கடந்த வாரம் தோழி ஒருத்தி பேசுகின்ற போது... விஜி வால்பாறை போனேன்... என எல்லாம் பேசிக்கொண்டே வந்தவள் இப்பெல்லாம் ஒருத்தர் வீட்டு வாசல்லயும் தோடம் இல்ல விஜி என்றாள். எனக்கு தோடம் என்று எதை சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. பிறகு யோசிக்க யோசிக்க... அட ஆமா.. தோட்டத்தை தோடம்னுதான சொல்வோம் என்று நினைவு வந்தது.

"எங்க தோடத்துல மஞ்ச றோஸ் பூத்திருக்கே...." என்று பள்ளியில் பெருமை அடித்த நியாபகங்கள் எல்லாம் மனதுள் உதிர்ந்தன.

ஆம்... இப்போது பெரும்பாலும் எந்த வீட்டு முன்பும் தோட்டங்கள் இல்லை என்றே நினைக்கிறேன். முன்பெல்லாம் தோடம் போட்டு... அதில் டேலியா பூ.. ரோஜா பூ.. மல்லிகை செடி... பட்டர் ஃப்ரூட் மரம்.. கொய்யா மரம்.. பலா மரம்....என்று எல்லாமே இருக்குமே. ரோஸ் செடிகள் எங்கே கிடைத்தாலும் வாங்கி வந்து பக்குவமாய் பதியமிட்டு வளர்ப்பார்கள். ஒரு லைனில் குறைந்த பட்சம் நாலைந்து வாசலாவது பூத்துக் கிடக்கும்.

எங்கள் தாத்தா பச்சை மிளகாய்... பீன்ஸ்... சின்ன கத்திரிக்காய் சொச்சக்காய் கூட விளைவித்தது நினைவுக்கு வருகிறது. பாத்தி கட்டி மாலை நேரங்களில் பைப் தண்ணீரை குழாய் மூலம் மடை மாற்றி விட்டு... அது சர்ரென சீறி பாத்தியில் படுவதைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். பச்சை மிளகாய்கள் அப்படியே மினுங்கும். புடிங்கி கடிக்கலாம் போல இருக்கும்.

நண்பர்களின் தோடத்தில் எலுமிச்சை மரங்கள் கூட வளர்ந்திருந்தன. பறிக்கப் போய் கையில் முள் குத்தின தழும்பெல்லாம் மனதில் இருக்கிறது. இப்படி பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு தோடம் இருக்கும். அதில் குறைந்தபட்சம் ஒரு றோஸ் செடியாவது இருக்கும். சில வீடுகளுக்கு கோடிப்பக்கம் இருக்கும். தனியாக உள்ளே போக பயமாக கூட இருக்கும்.

தோடம் போடுவது... அதை பாதுகாப்பது... பண்படுத்துவது என்று அது ஒரு வேலையாக செய்த காலம் அது. அளவாங்கு மம்பட்டி சகிதம்...பெரியவர்கள் வேலை செய்யும் போது எத்தனையோ முறை உதவிக்கு நின்றிருக்கிறேன். அது ஒரு விளையாட்டு போல... உடன் நிற்பதும்.. தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதும்.... நினைத்தாலே நிம்மதி பூக்கும் நினைவலைகள். எஸ்டேட்டில் ஒரு சாவு என்றால்... தோடத்துப் பூக்களையே பறிச்சு மலர் வளையம் செய்வார்கள். எந்த தோடத்தில் பூத்திருக்கிறதோ அந்த தோடத்தில் இருந்து பறிக்க யார் சம்மதமும் தேவையில்லை. யாவரும் கேளிர் என வாழ்ந்த காலம் அது. ஒருவருக்கொருவர் உதவுவது ஒத்தாசை என்று அது ஒரு தனி கலாச்சாரம்.

நினைவு அப்படியே வீதி வீதியாய் அலைகிறது.

படிக்கட்டுகள் நம் வால்பாறை வாழ்வின் மிக நுட்பமான வழி நடத்தி. இல்லையா. எங்கு போனாலும் அங்கே படிக்கட்டுகள் தானே மேலே ஏற்றும்... கீழே இறக்கும். கீழ் பாடியில் இருந்து மேல் பாடிக்கு போக படிகள்.. அல்லது குறுக்கு சந்து. குறுக்கில் கூட மண் படிகள் இருக்குமே. மழை வந்தால் வழுக்கும் என்று பெரியவர்கள் செய்து கொண்ட படிகள். சின்னவர்கள் படிக்க வேண்டிய படிகள்.

சுற்றிலும் தேயிலை காடு சூழ்ந்திருக்க.. இடையே காற்றில் மிதக்கும் கருங்கல்லாய் இந்தப் படிகள். படி ஏறி இறங்கி மூச்சிரைத்தாலும்... அது தினந்தோறும் நிகழும் உடற்பயிற்சி. எங்கிருந்து எங்கு போனாலும்.. படிகள் தான் துணை. சரி சமமான வெளிகள் அற்ற நிலப்பரப்பு என்பதால்... ஒரு லைன் குழிக்குள் இருக்கும். ஒரு லைன் மேட்டில் மிதக்கும். பாலமாய் பற்கள் காட்டுவது படிக்கட்டுகள் தான். படிகளில் ஏறி இறங்குகிறோம் என்ற நினைப்பே பல நேரங்களில் இருக்காது. அது ஓர் அனிச்சை போல காலோடு கலந்து விட்ட கற்கண்டு பெட்டிகள் தான்.

வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கே படிக்கட்டுகள் தான் இணைப்பாக இருக்கும். காலை வெயில் சுள்ளுனு அடிக்க அப்படியே அமர்ந்திருக்க இனிப்பாகவும் இருக்கும். படிக்கட்டில் அமர்ந்து பல்லு விலக்க... டீ குடிக்க.... பொழுது போகாம உக்காந்து வேடிக்கை பாக்க... என்று படிக்கட்டுகள் பலவிதம்.

நானெல்லாம் நடையே கிடையாது. மேல் பாடியில் ஆரம்பித்தால்... உங்காண்ணா வீடு தாண்டி... மாரிமுத்து லைன் தாண்டி... ஜூலி லைன் தாண்டி.. விமல் லைன் தாண்டி செட்டியார் கடைக்கு... ஒரு சிறு வண்டு மாதிரி பறந்து தான் வருவேன். வந்து ஒரு ரூபாய்க்கு சிப்ஸ் வாங்கி பாக்கெட்டை நிறைச்சிட்டு... அதே ஓட்டம் தான் வீட்டுக்கு. படிகளில் கால் பட்டதா என்று கூட உணராத வேகம் அது. பலமுறை விழுந்து முட்டியையும் பேர்த்திருக்கிறேன்.

எல்லாமே சுகமான அனுபவங்களாக மனதுக்குள் ஏறி இறங்குகிறது.

- கவிஜி

Pin It