கீற்றில் தேட...

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றி!

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கன் தலைநகர் காபூலில் தாலிபான்கள் நுழைந்து தலைநகரைக் கைப்பற்றினர். 2001 முதல் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா தன் 'நேட்டோ' (North Atlantic Treaty Organization - NATO) கூட்டாளிப் படைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற்றிக் கொள்வதாக 14 மாதங்களுக்கு முன்பே தாலிபான்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது, 75,000 தாலிபான் வீரர்களை எதிர்த்து 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட நேட்டோ படையினர் போர் புரிந்தார்கள். அமெரிக்கா உறுதி கூறியபடியே ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு நேட்டோ படைகளை வெளியேற்றிக் கொண்டது. 2021 ஆகஸ்ட்டு 15-க்கு முன்பே அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தேசிய அரசின் 3 லட்சம் பேர் கொண்ட இராணுவம் காணாமல் போனது. இராணுவமும் காவல் படையும் சரணாகதி அடைந்து விட்டன. ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்காவால் அதிகாரத்தில் வைக்கப்பட்ட ஜனாதிபதி அஷ்ரப் கனி ஓட்டம் பிடித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புகலிடம் பெற்றார்.

taliban in afganகடந்த காலத்தில் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ் தானில் ஆட்சி -அதிகாரம் செலுத்திய தாலிபான்களை படைபலம் கொண்டு விரட்டிவிட்டு, அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை வைத்திருந்தது. தாலிபான்கள் தொடர்ந்து போரிட்டார்கள். இப்போது, அமெரிக்க ஏகாதிபத்திய வல்லாதிக்கம் ஆப்கானிஸ் தானில் ஒரு சரிவைச் சந்தித்து, மரியாதை கெட்டு வெளியேறி இருக்கிறது. சுமார் 75,000 பேர் கொண்ட தாலிபான்களை கட்டுக்குள் வைக்க முயன்ற 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட நேட்டோ படைகள், 3 இலட்சம் வீரர்களைக் கொண்ட தேசிய இராணுவம் மற்றும் காவல் படைகள் இன்று தோற்றுப் போயிருக்கின்றன. தேசிய இராணுவத்திற்குப் பயிற்சி கொடுக்க மட்டும் 8,800 கோடி டாலரை அமெரிக்கா செலவிட்டுள்ளது. 20 ஆண்டுகளில் நேட்டோப் படைகளுக்காக 2 லட்சம் கோடி டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் களமிறங்கிய பிரிட்டன் தனியாக பெரும் தொகையைச் செலவு செய்திருக்கிறது. தாலிபான்களை அடக்க தரைவழித் தாக்குதல் முதல் வான்வழித் தாக்குதல்கள் வரை நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது தொங்கிய தலையுடன் அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.

பயங்கரவாதிகள் அறிவித்த பயங்கரவாதத்திற்கெதிரான போர்!

முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அறிவித்து தொடங்கிய ஆக்கிரமிப்பு அக்கிரமங்களில் ஆப்கானிஸ்தானில் நடந்தேறிய இறுதிக் காட்சி இது. மேற்கு ஆசியாவில் அமெரிக்க வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தவும், அமெரிக்க ஏகாதிபத்தியத் தேவைக்கு ஏற்ப புவிசார் அரசியலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகாலம் அமெரிக்கா ஆட்டம் போட்டது,

அமெரிக்கா 2001இல் ஆப்கானிஸ்தானில் தன் சொற்படி ஆடும் ஒரு பொம்மை அரசை திருவாளர் ஹமீது கர்சாய் தலைமையில் அமைத்தது. அமெரிக்கா 2003 மார்ச்சில் ஈராக்கின் மீது படையெடுப்பு நடத்தியது. ஈராக்கின் சதாம் உசைன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்றும், பயங்கர ஆயுதங்கள் ஈராக்கில் இருக்கின்றன என்றும் கூறி ஈராக்கைக் கொத்திப் புரட்டியது. பின்லேடனின் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக ஈரானையும் குற்றஞ்சாட்டியது. லிபியா மீதும், சிரியா மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது. பொம்மை அரசுகளை நிறுவி அவற்றையும் தன் ஏகாதிபத்திய நாட்டாண்மை வளையத்திற்குள் கொண்டு வந்தது. இவை அனைத்துக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று பெயர் சூட்டியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வி தெளிவுபடுத்தும் உண்மை!

எல்லாம் இருந்தும், அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட படைப்பிரிவுகளை களமிறக்கியபோதும், விமானப்படை தாக்குதல் நடத்தியும், வரைமுறையில் லாமல் செலவு செய்தும், அமெரிக்காவால் தாலிபான்களை வெற்றிகொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் தோல்வி ஓர் உண்மையை தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் ஒரு தேசத்தின் எழுச்சி பெற்ற இளைஞர்கள் களத்தில் நின்றால் எந்த ஆக்கிரமிப்பாளனும் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதே உண்மை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா நடத்திய பெரும் போர்கள் அனைத்திலும் (வளைகுடாப் போர் தவிர) கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தோல்விகளையே சந்தித்து இருக்கிறது.

யார் இந்த தாலிபான்கள்?

தாலிபான்கள் என்ற சொல்லுக்கு பஷ்டோ (Pashto) மொழியில் மாணவர்கள் என்று பொருள். ஆப்கானிஸ்தானத்தில், தெற்கே காண்டஹார் மற்றும் எல்மாண்ட் பகுதியைச் சேர்ந்த பட்டாணி இனத்தவர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் மண்ணின் மைந்தர்கள். ஆப்கானிஸ்தான் என்பது ஆப்கானிய மக்களால் ஆளப்பட வேண்டும்; ஆப்கானிய மக்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

ஆப்கானிஸ்தானத்தில் வன்முறை அரசியலும், அந்நியர் தலையீடும்!

ஆப்கானிஸ்தானில் 1747 முதல் 1973 வரை முடியாட்சிதான் நிலவியது. 1973இல் சாகிர் ஷா என்ற ஆட்சியாளருக்கு தாவுத்கான் முடிவு கட்டினார். ஆனால், 1978-இல் தாவுத்கானையும் அவருடைய குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற இடதுசாரி கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இடதுசாரிகளின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு என்று கூறிக்கொண்டு, 1979-இல் சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானத்தில் ஆயுதம் தாங்கிய முஜாஹுதீன்கள் உருவாகி சோவியத் படைகளை எதிர்த்துப் போரிட்டார்கள். முஜாஹுதீன் களுக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் உதவி செய்தார். பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ மூலம் முஜாஹுதீன்களுக்கு உதவி செய்தது. பத்து ஆண்டுகள் சோவியத் படைகள் தாக்கு பிடித்தன. 1989-ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறின. ஆனால் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த நஜிபுல்லா அதிகாரத்தில் இருந்தார். அவருக்கு தொடர்ந்து சோவியத் ரஷ்யா ஆதரவு அளித்து வந்தது. 1992-இல் நஜிபுல்லா வீழ்ச்சி அடைந்தார். அதிகாரம் முஜாஹுதீன்கள் கைக்கு மாறியது. ஆனால் முஜாஹுதீன்களின் ஏழு உட்பிரிவு களுக்குள் முரண்பாடுகளும் போர்களும் எழுந்தன.

1994-இல் முஜாஹிதீன்களிலிருந்து வெளியேறி யவர்கள் தாலிபான்கள் ஆக உருவாக்கம் பெற்றனர். எல்மாண்ட் பகுதியைச் சேர்ந்த பட்டானியர்கள் முல்லா முகமது ஒமர் தலைமையில் தாலிபான்கள் என்ற பெயரில் ஓர் அமைப்பாக உருவாக்கம் பெற்றனர். 1996-இல் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி 2001 வரை ஆட்சி செய்தனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய சனநாயகமற்ற முறைகள், பெண்ணுரிமை மறுப்பு, இஸ்லாமியக் கோட்பாடுகளில் இருந்து சிறிதும் மாறக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் இழைத்த பெரும்பிழைகள், ஆகியவை இன்றளவும் குற்றச்சாட்டு களாக முன்வைக்கப்படுகின்றன. 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நியூயார்க்கில் உலக வர்த்தகக் கழகம் இயங்கிய இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. பின்லேடனின் அல்கொய்தா அமைப்புதான் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய அமெரிக்கா, அல்-கொய்தாவிற்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் தந்திருக்கிறது என்று குற்றம் சாட்டி, பின்லேடனைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா தன்னுடைய நேட்டோ கூட்டுப் படைகளுடன் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது. தங்கள் சொற்படி கேட்கும் ஒரு பொம்மை அரசை நிறுவியது. 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்த 20 ஆண்டுகளும் தாலிபான்கள் தொடர்ந்து கொரில்லா முறையில் போரிட்டிருக்கிறார்கள்.

2001-இல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஹமீது கர்சாய் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 2002-இல் இடைக்கால அதிபராக ஹமீது கர்சாய் பொறுப்பேற்றார். 2003-இல் புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 2004-இல் தேசிய அளவிலான தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹமீது கர்சாய் புதிய அதிபரானார். 2005-இல் சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் பெண்களும் போட்டியிட்டு அரசியல் பொறுப்புகளை ஏற்றார்கள். ஆனால் அமெரிக்க அரசின் கைப்பாவையாக அரசு இருந்தது, நேட்டோ படைகளின் கண்காணிப்பில் ஆப்கனிஸ்தான் இருந்தது.

2021-இல் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தார். அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஆகஸ்ட் 31 அன்று வெளியேறுவதாக அறிவித்ததும், அஷ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புகலிடம் தேடி ஓடிவிட்டார். 2020 பிப்ரவரி 29 ஆம் தேதியே அமெரிக்கா ஓர் அமைதி ஒப்பந்தத்தை தாலிபான்களுடன் முடிவு செய்தது. அதன்படி, ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கானிஸ் தானை விட்டு வெளியேற ஒத்துக்கொண்டது. அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்தபடி, இந்த 20 ஆண்டுகளில் தாக்குதல் களில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்கா 164 லட்சம் கோடிகள் செலவு செய்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

பழைய தவறுகளைச் செய்ய மாட்டோம் என்கிறது தாலிபான்!

அமெரிக்கா வெளியேறிய நிலையில், தாலிபான்கள் 1996 முதல் 2001 வரை அதிகாரம் செலுத்திய காலகட்டத்தில் செய்த தவறுகளைத் திரும்பவும் செய்ய மாட்டோம் என்று அறிவித்தார்கள். அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும், ஆகஸ்ட் 31-க்குப் பிறகுதான் அனைத்து தரப்பினரையும் சேர்த்து அரசு அமைக்கப்படும் என்றும், இஸ்லாமிய பாரம்பரியத்தை ஏற்று பெண்களுக்கும் கல்வி - வேலைவாய்ப்புகள் பெற உரிமையுண்டு என்றும், அனைத்துக் கட்சியினரையும் கொண்ட நிர்வாக நெறிமுறை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

தாலிபான்கள் ஷரியத் சட்டம் என்ற பெயரில் பெண்களின் ஒட்டுமொத்த உரிமையையும் மறுத்து விடுவார்களோ என்ற அச்சம் இன்றளவும் நிலவுகிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் மண்ணின் மைந்தர்கள். சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை முஜாஹுதீன்கள் அகற்றினார்கள். அந்நிலையில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா நுழைந்தது. அப்படி நுழைந்த அமெரிக்கப் படைப் பிரிவுகளை எதிர்த்து தாலிபான்கள் போராடினார்கள். இப்போது அமெரிக்கா வெளியேறும் நிலையில் பல நாடுகள் பதைக்கின்றன. ஆப்கானிஸ்தானத்தில் காலூன்றிய அந்நியர்களுக்கு அமெரிக்கா வெளியேறுவது கசப்பைத் தருகிறது.

தாலிபான்களின் வெற்றி ஏகாதிபத்தியக் கூட்டாளி களுக்கு பதற்றத்தை தருகிறது! அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்கப்படும் தாலிபான்கள் பெண்கள் உரிமை, சிறுபான்மையர் உரிமை, பிற இனங்களின் உரிமை ஆகியவற்றை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பது குறித்து நம்பிக்கையும், அச்சமும் பல்வேறு நாடுகளிடையே நிலவுகின்றன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்தார்கள். ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தியது. அதில் இஸ்லாமிய தீவிர அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ. அமைப்பு மற்றும் அல்-கொய்தாவிற்கு ஆப்கானிஸ்தானில் புகலிடம் அளிக்ககூடாது என்று நிர்பந்திக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் முடிவெடுத்தது.

இந்தியாவின் கோளாறான ஆப்கானிய கொள்கை :

ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறது. 2001-இல் அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்கு முழு ஆதரவு கொடுத்தார். ஆப்கானிஸ்தானின் ஆயுதம் தாங்கிய போராளிகள் இந்தியாவின் மீது கடும் கோபம் கொள்ளப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. இந்தியா அமெரிக்காவின் ஒரு சூழ்ச்சிமிக்க நம்பகக் கூட்டாளியாக விளங்கி வந்திருக்கிறது. அமெரிக்காவுடன் பல இராணுவ உடன்பாடுகளையும் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை என்பது இல்லாமலே போனது. ஆப்கானிஸ்தானில் இந்தியா ஒரு கோளாறான கொள்கையைக் கடைபிடித்து வந்திருக்கிறது. 1996-2001 ஆகிய காலகட்டத்தில், தாலிபான் அரசு நிலவிய காலத்தில் தாலிபான்களை எதிர்த்துப் போரிட்ட வடக்குக் கூட்டணி (Northern Alliance) படைகளை இந்தியா ஆதரித்தது. இந்த வடக்குக் கூட்டணியை ரஷ்யா, இந்தியா, ஈரான் ஆகியவை அப்போது ஆதரித்தன. இப்போது இரஷ்யா, ஈரான், சீனா ஆகியவை தாலிபான்கள் அரசை உருவாக்குவதற்கு முன்பே பேச்சுவார்த்தை களைத் தொடங்கிவிட்டன. தெற்காசியாவில் இந்தியா தனிமைப்பட்டு இருக்கிறது. மோசமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைபிடித்து வந்திருப்பது இப்போது அப்பட்டமாகத் தெரிகிறது. தாலிபான்களை இந்தியா விமர்சிப்பது வேடிக்கையானது. இந்துத்துவம் பேசிக்கொண்டு, தாலிபான்களின் அடிப்படைவாதத்தை இந்து-இந்தியத் தேசியவாதிகள் விமர்சிக்க முடியாது. இந்தியாவின் மதச்சார்பின்மையை வெறுக்கும் இந்துத்துவவாதிகள் ஆப்கானிஸ்தானத்தில் மட்டும் எப்படி பிறரிடம் மதச்சார்பின்மையைக் கோரமுடியும்? இப்போது பெரும் பொருளைச் செலவு செய்துவிட்டு, ஏராளமான அமெரிக்கப் படை வீரர்களையும் இழந்துவிட்டு, 20 ஆண்டுகாலம் ஒரு பொம்மை அரசை நிறுவி அதற்குத் துணையாக இருந்த அமெரிக்காவால் தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; அங்கு ஒரு சமரச ஒப்பந்தத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தோல்விகண்டு, தொங்கிய முகத்துடன் வெளியேறும் போது அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இந்தியாவும் அவசரம் அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி இருக்கிறது,

ஆக்கிரமிப்பு நாடுகளின் புவிசார் அரசியல் :

ஆப்கானிஸ்தானில் பல்வேறு நாடுகள் தலையீடு செய்திருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் அளவுக்கு மீறி இந்தியா பணத்தை கொட்டி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் நோக்கம் தான் என்ன?

ஆப்கானிஸ்தான் தன் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. அதனுடைய புவிசார் அரசியல் முதலில் இரஷ்ய எதிர்ப்பு செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது, இப்போது சீன எதிர்ப்புச் செயல்திட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதுபோன்றே இந்தியாவுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அண்டை நாடுகளின் மீது தன் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இந்தியா நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது, ஆப்கானிஸ்தான் மீது அளவுகடந்த இந்தியப் பாசத்துக்குக் காரணம், ஆப்கானிஸ்தானத்தில் ஒரு இராணுவத் தளத்தை நிறுவி பாகிஸ்தானை சுற்றி வளைத்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் என்ற கருத்து நிலவுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தான் இருக்கிறது. கிழக்கே சீனா அமைந்திருக்கிறது. 70 கிலோ மீட்டர் எல்லையை ஆப்கானிஸ்தானும் சீனாவும் பகிர்ந்து கொள்கின்றன. வடக்கில் துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும், ஆப்கானிஸ்தானின் மேற்கே ஈரானும் அமைந்துள்ளன,

கடல் இல்லாத ஆப்கானிஸ்தான் கேந்திர முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. மத்திய ஆசியாவுக்குச் செல்லும் வணிகப் பாதைகள் ஆப்கானிஸ்தான் வழியே செல்கின்றன. மேற்கு ஆசியப் பகுதியும் கிழக்குப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. 1979-இல் சோவியத் ரஷ்யாவின் படைகள் உள்ளே நுழைந்ததற்கும் இதே புவிசார் அரசியல்தான் காரணம். அப்போது அதைத் தடுப்பதற்கு அமெரிக்கா, சவுதி, துருக்கி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகியவை முஜாஹுதீன் அமைப்புக்கு ஆயுத உதவி செய்தன. முஜாஹுதீன் அமைப்பு கொரில்லா போர் முறையை பின்பற்றி சோவியத் படைகளை வெளியேற்றியது. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் இறந்தனர்; 50 இலட்சம் பேர் அகதிகளாக மாறினர். அன்றைய காலகட்டத்தில் உலக அளவில் இருந்த அகதிகளில் பாதிப்பேர் ஆப்கானிஸ்தானில் இருந்தனர். இதில் பெற்றோர் அற்ற பிள்ளைகள் பெரும் எண்ணிக்கையில் ஆதரவற்று விடப்பட்டனர். இவர்களை மதரஸாக்கள்தாம் வளர்த்தன. உறவுகளற்ற அந்தப் பிள்ளைகள் போரினால் தங்கள் பெற்றோர்களை இழந்த நிலையை உணர்ந்து, எதையும் எதிர்த்து நிற்கக்கூடிய உளநிலையைக் கொண்டவர்களாக வளர்ந்தனர். அவர்கள்தான் இப்போது அமெரிக்க நேட்டோ படைகளை எதிர்த்து ஆயுதம் தூக்கியவர்கள்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறத் துடிக்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகள்!

ஆகஸ்டு 15 அன்று தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதும் ஒரு பதற்றம் பல நாடுகளைப் பற்றிக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் இருந்த தங்கள் நாட்டவர்களை அந்தந்த நாடுகள் விமானங்கள் மூலம் வெளியேற்றத் தொடங்கின. வெளிநாட்டவர்கள் வெளியேறுவது என்பது இயல்பானது, ஆப்கானியர்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு மேல் வெளியேற விரும்பினார்கள். அவர்களில் பல ஆயிரம் பேர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூடிவிட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையத்தில் கூடினாலும்கூட தாலிபான்கள் அவர்களைத் தாக்கவில்லை. காபூல் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில்தான் அப்போதும் இருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் இறந்தனர். 19-08-2021 அன்று, அமெரிக்க சரக்கு விமானம்-17 என்ற விமானத்தில் நெருக்கியடித்துக் கொண்டு 640 பேர் உட்கார்ந்தார்கள்; அவர்கள் மடியில் இருந்த குழந்தை களுடன் அதில் பயணித்தவர்கள் 823 பேர், இவ்வளவு பேரும் வெளியேறுவதற்கு என்ன காரணம்? தாலிபான்கள் கெட்டவர்கள்; கொடுமையானவர்கள்; ஆகவே அவர்கள் ஆளும்வரை அந்த நாட்டில் வாழக்கூடாது என்ற எண்ணம் காரணமா என்றால், நிச்சயமாக இல்லை.

இதற்கான காரணத்தை எளிதாக நேட்டோ அமைப்பின் அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளலாம் (20-08-2021). "நேட்டோ படைகளுக்கு உதவிய ஒரு இலட்சம் ஆப்கானிஸ்தான் மக்களை உடன் அழைத்துச் செல்ல உறுதி அளிக்கப்பட்டிருந்தது. சில ஆயிரம் பேர் மட்டுமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காபூல் விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்."

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு கூறுகிறார் : "பிரிட்டன் இருபதாயிரம் மக்களை ஏற்க இருக்கிறது. அதில் முதலில் 5 ஆயிரம் பேரை ஏற்கிறோம்." அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் இப்படிக் கூறுகிறார்: "அமெரிக்காவுக்கு உதவியாக இருந்ததால் தற்போது தாலிபான்களின் கோபப் பார்வையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களும் நிச்சயம் மீட்கப்படுவர், 50 முதல் 60 ஆயிரம் ஆப்கானிஸ்தான் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க இராணுவம் தனது உறுதிப்பாட்டைத் தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களைக் காப்பாற்றுவது வரலாற்றிலேயே மிகக் கடினமான மீட்புப்பணி, இந்தப் பணியின்போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை தாலிபான்கள் தாக்கி விடுவார்கள் என்று கருதி தங்கள் தூதரகங்கள் மூலமாக மீட்டுச்செல்கிறார்கள். ஆகஸ்டு 15-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றினார்கள்.

திங்கள்கிழமை 40 இந்தியர்களை இந்தியா அழைத்து வந்தது. செவ்வாய்க்கிழமை 150 பேரையும், புதன்கிழமை 90 பேரையும் இந்தியத் தூதரகம் மூலமாக விமானங்கள் அழைத்து வந்தன. யார் வெளியேறுவதையும் தாலிபான்கள் தடுக்கவில்லை. ஆப்கானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியேறுவது மட்டும்தான் அவர்களுக்கு கவனத்தில் கொள்ள விரும்பிய பிரச்சினை. இதற்கிடையில் 21 ஆகஸ்ட் 2021 அன்று தாலிபான்கள் 150 இந்தியர்களைக் கடத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் "அவர்கள் விசாரணைக்காக மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்; ஆவணங்கள் ஆய்வு முடிந்ததும் கொண்டு வந்து விடப்பட்டார்கள்" என்று தெரிவித்தார். பதற்றத்தை உருவாக்குவதிலும், தாலிபான்கள் பயங்கரவாதிகள் என்ற கருத்தை உருவாக்குவதிலும் பத்திரிகைகள் குறியாக இருக்கின்றன. தாலிபான்களை பொருத்தவரை வெளிநாட்டவர்களை அச்சுறுத்தவில்லை. நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்குக் கையாட்களாகச் செயல்பட்டவர்கள், தற்காலிகப் படைப்பிரிவுகளாக செயல்பட்டவர்கள் மட்டுமே அஞ்சுகிறார்கள். ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

இந்தியாவில் மக்கள் பட்டினி! ஆப்கானிஸ்தானுக்கு உள்நோக்கத்தோடு அளிக்கப்பட்ட உதவிகள்! பல அந்நிய நாடுகள் ஆப்கன் அரசாங்கத்திற்கு ஏராளமான உதவிகளைச் செய்து இருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பின்னால், தங்களுடைய புவிசார் அரசியல் மற்றும் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது, தங்கள் எதிரிகளை நிர்மூலம் செய்ய ஒரு தளமாக ஆப்கானிஸ்தானை பயன்படுத்துவது போன்ற நோக்கங்களை மறைத்து நட்பு பாராட்டி வந்திருக்கின்றன. இந்தியா எந்த நோக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஈடுபாடு காட்டியது என்பது ஆய்வுக்குரியது. 2001-இல், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலருந்தே இந்தியா அமெரிக்கச் சார்புடன் நடந்து வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்தது. தாலிபான்களுக்கு எதிராக போரிட்ட வடக்குக் கூட்டமைப்பை இந்தியா ஆதரித்தது. ஈரான் அமெரிக்காவின் வெறுப்பைச் சம்பாதித்த நிலையில், ஈரானை இந்தியாவும் புறக்கணித்தது. ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா நிறுத்தக் கூறியதால், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது.

ஆப்கானிஸ்தானில் ஹீரட் மாகாணத்தில் 2000 கோடி செலவில் சல்மா அணையை இந்தியா கட்டிக் கொடுத்தது. இது இரண்டு இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசனத்திற்குப் பயன்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மின் தேவையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. 2016-இல் நரேந்திர மோடியும் அஷ்ரப்கனியும் சேர்ந்து அந்த அணையைத் திறந்தனர். 2015-இல் ஆப்கன் பாராளுமன்றத்தை 100 ஏக்கர் பரப்பளவில் 650 கோடி ரூபாய் செலவில் இந்தியா கட்டிக் கொடுத்தது. ஒரு பகுதிக்கு வாஜ்பாய் பெயர் வைக்கப்பட்டு அதை நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2009-இல் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில், 1500 கோடி செலவில் 218 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலையை இந்தியா அமைத்துக் கொடுத்தது. 100 ஆண்டுகள் பழமையான ஸ்டோர் அரண்மனையை 2016-இல் புதிப்பித்து, நரேந்திர மோடி அதைத் திறந்து வைத்தார். 1985-இல் காபூல் குழந்தைகள் மருத்துவமனையை இந்தியா கட்டிக் கொடுத்தது. அது இப்போது புதுப்பிக்கப் பட்டது. இவையன்றி பக்கல் மாகாணத்திலிருந்து காபூல் நகரத்திற்கு செல்லும் 220 கிலோ வாட் மின்வழித் தடத்தை இந்தியா அமைத்துக் கொடுத்தது. 400 பேருந்துகள், 200 மினி பேருந்துகள், 285 இராணுவ வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் என்று ஏராளமான உதவிகளையும், செயல்திட்டங்களையும் இந்தியா நடத்தியிருக்கிறது.

இப்போதும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்தியா மீதி வைத்திருக்கிறது. தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் இப்படி கூறுகிறார் : "எங்கள் நாட்டை தங்களின் ராணுவத் தளமாக இந்தியா மாற்ற முற்பட்டால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஆப்கானிஸ்தானில் கால்பதித்த பெரிய சாம்ராஜ்யங்கள் காணாமல் போய்விட்டதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும்" இதற்கு என்ன பொருள்? இந்தியா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அருகிலுள்ள தாஜிகிஸ்தானில் ஒரு விமான தளத்தைப் பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஒரு ராணுவத் தளம் இந்தியாவுக்குக் கிடைக்குமானால் பாகிஸ்தானை சுற்றி வளைத்து விடலாம். ஆப்கானிஸ்தானில் ஒரு ராணுவத் தளத்தை பெறும் நோக்கம் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதுதான் தாலிபான்களின் புரிதல் ஆகும். ஆகவே இந்தியாவை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். தாலிபான்கள் காபூலில் நுழைந்த பிறகு, வேறு இடங்களில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களுக்குள் புகுந்து ஆவணங்களைத் தேடி இருக்கிறார்கள். இந்தியாவின் நோக்கங்களை அறிந்து கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்.

அந்நியர்களை ஏற்காத அரசியலை நடத்தும் ஆப்கானியர்கள் முன்பு சோவியத் இரஷ்யாவை வெளியேற்றியது போல, இப்போது அமெரிக்காவையும் வெளியேற்றி விட்டார்கள். அமெரிக்க செல்வாக்கு சரிந்தது இந்தியாவின் கவலையை அதிகரிக்கச் செய்கிறது. ஆப்கானிஸ்தானில் இப்போது பெரிய அண்ணன் இல்லை. இந்நிலையில் மேற்கு ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை மெல்ல நிலைநிறுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இருந்திருக்குமானால், அது இனி சாத்தியமில்லை. அமெரிக்கா வெளியேறிச் சென்ற பிறகு என்ன செய்வது என்று இந்தியா திகைக்கிறது. யாரையெல்லாம் தனது எதிரியாக இந்தியா கருதியதோ, அந்த நாடுகள் எல்லாம் ஆப்கானிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டிவிட்டன.

சீனா தனது நட்பை ஆப்கானிஸ்தானுக்கு அறிவித்திருக்கிறது. தாலிபான்கள் சீனா சென்று சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். சீனாவுக்கு எதிரான செயல்பாட்டுக்கு இடமளிக்கமாட்டோம் என்ற ஒற்றை உறுதி மொழியை மட்டுமே சீனா கோரியது. ஏனெனில் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் வீகர் முஸ்லிம்கள் சீனாவை எதிர்த்து புரட்சி செய்யும் உளநிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் உதவி செய்துவிடக் கூடாது என்பது மட்டுமே சீனாவின் கோரிக்கை. சீனாவுடன் நட்பு பாராட்டும் பாகிஸ்தான் முன்னமே ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் தாலிபான் தடை செய்யப்பட்ட இயக்கம். ஆனால் இப்போது ரஷ்யா காபூலில் தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. "தாலிபான்கள் நன்றாக ஆட்சி செய்வார்கள்" என்று ரஷ்ய தூதர் சான்றளிக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் "அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தாலிபான்கள் உடைத்தெறிந்து விட்டார்கள்" என்று பாராட்டுகிறார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் "வேறு நாட்டைக் கட்டியெழுப்புவது அமெரிக்காவின் வேலை இல்லை. அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதால்தான் போர் நடத்தினோம்" என்று தன் கைகளைக் கட்டிக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவைப் போலவே ஆப்கானியர்களைக் கொண்ட தற்காலிகப் படைப் பிரிவுகளை உருவாக்கி அதிகாரம் செய்ய முற்பட்ட இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன், இப்போது தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

இந்தியாவைச் சுற்றி இருக்கக்கூடிய நாடுகளான சீனா, மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் நல்லுறவில் இல்லை. வெளிப்படையான பகை உணர்வை இந்தியாவிடம் வெளிப்படுத்தாவிட்டாலும், அண்டை நாடுகள் சீனாவுடன் நட்புறவு பாராட்டுகின்றன. அண்டை நாடுகளின் நட்புறவை பெறமுடியாத இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் கைக்கு வந்த பிறகு இந்தியா திகைத்து நிற்கிறது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு மரியாதை இருந்தது. ஜவஹர்லால் நேரு காலத்தில் அணிசேரா நாடுகள் என்று நடுநிலை நாடுகளை நேரு ஓரணி ஆக்கினார். கூட்டுசேராக் கொள்கை கடைபிடிக்கப் பட்டது. இரஷ்யாவும் அமெரிக்காவும் இந்தியாவுடன் நட்பு பாராட்டின. ஆனால் அரசு தந்திரத்தோடு செயல்படுவதாக நினைத்து, இந்தியாவின் நலன்களை அந்நிய மண்ணில் நிலை நிறுத்துவதாகக் கருதிக்கொண்டு, அமெரிக்க பெரியண்ணனின் கீழ் சின்ன அண்ணனாக வளர்ச்சி பெற முயற்சித்து, இன்று இந்தியா தனித்து நிற்கிறது, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இந்திய அரசதந்திரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

காலங்கடந்து, தாலிபான்களுடன் எப்படியாவது நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா முயற்சி செய்கிறது. ஐக்கிய நாடு பாதுகாப்புக் கவுன்சிலில் தற்போது இடம்பெற்றுள்ள இந்தியா பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிக்க மாட்டோம் என தாலிபான்கள் கொடுத்த உறுதியைக் காக்க வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டபோது ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் சீனாவும், இரஷ்யாவும் இந்த தீர்மானத்தைப் புறக்கணித்து இருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீன எல்லைகளில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களின் பெயர்கள் தீர்மானத்தில் காட்டப்படவில்லை என்பது அந்நாடுகளின் குற்றச்சாட்டு. கத்தார் தலைநகர் தோஹாவில் தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தில் தாலிபான் அரசியல் அலுவலகத் தலைவர் ஷேக் முகமது அப்பாஸை இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்துப் பேசியிருக்கிறார், தாலிபானின் அழைப்பை ஏற்றுப் பேசியதாக இந்தியா கூறிக் கொள்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர வேண்டும் என்று தாலிபான்கள் விரும்புவதாக இந்தியா தெரிவித்து இருக்கிறது, இந்தியா தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருகிறது. அதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

ஆப்கானிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அருகாமை நாடுகளைப் பாதிக்கும். 2009-இல் தாலிபான் துணைத்தலைவர் சிராஜூதீன் ஹக்கானி இந்தியத் தூதரகத்தை தாக்கினார். இப்போதும் தாலிபான்களின் ஹக்கானி குழுவே ஆயுத பலம் வாய்ந்தது. முதலில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியுள்ள ஆட்சி அதிகாரத்துக்கு இந்தியா ஏற்பளிக்காது என்றார். இந்தியத் தூதரகமும் காலி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது இந்தியா வேறு வழியில்லாமல் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. 2021 ஆகஸ்ட் 31 அன்று தாலிபான் தலைவர் ஷெர் மொஹம்மத் அபாஸ் ஸ்டானெஸ்ஸாயுடன் முதல் சந்திப்பை ஏற்படுத்தி இந்தியா தன் கவலைகளை வெளியிட்டது.

தாலிபான் தலைவர் சுஹைல் ஷாஹீல் கத்தார் தலைநகர் தோஹாவில் அளித்த பேட்டியில், "முஸ்லிமாக இருப்பதால் காஷ்மீரிலோ, இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ வாழும் முஸ்லிம்களாக இருந்தால் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" என்று கூறியிருக்கிறார். தாலிபான்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 2001-ஆம் ஆண்டு தாலிபான்களை எதிர்த்த வடக்குக் கூட்டணி குழுவை இந்தியா ஆதரித்து இருக்கிறது. இந்தியா செயல் தந்திரப் பின்னடைவு அடைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானி லிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டுள்ளது என்று கூறலாம். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இருந்த மரியாதை சரிந்துவிட்டது. எந்தத் தாலிபான்களை இந்தியா எதிர்த்து எதிரணிக்கு ஆதரவளித்ததோ, அதே தாலிபான்களுடன் இப்போது வேறு வழியில்லாமல் பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஆப்கானிஸ்தான் நிலத்தை தனக்கு எதிராகப் பயன்படுத்தப் பார்ப்பதாக இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

தாலிபான்கள் "பாகிஸ்தான் எங்கள் இரண்டாவது வீடு" என்கிறார்கள். தாலிபான்களும் பாகிஸ்தானும் நெருக்கமாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, தாலிபான்கள் சீனாவுடன் கைகோர்க்கிறார்கள். 1996- 2001 இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தாலிபான்களின் அரசை பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அங்கீகரித்தன. இப்போது சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. தாலிபான்களை ஏற்கவே மாட்டோம் என்று சமீபத்தில் அறிவித்த இந்தியாவுக்கு இப்போது வேறு மாற்று இல்லை. தாலிபான்களை இந்தியா அங்கீகரித்தாக வேண்டும். தாலிபான்களின் வீரத்தையும் ஈகத்தையும் ஏற்று, உலக நாடுகள் அங்கீகரிக்கத் தயாராகும் நிலையில், தாலிபான்கள் தங்களை சனநாயகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைத்தான் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை தாலிபான்கள் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். தங்கள் தாயகத்தை அந்நிய சக்திகள் ஆளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் தாலிபான்கள், சனநாயக முறைமைகளைப் பின்பற்றுவதிலும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் நட்பு நாடுகளும், சர்வதேச சமூகமும் இதைச் சுட்டிக்காட்டி வழிப்படுத்த வேண்டும். 1973-இல் சாகிர் ஷா காலத்தில் முடியாட்சி முடிவுற்ற நாளிலிருந்து இன்றுவரை, 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆயுதப் போராட்டங்களும் போர்களுமாக ஆப்கானிஸ்தான் வதைபட்டிருக்கிறது. 1979 முதல் 2021 வரை அந்நியர்களின் மேலாளுகைக்குக் கீழ்ப்படிந்து கிடந்திருக்கிறது. இனியாவது மண்ணின் மைந்தர்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் அமைதியாக வாழ உலக நாடுகள் அனுமதிக்க வேண்டும்.

தாலிபான்களை அடிப்படைவாதிகள் என்று அனைவருமே விமர்சிக்கிறார்கள். அவர்கள் கடும்போக்காளர்கள்தான். ஆனால் அந்த ஒற்றைச் சொல்லாடல் மூலம் அவர்களுடைய ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையுமே நிராகரிப்பது முறையல்ல. தாலிபான்கள் ஆயுதப் போர் முறையை கைக் கொண்டவர்கள். அந்நிய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ளாதவர்கள். அவர்கள் எந்த வெளிநாட்டவரையும் தங்கள் மண்ணை மேலாளுகை செய்வதை அனுமதிக்கத் தயாரில்லை. ஆப்கானிஸ்தான் ஆப்கானியர்களால்தான் ஆளப்பட வேண்டும்; பிறர் கையாளும் பொம்மையாக இருப்பதை ஏற்க முடியாது என்கிறார்கள். 2001 முதல் தொடர்ந்து போர் நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவை யும் அதன் கூட்டாளிப் படைகளையும் விரட்டி இருக்கிறார்கள். உலகளாவிய அளவில் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கு இது ஓர் எழுச்சியைத் தரத்தக்கது. 30 நாடுகளின் கூட்டமைப்பாகிய 'நேட்டோ' படைகளை 75,000 வீரர்களை மட்டுமே கொண்ட தாலிபான்கள் வெளியேற்ற முடியும் என்றால், எந்த ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தையும் எந்த தேசியஇனமும் எதிர்த்துப் போராட முடியும் என்ற நம்பிக்கையை இது தருகிறது.

கார்டர் மல் கெய்சன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிர்வாகத்தில் பணியாற்றியவர். The American War in Afghanistan : A History என்ற புத்தகத்தை 1 ஜூலை 2021 அன்று வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தாம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், "போராளிகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் இராணுவ வலிமையில் பலவீனமானவர்கள். ஆனால், அதிக உந்துதல் மற்றும் உறுதிப்பாடு கொண்டவர்கள். இத்தகையவர்களுடனான போர்கள் அனைத்தையும் அமெரிக்கா இழந்துள்ளது" - என்று ஒரு மதிப்பீட்டைப் பதிவு செய்கிறார். பெங்காசி, சோமாலியா, செய்கோன் ஆகியவற்றிலிருந்தும் அமெரிக்கா குனிந்த தலையுடன் தான் வெளியேறியது. இவையெல்லாம் பலம் குறைந்த சிறிய நாடுகள்தான். படை வலிமை அமெரிக்காவின் வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியவில்லை. "உள்ளூர் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் அர்ப்பணிப்புள்ள எதிரியை அமெரிக்கப் படைகளால் எதிர்கொள்ள இயலவில்லை" என்கிறார். இதில் தன்னுரிமைக்காகவும், தன் தேசிய இன அடையாளத்தை யும், இருப்பையும் பாதுகாக்கவும், படை வலிமையைக் காட்டி மீசையை முறுக்கும் நாட்டாண்மைக்கார பெரியண்ணன் அரசுகளை எதிர்கொள்வதற்கான நடைமுறைத் தத்துவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் இளைஞர் பட்டாளம் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி விட்டால், எந்த ஆக்கிரமிப்பாளனும் அத்தேசத்தை எதுவும் செய்துவிட முடியாது.

கேட்டால் கொடுக்க மாட்டார்கள்; அதற்காக கேட்காமலேயே இருக்கலாமா? உரிமைகளைக் கோரினால் ஒடுக்குவார்களோ? என்ற அச்சத்தில், கேட்டால் கொடுக்க மாட்டார்கள்; அதனால் இருப்பதை ஏற்றுக் கொள்வோம் என்று கருதும் தலைமைகள் ஒரு தேசிய இனத்தைப் பீடித்த நோய்கள்!

கீழ்மைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகக் களத்தில் நிற்காமல், இருக்கும் அமைப்புக்குள் கிள்ளிப்போட்ட உரிமைகளை ஏற்றுக் கொண்டு அரசியல் நடத்த முற்படக் கூடிய தலைமைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றனர். இத்தகையப் போக்கு பல்வேறு நாடுகளில் நிலவுகிறது. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் உரிமைகளைக் காக்க களம் இறங்காமல், "இருப்பதை ஏற்போம்" என்ற போக்கைக் கைக்கொண்டு, நடப்பில் இருக்கும் அரசியலுக்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு, அரசியல் செய்பவர்களைப் பார்த்து, ஆப்கானியர்களும், சோமாலியர்களும் நிச்சயம் சிரிப்பார்கள்!

- பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்