பாரதீய ஜனதா கட்சியினால் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத திராவிடச் சித்தாந்த வேர்களைப் ‘பிடுங்க’ப் போகிறார்களாம் தமிழ் மண்ணிலிருந்து.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழரின் உயர்நெறியைப் புரிந்துதான் பேசுகிறாரா என்று தெரியவில்லை, தமிழகத்திற்கு வந்து, வந்து போகும் பிரதமர் மோடி.

அமித்ஷாவும் வந்து போகிறார். ஜே.பி.நட்டாவும் அவருக்குப் பின்னால் ஒன்றிய அமைச்சர்களும் வரிசையாக வரப் போகிறார்களாம் தமிழகத்திற்கு. ஏன்?

தங்கள் சுயநலத்திற்காக எந்த அ.தி.மு.கவைப் பிளவுபடுத்தினார்களோ, அந்த அ.தி.மு.க வை ஒன்று சேர்த்து, அதன் முதுகில் ஏறி 2024 இல் குறைந்தது 10 சீட்டுகளிலாவது வென்றுவிட வேண்டுமாம், இவர்கள்.

இதற்குப் பெயர்தான் நாரதர் வேலை, நரித்தனம்.

 மறைந்திருந்து ராமன், வாலியின் மீது அம்பெய்தும் ராமாயணமும், கர்ணனின் கவச குண்டலங்களைக் கண்ணன் ஏமாற்றி வாங்கும் அவர்களின் மகாபாரதமும் காட்டுகின்ற வழிமுறைதானே இது.

இதனால் அ.தி.மு.கவுக்குத்தான் வீழ்ச்சியே ஒழிய, தமிழர்கள் கிஞ்சித்தும் ஏமாற மாட்டார்கள். திராவிடத்தை அவர்களால் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.

 நான்கு வருணச் சாதிய சனாதனத்தை வேண்டும் என்கிறார் ஆளுநர். ஒன்றிய அரசு (இந்து) மதம் சார்ந்தது என்பன போன்று சட்டத்திற்குப் புறம்பாகவும் பேசும் ஆளுநர், அரசு அனுப்பும் சட்ட முன்வடிவுகளைக் கிடப்பில் போட்டு விடுகிறார்.

 ஆண்டுக்கு 2,50,000 ருபாய் வருமானம் பெறும் சூத்திரர்கள் வரிகட்ட வேண்டுமாம். ஆனால் 8 லட்சம் வருமானம் பெறும் உயர் சாதியினர் ‘அரிய வகை’ ஏழையாம், அவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடாம்.

 ஒற்றைச் செங்கலோடு மழையில் நனைந்து கொண்டு இருக்கும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் 95% வேலை முடிந்து விட்டதாம், அதனால் அந்த “எய்ம்ஸ்” மருந்த்துவமனைக்கு ஒரு தலைவரையும் நியமித்து விட்டதாம் ஒன்றிய அரசு.

 ஜி.எஸ்.டி வரியால் மக்கள்படும் துன்பம், தமிழகத்திற்கு உரிய நிதியைத் தருவதில் இழுபறி, சமையல், வாகன எரிபொருள் விலையேற்றம்.

உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அயோத்தி, ராமன், இந்துத்துவா, மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தும் பா.ஜ.கவை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழர்கள்.

இது பெரியார் மண், திராவிடச் சித்தாந்த மண். இங்கே பா.ஜ.க. விற்க வரும் “ பாச்சா உருண்டைகளை “ யாரும் வாங்க மாட்டார்கள், உங்கள் கடையை இங்கே விரிக்காதீர்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்