நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய விளையாட்டு துறையில் உள்ள சமத்துவமின்மை பற்றி குரல்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் வங்க தேசத்துக்கு எதிரான ஒரு நாள் அணியில் இடம்பெறாததால் #CasteistBCCI என டிவிட்டரில் டிரென்ட் செய்யப்பட்டது. கன்னட நடிகர் சேட்டன் குமார் இந்திய கிரிக்கெட் அணியில் (ஆண்கள்) உயர்சாதியினர் நிறைந்துள்ளனர், அங்கும் இட ஒதுக்கீடு தேவை எனவும் கூறியிருந்தார். தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் விளையாட்டில் நிலவும் சமுத்துவமின்மை குறித்தும், விளையாட்டு வாரியத்தில் அரசியல் தலைவர்கள் நிறைந்துள்ளனர் எனவும் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அணியில் சமத்துவமின்மை, வீரர்களிடையே சாதிய மனப்பான்மை, சூதாட்டம், BCCI முழுவரிவிலக்கு அனுபவிப்பது, கிரிக்கெட் வாரியத்தில் வாரிசு அரசியல் என பல பிரச்சனைகள் உள்ளன.

1. சாதி மத ஏற்றத்தாழ்வு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை A+(7 கோடி), A(5 கோடி), B(3 கோடி), C(1கோடி) என 4 வகையாக BCCI பிரித்துள்ளது. இதில் மொத்தம் 28 பேர் உள்ளனர். இதில் பெரும்பாலும் உயர்சாதியினர் குறிப்பாக பார்ப்பனர்களே உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய வீரர்கள் 50-60% பேர் உயர்சாதி பார்ப்பனர்களாகவே உள்ளனர். அதில் பெரும்பாலானோர் பேட்ஸ்மேன்கள். கிரிக்கெட் அதிகளவு உடலுழைப்புக் கோராத விளையாட்டு. அதிலும் பேட்ஸ்மேனுக்கு குறைவான உடலுழைப்பே தேவை. பேட்ஸ்மேனுக்கு கிடைக்குமளவுக்கு புகழ் பந்துவீச்சாளருக்கு கிடைப்பதில்லை.suryakumar yadav and sanjuA+, A வீரர்களில் மொத்தம் 13 வீரர்கள், அதில் 7 பேட்ஸ்மேன், 3 ஆல்ரவுண்டர், 3 பவுலர். இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய 300+ வீரர்களில் 5% முஸ்லீம் (15% மக்கள்தொகை), 8% தலித் (25% மக்கள்தொகை) மட்டுமே உள்ளனர். அதில் பெரும்பாலானோர் வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஆல்ரவுண்டர். டெஸ்ட் அணியில் விளையாடிய 4 தலித் வீரர்களில் 3 பேர் ஆல்ரவுண்டர் (வேகப்பந்து).

2000க்குப் பிறகு விளையாடிய 8 முஸ்லீம் வீரர்களில் 5 பேர் வேகப்பந்து வீச்சாளர்கள். கிரிக்கெட் என்பது "பேட்ஸ்மேன் விளையாட்டு" என வாக்கியம் உண்டு. பந்துவீச்சாளராக அதிக உடலுழைப்பு தேவைப்படும், பயிற்சி எடுக்க பெரிய கட்டமைப்பு தேவைப்படுவதில்லை, அதிக செலவும் ஆவதில்லை. ஆனால் பேட்ஸ்மேனுக்கு பயிற்சி எடுக்க அதிக செலவாகும், ஒரு கட்டமைப்பு தேவைப்படும். உடலுழைப்பு அதிகம் தேவைப்படாது. இதனாலே உயர்சாதி பார்ப்பனர்கள் அதிகம் பேட்ஸ்மேன்களாக வர ஆரம்பித்தனர், அது இன்றைக்கும் தொடர்கிறது.

மற்ற அதிக உடலுழைப்பு கோரும் விளையாட்டுகளில் பார்ப்பன உயர்சாதியினர் குறைவு. அமெரிக்காவோடு பொருத்திப்பார்த்தால் பேஸ்பாலில்(Base Ball) வெள்ளையர்கள் அதிகம், ஆனால் கூடைப்பந்தில் (Basket Ball) ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகம். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இங்கு அப்படியே பிரதிபலிக்கின்றது. சமூகவியலில் "Stacking" என்றொரு சொல் உண்டு, அதற்கு 'Tendency to assign people to central or non-central athletic positions on the base of race or ethnicity'. இங்கு இந்தியாவில் அது சாதி, மதமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினர், முஸ்லீம், கிருத்துவ வீரர்கள் குறைவு. அப்படி குறைவானவர்களிலும், பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஆல்ரவுண்டரே உள்ளனர்.

2. பெருநகர விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெரும்பாலும் பெருநகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, அங்கு இடம்பெயர்ந்தவர்களாகவோ உள்ளனர். ராஜ்தீப் சர்தேசாய் தனது Democracy 11 என்ற புத்தகத்தில் "இந்திய கிரிக்கெட் அணியில் முதல் 50 வருடத்தில் 7 வீரர்கள் மட்டுமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்" என குறிப்பிடுகிறார். 1970-1980 வரை 50% வீரர்கள் 6 பெருநகரங்களான மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இது தற்போது 40% ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நடராசன்கள் (பிற்படுத்தப்பட்ட சாதி & கிராமம்) வரவே இவ்வளவு வருடம் ஆகியுள்ளது. பெருநகரங்களைப் போல கிராமங்களிலும், சிறு நகரங்களில் கட்டமைப்பு வசதிகள் இல்லை.

3. தேசிய & மாநில கிரிக்கெட் வாரியங்கள்

RM லோதா தலைமையில் 2016 இல் அமைக்கப்பட்ட குழு "மாநில கிரிக்கெட் வாரியத்தில் ஒரு குடும்பம் அல்லது பல குடும்பத்தைச் சார்ந்தவர்களே உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு கட்டுரையில் "இந்திய கிரிக்கெட் வாரிய (BCCI) உயர் பதவியில் தற்போதுள்ள 38 முழுநேர உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் முந்தைய உறுப்பினர்களின் மகன் அல்லது உறவினர் மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

குஜராத் கிரிக்கெட் வாரிய முன்னாள் பொறுப்பாளர்கள் => நர்ஹரி அமின், முன்னாள் காங்கிரஸ் துணை முதல்வர், தற்போது பாஜக, அவருக்கு அடுத்து நரேந்திர மோடி, அடுத்து அமித்ஷா, ஜெய் ஷா

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் => N. சீனிவாசன், அடுத்து அவர் மகள் ரூபா குருநாத், தற்போது அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி.

அனைத்து மாநில தேசிய கிரிக்கெட் வாரியமும் இதே நிலமைதான்.

ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் தூமலின் மகன் அனுரக் தாகூர் ஹிமாச்சல கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தபோது BCCI தேர்வுக்குழு உறுப்பினராக வேண்டி (குறிப்பு : முதல்தரப் போட்டியில் விளையாடியவர்கள் மட்டுமே தேர்வுக் குழுவில் இடம்பெற முடியும்) காஷ்மீருக்கு எதிரான போட்டியில் ஹிமாச்சல் அணிக்கு தன்னைத் தானே தேர்வு செய்து கொண்டு, அணித் தலைவராகவும் விளையாடினார். பின்னர் BCCI தேர்வுக்குழு உறுப்பினராகி, தலைவராகவும் உயர்ந்தார். இவர் தான் தற்போதைய ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர். இவர் கையில் தான் இந்திய விளையாட்டுத் துறை உள்ளது.

இதில் சாதி, வர்க்கம், சமூக மூலதனம், வசிப்பிடம் என பல காரணிகள் செயலாற்றுகின்றன. இதுபோல இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைக் களைவது ஒரு நெடும் பயணம். ஆனால் அதை நோக்கி நாம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

- அருள் செல்வன்

Pin It