modi democracy cartoonதான் வாழும் சமூகத்தின் அரசியல் நிலையை பற்றி உணர்வுப் பூர்வமான அக்கறை அந்தச் சமூகத்தில் வாழும் மக்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தன் வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள யாரைத் தேர்தெடுக்க வேண்டும் என்பதை அறிவு ரீதியாக சிந்தித்து முடிவெடிக்க முடியும்.

ஆனால் நம் நாட்டிலோ பெரும்பாலான மக்களுக்கு அரசியல் பற்றி, குறிப்பாக வர்க்க அரசியல் பற்றிய எந்த உணர்வுப்பூர்வமான நிலைப்பாடும் எப்போதுமே இருப்பதில்லை. சாதி, மதம், பணம் போன்றவை மட்டுமே இந்திய மக்களின் மனங்களில் மேலாண்மை செலுத்துவதாக உள்ளது. அதனால்தான் அது திரும்ப திரும்ப கடைந்தெடுத்த அயோக்கியர்களை எல்லாம் தன்னை ஆளுமாறு அனுமதிக்கின்றது.

வர்க்க கண்ணோட்டத்திற்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும் பஞ்சமிருக்கும் சமூகத்தில் ஒருபோதும் சமத்துவத்தை உத்திரவாதப்படுத்தும் அரசு என்பது ஏற்படப் போவதில்லை. இன்று பாஜக போன்ற பார்ப்பன பாசிச, கார்ப்ரேட் அடிவருடி அரசைப் பெரும்பான்மை மக்களின் அறிவீனமும், பகுத்தறிவற்ற சிந்தனையும் தேர்ந்தெடுத்ததின் விளைவே அது இன்று நாட்டு மக்களின் உயிருக்கே வேட்டு வைக்கும் சட்டங்களை இயற்றிக் கொண்டு இருக்கின்றது.

அந்த வரிசையில் தான் தற்போது விவசாயிகள் விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 ஆகிய மூன்று மசோதக்களை மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றியதோடு மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் குரல் வாக்கெடுப்பு என்ற மோசடி மூலம் நிறைவேற்றி இருக்கின்றது.

இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகள் வாழ்வில் இனி பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் என்று கூச்சமில்லாமல் மோடி அரசு சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாட்டில் அம்பானியையும், அதானியையும் பிஜேபிக்கு படியளக்கும் கொடை வள்ளல்களையும் தவிர மோடி யாரையுமே நிம்மதியாக பிழைக்க விடமாட்டார் என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் மோடி அரசின் இந்தப் புளுகை யாரும் நம்பத் தயாராக இல்லை.

மோடி சாமானிய மக்களுக்கு ஏதாவது நன்மை செய்வதாக சொன்னாலே நாட்டு மக்கள் அனைவரின் முகத்திலும் மரண பயம் வந்து விடுகின்றது. இன்று மோடிக்கு வாக்களித்த பெரும்பாலான மக்கள் தாங்கள் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கும் அரசுக்குமான பிணைப்பு என்பது முற்றிலும் உடைக்கப்பட்டு விவசாயிகளுக்கும் கார்ப்ரேட் வர்த்தக சூதாடிகளுக்குமான பிணைப்பு வலுப்படுத்தப் பட்டிருக்கின்றது.

பெரும் பணம் படைத்த கார்ப்ரேட்கள் விவசாயிகளை ஒப்பந்தம் மூலம் தங்களது கொத்தடிமைகளாக மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு மாநில அரசின் மீது இருக்கும் உரிமையைப் பறித்து முழுக்க முழுக்க அவர்களை கார்ப்ரேட்களையும் சூதாடிகளையும் மட்டுமே நம்பி இருக்கச் செய்துள்ளது.

இத்தனை நாட்களாக விவசாயப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும்போது குறிப்பிட்ட விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், அதே போல விலை உயர்வை எதிர்கொள்ள இறக்குமதி செய்தும் சாமானிய பொதுமக்களை குறைந்த பட்சமாகவேனும் காப்பாற்றும் நடவடிக்கையை மாநில அரசுகள் எடுத்து வந்தன. இனிமேல் அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

விவசாயிகளிடம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட சூதாடிகள் அதை எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியும். விவசாயப் பொருட்கள் களத்திற்கு வருவதற்கு முன்பே ஒப்பந்தப் பத்திரங்கள் பல கைகள் மாறி நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வை அடைந்திருக்கும்.

மேலும் ஒப்பந்த விவசாயமானது அடிப்படை உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் நிலங்களை ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்யவும், உணவு பதப்படுத்தும் தொழிலுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்யவும் திருப்பி விடுகின்றது.

விவசாயிகள் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எதை உற்பத்தி செய்யக்கூடாது என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளே தீர்மானிக்கும் சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகளின் சுதந்திரம் பறி போகிறது. உள்நாட்டு மக்களின் தேவை புறக்கணிக்கப்படுகின்றது. மண்ணுக்கேற்ற பயிர் முறையும் பாரம்பரிய விதைகளும் ஒழிக்கப்பட்டு விடும்.

அதுமட்டுமல்ல பெரும் கார்ப்ரேட்கள் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் கபளிகரம் செய்யும் போது சந்தையில் அவர்கள் வைத்ததுதான் விலையாக இருக்கும். இனி தன்னுடைய வாழ்க்கைக்கு கார்ப்ரேட்களை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவிநியோகத் திட்டம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும். விவசாயிகளிடம் இருந்து முதலில் அதிக விலை கொடுத்து அனைத்து விவசாயப் பொருட்களையும் கொள்முதல் செய்வதன் மூலம் உணவு தானியக் கொள்முதலில் இருந்து அரசுகளை ஒழித்துக் கட்டிவிட்டு தான் வைக்கும் விலைக்கு அரசுகள் தங்களிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொள்ள நிர்பந்திக்கும்.

உலக வங்கியின் திட்டமும், பன்னாட்டு பெருமுதலாளிகளின் திட்டமும், இந்திய பெரு முதலாளிகளின் திட்டமும் அவர்களின் ஏவல் நாய்களான ஆளும் வர்க்கத்தின் திட்டமும் அதுதான். இதனால் அரசானது பொதுவிநியோகத் திட்டத்தை இழுத்து மூடிவிட்டு வங்கிக் கணக்கில் மானியம் போட்டு விடுகின்றோம், அதை வைத்து சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள் என ஒதுங்கிக் கொள்ளும்.  

அதுவும் கூட 2012ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32 எனவும், நகர்ப் புறங்களில் ரூ.47 எனவும் வறுமைக் கோட்டுக்கான வரையறையாகத் தீர்மானித்துள்ளதால் இதற்கு மேல் சம்பாதிக்கும் ‘பணக்காரர்களுக்கு’ அதுவும் கிடைக்காது. இப்போது எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும்.

எல்லாவற்றையும் சந்தையே தீர்மானித்தால் என்ன ஆகும்? வழக்கம் போல இந்தியாவில் கார்ப்ரேட்களிடமிருந்து அதிக தேர்தல் நிதி வாங்கும் கட்சியாக தொடர்ந்து பாஜகவே நீடிக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் விவசாயிகளின் தாலியை அறுக்கத் தயங்காத உண்டக்கட்டி பாப்பாத்திகள் கார்ப்ரேட்களின் ஆணைக்கிணங்க நிதி அமைச்சராக ஆக்கப்படுவார்கள். மோடியே இந்தக் கார்ப்ரேட் கூலிப்படைகளின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்.

உண்மையில் உழைக்கும் வர்க்கத்தின் மீது இவ்வளவு வக்கிரத்தையும் குரூரத்தையும் உழைத்து சோறு திங்கும் வர்க்கத்தால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. உடல் உழைப்பை வெறுத்து, அதை அவமானமாகவும், அருவருப்பாகவும் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட புழுவினும் இழிந்த பிறவிகளால்தான் முடியும். அப்படிப்பட்ட பிறவிகளின் ஒட்டுமொத்த குவிமையமாக இன்றைய மோடி ஆட்சி இருக்கின்றது என்றால் அது மிகையில்லை.

விவசாயத் துறையில் அரசின் ஆதிக்கம் இருக்கும் போதே விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடக்கும் போது இன்று அதை முழுவதுமாக கார்ப்ரேட்கள் கைகளில் தாரை வார்ப்பதால் என்ன நடக்கும்?

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்  (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கொடிய நச்சு சூழலில்தான் பாசிச மோடி அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்றி இருக்கின்றது.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியின் அமைச்சர் ஹர் சிம்ரத்  கவுர் பாதல் இந்த பாசிச சட்டங்களை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளார். திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், என பல்வேறு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக தீவிரமாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

விதிமுறைகளை மீறி மாநிலங்கள் அவையில் செயல்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறன் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலோ அடிமை எடப்பாடி அரசு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் மாநில உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வையும் முற்றாக அழிக்கும் இந்த மசோதாக்களை ஆதரித்து இருக்கின்றது.

பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு இந்த மசோதாக்களின் பாராதூரமான விளைவுகளைப் பற்றி தெரியாததால்தான் அவர்கள் அமைதி காத்து வருகின்றார்கள். பஞ்சாப், அரியாணா, தமிழகம் போன்ற மாநிலங்கள் மட்டுமே இன்று போராட்டக் களத்தில் முன்னணியில் நிற்கின்றன.

எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களின் தீமையைப் பற்றி விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் தீவிரமான பரப்புரை செய்து அவர்களை ஓரணியில் திரட்டிப் போராட வேண்டும். இந்த மசோதாக்கள் திரும்ப பெறப்படவில்லை என்றால் விவசாயிகள் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் கோடான கோடி சாமானிய மக்களும் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவார்கள் என்பது உறுதி.

- செ.கார்கி

Pin It