அவையடக்கம் கூட அகம்பாவம் தான் - பாலகுமாரன்

இங்கிருந்து தான் இன்னொரு ஜன்னலை திறக்க செய்தது தொடர் தேடல். அதன் நீட்சி தான்.. இந்த மானுட தற்பெருமைகளின் தவத்தை கலைக்க வேண்டும் என்று தோன்றியது.

நான் பெருமைக்கு சொல்லல என்று ஆரம்பிப்பார்கள். சத்தியமாய் அதனுள் தன் பெருமை குறித்தான பேரின்பம் தான் அடங்கி இருக்கிறது. சரி தன்னை பற்றி தானே பேசிக் கொள்வது தனக்கான வெளிப்படுத்தலாக இருக்கட்டுமே.. அதனால் என்ன என்று கூட ஒரு சுய தற்காப்பு கேள்வி எழாமல் இல்லை. இருக்கட்டும். அது மற்றவர்களை தாழ்மைப்படுத்தி இருக்க வேண்டாம் என்பது தான் திறந்த ஜன்னல் வழியே வரும் காற்று சொல்லும் செய்தி.

திரும்பும் பக்கம் எல்லாம் விளம்பரம்தான். இந்த உலகம் விளம்பரம் எனும் பொருள் மீது தான் தன்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால் நம்புங்கள். முதலில் திரையரங்கில் படம் பார்க்கையில் படம் போடுவதற்கு முன்னும் இடைவேளையிலும் விளம்பரங்கள் ஓடின. பிறகு தொலைக்காட்சியில் ஓடின. இப்போது சின்ன திரையில்.. யூ டியூபில்.. இன்னும் இருக்கும் எல்லா திரைகளிலும். அந்த மாதிரி ஒரு காட்சிக்கும் ஒரு காட்சிக்கும் இடையே முன்னும் பின்னும் விளம்பரங்கள் வந்து அதன் மூலம் அது சார்ந்த தொழிலை மக்களிடம் கொண்டு சேர்க்க முயலுவது தான் அடிப்படை. பத்து பெரும் வியாபாரிகளால் ஆனது தான் உலகம் என்றொரு கூற்று கூட இருக்கிறது. அதன்படி... எல்லாமே இந்த சர்வத்தின் மையம்... விளம்பரம் என்ற யுக்தி மூலம் தான் செயல்படுகிறது. கீரை கீரை என்று கூவி கூவி விற்ற பாட்டியின் குரலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது இந்த விளம்பரம் என்ற பரம்பொருள்.

சரி ஒரு பொருளை அதற்கான வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க இந்த போட்டிகள் நிறைந்த உலகத்தில் விளம்பரம் எனும் அரக்கன் தேவைப்படுகிறான். ஆனால் தனிமனித பெருமைக்கும் அதே விளம்பரம் என்பது எந்த வகையில் உதவுகிறது என்ற யோசனையில் தான் இப்படி அடைத்தே கிடக்கும் ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து காற்றை வாங்க வேண்டி இருக்கிறது.

ஒரு புத்தகம் வெளியிடுகிறோமா.. எடு போட்டோ. வெளியிடுபவர் முகத்தைப் பார்த்து கண்களை நேருக்கு நேர் பார்க்கிறோமா என்றால் யோசிக்க வேண்டி இருக்கிறது. கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் ஒரே நோக்கம் எடுக்கப்படும் புகைப்படம். கிளிக் கிளிக் கிளிக் என்று எல்லாமே கிளிக். அதன் பிறகு அந்த புத்தகம் என்னாகிறது... பெற்றுக்கொண்டவர் என்ன எதிர்வினை ஆற்றினார்... அந்த நூல் இந்த சமூகத்துக்கு என்ன செய்தது ஒன்றும் தெரிவதில்லை. புத்தகம் ஆக்குவது பதிப்பாளர்களிடம் இருந்த வரை புத்தகம் வெளியிடுவதில் ஒரு தரம் இருந்ததை உணர முடிகிறது. எழுதுபவரே பதிப்பித்துக் கொள்ளும் காலத்தில் முக்கால்வாசி... பூச்சு வேலை தான். புத்தி பிதற்றும்... யுக்தி படுமோசம். தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் தேவைப்படுகிறது.

ஒரு நல்ல காட்சியை பார்த்தால்... முதலில் கண்களில் பார்ப்பதே இல்லை. உடனே எடு மொபைலை. எடுத்து மூன்றாம் கண் வழியே பார்த்தால் தான் நவயுக திருப்தி ஏற்படுகிறது என்றால் அது அபாயகரமான கட்டம் என்று தான் உணர வேண்டும்.

இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாலே முதலில் அதையும் போட்டோ எடுத்து முகநூலில் பதிவு செய்து விட்டு தான் மறு வேலை பார்க்கும்...பார்த்துக் கொண்டு இருக்கும்.... மனோபாவம் எப்படி இந்த மானுடத்தில் விதைந்தது என்று யோசிக்கிறேன். நல விசாரிப்புகள்... பரஸ்பர மன பகிர்தல்கள்... நிஜமாகவே எடுக்கும் புகைப்படங்களில்... கன்னத்தில் கை வைத்து தேங்கி விடுவதாகவே படுகிறது. எல்லாம் எல்லாம் எதுவும்.. இன்னும் அப்போது தான் தாயோ தந்தையோ இறந்திருப்பார்கள். இறந்த உடலை உடனே போட்டோ எடுத்து ஊருக்கே போட்டு RIP வாங்குவதை சகிக்க முடியாத காரணத்தோடு காண்கிறேன். இறந்த உடலின் கோலம் பாவம் இல்லையா.. அதை போட்டோவாக்கி வீட்டில் வைப்பதே காலத்துக்கும் நமக்கு தண்டனை. அதை எப்படி ஊருக்கே போட்டு காட்டி பரிதாபம் சம்பாதிப்பது. வேறு முன்பெடுத்த போட்டோ போட்டு தகவல் தெரிவிப்பது வேறு. இது தலைகீழ் விதியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

அடுத்து இந்த இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டாரென்றால்.. வீதி முக்கில் காரியம் முடிந்தும் பத்து பதினைந்து நாட்களுக்கு புழுதி அடித்து குப்பை வாங்கி கொண்டிருக்கும் அவலம். ஒவ்வொரு முறையும் கடும் வேகமாய் இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகத்தில்... தான் இல்லாமல் போனதாக... பாவமாக பார்ப்பது போலவே இருக்கும் அந்த போஸ்டர். நாலு பேருக்கு தெரிய வேண்டும். சரி தான். காரியம் முடிந்ததும் எடுத்து விடுவது தான் அந்த இறந்தவருக்கு தரும் மரியாதை. செத்தவரை முச்சந்தியில் தனித்து நிற்க விட்டு வேடிக்கை காட்டுவது அட்டூழியம்.

எது ஒன்றுக்கும் போட்டோ தான் இயல்பாகிவிட்டது. அதீத ஆர்வத்தின் வெளிப்பாடு தான் கண்கள் பார்க்கும் முன்னே தன் கேமரா வழியாக ஊர் பக்க வேண்டும் என்று நினைப்பது. ரசனையை மடை மாற்றி விடும் வேலை தான் இது. ரசனையில் தன்னை இணைத்துக் கொள்வது முதலில் வெற்றுக்கண்களால் உள் வாங்குவது தானே. அது மிஸ்ஸிங்.

ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் அதற்கான புகைப்படக்காரர் இருப்பார். அவர் எடுப்பார். எடுக்கட்டும். அதை விட்டு.. மேடையில் பேசுகிறவர் என்ன பேசுகிறார்... ஏன் பேசுகிறார்... எப்படி பேசுகிறார் போன்ற ஒரு புரிதலும் இல்லாமல்... குறுக்கு மறுக்க ஓடி நடந்து நின்று எகிறி தவ்வி.... முந்திரிக்கொட்டை வேலையை செய்து கேமராவை தூக்கி கொண்டு அலையும் பல பெருசுகளை பார்க்க... பிடரியில் தட்டி போயா அந்த பக்கம் என்று சொல்ல தோன்றும். அதுவும் போட்டோ எடுக்கும் கலை பற்றிய ஒரு சுக்கும் தெரியாது. கேமராவை ஆட்டு ஆட்டென்று ஆட்டி வைத்து.. இதுல லைவ் வேறு. அந்த மாதிரி ஆளுங்களை பார்த்தாலே.. விரட்டி விரட்டி வெளுக்க தோன்றும். ஈசியாக கிடைக்கும் எதையும் போட்டு உடைக்கும் புத்தி கொண்ட மனிதனுக்கு எதில் அடித்து சொல்வது... முன்னொரு கால கடினத்தில் உறுதியும் தேவையும் தேவைக்கு இருந்தது என்று.

தனக்கு தெரியாதது இந்த உலகத்தில் இருக்க கூடாது என்பது மிக மோசமான ஆபத்தான எண்ணம். ஆபத்தானது அறிவு... அதை அனுசரணையாக அணுகுவது தான் மொத்த வாழ்நாளின் நோக்கம். அதை விடுத்தோர்... அதை அறியாதோர்... அது பற்றிய விழிப்புணர்வு அற்றோர்... முதல் வரிசையில் தான் அமர்வேன் என்கிறார்கள்... எல்லா மேடைகளிலும் மாலை தனக்கே விழ வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்கிறேன் பேர்வழி தன்னையே கக்கி வைக்கிறார்கள். கல்யாண வீடென்றால் மாப்பிள்ளை/ பொண்ணு... தான் தான்... சாவு வீடென்றால் செத்தது... தான் தான் எனும் மனோபாவ பூச்சு extremist நிலை. பரிதாபம். ஏன் கை தட்டுபவனாக இருக்கவே கூடாதா... வெற்றி தோல்வி வட்டமில்லாத அனுபவத்தை கவனிக்கவே கூடாதா. வெற்றி தேவை தான். வெற்றி மட்டுமே தேவை என்பது மண்டைக்குள் நிகழும் பனி மூட்டம். சுடர் இருக்காது. ஒரு ரசிகராய் இருப்பதில் அப்படி என்ன கௌரவ குறைச்சல். ஆடியன்சாய் ஒருபோதும் இருந்து விடவே கூடாது. அது மானம் போகிற விஷயம். காசு குடுத்து விருது வாங்குவதை விட மோசம் அல்ல அது.

இதில் இன்னொரு விஷயம் நீண்ட நாட்களாக அடைபட்ட கதவை கொண்டிருக்கிறது. திறந்து விட முடிவெடுத்து தான் பூட்டை உடைக்கும் வேலையை செய்கிறது இந்த பத்தி.

தன் அல்லது தன் பிள்ளைகள்... மனைவி... அம்மா அப்பா.. இப்படி தன்னை சார்ந்தவர்களின் பிறந்த நாளை ஆதரவற்றோர் பிள்ளைகள் இருக்கும் கூடங்களில் கொண்டாடுவது. என்ன மாதிரி வடிவத்தில் இந்த சிந்தனை வேர் விட்டிருக்கிறது. கேட்டால்.. ஐயோ பாவம் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி என்பார்கள். நன்றாக செய். நம்மால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதை இன்றே செய். நாளை செய். ஞாயிறில் செய். ஒரு பொதுவான விசேஷ நாளில் செய். அதென்ன உன் பிறந்த நாளில்... உன்னை சார்ந்தோர் பிறந்தநாளில் செய்வது. கவுண்டமணி சொல்வது போல நீங்க மட்டும் தான் இந்த உலகத்துல பொறந்துடீங்களா.. மற்றவங்கள்லாம் தேவை இல்லாம பொறந்துட்டாங்களா. உன் பிறந்த நாளை அந்த பிள்ளைகள் மத்தியில் கொண்டாடினால்.. அந்த பிள்ளைகள் தங்கள் பிறந்த நாளை பற்றி யோசிக்காதா. அது பற்றிய தேடலில் யாருமற்ற தங்கள் வாழ்வின் சோகம் மீண்டும் கவிழ்த்துக் கொள்ளாதா.

அந்த பிள்ளைங்களுக்கு இனிப்பு தருவதை போட்டோ எடுத்து எல்லா பக்கமும் தன் சொந்த பந்தங்கள் சூழ... நட்பு ஊர் உறவு பேச... என்று பரப்பி அதன் மூலம் தனக்கே தெரியாத தற்பெருமையை அன்பூற்றி வளர்த்து கொள்தலும் அகம்பாவமே என்று தோன்றுகிறது. மாற்று கருத்து இருக்கலாம். கொடுப்பவருக்கு வேண்டுமானாலும் அது பெருமையாக இருக்கலாம். வாங்குபவருக்கு எப்படி அது மகிழ்வாக இருக்கும். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரிய கூடாது என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கேட்டால் நாம இப்படி போட்டா போட்டா தான் அத நாலு பேர் பார்த்துட்டு...அவுங்களும் உதவி செய்வாங்கன்னு லாஜிக் வேற பேசறது. உதவி செய்றவன் இன்னொருத்தன பார்த்து செய்ய கூடாது... அது பார்மாலிட்டி. சமுதாய அழுத்தம். பக்கத்துக்கு வீட்டுக்காரன் டொனேஷன் குடுத்துட்டா... நாமளும் குடுக்கணுமேங்கற கட்டாயம். உதவி என்பது தன் சொந்த புத்தியில் விழித்து அதன் மூலம் அதை நிகழ்த்தி பார்த்து அதையும் சத்தமில்லாமல் செய்வது. ஒரே ஒரு ஜன்னலை வாங்கி வைத்து விட்டு உபாயம் ராஜ ராஜேஸ்வரி மகள் சீதாராணி வழி பேரன் சின்ன ராஜு மருமகள் கீதாபிரியா... வடக்குப்பட்டி... என்று எழுதி வைக்க கூடாது. உள் வரும் காற்று துப்பி விட்டு போய்விடும். சிலையை கொடுத்து விட்டு உபயம்னு கீழே பேர் பதித்து வைத்து - அதை என்ன சொன்னாலும்... அது பேர் தற்பெருமை தான்.

மற்ற உதவியை கூட போட்டோ புடிச்சு ... காட்டு காட்டுனு காட்டு. இல்லாத பிள்ளைங்களுக்கு தருவதை... அதுவும் அதை உன் அல்லது உன்னை சார்ந்தோர் பிறந்த நாளுக்கு தருவதை...அதை காட்டு காட்டுனு ஊர் முழுக்க காட்டுவதை...தவிர். அது அசல் மாதிரியே இருக்கும் நகல் இரக்கம். அந்த கொடுக்கும் சம்பந்தப்பட்ட ஆள்... சிறு பிள்ளையாக இருக்கும் பட்சத்தில்... அந்த பிள்ளைகளின் மத்தியில் ஒரு நாயகனாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது தானே. அது அபாயகரமானது. பரிதாபப்பட்டு பாவப்பட்டு... கொடுப்பது வேறு. இரக்கப்பட்டு இதயத்தில் இருந்து கொடுப்பது வேறு. புண்ணியத்துக்காக ஒருவருக்கு எதையும் தர கூடாது. அது அவருக்கு தேவை என்று கொடுக்க வேண்டும்.

அவர்கள் மத்தியில் தன்னை ஒரு ராஜாவா கற்பனை பண்ணிக்கொண்டு தன்னையும் அறியாமல்... இயல்பென்ற போர்வையில்... அன்று அந்த சோறு போடும் படலம் முடியும் வரை அந்த வீட்டுக்காரர்கள் செய்யும் அலப்பறை....நடத்தை.... அய்யய்யோ அது ஒரு தாங்கொணா காட்சி துயரம். கையை கட்டிக் கொண்டு மென்மையாக பவ்யமாக மேன்மையாக கண்களை சிமிட்டிக் கொண்டு ... கண்கள் கலங்கியும்... அதை பற்றி... அதையே தன் மென்மையான குணமாக நம்பி வாய்ப்பு கிடைக்கையில் அல்லது வாய்ப்பை ஏற்படுத்தி நாலு பேரிடம் பெருமையாக... இந்த தடவை பையன் பொறந்த நாளை அநாதை இல்லத்துல கொண்டாடினோம். எல்லாருக்கும் பிரியாணி போட்டோம் என்று சொல்லி அல்லது போட்டோ போட்டு... பால குமாரன் சொன்ன அவையடக்கம் கூட அகம்பாவம் - நிரூபணமாகும் இடம் இது தான்.

உதவுவது நல்ல குணம். சத்தமில்லாமல் உதவு. பிறந்த நாள்... கல்யாண நாள்... தனக்கான சிறப்பு நாளுக்கு நாலு பேருக்கு சோறு போடுகிறேன் என்று சொல்வதில்...தான் தான் வெளியே தெரிகிறதே தவிர உதவுவது ம்ஹும். என்னவோ ஜன்னலை திறந்தும் காற்று வர மறுக்கும் காரணம் அதில் இருப்பதாக ஒரு தோற்றம்.

உதவ வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் இன்றே உதவி விடு. அதிகபட்சம் நாளை. அடுத்த பிறந்த நாள் வரை காத்திருப்பது Cunning.

- கவிஜி

Pin It