. விடுதலையே அவர்களின் கனவாக உள்ளது.

‘நவீன பாலஸ்தீனத்தின்’ உருவாக்கமே பாலஸ்தீன நவீன கவிதைகளின் பொருளாகிறது.புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமும் சொந்த நிலத்தில் ஒரு அகதிபோல் வாழும் அவலம், பாலஸ்தின நிலத்தை மீட்டெடுத்தல் குறித்தான கவிதைகளே இன்றைய கவிஞர்களின் கனவாகிறது!

இன்றைய நவீனக் கவிஞர்களில் சில பேர் ஆங்கிலமொழியிலும் எழுதுவதால் தங்களுடையப் பிரச்சனைகளை மேற்கு உலகிற்கு எளிமையாக கடத்துகிறார்கள், மற்ற கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்க்கிறார்கள்.mahmoud darwishபாலஸ்தீனியக் கவிஞர்களின் பட்டியல் மிக நீளமானது அவர்களில் முக்கியமாக அறியப்பட்டவர்கள் சிலர், பாலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மகமூத் தர்வீஸ், அரசியல் போராளியும் பத்திரிக்கையாளருமான கமல் நாசர், பாலஸ்தீனர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை எழுதிய ஸமிஹ் அல்-காசிம், போராட்டக்களத்தை அப்படியே கவிதைகளில் சித்தரிக்கும் முரித் அல்-பர்கௌதி, இழந்த தாயகத்தை தனது கவிதைகளில் மீட்டெடுக்க முயற்சிக்கும் யூசுப்-அல்-காதிம், போராளிப் பெண் கவிஞர்கள் டேரின் டாட்டூர், ஹிபா அபு நாடா, மற்றும் கவிஞர்களை இயக்கமாக திரட்டிய ரெஃபாத் அலரீர் போன்றவர்களை குறிப்பிடலாம்.

உலகமெங்கும் நன்கு அறியப்பட்டவர்,பாலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் Maḥmūd Darwīsh.பாலஸ்தீனிய சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர். தர்வீஷ் தனது படைப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றவர் பூமியின் சொர்க்கம் என்று ‘ஏதன் தோட்டத்தை’ ஆதியாகமம் விவரிக்கிறது. ஆனால், பாலஸ்தீனத்தை ‘ஏதனின் இழப்பு’ என்று தனது கவிதையில் உருவகப்படுத்துகிறார் தர்வீஷ்.

1941ல் பிறந்த மஹ்மூத் தர்விஷ் தனது 7 வது வயதிலே புலம்பெயர்க்கப்படுகிறார். 1948 ல் இஸ்ரேல் உருவானதும் நடந்த அரபு-இஸ்ரேலியப் போரின்போது, அவரது கிராமம் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.அவரது குடும்பம் லெபனானுக்குத் புலம்பெயர்ந்தது.

தனது 19 வயதிலேயே "சிறகுகள் இல்லாத பறவைகள்" எனும் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டார். இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான ‘Al Jadid’-அல் ஜாதிடில் தொடர்ந்து எழுதி வந்தார்.நாளடைவில் அதன் ஆசிரியராகவும் உயர்ந்தார். சோவியத் யூனியனில் (USSR) யில் தனது படிப்பை முடித்தார்.

மஹ்மூத் தர்விஷ் எழுத்துக்கள் ‘பாலஸ்தீனிய அடையாளம்’என்கிற ஒன்றை வடிவமைகிறது. மேலும் பாலஸ்தீனியர்களின் இளைய தலைமுறைகளை தேச விடுதலைக்காக ஊக்கப்படுத்துகிறது. பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல், மற்றும் நாடுகடத்தலின் வேதனை என அவரது கவிதைகளின் பாடுபொருள் உள்ளடங்கியதாகவும் உருவகமாகவும் இருக்கிறது.

26 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் பிறகு ரமல்லாவுக்குத் திரும்பிய தர்விஷ் தான் வெளியிடப்பட்ட முதல் மூன்று தொகுதி கவிதைகளை ஒன்றிணைத்து The Butterfly’s Burden (Copper Canyon Press, 2007) (translation by Fady Joudah) எனும் தொகுப்பை வெளியிட்டார். வாழ்க்கையை புவியியல் மற்றும் வரலாற்றின் மூலம் விவரித்து கவிதையின் வழி ஒரு தொன்மத்தை உருவாக்குகிறார்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது இழந்த பாலஸ்தீனத்திற்கான நிலம் குறித்த தனது ஏக்கத்தை பதிவு செய்கிறார். அவரது மொழி, அவருடைய கவிதையின் வடிவமைப்பு எப்போதும் ஒரு உரையாடலுக்கு காத்திருப்பதாகவே உள்ளது.

கவிஞர் தார்விஷ் ‘தாமர் பென்-அமி’ என்ற ஒரு யூதப் பெண்னை நேசித்தார். இருவரும் காதல் உறவில் இருந்தார்கள்,அந்த பெண் திடீரென யூத ஆர்மி படையில் சேர்ந்ததும் அவரது காதல் தோல்வியுற்றது. பாலஸ்தீனத்தின் லட்சிய கவிஞரின் கொள்கையும் அவரது தனிப்பட்ட காதல் வாழ்க்கையும் ஒரு முரண்பாட்டில் உதித்த பேரன்பின் எழுச்சிதான்!

Write down ! I am an Arab -‘ரைட் டவுன், நான் ஒரு அரேபியன்’ என்கிற அவரது கவிதையின் தலைப்பிலே அவரது வாழ்க்கை குறித்தான ஆவணத் திரைப்படமும் வந்தது, மஹ்மூத் தர்விஷின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது எழுத்துக்கள் மூலம் எப்படி ஒரு சமூக வாழ்கையாக மாறுகிறது என்பதை இந்த திரைப்படம் விவரிக்கிறது

கவிஞர் கமல் நாசர் "பாலஸ்தீனியப் புரட்சியின் மனசாட்சி" என்று அறியப்பட்டவர். ஒரு அரசியல் போராளி, கவிஞர் ,பத்திரிக்கையாளர்,பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஜில் அல்-ஜாதித் (தி நியூ எரா) என்ற போராளிப் பத்திரிகையை நிறுவியவர். PLO வின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர் குறிப்பாக ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். 1973 ல் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் இலக்கில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லெபனான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இளைஞர்களை ஈர்த்த ஒரு சிறந்த கவிஞராகவும் எல்லோராலும் விரும்பப்படும் ஆளுமையாகவும் இருந்தார். அவர் ரமல்லாவிலிருந்து வந்த சுதந்திரப் போராளி மேலும்,அவர் பிரபலமான கலாச்சார மற்றும் ஊடக நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். அதனாலே இஸ்ரேலிய உளவு துறையால் குறிவைக்கப்பட்டார். கவிஞர் கமல் நாசரை கொள்வதற்கு பெண் வேடமிட்டு உளவு பார்த்த அதிகாரியான ‘Ehud Barak’ - ‘எஹுட் பராக்’ பின்னாளில் [1999 to 2001] இஸ்ரேலிய பிரதமராக வந்தார்.

கமல் நாசரின் முக்கியமான கவிதைகளில் ஒன்று [The story] தி ஸ்டோரி.ஒரு மரபார்ந்த கதை சொல்லி போல கவிதையை படைத்திருப்பார்.

“நான் ஒரு கதை சொல்கிறேன்..
மக்களின் கனவில் வாழ்ந்த கதை..
பசியால் உருவாக்கப்பட்டதும் இருண்ட இரவுகளால்
அலங்கரிக்கப்பட்டதுமான
உலகின் கூடாரத்திலிருந்து வெளிவரும் கதை அது!
......................
பத்து வருடங்கள் பசியில் நின்றவர்
கண்ணீரிலும் வேதனையிலும்..
கஷ்டத்திலும் ஏக்கத்திலும்..
தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு மக்களின் கதை இது!
......................
தவறாக வழிநடத்தப்பட்டு
பல வருடங்களின் பிரமைக்குள் தள்ளப்பட்டவர்கள்
இருளெனும் கூடாரங்களிலிருந்து
வெளிச்சத்திற்கு திரும்புவார்கள்
அப்போது அந்த புரட்சியும் திரும்பும்!

என பாலஸ்தீனத்திற்கான புரட்சி விதையை விதைத்தவர் கவிஞர் கமல் நாசர்.

கவிஞர் மௌரித் பர்கௌதி ‘அடக்கமுடியாத விமர்ச்சன குரலாக’ ஒலித்துக்கொண்டிருந்ததால் 1977 ல் கெய்ரோவிலிருந்து கைவிலங்குகளுடன்,உடுத்திய ஆடைகளுடன் மனைவி மற்றும் ஐந்து மாத குழந்தையையும் அப்படியே விட்டு விட்டு நாடுகடத்தப்பட்டார். கம்யூனிஸ்ட் புடாபெஸ்டில் 13 ஆண்டுகள் கழித்தார், உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் பிஎல்ஓவை [PLO] பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பாலஸ்தீனிய கவிதை மற்றும் கவிஞர்கள் குறித்து அவர் இவ்வாறு பேசுகிறார்

‘எதிர்ப்புக் கவிதை’ அல்லது ‘நாடு கடத்தப்பட்ட கவிதை’ என்ற சொற்களை நான் வெறுக்கிறேன். நாங்கள் ஒற்றைக் கருப்பொருள் கவிஞர்கள் அல்ல. கவிதை என்பது ஒரு பொறி! நீங்கள் சமநிலையை அடைய வேண்டும், அழகியலைத் தியாகம் செய்யக்கூடாது! சுதந்திரமான சமூகத்தில் கவிதையை நீங்கள் முணுமுணுக்கலாம் ஆனால், அநீதியின் போது மக்கள் உரத்த, நேரடியான கவிதைகளை விரும்புகிறார்கள்.அதற்கான அழகியல் விதிகளையும் புரிந்துகொள்கிறார்கள்”.

“அச்சுறுத்தப்பட்ட புவியியல் அமைப்பு கொண்ட ஒரு பாலஸ்தீனியர் ஒரு நிராகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர் என்ற முறையில், உலகின் கவனத்தையும் புரிதலையும் கவிதை மூலம் ஈர்க்கிறேன். வலி!, பாலஸ்தீனிய வலி!! நான் சத்தமாக கத்துவதாக அர்த்தப்படுத்தகூடாது என்று என்னை நானே நம்ப வைக்க முயன்றேன்.”என்கிறார்

பாலஸ்தீனத்தின் முக்கிய இளம் கவிஞர் ரெஃபாத் அலரீர் [Refaat Alareer] காசா மீதான தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.

காசாவில் உள்ள இளம் தலைமுறை எழுத்தாளர்களின் தலைவர்களில் கவிஞர் ரெஃபாத் அலரீர் [Refaat Alareer] ஒருவராக இருந்தார்,ஆங்கிலத்திலும் எழுதக்கூடியவர். அலரீர் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியராக இருந்தார். காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ளும் அவரது எதிர்ப்பை ஆங்கிலத்தில் மேற்கு உலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

“எனது வீடு தாக்கப்பட்டால் கடைசி முயற்சியாக எதிரிகளின் முகத்தில் எனது பேனாவை வீசுவேன்” என்று கவிஞர் சபதம் செய்தார். காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சின் கீழ் பாலஸ்தீனியர்களின் தினசரி வாழ்க்கையை ட்விட்டரில் [X இல்] தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்தினார்.

மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதால் அவரது குடும்பம் அவரை வெளியேறச் சொன்னார்கள், ஆனால், அவர் “நான் ஒரு கல்வியாளன், இந்த நாட்டின் சாதாரண குடிமகன் நான் வெளியேறப் போவதில்லை “என்றார்

“போலாந்தில் ஜெர்மானியர் [நாஜிகள்] ஆக்கிரமித்து இருந்த பகுதியை ‘வார்சா கெட்டோ’ என்பார்கள்.நாஜிகள்‘வார்சா கெட்டோ’வை கொலைக்களமாக பயன்படுத்தினார்கள்.சிறைவாசம், வெகுஜனங்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கட்டாய உழைப்பு, பட்டினி, வெகுஜன மக்களை நாடு கடத்துதல் என அனைத்தையும் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினார்கள் அதுபோலவே காசா பகுதியை இஸ்ரேலியப்படைகள் ஒரு ‘வார்சா கெட்டோ’வாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று அவர் கடைசியாக கொடுத்த BBC பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

கவிஞர் அலரீர் "நாங்கள் எண்கள் அல்ல" என்கிற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் .we are not numbers அமைப்பு வெளிநாட்டில் உள்ள முக்கிய எழுத்தாளர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் காசாவைச் சேர்ந்த ஆசிரியர்களை இணைத்து அவர்களின் அனுபவங்களை ஆங்கிலத்தில் கதைகளாக, கவிதைகளாக எழுத வைப்பது. பாலஸ்தீனியர்களின் முற்போக்கு குரலாய் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அதை நிரூபித்தும் காட்டினார்கள்

கடந்த நவம்பரில் கவிஞர் அலரீர் ட்டிவிட்டரில் [X ] இல் "நான் இறந்தால்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை வெளியிட்டார், அது பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது. அந்த கவிதையில் "நான் இறக்க வேண்டும் என்றால், அது நம்பிக்கையைத் தரட்டும், அது ஒரு கதையாக இருக்கட்டும்."என கடைசியாக சொல்லி முடித்திருப்பார். உண்மையில் பாலஸ்தீனர்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய கதையாகி விட்டார் கவிஞர் அலரீர்

ஹிபா அபு நாடா

ஹிபா அபு நாடா ஒரு பாலஸ்தீனிய பெண் கவிஞர், நாவலாசிரியர், கல்வியாளர் மற்றும் காசாவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர். அவரது நாவல் ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்வான் [Oxygen is Not for the Deadwon ] அரேபிய படைப்பாற்றலுக்கான ஷார்ஜா விருதை 2017 ல் பெற்றது. தொடர்ந்து எழுதி வரும் ஹிபா அபு நாடா இளம் வயதிலே [32 வயது ] தனது படைப்பாற்றளுக்கு பெரிய விருதுகளை பெற்றவர்

அக்டோபர் 20, 2023 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள தனது வீட்டில் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ட்விட்டரில் 18 ந்தேதி இவ்வாறு பதிவிடுகிறார்.

“காசாவில் உள்ள நாம் ஒவ்வொருவரும் விடுதலைக்கு சாட்சியாகவோ அல்லது தியாகிகளாகவோ இருக்கிறோம். இருவரில் யார் கடவுளுடன் வருவார்கள் என்று ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில் ஒரு புதிய நகரத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளோம்.”

போரின் முதல் நாட்களில் அவரது சில சிறு பதிவுகள் பரவலாக பகிரப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன; மற்றவைகள் மொழிபெயர்க்கப்பட்டு அவர் இறந்த பிறகு பரவலாக்கப்பட்டன . தனது கடைசி ட்வீட்டில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவர் எழுதினார்

“ராக்கெட்டுகளின் ஒளியைத் தவிர
காசாவின் இரவு இருட்டாக இருக்கிறது!
இங்கு பெரும் அமைதி நிலவுகிறது
குண்டுகளின் சத்தத்தைத் தவிர!
எல்லாம் அச்சுறுத்துகிறது
பிரார்த்தனையின் ஆறுதலைத் தவிர!
தியாகிகளின் ஒளியைத் தவிர
எல்லாம் கருப்பு வண்ணமாகிவிட்டது
குட் நைட், காசா.!”

அவர் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களுக்கும் ‘குட் நைட்’ சொல்லி சென்று விட்டார்.

டேரீன் டாடூர் [Dareen Tatour ] இஸ்ரேலில் வாழும் ஒரு பாலஸ்தீனிய பெண் கவிஞர், புகைப்படக் கலைஞர், அவர் தனது தாய்மொழியான அரபு மொழியில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதி, வாசித்த ஒரு கவிதை பாலஸ்தீன மக்களை எழுச்சி கொள்ளச் செய்தது. தொடர்ந்து பாலஸ்தீன மக்களின் துயரங்களை பதிவிட்டு வந்தார்.

‘எதிர்த்து நில்லுங்கள், மக்களே! அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ என்கிற அந்த கவிதை உலகமெங்கும் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டது.

இஸ்ரேலிய அரசு இவர் மீது "வன்முறையைத் தூண்டுதல்" மற்றும் "பயங்கரவாத அமைப்பை ஆதரித்ததற்காக" வழக்கு பதிவு செய்து, 2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய நீதிமன்றத்தால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஐந்து மாத சிறைத்தண்டனையும் கொடுக்கப்பட்டது.

அமெரிக்க சியோனிச எதிர்ப்பு அமைப்பான [Jewish Voice for Peace] ஜூயிஷ் வாய்ஸ் ஃபார் பீஸ் [இஸ்ரேலிய இடதுசாரி அமைப்பும்] கண்டனம் செய்தது!

டாட்டூருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது.பேச்சு சுதந்திரத்தை முடக்குவதாக அமெரிக்க உட்பட பல நாடுகளின் மனித உரிமை போராளிகள் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

2019 ல் [Dareen Tatour ] டேரீன் டாடூருக்கு Oxfam Novib/PEN Award வழங்கப்பட்டது [Oxfam Novib/PEN Award, என்பது PEN இன்டர்நேஷனல் எழுத்தாளர்கள் சிறைக் குழு, PEN அவசரகால நிதியம் மற்றும் Oxfam Novib ஆகியோர் இணைந்து உலகெங்கும் கருத்து சுதந்திரத்திற்காக போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருது அது!

டாட்டூருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் டாட்டூர் "இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களை மிரட்டி அவர்களை மௌனமாக்க இந்த அரசு முயற்சி செய்கிறது, எனது கவிதையை குற்றப்படுத்துவது என்பது அனைத்து சமூகத்தின் கலாச்சார செழுமையையும் இழிவுபடுத்துவதற்கு சமம்” என்று முழங்கினார்.

காசாவின் பெரிய நூலகம் மற்றும் புத்தக கடைகள் இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது குறித்து கவிஞர் முகமது மௌசா கூறும் போது, “நாங்கள் படித்த ,வாங்கிய புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் அட்டைகளுடன் எரிந்து கொண்டிருந்தன அங்கு இருந்த நண்பர்களின் முகங்கள் என் நினைவுகளில் நிரம்பியது. எங்கள் புத்தகங்கள் மட்டுமல்ல, எங்கள் நினைவுகளும் எரிந்து கொண்டிருந்தன! எங்களின் மிக முக்கியமான இடங்கள் அழிக்கப்பட்டன” என்கிறார்
.
கவிஞர் முகமது மௌசா 2018 ல், ‘காசா கவிஞர்கள் சங்கம்’ என்று ஒன்றை நிறுவி ஏராளமான இளம் கவிஞர்களை உருவாக்கி வருகிறார். அது இப்போது இளம் மற்றும் ஆர்வமுள்ள கவிஞர்களின் சமூகமாக உருவெடுத்து இருக்கிறது.பல இடங்களில் இவர்கள் கூடி கவிதைகளையும், பாடல்களையும் இசைத்து பகிர்ந்து கொள்கிறார்கள்.

18 வயதே ஆன கவிஞர் ‘நாடின் முர்தாஜா’ “எங்கள் உடைந்த ஜன்னல்களின் உடைந்த கண்ணாடி மீது நாங்கள் நடக்கிறோம், ஒரு காலத்தில் வீடாக இருந்த கற்களில் நடக்கிறோம்” என்கிற இந்த இளம் கவிஞர் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம்” என்பதே செய்தியாகும் என்று பதிலளிக்கிறார்.

போர் களத்தில் எழுதும் படைப்புகள் தனித்தன்மை கொண்டது,அது கற்பனைக்கு அப்பாற்பட்டது, உண்மையின் இன்னொரு பகுதி! 1992 ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகள் தங்களது மனப்பதிவுகளை கவிதைகளாக, கதைகளாக எழுதியிருந்தார்கள் [விடிவிற்காய்... தொகுப்பு –ந.மாலதி, நிமிர் பதிப்பகம்] தமிழீழ பெண் போராளிகள் ஆயுதத்தை ஒரு கையிலும் பேனாவை மற்றொரு கையிலும் பிடித்திருந்தார்கள், பாலஸ்தீனிய போராளிகள் பேனாவையே ஆயுதமாக பிடித்திருக்கிறார்கள்.

- லெனாகுமார்

Pin It