சொந்த அனுபவங்களிலிருந்து...

100 நாள் வேலைத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே ஒரு தவறான கருத்து ஆழ் மனதில் பதியப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு தான் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

அது உண்மையல்ல, 100 நாள் வேலை திட்டத்தை தற்போது தனி ஒரு விவசாயிகளின் தோட்டத்தில் நடைபெறும் குறிப்பிட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அந்தந்த ஊராட்சிகளின் மூலமாக விவசாயிகள் தங்களது நில உரிமைச் சான்றுகளோடு பதிவு செய்து ஆட்களும் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

tamilnadu farm landஅவ்வாறு எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் சென்னிமலை ஒன்றியம். பசுவபட்டி கிராமத்தில் 9.6 ஏக்கர் உள்ளது. இது பாகப்பிரிவினைப்படி எனக்கும் எனது மகள் வழக்கறிஞர் நர்மதா அவர்களுக்கும் சரி பாதியாக ஆவணங்களில் பாகப்பிரிவினை செய்து பதிவாகியுள்ளது. எனவே இயல்பாக நாங்கள் ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளாக வந்து விடுகின்றோம்.

100 நாள் வேலைத்திட்டத்தை ஐந்து ஏக்கருக்கும் கீழ் நிலமுள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு தற்போது செயல்படுத்த நிர்வாக ஆணை வழங்கி வருகிறார்கள். அதன்படி தற்போது எங்கள் நிலத்தில் நடைபெற்ற வேலைகளும் அதனால் விவசாயி ஆகிய எங்களுக்கு கிடைத்த பொருளாதார ஆதாயம் பற்றியும் இந்தப் பதிவில் நான் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்கின்றேன்.

எங்களது நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்லில் ஒதுக்கப்பட்ட வேலைகள் குறித்த புள்ளி விவரங்கள் அரசு கணக்குப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அடையாளக் கல்லை இந்தப் பதிவோடு கீழே பதிவு செய்துள்ளேன். அதில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மனித உழைப்பு நாட்கள்:342 974 ஆகும். அதன் பொருள் என்னவென்றால் ஒரே நாளில் 974 பேர் நிலத்தில் வேலை செய்வதாக புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு வகையில் சொன்னால் 10 பேர் 97 நாட்களுக்கு வேலை செய்வதாக புரிந்து கொள்ளலாம். இந்தக் கணக்கீட்டின்படி எங்களது நிலத்தில் 974பேர் வேலை செய்துள்ளனர். உண்மையிலேயே அவர்கள் வேலை செய்தார்கள்.

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்து என்னென்ன வேலைகள் எப்படி செய்ய வேண்டும் என்று ஒழுங்கு செய்துள்ளார்கள். எங்கள் நிலத்தில் நடைபெற்ற பணிகளை நான் சிலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளேன்.

அரசாங்க கணக்குப்படி அல்லாமல் அவர்கள் வேலை செய்த கணக்குப்படி நான் இந்த கணக்கை சொல்ல வருகின்றேன். இதிலே இருந்து நான் சில முடிவுகளையும் அரசுக்கு பரிந்துரைக்க உள்ளேன் ஒவ்வொருவரும் தவறாமல் வந்த ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் துல்லியமாக வேலை செய்தனர் அப்படியானால் அவர்கள் வேலை செய்தது 2048 மணி நேரம் ஆகும் நேரம் ஆகும்.

இதை நாம் கூலி கொடுத்து செய்கின்ற ஆட்களின் வேலையோடு நான் ஒப்பிட்டு கீழே ஒரு கணக்கை முன்வைக்கின்றேன் நாம் கூலி கொடுத்து வந்து வேலை செய்கின்றவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம் அதன்படி 2048 மணி நேரத்தை 6ஆல் வகுத்தால், கிடைப்பது 341 ஆட்கள் வேலை ஆகும்.

341 ஆட்கள் எங்களது நிலத்தில் கூலி கொடுத்து வேலை செய்து இருந்தால் ஒரு நாள் ஒன்றுக்கு தற்போது எங்கள் பகுதியில் பெண்களுக்கு கூலி ரூ 300 ஆகும். அதன்படி நாங்கள் கொடுத்திருக்க வேண்டிய கூலி ரூபாய் 300×341 = 1,02,300 ஆகும். (ஒரு லட்சத்து இரண்டாயிரத்து முந்நூறு). அதை நாங்கள் தற்போது கொடுக்கவில்லை. அதை அரசு கொடுத்து விட்டது!

எனவே எங்களுக்கு இந்த ஆண்டு 100 நாள் வேலைத்திட்ட ஆட்கள் மூலமாக எங்கள் தோட்டத்தில் செய்த வேலைகளில் பலனாக ரூபாய் 102300 மதிப்புள்ள வேலைகள் 100 நாள் வேலை திட்ட ஆட்கள் மூலமாக செய்யப்பட்டு எங்களுக்கு கூலி செலவு மீதப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வேலைகளையும் அவர்கள் செய்து ஒழுங்கு செய்து உள்ளார்கள்.

அடுத்த சுற்றில் என் பெயருக்கு உள்ள நிலத்திற்கான ஒதுக்கீடு இதே போல் வரவுள்ளது. எனவே 100 நாள் வேலை திட்டம் ஏதோ விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் போல ஒரு தவறான கருத்து வேளாண் பெருமக்களிடையே பரப்பப்பட்டு உள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கூலி ஆட்கள் எல்லாம் பிழைப்புத் தேடி நமது கிராமத்தை விட்டே வெளியேறி இருப்பார்கள். திருப்பூர் தொழிலுக்கு அல்லது சுற்றுவட்டாரத்தில் உள்ள வேறுபல வேலைகளுக்கு சென்றிருப்பார்கள். நமது ஊரில் நிலத்தில் வேலை செய்கிற பயிற்சி பெற்ற ஆட்களே இல்லாமல் போயிருப்பார்கள்.

அரசு 100 நாட்களுக்கு மட்டும் வேலையை கொடுக்கிறது . மீதி 165 நாட்களும் விவசாய இதரப் பணிகளை செய்வதற்கு அந்த மக்கள் இங்கேயே தான் இருக்கின்றார்கள்.

யாரும் தொடர்ந்து 100 நாள் வேலைக்கு போவதில்லை அவ்வாறான விதிகளும் இல்லை. 300 ரூபாய்க்கு கிடைக்கிற வேலைக்கு போய்விட்டு வேலை இல்லாத நாட்களில் தான் நமது விவசாய தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு செல்கிற முறையைப் பின்பற்றி வருகிறார்கள். அரசாங்கமும் கட்டாயமாக இந்த தேதியில் இத்தனை நாட்கள் வந்தாக வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதிக்கவில்லை.

வேளாண் பணிகள் இருக்கும் போது அவர்கள் அந்தப் பணிக்கு வந்து விடுகிறார்கள் . வேளாண் பணிகள் இல்லாத நேரத்தில் பிழைப்புக்கான வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்கி உள்ளது.

வேளாண் பெருமக்களுக்கும் ஆண்டொன்றுக்கு கணிசமான கூலியை மீதப் படுத்திக் கொள்வதற்கும் இது வழிவகை செய்திருக்கின்றது என்பதனை அருள் கூர்ந்து எனது அனுபவங்களில் இருந்து பதிவு செய்கின்றேன்.

100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் முன்வைக்கும் ஆலோசனைகள்:

100 நாள் வேலை செய்யக்கூடிய திறன்மிக்க தொழிலாளர்களை குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ஆவது வேலை செய்ய வேண்டும் என்ற நிர்வாகக் கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

100 நாட்கள் வேலை செய்ய வைப்பதில் நிர்வாகத்தில் கட்டுப்பாடுகள் இல்லை. அவர்களுக்கு ஒழுங்குமுறை விதிகளை சொல்லி இப்படித்தான் வேலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிற அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது

அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்காக பரிந்து பேசி அவர்களுக்காகப் போராடி வருகிற இடதுசாரி சங்கங்களின் தலைவர்களும் வேலைகளை
திட்டத்தில் உள்ள நேரப்படி வேலைசெய்ய வேண்டும் என்று தான் வலியுறுத்துகின்றார்கள். யாரையும் போய் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்று இடதுசாரி விவசாய தொழிலாளர் அமைப்புகள் எந்தக் காலத்திலும் சொல்வதில்லை

மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி வரை இதை செயல்படுத்துவதில் அவர்கள் முனைப்பு காட்டாமல் காலத்தைக் கடத்த இதை பயன்படுத்துகிறார்கள் என்பது இங்குள்ள பெரும் குறையாகும்.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதை ஒழுங்கு செய்து 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்கள் வேளாண் பணிகளுக்கு செல்லும் பொழுது
"நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று நிபந்தனையை விதிக்க வேண்டும்" என்றும் பரிந்துரை செய்கின்றேன்.

விபரம்:

ஒதுக்கப்பட்ட ஆட்கள்: 974
நாள் ஒன்றுக்கு 2 மணி
நேரம் செய்த வேலை. 2048 மணி நேரம்.
கூலி கொடுக்கும் ஆட்கள் செய்யும்
வேலை நாளுக்கு 06 மணி நேரம் எனில்
2048÷6 = 341ஆட்கள்
341×300 = 1,02,300

- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Pin It