இங்க தான் வளர்ந்தேன், இங்க தான் படித்தேன். என் பள்ளிக் காதலும் இந்த மண்ணில் தான். என் எல்லா நினைவுகளும் இந்த மண்ணில் தான். 

என் அப்பா எனக்கு மிதிவண்டி கற்றுக் கொடுத்தது இங்க தான். எனக்கு அம்மை வந்தபோது என் அருகில் என்னைப் பார்த்த என் அம்மா பிறந்த மண்ணும் இது தான்.

students against caaஎன் தாத்தா இடுப்பில் கட்டிய துண்டு தோளில் வரவே நூறாண்டுகள் ஆனதும் இந்த மண்ணில் தான்.

இந்த மண்ணில் நீ வாழ தகுதி இல்லை என்றால் எங்கே நான் போவேன்?

500 ரூபாய் நோட்டு செல்லாது என்றவுடன் வங்கியில் மாலை வரை நின்று வங்கியிலேயே உயிர் விட்ட என் தாத்தன் பிறந்ததுவும் இந்த மண்ணில் தான்.

என் குழந்தைகளிடம் என்ன காரணம் சொல்லி புரிய வைப்பேன்?

இங்கு நாங்களே பூர்வ குடிகள் என்று யாரிடம் சான்றிதழ் பெறுவேன்?

ஆதார் அட்டை ஒன்னு கொடுத்தாங்க...

ரேஷன் அட்டை ஒன்னு கொடுத்தாங்க...

முகவரி தப்புனு மறுபடியும் எடுக்கச் சொன்னாங்க...

புள்ளைய தோளில் கொஞ்ச நேரம் கையில் கொஞ்ச நேரம் என்று கால் வலிக்க வரிசையில் நின்னு மறுபடியும் எடுத்துக் கொடுத்தேனே

இப்போ மறுபடியும் குடியுரிமை சான்றிதழ் கேட்டால் எங்க நான் போவேன்?

எங்களுக்கு எது முகவரி?

தமிழ் மொழியா?

என் வீடா?

இந்த நாடா?

எனக்கு எதுவும் புரியலையே?

சுள்ளி பொறுக்கி வாழ்ந்த என் பாட்டன் இங்கு தான் வாழ்ந்தான்.

என் அப்பா அம்மா இங்க தான் வாழ்ந்தாங்க.. 

என்னையா பாவம் செய்தோம்?

மேலாடை போடக் கூடாதுனு நூல் போட்டவன் ஒருத்தன் சொன்னதால மதம் அன்று மாறினாள் எங்க வூட்டுக் கிழவி...

அல்லாஹ்வ நான் கும்புடறதுல உனக்கு என்ன கோபம்?

பொருளாதாரத்தை சரி செய்ய வக்கில்லாத நீங்க, எங்கள ஏன் வாழ வக்கிலாம செய்றீங்க?

மதம் பிடித்த நீங்கள், சாதி மதம் பிடிக்காத எங்களை ஏன் வாழ உரிமை இல்லைனு சொல்றீங்க?

எங்க போறது எனக்கது தெரியல... 

ஒரு முதல்வர் தான் முதலில் இருந்தாங்க...  

இப்போ எல்லாம் ஒண்ணுக்கு இரண்டு பேர் இருக்காங்க...

சாதிக்காகவே கட்சியை வளர்ப்பவனும், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களைக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசுகிறவனும் சேர்ந்து எங்களுக்கு எதிரா பாராளுமன்றதில் வாக்கு போட்டுட்டாங்க... 

1951 -1961இல் ஐ.நா., அகதிகளுக்காக கொண்டு வந்த இரு ஒப்பந்தத்தில் 145 நாடுகள் கையெழுத்திட்டும் ஒரே நாடு இன்று வரை கையெழுத்திடவில்லை - அது நான் வாழும் இந்தியா.

இலங்கை அகதியாய் நான் இங்கு வந்தேனே

உலக அரசியலுக்குக்காக குண்டு வைத்து அவன் கொல்லப்பட பழி வந்து எங்களைச் சேர்ந்தது. பாழாய்ப் போன நான், அங்கு பிறந்து, இந்திய நாட்டில் அகதியாய் வந்து தொலைந்ததால், மருத்துவம் படிக்க மதிப்பெண் அதிகம் இருந்தும் கூட படிக்க நாதி இல்லை எங்களுக்கு... நீட் என்ற சமூக நீதி மறுக்கப்பட்ட தேர்வினால்

என்னுடைய பிரதமர்
எங்கே படித்தார்
என்ன படித்தார்
என்று தகவல் உரிமைச் சட்டத்தில்
கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல

அவர் படித்த சான்றுதலையே தேடிக் கண்டுபிடிக்க முடியாத அரசாங்கத்தில், 

என் பாட்டன் இந்த நாட்டின் குடிமகன் என்ற ஆவணத்தை எங்கு போய் தேடுவேன்?

மாட்டுக்கறி தான் வாரம் ஒருமுறை என் செல்லக் குழந்தைக்கு நான் வாங்கித் தருவேன்.

ஆட்டுக்கறி வாங்க ஆறு மாதம் பணம் சேர்க்க என்னால் முடியாது.

மாட்டுக்கறி சாப்பிடவும் தடை விதிக்கிறார்கள் எங்களுக்கு...

கோவிலுக்குள்ளும் போக முடியாது மனு நீதி சொல்கிறது.. 

மேல ஒரு நூல் போட்டா நானும் ஒசந்தவன் ஆயிடுவேனா?
பதில் சொல்லுங்க சாமி...

எனக்குப் பொறந்தது நாலு பொண்ணுங்க
ஒன்னு காணாம போயி ரெண்டு வருஷமாச்சு

இந்தியாவில கடந்த அஞ்சு வருஷத்துல காணாம போன குழந்தைங்க மூணரை லச்சமாம்
குழந்தை கிடைச்சா மட்டும் வெச்சுட்டு நீ என்ன பண்ணப் போற என்று கேட்டார்கள், புகார் கொடுக்கப் போன என்னிடம் காவல் நண்பர்கள்.

வீடு கட்ட வந்த வடநாட்டுக்காரன் பாலியல் தொந்தரவால் செத்துப் போனது இன்னொரு மகள்.

அணுக்கதிர் வீச்சால் அவள் ஆத்தாவுடனே செத்துப் போனது இன்னொன்று.

கீழ் சாதியான எனக்கு அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் தோளில் ஒரு பிணம், கையில் ஒரு பிணம் என்ற இரண்டு மைல் நான் நடந்ததும் இந்த இந்தியாவில் தான்.

ஒரு வேளை இந்துவாக நான் மாறினாலோ
அல்லது
ஹிந்தி தான் சிறந்த மொழி
சமஸ்கிருதம் தான் தமிழ் மொழியை விட பழமையானது என்று சொன்னாலோ தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்றால்...

நானும்
என் கடைசிக் குழந்தையும்
செத்து விட்டே போகிறோம்..

என் செல்ல மாடு கொடுத்த பாலில் பாலுடாயில் கலந்து என் கடைசி மகளுக்கும் தந்த போது கண்ணீர் வந்தது...

90 வயது நல்லகண்ணுவைத் தோற்கடித்து, 70 வயது ஒரு நடிகனை தலைவன் என்று சுற்றித் திரியும் இந்த முட்டாள் கூட்டங்களுக்கு மத்தியில் வாழ முடியாமல் தற்கொலை செய்யப் போகும் என் உடலை புதையுங்கள் ஈழத்தில்..

அங்கு இருக்கிறது என் குடியுரிமை....

- சுகதேவ்

Pin It