ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் நிதியைக் கையாளும் ஒழுங்கு முறைகளை உருவாக்கி, கண்காணிக்க ஒரு நடுவண் வங்கி (Central Bank) அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு ரிசர்வ் வங்கி சட்டப்படி இந்தியாவில் ரிசர்வ் வங்கி 01.04.1935 இல் அமைக்கப்பட்டது.

முதன்மைப் பணிகள்

- ரூபாய் நோட்டுகளை வெளியிடுதல்
- வங்கிகளின் கணக்குப் பேரேடுகளை ஆய்வு செய்தல்.
- வங்கி அதிகாரிகளை விசாரித்தல்
- வங்கிகளின் கொள்கைகள், விதிமுறைகள் முதலியவற்றை உருவாக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் கண்காணித்தல்.
- வங்கிகள் திவால் நிலை நடைமுறைகளை செயல்படுத்தல்.
- தேசிய மய வங்கிகளின் முழுநேர இயக்குநர்களின் நியமனங்களில் ஆலோசனை வழங்குதல்.
- அந்நிய செலாவணி சட்டம் 1999 இன் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
- புதிய வங்கிகளுக்கு அனுமதி அளித்தல்.

ரிசர்வ் வங்கி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டதல்ல.

இன்றைய நிலை

ரிசர்வ் வங்கியின் வருமானத்தில் ஒரு பகுதியை ஒன்றிய அரசு பெற்றுக் கொள்ளலாம். இது முற்றிலும் ரிசர்வ் வங்கியின் உரிமையாகும். வங்க தேசப் போரின் போது அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் ரூபாய் 70,000 கோடி கேட்டபோது, ரிசர்வ் வங்கி கொடுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி லாபத்தை அரசுக்குக் கொடுப்பதில்லை. உபரி நிதியை மட்டுமே கொடுக்கிறது.

திரு உர்ஜித் பட்டேல் அவர்கள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது 2018 இல் மோடி அரசு லாபப் பணத்தையும் கேட்டபோது, திரு உர்ஜித் பட்டேல் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் விளைவாக அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை பதவி விலக வைத்தது மோடியின் ஒன்றிய அரசு. அவர் பதவி விலகிய பின்னர் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு பிமல் ஜலான் தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. இக்குழு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை அரசின் நோக்கங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தது.

இதன் விளைவாக ரிசர்வ் வங்கியின் பணம் ஒன்றிய அரசால் துடைத்து எடுக்கப்பட்டது. திரு மன்மோகன் சிங் அவர்களின் பத்தாண்டு கால ஆட்சியில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒன்றிய அரசு பெற்றது 1,01,679 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மோடி அரசு ரூபாய் 9 லட்சம் கோடி பெற்றுள்ளது. சுமார் ஒன்பது மடங்கு அதிகமாகப் பெற்றுள்ளது.

பணவீக்க விகிதம்

இந்திய அரசியலமைப்பின்படி பணவீக்க விகிதம் வெகுவாக உயர்ந்தால் ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடம் அதற்கு விளக்கம் கேட்க வேண்டும். ஆனால் கடந்த ஆறு மாதங்களில் பணவீக்க விகிதம் வெகுவாக உயர்ந்த போதும் ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கவில்லை. இந்த பணவீக்க விகித உயர்வுக்கு மோடி ஆட்சியின் தவறான பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்பதே இதற்குக் காரணமாகும்.

மக்கள் விரோத நடவடிக்கைகள்

பாஜகவின் நரேந்திர மோடி அரசு நாட்டின் நலனுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

- பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பது

- பொதுத்துறை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இற்கு 4G அலைக்கற்றை கொடுக்காமல் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்தது.

- பல துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் போன்றவற்றைத் தனியார் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தது.

- கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் வராக்கடன் பல லட்சம் கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்தது.

- விஜய் மல்லையா போன்ற பெரு முதலாளிகள் பெருந் தொகை கடனை வங்கிகளில் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோட உதவியது.

நாட்டின் பொருளாதார நிலையை திவால் நிலைக்குக் கொண்டு வந்ததுடன் நாட்டின் பொருளாதார ஆணி வேராக உள்ள ரிசர்வ் வங்கியையும் திவால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலை இனியும் தொடர்ந்தால் இலங்கையில் ஏற்பட்டது போன்ற ஒரு மோசமானப் பொருளாதார நெருக்கடியை நாடும் மக்களும் சந்திக்க நேரலாம்.

- வழக்கறிஞர் தமிழகன்

Pin It