விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள சித்தாமூருக்கு அருகில் இருக்கும் பெருக்கரணை, பேரம்பாக்கம் ஆகிய ஊர்களில் நஞ்சு சாராயம் குடித்து 23 பேர் இறந்திருக்கின்றார்கள்.

இறந்த போன அனைவரும் கூலித் தொழிலாளர்களும் மீனவர்களும் ஆவார்கள். கணவனையும், மகனையும் பறிகொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் பெண்களைப் பார்க்கும் போது இதற்குக் காரணமான அயோக்கியர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று தோன்றுகின்றது.

கடந்த 14 வருடங்களாக கள்ளச்சாராய துயரம் ஒன்று கூட நடக்கவில்லை என்று அரசு சட்டமன்றத்தில் சொல்லி ஒரு மாதமான நிலையில், 22 பேர் இறந்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, 2016 முதல் 2019 வரை தமிழ்நாட்டில் கள்ளச்சாராய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 2020ல் 20 சம்பவங்களும், 2021ல் 6 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.tamil nadu hooch tragedy23 பேரின் மரணத்திற்குக் காரணமான மெத்தனால், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ன் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே மெத்தனால் பயன்படும் என்பதால், அதனை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கின்றன.

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மெத்தனாலை வாங்க வேண்டுமென்றால் அதற்கான உரிமம் வைத்திருப்பது அவசியம். மேலும் வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு இருப்பு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை தொழிற்சாலைகள் பதிவு செய்து பராமரிப்பது கட்டாயமாகும்.

இத்தனை கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மீறியே பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்திருக்கின்றார்கள்.

காவல்துறை விசாரணையில் விழுப்புரத்தைச் சேர்ந்த இளையநம்பி என்பவருக்குச் சொந்தமான சென்னை மதுரவாயலை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ரசாயன ஆலையில் இருந்து 1,000 லிட்டர் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரடியாக சென்று பார்த்த ஸ்டாலின் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக அறிவித்திருக்கின்றார்.

உடனே இங்கிருக்கும் சில யோக்கியவான்கள் குடித்து செத்த நாய்களுக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கொந்தளிக்கின்றார்கள். மெத்தனால் விற்பனையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்புடைய அரசு நிர்வாகம், அதை செய்யத் தவறியதால் ஏற்பட்ட மரணங்களுக்கு முழுப்பொறுப்பும் அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நிவராணம் அறிவிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே.

கடந்த மாதம் பீகாரில் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் நடந்த பல மரணங்களைத் தொடர்ந்து, 2016 முதல் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ .4 லட்சம் வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருக்கின்றார்.

பிரச்சினை நஞ்சு சாராயத்தோடு முடியவில்லை. தஞ்சையில் டாஸ்மாக் பாரில் விற்ற சாராயத்தைக் குடித்து இரண்டு பேர் இறந்திருக்கின்றார்கள். உயிரிழந்தவர்கள் அருந்திய சாராயத்தில் சயனைடு கலந்திருந்ததாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கின்றார்.

டாஸ்மாக் பாரில் விற்கப்பட்ட சாராயத்தில் எப்படி சயனைடு வந்தது என கேள்வி வருமே என யோசித்து, செத்துபோன இருவரும் “தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

செத்துப் போனவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் அவசர அவசரமாக மாவட்ட ஆட்சியர் இதை அறிவிக்க வேண்டிய நிலைக்கு மாவட்ட ஆட்சியரை யாரோ நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள்.

கள்ளத்தனமாக தமிழகம் முழுக்க பார்களில் விற்கப்படும் சாராயம் மாவட்ட ஆட்சியாளர்களின் ஆசியோடுதான் நடைபெற்று வருவதால் தங்களுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ள அவர்களும் சாராய மாஃபியாக்களை காப்பாற்ற வேண்டி உள்ளது.

தற்போது இந்த வழக்கில் பாருக்கு மதுபானம் சப்ளை செய்ததாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் 3 பேர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மேலும் பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டாண்டுகளில் காவல்துறைக்குத் தெரியாமல்தான் 24 மணி நேரமும் பார்களில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக நாம் நம்ப வேண்டுமாம்!.அதற்காகத்தான் இந்த நடவடிக்கைகள்.

ஒரு மோசமான கேவலமான ஆட்சியை திமுக மக்களுக்கு கொடுத்திருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் சாராயத்தால் ஆயிரக்கணக்கான ஆண்கள் தமிழகத்தில் இறந்து கொண்டு இருக்கின்றார்கள். சென்ற தேர்தலின் போது தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே இளம் விதவைகளை அதிகம் கொண்ட மாநிலம் என கனிமொழி எம்பி அவர்களே மேடை போட்டு மைக் பிடித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இன்றோ திமுக மதுவிலக்கு கொள்கையை அறிவிக்கவில்லை என கூச்சமே இல்லாமல் சொல்கின்றார்.

அதாவது திமுக மதுவிலக்கு கொள்கையை கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் முன்வைத்தது, இந்தத் தேர்தலில் அல்ல என சொல்ல வருகின்றார். அப்படி என்றால் இளம் விதவைகள் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தமிழ்நாடு அந்தப் பட்டியலில் இருந்தே காணாமல் போய்விட்டதா?

மக்களின் உயிர் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டல்ல என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஓட்டு கிடைக்கும் என்றால் பிணத்தைக் கட்டிப் பிடித்தும் அழுவார்கள். பிணம் கிடைக்கவில்லை என்றால் இவர்களே பிணத்தையும் உற்பத்தி செய்வார்கள்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதில் இருந்து மது விற்பனையை ஒழுங்குபடுத்துங்கள், அதை மலிவு விலையில் தரமாகத் தாருங்கள், கள் விற்பனைக்கு அனுமதி கொடுங்கள் என பல பேரைக் கேட்க வைக்கும் நிலைக்கு இந்த அரசுகள் தள்ளி இருக்கின்றன.

அது ஒவ்வொருவரின் ஒவ்வொரு அமைப்பின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் இந்த சாராய மாஃப்பியாக்கள் அதைக்கூட செய்ய மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

காரணம் தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் 24X7 சாராய விற்பனை சக்கை போடு போடுகின்றது. கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், பீர் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும் அதிகமாக விலை வைத்து விற்கப்படுகின்றது. இது போக பார்களில் 24 மணிநேரமும் எந்தவித தடையும் இன்றி சாராய விற்பனை உள்ளூர் காவல்துறை, எம்எல்ஏ, மதுவிலக்கு ஆயத்துறை துணையோடு சீறும் சிறப்புமாக நடந்து கொண்டு இருக்கின்றது.

துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கூடுதலாக வாங்கப்படும் தொகையில் 7 ரூபாய் கொடுக்க வேண்டும் என கடை ஊழியர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு டாஸ்மாக் கடையில் இருந்தும் 35000 முதல் 70000 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் கப்பம் கட்ட வேண்டும் எனவும் பகிரங்கமாக புகார் தெரிவிக்கின்றார்கள்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு திமிர்த்தனமாக செந்தில் பாலாஜி பதிலளித்ததில் இருந்து சமூக வலைதளங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான வீடியோ ஆதாரங்கள் பகிரப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் கிணற்றில் போட்ட கல்லாக ஸ்டாலின் அவர்களின் மெளனம் இருப்பது இந்தக் கொள்ளையில் ஸ்டாலின் அவர்களுக்கும் பங்கிருப்பதையே காட்டுவதாக குடிமகன்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள்.

மதுக்கடைகளும் பார்களும் ஆட்சியாளர்களுக்கு பொன்முட்டையிடும் வாத்தாக உள்ளது. அதனால் மதுவிலக்கோ அல்லது சட்ட ரீதியான ஒழுங்கு படுத்தப்பட்ட மது விற்பனையோ அவர்களுக்கு ஒரு நாளும் தங்களின் கல்லாவை நிரப்பப் பயன்படாது என்பதால் அதைச் செயல்படுத்த ஒருநாளும் முன்வர மாட்டார்கள்.

ஒரு பக்கம் மதுக்கடைகளும், மதுக்கூடங்களும் பணம் கொழிக்கும் சொர்க்கங்களாக இருக்க, மற்றொரு பக்கம் அரசியல்வாதிகளே சொந்தமாக சாராய ஆலைகளை நடத்தி தமிழ்ச் சமூகத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளாக இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் 50% கணக்கில் வராமல் உள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே கூறியிருக்கின்றார்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் பாதிக்கு பாதி வரி செலுத்தப்படாமல் விற்கப்படுகின்றன என்றால், அந்தக் குற்றத்தை செய்வது தனியார் அல்ல என்பதையும், அரசு நிறுவனமான டாஸ்மாக் தான் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் இதுபோன்ற கள்ளத்தனமாக சரக்குகள் விற்பதற்கு பார்களும், சந்துக்கடைகளும் பயன்படுகின்றன. இதை நடத்துவது யார் என்றால், கடந்த ஆட்சியில் அதிமுக குண்டர்களும், இந்த ஆட்சியில் திமுக குண்டர்களும்தான்.

தமிழகத்தில் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மது மற்றும் பீர் வகைகள் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பெரும்பாலான சாராய ஆலைகள் அரசியல்வாதிகளாலும் அவர்களின் பினாமிகளாலும் தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் மெக்டவல், மோகன் ப்ரூவரீஸ், ப்ரூடன்ட் டிஸ்டில்லரீஸ், எலைட் டிஸ்டில்லரீஸ், ஏ.எம்.புருவரீஸ், கால்ஸ் டிஸ்டில்லரீஸ், கிங் டிஸ்டில்லரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அன்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட் , சிவா டிஸ்டில்லரிஸ் போன்ற சாராய ஆலைகள் செயல்படுகின்றன. மொத்தமுள்ள 11 சாராய ஆலைகளில் 7 ஆலைகள் திமுகவினர் தொடர்புடையதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக டாஸ்மாக் மூலம் திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் எம்.பியாக இருந்த எஸ். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான எலைட் டிஸ்டல்லரீஸ் நிறுவனமே ஆதாயமடைந்தது. அதே போல எஸ்.என்.ஜே. டிஸ்டல்லரீஸ் நிறுவனமானது எஸ்.என். ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த ஜெயமுருகன் தான் கருணாநிதியின் 'உளியின் ஓசை' மற்றும் 'பெண் சிங்கம்' திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆவார். இந்த நிறுவனத்துக்கு 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் உரிமம் வழங்கப்பட்டது.

அதே போல ஆட்சி மாறினாலும் சசிகலா, இளவரசி ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்ட மிடாஸ் நிறுவனத்தில் இருந்து சாராயங்களை திமுக அரசு கொள்முதல் செய்தே வருகின்றது.

அரசியலில் பங்காளிகள் போல நடந்தாலும் சாராய விற்பனை மூலம் வரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அதிமுக, திமுக இரண்டுக்குமே ஒரு சகோதர உறவு உள்ளது.

2003 - 2004 காலகட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியாக இருந்த டாஸ்மாக் மதுபான விற்பனை, கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 36,752 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அரசுக்கு இவ்வளவு லாபம் என்றால், மதுபான ஆலைகளின் முதலாளிகள் எவ்வளவு கோடிகளைக் குவித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சாராய விற்பனை மூலம் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.36,752 கோடியில் கொள்முதல் செலவு ரூ.19,294.07 கோடி என்றும் பணியாளர்கள் ஊதியம் ரூ.420.70 கோடி என்றும் ரூ.17,037.62 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வாணிபக் கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதனால், சாராய ஆலைகளே அதிகம் லாபமடைவது அம்பலமாகி உள்ளது.

தமிழ்நாடு மொத்த வருவாயில் 69% தமிழகத்தின் சொந்த வரி வருவாயிலிருந்தே பெறுகிறது. இதில் மதுவிலிருந்து கிடைக்கும் வரி வருவாய், மாநிலத்தின் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.

தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 5,300-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய முழுவதும் சேர்த்தே மொத்தம் 18 லட்சம் பேர் என்பதைப் பார்க்கும் போது தமிழகத்தை ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்கள் எவ்வளவு பெரிய கொலைகாரர்கள் என்பதையும், ஹிட்லரைவிட, முசோலினியைவிட மோசமான மனிதகுல விரோதிகள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழாக் காலங்களில் டார்கெட் வைத்து தாலி அறுக்கின்றார்கள். தமிழகத்தின் வார நாள்களில் மட்டும் 65-70 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே வார இறுதி நாள்களில் 90-100 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிக்கிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் மது விற்பனை 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மதுவால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மதுவிற்பனையைத் தடுக்க முடியாது, அதை முறைப்படுத்த வேண்டும் எனச் சொன்ன அயோக்கிய பயல்கள் கூட ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் மது அருந்துவதைப் பற்றியோ, எந்த வரைமுறைகளும் இல்லாமல் 24 மணி நேரமும் சாராயம் விற்கப்படுவது பற்றியோ வாயே திறக்காமல் ஒரு விபச்சாரத் தரகனுக்கே உரிய கள்ளத்தனத்தோடு பிரச்சினையைக் கடந்து போகின்றார்கள்.

திமுகவை விமர்சனம் செய்தால் உடனே பிஜேபி ஆதரவாளன் என்பதும் விமர்சனம் செய்பவர்களை மிகக் கீழ்த்தரமாகப் பேசுவதும் நடந்து வருகின்றது. ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூட திராணியற்ற முதுகெலும்பு இல்லாத கோழைகள், அப்படி சுட்டிக்காட்டுபவர்களை திமுககாரனை இடித்து தள்ளிவிட்டு முன்னால் வந்து கடித்து குதறுகின்றார்கள்.

திமுக ஆட்சிக்கு யாரும் குழி பறிக்கத் தேவையில்லை. இன்று சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் மக்களின் அரசியல் விழிப்புணர்வு மட்டம் உயர்ந்திருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்கள் இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். தங்களை விட்டால் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்கு வேறு ஆள் இல்லை என தம்பட்டம் அடித்தால் தங்களை அழிக்கும் அரசை நிச்சயம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பத் தயங்க மாட்டார்கள்.

- செ.கார்கி

Pin It