இந்தியாவை மீண்டும் மத வன்முறையின் சோதனைக்களமாக மாற்ற மோடி அரசும், அதன் பரிவாரங்களும் முயன்று வருகின்றன. கடுமையான விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே சங்கி கும்பல் இஸ்லாமிய அடையாளங்களை இந்துமயமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

hindu groups against qutub minarஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப் பட்டதாகவும், தாஜ் மஹாலை தேஜோ மஹாலயா கோயில் என்றும், அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளைத் திறந்து சோதனை இட வேண்டும் என்றும், குதூப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வதுல் இஸ்லாம் மசூதியில் பூஜையும், அர்ச்சனையும் நடத்த வேண்டும் என்றும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சங்கி கும்பலின் அடாவடித்தனங்கள் நீண்டு கொண்டே போகின்றன.

கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஞானவாபி மசூதி இரண்டிலும் சங்கி கும்பல் சட்டப்படியே நீதிமன்றத்தின் துணையுடன் தனது அராஜகத்தை அரங்கேற்ற காத்துக் கிடக்கின்றன..

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படும் கேசவ் தேவ் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது என்ற புதிய பிரச்சினையை கிளப்பியது சங்கி கும்பல். இப்பிரச்சினையை மையமாக வைத்து மசூதியை அகற்றுவதற்காக சமர்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் என்ற முகலாய மன்னனால் கட்டப்பட்ட இந்த மசூதியில் அந்தப் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிங்காரகவுரி அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சங் பரிவார அமைப்புகள் வாரணாசியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதையடுத்து ஓர் ஆண்டுக்கு மட்டும் அந்தக் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதியும் பெற்றனர்.

இந்த நிலையில் சுவற்றில் உள்ள அம்மனை நிரந்தரமாக தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துத்துவக் கும்பல் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் இந்துத்துவக் கும்பல் எழுப்பிய பிரச்சினையைப் பற்றி பேசாமல், மசூதி முழுவதும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார்.

மசூதியில் நடக்கும் ஆய்விற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மசூதி நிர்வாகம் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் ஆய்விற்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

திப்பு சுல்தான் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்று இந்துத்துவ அமைப்பு, மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது.

மஞ்ச் அமைப்பின் செயலாளரான மஞ்சுநாத், மசூதி இருக்கும் இடத்தில், அனுமான் கோயில் இருந்தது என்றும், பாரசீக ஆட்சியர்களுக்கு திப்பு கடிதம் எழுதியதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளன என்றும், மசூதியின் தூண்கள், சுவர்களில் உள்ள இந்து கல்வெட்டுகள் எங்கள் இந்து மதத்தைச் சார்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அடிமை வம்சத்தைச் சேர்ந்த குப்புதின் ஐபக் என்பவர் டெல்லியில் குதுப் மினாரை 1193–ம் ஆண்டு கட்டத் தொடங்கினார். பின்னர் அவர் மரணமடையவே அவரது மருமகன் இல்துமிஷ் என்பவர் இதனைக் கட்டி முடித்தார். குதுப் மினார் என்பது கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஆகும்.

சங் பரிவார கும்பல் காவி கொடிகளுடன் வந்து குதுப் மினார் முன்பு அனுமன் மந்திரத்தை ஓதியதோடு குதுப் மினாரின் பெயரை ‘விஷ்ணு மினார்’ என மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.ன் கிளை அமைப்பான மஹாகால் மானவ் சேவா என்ற அமைப்புதான் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. குதுப் மினார் முன்பு அமர்ந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டபடி அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம், "இந்துக் கோயில்களை இடித்து இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் இந்துக்களுக்குதான் சொந்தம்" என்று கூறி வருகின்றனர்.

அத்தோடு நிற்காமல் டெல்லியில் இஸ்லாமியர்களின் பெயரில் இருக்கும் ஊர்கள், சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் ஆகியவற்றை இந்துக்களின் பெயர்களாக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர்.

இதேபோல், தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ள இடம் தங்களுக்குச் சொந்தமானது என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி. மேலும், முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தங்கள் பரம்பரையின் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், அந்த நிலத்தின் மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக இஸ்லாமிய வரலாற்றுச் சுவடுகள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் மதவெறிந்த் தூண்டி பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்துத்துவக் கும்பல் முயன்று வருகின்றது.

ஏதோ இஸ்லாமிய மன்னர்கள் மட்டும்தான் இந்துக் கோயில்களை தாக்கி கொள்ளை அடித்ததாகவும் இந்து மன்னர்கள் யோக்கியவான்களாக வாழ்ந்ததாகவும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வரலாற்றை வக்கிரத்துடன் மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றுத் தரவுகள் கோயில்கள் தாக்கப்பட்டது பெரும்பாலும் மத ரீதியான காரணங்களுக்காக இல்லை என்பதை நிறுவுகின்றன.

கோயில்கள், அவற்றினுடைய நிலங்களில் இருந்து வரும் வருவாய், அறக்கட்டளைகள் மூலம் வரும் வருவாய் மற்றும் தங்கம், பக்தர்களால் தரப்படும் காணிக்கைகள் என பெருமளவு செல்வத்தை தனது கருவூலத்தில் கொண்டிருந்தன. கோயில்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணமாகும்.

காஷ்மீரிய இந்து அரசன் ஹர்ஷதேவன் இந்துக் கோயில்களை தாக்கி கொள்ளையிட்டதை கல்கணர் பதிவு செய்திருக்கின்றார். இராட்டிரகூட அரசனான மூன்றாம் இந்திரன் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரதிகாரர்களைத் தோற்கடித்த பொழுது கல்பா என்னுமிடத்தில் அவர்கள் கட்டிய கோயிலைத் தாக்கி அழித்தான்.

சாளுக்கியர்களைத் தோற்கடித்ததற்காக மாள்வாவின் பாரமாரா மன்னான சப்தவர்மன் சமணர்களுக்காகக் கட்டப்பட்ட கோயில்களையும், அரேபியர்களுக்காக கட்டப்பட்ட மசூதியையும் தாக்கி அழித்தான்.

642 ஆம் ஆண்டு பல்லவ மன்னர் நரசிம்மவர்மன் சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் விநாயகர் சிலையைக் கொள்ளையடித்தான்.

பாண்டிய அரசர் ஸ்ரீமார ஸ்ரீவல்லபன், இலங்கையைத் தாக்கி தங்க புத்தர் சிலையை தனது தலைநகருக்குக் கொண்டு வந்தான்.

புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன மன்னன் பௌத்த ஸ்தூபிகளை அழித்ததாகவும், புத்த மடங்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், பௌத்தர்களைக் கொன்றதாகவும் பாடலிபுத்திரத்தில் புத்த விகாரங்கள் அழித்ததாகவும் வரலாற்று அறிஞர் டிஎன் ஜா கூறுகின்றார்.

மேலும் பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள பூர்ணேஷ்வர், கேதாரேஷ்வர், காந்தேஷ்வர், சோமேஷ்வர் மற்றும் அங்கேஷ்வர் ஆகியவை புத்த மடாலயங்களின் மேல் கட்டப்பட்டவை அல்லது அவற்றின் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்பட்டன என்று டிஎன் ஜா கூறுகின்றார்.

புத்தமத ஆதார நூல்கள் புத்த மதத்தினர் சித்தரவதை செய்யப்பட்டதாகவும், புத்த மடங்களையும் தொழுகையிடங்களையும் அழித்ததாகவும் கூறுகின்றன. சுங்கர்களின் ஆட்சியில்தான் சாஞ்சியிலுள்ள தூணும், கெளசாம்பியிலிருந்த மடத்திற்கும் சேதாரம் ஏற்பட்டது.

இன்றுவரை இந்து மதத்தின் மிகப்பெரிய எதிரியாக காட்டப்படும் கஜினி முகமது பற்றியும், அவர் நடத்திய தாக்குதல் பற்றியும் பல கதைகளை சங்கிகள் புனைந்திருக்கின்றார்கள். ஆனால் உண்மை கஜினி முகமது மதுரா, தானேசுவரம், கன்னோஜ் மற்றும் சோமநாதபுரம் போன்றவற்றைத் தாக்கியதற்கு அந்தக் கோயில்களில் இருந்த செல்வமே முதன்மையானதாக இருந்தது.

சிலைகள் உடைக்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் மீதான கஜினியின் நம்பிக்கை மட்டுமே. சன்னி பிரிவைச் சேர்ந்த கஜினி ஷியா முஸ்லிம்களால் பராமரிக்கப்பட்ட மசூதிகளையும் தாக்கி அழித்தான் என்பது வரலாறு.

1026 இல் கஜினி சோமநாதர் கோயிலைச் சூறையாடினான். ஆனால் சமகாலத்தைச் சேர்ந்த எந்த ஓர் இலக்கிய அல்லது வரலாற்றுப் பதிவுகளிலும் அதற்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்ததாக பதிவுகள் இல்லை. 1843 இல் பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் நடந்த விவாதத்தின் போதுதான் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “அது இந்துக்களுக்கு பெரிய வலியை ஏற்படுத்திய நிகழ்வு” என சுட்டிக்காட்டி பார்ப்பனக் கும்பலைத் தூண்டி விட்டனர்.

இஸ்லாமிய மன்னர்கள் கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியதாக கூறும் சங்கிகள் ஏன் இந்து மன்னர்கள் மசூதிகளை இடித்து கோயில் கட்டியதையும், பெளத்த மடங்களை இடித்ததையும், புத்தர் சிலைகளை அழித்ததையும் பற்றி வாய் திறக்க மறுக்கின்றார்கள்?

வரலாறு முழுவதும் எல்லா மதங்களும் ஏதோ ஒரு வகையில் அரசின் ஆதரவு பெற்ற மதங்களாகவே இருந்துள்ளன. அதனால் அரசின் ஆதரவு பெறாத மதங்களைக் கடைபிடிப்பவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதும், அவர்களின் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்படுவதும் நடந்துள்ளன.

ஒரு நாட்டின் மீது தங்களின் வெற்றியை நிலைநாட்டவும் பல சமயங்களில் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நேர்வுகளில் மதத்தைவிட கோயிலின் வரம்பற்ற சொத்துக்களே தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளன.

இன்று நாம் பல நூறு ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம். நமக்கான மதச்சார்பற்ற அரசையும் சட்டப்படி நாம் உருவாக்கிக் கொண்டு விட்டோம். ஆனால் இந்த மண்ணில் தனது பார்ப்பன ராஜ்ஜியத்தை நிரந்தமாக்கிக் கொள்ளத் துடிக்கும் கும்பல் தொடர்ச்சியாக இந்த மண்ணின் மக்களை பிரித்தாளத் துடிக்கின்றது.

அவர்கள் மசூதிகளுக்கு அடியில் லிங்கம் இருப்பதாக தனது புளுத்துப்போன மூளையில் இருந்து கதைகளை உருவாக்கி பரப்புகின்றார்கள். பாபர் மசூதிக்குள் எப்படி ராமன் வந்து உட்கார்ந்தானோ அதே போல ஒவ்வொரு மசூதியிலும் இனி சிவனோ, விஷ்ணுவோ வந்து உட்காருவார்கள்.

நீதி மன்றங்கள் சட்டப்படியே மசூதிகளை இடித்துத் தள்ள இனி தீர்ப்புகளை வழங்கும். முடிந்தால் கடப்பாரையையும், சம்மட்டியையும் கூட வாங்கித் தரும். இந்தியாவின் நீதி அமைப்புகள் அனைத்தும் காவியால் செல்லரிக்கப்பட்ட காலத்தில் நடக்கக் கூடாதது என்று எதுவுமே இல்லை.

- செ.கார்கி

Pin It