நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில் சுமார் 150 ஆண்டுகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1830-ல் இருந்து தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கி விட்டதாக உலகம் முழுக்க பரவியுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை ஆவணப்படுத்தும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள `புலம்பெயர் ஆய்வு மையம் சொல்கிறது.

வீட்டு வேலை முதல் நிறுவனங்களில் உயர் பதவிகள் வரை தமிழர்கள் இல்லாத அரசு, தனியார் துறைகளே இல்லை. அந்த அளவுக்கு வணிகத் தலைநகரான மும்பை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். 

தமிழர்கள் வேலை தேடி எங்கே சென்றாலும் இயற்கை வளங்களையோ, நிலத்தையோ அபகரித்ததோ, அழித்ததோ கிடையாது. வாழும் மண்ணின் மக்களுடன் ஐக்கியமாகி, அவர்களின் மொழியைக் கற்று, பண்பாட்டை ஏற்றே வாழ்கின்றனர். இவை மராட்டிய மண்ணிலும் தொடர்கிறது. வெளி மாநில மக்களிடத்தில் இருக்கும் பொதுவான கருத்து தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள், பழகுவதற்கு எளிமையானவர்கள், பாதுகாப்பானவர்கள், நேர்மையானவர்கள், வம்பு தும்புக்கு போக மாட்டார்கள், தான் உண்டு வேலை உண்டுன்னு இருப்பவர்கள் என்பதே. 

மராத்திய மண்ணில் வாழும் தமிழர்களுக்கு கிட்டத்தட்ட நூறாண்டு கால வரலாறு உண்டு. இம்மண்ணில் குடியுரிமை பெற்று, பதிவு செய்து கொண்டவர்கள். வாழும் தமிழர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெற்றவர்கள், தொடர்ந்து நகராட்சி, சட்டசபை, பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் முழு உரிமை பெற்றவர்கள். மத்திய, மாநில ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வாக்களிக்க உரிமை பெற்றவர்கள், கல்வி வரி, வருமான வரி, தொழில் வரி, வீட்டு வரி என அனைத்து வரிகளும் மத்திய, மாநில அரசுகளுக்கும் மாநகராட்சிக்கும் தமிழர்கள் தவறாது செலுத்துகிறார்கள். அதேபோல கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்களிடத்தில் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்ததால் கடுமையான போட்டியுடனே உயர்கல்வியைப் பெறுகின்றனர். சாதிச் சான்றிதழ் இருந்திருந்தால் இடஒதுக்கீடு பயனால் தனது பூர்வீக தமிழ்நாட்டிலும், ஒன்றிய அரசு கல்லூரிகளிலும் தங்கள் இடத்தை எளிதாகப் பெற்று இருக்கலாம் ஆனால் மராத்திய மண்ணில் வாழும் தமிழர்கள் மராத்திய மாநில அரசு மூலம்ம் மட்டுமல்ல தமிழ்நாடு அரசு மூலம் கூட சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஏராளம்.

பல சம்பவங்கள் இருந்தாலும் ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்கிறோம். புலம்பெயர்ந்த ஒருவர் தனது பூர்வீகமான தமிழகத்தில் தனது மகன் பள்ளிப் படிப்பை இரு ஆண்டுகள் படிக்க வைக்கிறார். பின்னர் அண்ணா பல்கலைக்

கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிப்பில் சேர்க்க பி.சி. சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதற்காக தமிழ்நாட்டில் தங்கள் பகுதி வட்டாட்சியரை அணுகுகிறார்.

பள்ளிச் சான்றிதழ், வீட்டு முகவரிக்கான எரிவாயு இணைப்பு சான்றிதழ், தந்தை சாதிச் சான்றிதழ் அளித்தும் பி.சி சான்றிதழ் வட்டாட்சியர் தர மறுத்துவிட்டார். தமிழ்நாடு அரசின் ‘மக்கள் சாசனம் 2007' விதியை எடுத்துக் கூறிய பிறகே அவருக்கு சான்றிதழ் கிடைத்தது. இதுபோன்ற விழிப்புணர்வு எத்தனை பேருக்கு இருக்கும்? ஆகவே, அரசு அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்களை துறை வருவாய்த் சான்றிதழ் பெறுவது தொடர்பான விழிப்புணர்வை சரியாக தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அதேபோல் பூர்வீக தந்தை சொத்தை, நிலத்தை தங்கள் பெயரில் மாற்ற பலர் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள்.

மராத்திய மண்ணில் வாழும் தமிழர்கள் மராத்திய மாநில அரசிடம் சாதிச் சான்றிதழ் பெற அணுகினால், இங்கு உள்ள சாதிப்பட்டியலில் உங்கள் சாதிப் பெயர் இல்லை, இங்கு வந்து ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். தமிழ்நாடு சென்று வாங்குவது தானே என வெறுப்பாய், மனம் புண்படும்படியாய் பேசி, சான்றிதழ் தர மறுக்கின்றனர். தமிழ்நாட்டில் கூட குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்கு அட்டை, வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வேண்டும் என ஆதாரம் கேட்பதும், ஏதாவது சில ஆதாரங்களை அளித்து பல சிரமங்களுக்கிடையே சிலர் சாதிச் சான்றிதழ் பெற்று வந்தாலும் மராத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்படாத நிலையே உள்ளது, மராட்டிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வரும் மாநகராட்சி தமிழ்ப் பள்ளியில் தமிழில் பாடம் நடத்த தமிழ் ஆசிரியர் குறிப்பாக பட்டியில் பிரிவினர் தேவை என்கிற மாநகராட்சி பள்ளி விளம்பரம் நாளிதழில் வந்தது. இதைப் பார்த்து பல சிரமங்களுக்கு இடையில் தமிழ்நாட்டில் சாதிச்சான்றிதழ் பெற்று வந்தவர்கள் விண்ணப்பிக்க மும்பை மாநகராட்சி பள்ளி நிர்வாகம் இவர்கள் விண்ணப்பத்தை நிராகரித்த வரலாறு உண்டு.

இதுவரை மராத்திய மண்ணில் வாழும் தமிழர்கள் குறிப்பாக, பட்டியல் பிரிவு சாதிகளுக்கு (அட்டவணைச் சாதிகளுக்கு Scheduled Caste) சாதிச் சான்றிதழ் பெற்று தங்கள் குழந்தைகளுக்குக் கல்விச் சலுகைகள் கூட பெற முடியாத அவல நிலையே இன்றும் நிலவுகிறது.

சாதிச்சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் சிக்கலுக்கு காரணம் யார்?

சாதிச் சான்றிதழ் சலுகைகள் சம்பந்தமாக மாநில அரசுகளைக் காட்டிலும் மைய அரசே முழுக் காரணம். 1956இல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அந்தந்த மாநிலங்களிலுள்ள சாதிகளைக் கணக்கில் கொண்டு பட்டியிலிட்டு, அந்தந்த மாநில பட்டியல் பிரிவு சாதிகளுக்கு அட்டவணைச் சாதிகளுக்குச் (Scheduled Caste) சான்றிதழும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என ஆணையிட்ட ஒன்றிய அரசு சுதந்திரத்திற்கு முன்பே வேறு மாநிலங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கிய பட்டியல் பிரிவு சாதியினரையும், பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் கணக்கில் கொண்டு அட்டவணைப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு வேறு மாநிலங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருந்த பட்டியல் பிரிவினரை, பிற்படுத்தப்பட்டோரைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. சாதிகளை அட்டவணைப் பட்டியலில் சேர்க்கவும் இல்லை. அதே போல புலம்பெயர்ந்து குடியேறிய வெளிமாநில மக்களும் இதுபற்றிச் சிந்திக்காமல், குழந்தைகளின் கல்வி, குடியிருப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி எண்ணிப் பார்க்காமல் வாழ்ந்து விட்டது ஏன் கவனக் குறைவா? அன்றைய சூழ்நிலைகளா? என்பது விளங்காத புதிராக உள்ளது.

வேறு மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு 1977 வரை மராத்திய மாநிலத்தில் கூட சாதிச் சான்றிதழ்கள், சலுகைகள் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்துள்ளன. அதன்பின் பிறப்பிக்கப்பட்ட மைய அரசின் ஆணை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. மீண்டும் தெளிவாக 18.11.1982 ல் ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய அரசு ஆணை எண் BC-16014/1/82SC & BCD -1 ன்படி “ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு அவரது தந்தை/தாய் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள உண்மையான சான்றிதழ் அடிப்படையில் குடியேறிய மாநிலத்தில் சாதிச் சான்றிதழ்கள், சலுகைகள் வழங்கலாம். இந்த வசதி ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் குடியேறியதால் பட்டியல் பிரிவு சாதிகளுக்கு/ பழங்குடியினருக்கு (Scheduled Caste/ Scheduled Tribe) என்பதிலிருந்து எந்த நிலையிலும், சலுகைகளிலும் எவ்வித மாற்றம் இருக்காது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் 22.02.1985 ல் திருத்தப்பட்ட ஆணை எண். BC-16014/1/82 SC & BCD -1 ன்படி சாதிச் சான்றிதழ் வழங்கலாம், ஆனால் சலுகைகள் சொந்த மாநிலத்தில் தான் பெற இயலும் என உள்ளது. இதையே மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன. இந்த உத்தரவு கல்வி, தற்காலிகமாக வேலை தேடி குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்துமே தவிர நிரந்தரமாய்க் குடியேறியவர்களுக்கு நிச்சயமாய்ப் பொருந்தாது.

மராத்திய மண்ணில் பிறந்தவர்களை, குடியுரிமை பெற்றவர்களை மண்ணின் மைந்தர்களாக மாநில அரசு ஏற்றுக்கொண்டு ஏன் சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது? குறைந்தபட்சம் கல்விக்காவது ஏன் சலுகை காட்டக்கூடாது? தமிழ்நாடு அரசிடம் அல்லது மைய அரசிடம் இருந்து பொருளாதாரத்தைப் பெற்று கல்விக்கான சலுகையை மட்டும் புலம்பெயர்ந்து நிரந்தரமாகத் தங்கிவிட்ட தமிழ் மக்களுக்கு அளிக்கலாமே? 

மகாராஷ்டிராவில் உள்ள சமார், மோச்சி, சாம்பவார், சமாகரா, மாதிகா என்ற சாதிகள் தமிழகத்தில் உள்ள ஆதி திராவிடர், அருந்ததியர், தேவேந்திர குல சாதிகளைக் குறிப்பவையே. மகாராஷ்டிர சாதிகள் தமிழ்நாடு பட்டியல் பிரிவு சாதிப்பட்டியலில் அட்டவணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் தமிழ்நாட்டில் அரசு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் அதே சாதிகளான ஆதி திராவிடர், அருந்ததியர், தேவேந்திரர் எனப்படும் சாதிகள் மகாராஷ்டிர அரசின் அட்டவணைப் பட்டியலில் இடம் பெறாததால் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மராத்திய இனத்தவரும் வேறு மாநில மக்களும் பயன் பெறுகின்றனர். ஆனால் தமிழர்கள் மட்டும் இங்குப் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஒரு மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதிகள் சுதந்திரத்துக்கு முன்பே குடியேறிய வேறு மாநில அரசால் அங்கீகரிக்கப் படவில்லையானால் சுதந்திர இந்தியாவில் ஒருமைப்பாடு உள்ளதென ஏற்றுக் கொள்ள இயலுமா? ஒரு மாநிலத்தில் தற்காலிகமாக வந்து தங்கிச் செல்வோரையும், நிரந்தரமாகி வாழ்ந்து குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மாதிரியாக எண்ணுவது எவ்விதத்தில் நியாயமாகும்? 

மராத்திய மண்ணில் வாழும் 25 லட்சம் தமிழர்களுக்கு சாதிச் சான்றிதழ், அடிப்படை வசதிகள் அரசு மூலம் பெற மைய, மாநில அரசுகளின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிய வண்ணம் தொடர் முயற்சியில் பல்வேறு தமிழர் அமைப்புகள், கட்சிகள் தனித்தனியாக நீண்ட காலமாகப் போராடி வந்தாலும், இதுவரை அந்த முயற்சி வெற்றி பெறாமல் தொடர்கதையாகத் தொடர்வது வேதனை அளித்தாலும் ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையை உணரச் செய்ததில் வெற்றியடைந்ததில் மனநிறைவு உண்டு. 

 மராட்டிய மாநிலத் தமிழர்களின் சாதிச் சான்றிதழ் உரிமைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியதுடன் எமக்கு கடந்த கால வரலாற்றையும் தகவலையும் பகிர்ந்த ஐயா கோ.மா.விசுவநாதம் மற்றும் ஐயா கருவூர் இரா.பழனிச்சாமிக்கு பெரிய கடமையும், நன்றியும் பட்டுள்ளோம். இதே போல் மும்பையிலிருந்து வெளிவந்த மும்பை தமிழ் டைம்ஸ், மராத்திய முரசு, தினபூமி தமிழ் நாளிதழ்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தியும், ஆட்சியாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு இடித்துரைத்தும், தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தும் விழிப்புணர்ச்சியூட்டியும் தனது பணியைச் செய்தன. உரிமைக்குப் போராடிய குரல் கொடுத்த ஒவ்வொரு நபர்களின் வரலாறும் தகவலும் இனிவரும் காலங்களில் ஆவணம் செய்யப்படும் என்பதைப் பதிவு செய்கிறோம்.

ஒன்றிய அரசு ஆணையில் திருத்தம் கொண்டு வராதவரை தமிழர்களின் சாதிச் சான்றிதழ், சலுகை சிக்கலுக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது. இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் இந்தியக் குடிமகன் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்து வாழ்வளிக்க வேண்டும். சமூக நீதி, சம உரிமை, சம நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை அனைத்து தமிழர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, வேற்றுமை கருதாது விடா முயற்சியுடன் ஒருமித்த குரல் எழுப்பினால் நிச்சயம் நமது லட்சியம் நிறைவேறும்.

 தொகுப்பு - சிறீதர் தமிழன், ஒருங்கிணைப்பாளர், மும்பை விழித்தெழு இயக்கம்

Pin It