அமெரிக்காவில் குடியமர்ந்த தமிழர்களின், வீடு,வாசல், குழந்தைகளின் படிப்பு எல்லாம் சீரான பின் எழும் தமிழ்மொழி ஆர்வத்திற்குத் தீனி போடுவதற்காக, ஆங்காங்கே முளைத்திருக்கும் தமிழ்ச்சங்கங்களை ஒன்று கூட்டி ஆண்டுதோறும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம்தான் பெட்னா, இதைப் பேரவை என்றும் கூறுகிறார்கள்.

32 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தினாலும், முதல் முறை நடத்துவதைப் போன்றே பல சொதப்பல்களுடன் நிகழ்ச்சி நடத்துவதே இவர்களின் தனிச்சிறப்பு, இந்தச்சிறப்பில் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் இந்த ஆண்டு விழாவை சிகாகோவில் நடத்தி முடித்த விழாக் குழுவிற்கு மிக்க நன்றி.

fetna chicagoஅப்படி என்னதான் சொதப்பல்கள்? என்ற கேள்விக்கு முழுமையாகப் பதில் சொன்னால் சிந்துபாத் கதைபோன்று நீண்டுகொண்டே செல்லும் என்பதால் சுருக்கமாகச் சிலவற்றை மற்றும் இங்கே குறிப்பிடுகிறேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்த நான், அரங்கில் நுழைவு சீட்டு வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது, முன்பதிவு செய்த எனக்கு நுழைவுச் சேட்டை தருவதில் எதற்கு இவ்வளவு குழப்பமென்றே தெரியவில்லை. அமெரிக்கத் தமிழர்களில் பெரும்பான்மையோர் கணினி பொறியாளர்கள் என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பே. முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழிதான் பெட்னா ௨௦௧௯

பெட்னாவின் கருப்பொருள் தான் அந்நிகழ்ச்சியின் பிள்ளையார் சுழியே, இந்த ஆண்டின் கருப்பொருள் "கீழடி நம் தாய்மடி". கீழடியை விடத் தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும் மிகப் பெரிய சிக்கலாக இருக்கும் நீட் பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் விழா நடத்தி முடித்துள்ளனர், பட்டிமன்றத்தில் ஒரு நபர் ’நீட்’ என்ற வார்த்தையைப் பேசியதைக் கூட இடை மறித்து இதெல்லாம் வேண்டாமென்று புறந்தள்ளிவிட்டார் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள். ’நீட்’டை தமிழ் நாட்டில் அனுமதித்த அமைச்சர் பாண்டியராஜன் விழாவைச் சிறப்பிக்க வந்துள்ளதால் அவர் மனம் புண்படக்கூடாதென்று பெரிய மனதோடு அவ்வாறு செய்திருக்கலாம். நமக்கெதற்கு பெரிய இடத்தின் பொல்லாப்பு. அமைச்சரும் தொழில் அதிபர்களின் படை சூழ விழாவைக் கண்டுக் களித்தார்.

தமிழ் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பெட்னா நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தமிழ் விழாவில் தொழில் முனைவோர் கலந்த கொண்டனர் என்பதற்கு மாறாக, தொழில் முனைவோர் நிகழ்ச்சியின் இடையில் தமிழ் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழா அரங்கில் ஒரு கல்லை எறிந்தால் அது தொழில் முனைவோர் மேலோ அல்லது சிறப்பு விருந்தினர் மீதோதான் படுமென்று அளவிற்கு, எங்கும் தொழில் அதிபர்களும் சிறப்பு நட்சத்திரங்களும் நீக்கமற நிறைந்திருந்தனர். வணிகமும் மொழி வளர்ச்சியும் எப்படி ஒன்று சேருமென்று கேட்டால்? வெறும் கையில் முழம் போட முடியாதென்று சொல்கிறார்கள்.

சரி முழம் போட்டுக்கொள்ளுங்கள், தமிழாவது வளர்ச்சிபெறுகிறதா என்றால் அதுவும் இல்லை. இவர்களின் தமிழ் வளர்ச்சியெல்லாம் கல்தோன்றி மண்தோன்றா, அகழ்வாராய்ச்சி, லெமூரியா போன்ற கதைக் களஞ்சியத்துடன் அவ்வப்போது ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”, ”திருவள்ளுவர், திருக்குறள்” என்ற அளவில்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பேசினால் தமிழ் எப்படி வளருமென்று கேட்டால்? அதற்குப் பதில் சொல்லாமல் நம் பண்பாடு, கலாச்சாரம் தொன்மையென்று கம்பு சுற்றுகின்றனர்.

பெட்னாவின் கலாச்சாரம் பண்பாடு என்பது, அந்த வருடம் விஜய் டிவியில் ஜொலிக்கும் சிலரை அழைத்துவந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாக மட்டுமே சுருங்கிப்போயுள்ளது. சென்ற ஆண்டே கணித்தது போல் இந்த ஆண்டு ராஜலட்சுமி, செந்தில் அவர்களை அழைத்து வந்து மக்களிசை பாட வைத்தார்கள். அதையாவது உருப்படியாகச் செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள், என்ன இசைகிறார்கள் என்று ஒன்றுமே பின்வரிசையில் இருந்தவர்களுக்குக் கேட்கவில்லை. ஒருவேளை முன்வரிசையில் இருப்பவர்கள் மட்டும் கண்டுகளித்தால் போதுமென்று நினைத்தார்களா என்றும் தெரியவில்லை. அந்த அளவிற்கு அரங்கத்தில் ஒளி, ஒலி அமைப்பு மிக மோசம்.

சிகாகோ அரங்கம் குறித்துக் குறிப்பிட்டே ஆகவேண்டும், பெட்னா போன்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளின் பாதி வெற்றி, அரங்கைத் தீர்மானிப்பதில்தான் இருக்கிறது. இதில் எப்படி கோட்டை விட்டார்களென்றே தெரியவில்லை. மிகவும் சுமாரான அரங்கம், எதோ சிறுவர் பள்ளி ஆண்டு விழாவை நடத்துவதாக எண்ணிக்கொண்டு இந்த அரங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டும் அல்லது முன்வரிசையில் அமர்ந்திருக்கும் வணிகர்களும், செல்வந்தர்களும் மட்டும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தால் போதுமென்று நினைத்திருக்க வேண்டும். பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் பணம் கட்டிதான் நுழைவு சீட்டு வாங்கி இருந்தோம், உணவிற்கும் சேர்த்தே.

இரண்டு முழு நாள் நிகழ்ச்சியில் உணவு இல்லாமல் எப்படி, வயிறு நிறைந்தால்தானே மற்ற அனைத்தும் மண்டையில் ஏறும்? ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையான உணவில்கூட இவ்வளவு அலட்சியமாக இருக்கமுடியும் என்பதற்கு பெட்னாவே உதாரணம். ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உணவைப் பரிமாற வெறும் சொற்ப நபர்களே இருந்தார்கள். உணவுக்காகப் பணம் கட்டி, கால் கடுக்கக் காத்திருந்த விரக்தியில் வெளியே சென்று பர்கர் சாப்பிட்டது தான் மிச்சம். என் பொறுமையைச் சோதிப்பதற்காக ஒரு வேளை மட்டும் எப்படியோ காத்திருந்து உணவை வாங்கி உண்டேன். இதற்கு நான் வெளியே சென்று பர்கரே சாப்பிட்டு இருக்கலாம். உணவு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறதென்று குழுவிலிருந்த நண்பரைக் கேட்டேன், கூட்டம் அதிகம் அதான் என்று இழுத்துச் சமாளித்தார், ஐந்தாயிரம் நபர்கள் வருவார்களென்று நுழைவு சீட்டு விற்பனை செய்தவர்கள் சொல்லவில்லையா அல்லது இப்ப என்ன குடியா முழுகிவிடப் போகிறதென்ற அலட்சியமா என்று தெரியவில்லை.

பின்வரிசையில் அமர்ந்து ஒன்றும் சரியாகப் பார்க்கமுடியாததால் பெரும்பான்மையான நேரம் அரங்கின் வெளியேதான் சுற்றிக்கொண்டு இருந்தேன், அவ்வப்போது உள்ளே எட்டிப் பார்த்தேன், அப்பொழுதெல்லாம் பெண்களும் குழந்தைகளும் பரதநாட்டிய உடையணிந்து ஆடிக்கொண்டிருந்தனர். தமிழர்களின் பண்பாடு என்பதே பரதநாட்டியம்தான் என்று பெட்னாவின் ஆழ்மனதில் யாரோ விதைத்துள்ளனர் . எப்பாவாவது பரதமென்றால் சரி, எப்பவுமே பரதமென்றால் எப்படிங்க பெட்னா?

பெட்னாவிற்கு தொடர்ந்து செல்லும் நண்பர் ஒருவர், இலக்கிய வினாடி வினா குறித்துச் சிலாகித்துப் பேசினார். என்னையும் அந்த நிகழ்ச்சியைத் தவறாமல் கண்டுகளிக்கச் சொன்னார். நண்பர் சொன்னார் என்பதற்காக அந்த நிகழ்ச்சியைக் காண அரங்கிற்குச் சென்றேன். சேலை, வேட்டி,பாவாடை சட்டையென்று வண்ண வண்ண ஆடைகளில் இருபக்கமும் தமிழர்கள் நிறைந்திருந்தது உள்ளபடியே காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்ததாலும், தற்கால இலக்கியம் குறித்தோ அல்லது எழுத்தாளர்கள் குறித்தோ எந்தவொரு வினாவும் இல்லை. பத்து வருடங்களாகத் தொடர்ந்து சிறப்பாக நடந்து வருவதாக அருகிலிருந்த நபர் சொன்னார். எனக்கு என்னமோ இலக்கிய வினாடி வினா என்ற பெயரில் கும்பலாகக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருப்பதுபோன்றுதான் இருந்தது. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்கள் பாசென்று விழாக் குழுவினரைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பெட்னா கலை நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இரண்டாம் நாள் இறுதியில் நடக்கும் மெல்லிசை கச்சேரி தான். இந்த ஆண்டு யுவன் சங்கர் குழுவினரை அழைத்து வந்திருந்தனர். யுவன் குழுவினர் ஆங்கிலத்தில் பேசிய காணொளியை பெட்னா விளம்பரப் படுத்தியிருந்தது மற்றும் அந்த அரங்கின் யோக்கியதை தெரிந்த காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் நேரத்தை வீணடிக்காமல் நண்பர்களுடன் ஹோட்டலிற்கு சென்றுவிட்டோம். குறைந்தது இரண்டாயிரம் பேர் அரங்கிலிருந்ததாகவும், இரண்டு மணிநேரம் நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதென்றும் நண்பர் சொன்னார். ஆக மொத்தம் 2000*2=4000 human hours பெட்னா விரயமாக்கியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் இதுபோன்று நடந்திருந்தால் எங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரியைக் கேள்வியே கேட்காமல் வேலையிலிருந்து தூக்கி இருப்பார்கள். தமிழர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பதனால் நாம் அலட்டிக்கொள்ளாமல் கடந்து சென்றுவிடுவோம்.

நான் முன்பே சொன்னதுபோல் இது சிந்துபாத் கதைபோன்று நீண்டுகொண்டே இருக்குமென்பதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். 

சரி ...பெட்னாவில் நல்லதாக எதுவுமே நடைபெறவில்லையா என்றால், நிச்சயம் நடந்தது. பழைய நண்பர்கள் பலரைச் சந்தித்தேன், சில புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அரங்கின் வெளியே வைத்திருந்த கடைகள் எங்கள் ஊர் சந்தையை நினைவூட்டியது. சில புத்தகங்களும் சில பொருட்களும் வாங்கினேன். சு வெங்கடேசன் அவர்களின் அமர்வு நிகழ்ச்சி நன்றாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பெட்னாவிற்கு சென்ற வந்த நான் இனி செல்லக்கூடாதென்ற முடிவை எடுத்துள்ளேன், இதை விட என்ன நல்லது இருந்துவிடப் போகிறது எனக்கு?

பெட்னா குழுவிற்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான், தமிழ் விழாவில் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் அதிக நேரத்தை ஒதுக்கிவிட்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்குக் குறைந்த நேரத்தை ஒதுக்குங்கள். முகநூல், வாட்சப்பை கடந்து வாசியுங்கள், தமிழ் தானே வளரும் மேலும் முன்வரிசையில் அமர்வோரும், பின் வரிசையில் அமர்வோரும் ஒன்றுதானென்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் பெட்னா கோவிலல்ல விஐபி தரிசனம் பார்க்க. 

மொத்தத்தில் ஒரு தமிழ் விழா எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதை சிகாகோ பெட்னா விழாவைப் பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் வாழ்க.

- கேசவன்

Pin It