யார் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்? 

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான களப்பணியாளர்களாக 2001-02-ஆம் கல்வியாண்டு முதல் நிர்ணயிக்கப்பட்ட திட்டக் குறிக்கோள்களுக்காகப் பணியாற்றி வருபவர்கள்தான் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்.

6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் இடைவிலகலைத் தடுத்து, பள்ளிச் சேர்க்கையில் ஆண் பெண் பாலினப் பாகுபாட்டைத் தவிர்த்து, எட்டாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக இலவசமாக தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யவந்த இந்தத் திட்டமானது ஒரு கிலோ மீட்டருக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோ மீட்டருக்குள் ஒரு உயர் தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோ மீட்டருக்குள் ஒரு மேல்நிலைப்பள்ளியை மிகக் குறிப்பாக உறுதி செய்துள்ளது.

"வீதிதோறும் இரண்டொரு பள்ளி" எனும் பாரதியின் வரிகளுக்கு ஒப்ப, ஊர்தோறும் ஒரு பள்ளி தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டிய திட்டத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள்தான் இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள். இத்திட்டமானது தற்போது ஒருங்கிணைந்த கல்வியாக (சமக்ர சிக்ஷா) நடைமுறையில் உள்ளது.

பந்தாடப்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள்:

மாநிலத்தில் வேறெந்த பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடந்திராத ஒரு விநோதமான பொதுமாறுதல் நடைமுறை ஆசிரியர் பயிற்றுநர்களின் மீது மட்டும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. 18.8.2021 அன்று பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண் 134-ஆனது ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது இத்தகைய தாக்குதலைத் தொடுத்துள்ளது.

பொதுமாறுதல் என்பதற்கு ஜீரோ கவுன்சிலிங் என்று புதிதாகப் பொருள்கொள்ளும் விதமாகத் தொடர்ச்சியாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் செயல்முறைகள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு மாவட்ட அளவில் இதுபோன்றதொரு ஜீரோ கவுன்சிலிங் ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.

அப்போதிருந்த நிர்வாகத்திற்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. முற்றிலும் புதிய நடைமுறையாக இதைத் திணித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் அவரவர் சொந்த இடங்களில் பணிபுரிய முடியாத வண்ணம் நிர்வாகத்தால் பந்தாடப்பட்டனர். இந்தப் பணிநிரவல் காரணமாக சுமார் 400 ஆசிரியர் பயிற்றுநர்கள் தென் மாவட்டங்களிலிருந்து பிய்த்தெறியப்பட்டு தொலைதூரத்தில் உள்ள வடமாவட்டங்களில் பணிபுரியும் சூழல் ஏற்பட்டது. 

பறிபோகும் பணியிடங்கள்: 

ஏற்கனவே 887 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் முந்தைய ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், எல்லோரும் மலைபோல நம்பும் இந்த அரசும் கடந்த 15.9.2021- இல் பள்ளிக்குப் பணி மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களின் 500 பணியிடங்கள் போக மீதமுள்ள 3193 பணியிடங்களுக்கு மட்டும் கடந்த 18.9.2021 அன்று சீனியாரிட்டி லிஸ்ட் விட்டிருப்பதன் மூலம் இந்த 500 பணியிடங்களும் பறிக்க முற்படுவது உறுதியாகின்றது.

மாநிலம் முழுவதும் 2010-இல் ஏறத்தாழ 6000-ஆக இருந்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள், பத்து வருடங்கள் கழித்து இன்று பாதியாகச் சுறுக்கப்பட்டுள்ளன. ஆகவே இயல்பிலேயே பணிச்சுமை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு பார்வையிடவும், தகவல் பெறவுமாக பத்து பள்ளிகள் இருந்தன.

இந்தப் பத்து வருடங்களில் (2010-2020) அரசுப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது என்பது மட்டும் அல்லாமல் தற்போது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் சேர்த்து ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநருக்கும் ஏறத்தாழ 20 முதல் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்ட பணியிடத்தின் காரணமாக அதிகரித்துள்ள பணிப் பளு: 

எமிஸ் எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் தகவல்களை தினந்தோறும் இணையவழியில் உள்ளீடு செய்வது, திருத்தியமைப்பது, கண்காணிப்பது, ஏராளமான புள்ளிவிவரங்களை ஓரு சில மணி நேரங்களில் தொகுத்து அளிப்பது, பள்ளிக்குப் பார்வை செல்வது, பயிற்சி அளிப்பது, பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் கொண்டுபோய் சேர்ப்பிப்பது என்று எத்தனையோ வேலைகள் இருப்பினும் அவற்றை 10 பள்ளிகளுக்கு செய்த போது பணி மனநிறைவுடன் இருந்தது.

ஆனால் குறைக்கப்பட்ட பணியிடத்தின் காரணமாக அதிகரித்துள்ள பணிப் பளுவினால் தினசரி பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டு கடமை முடித்தாலும், மனநிறைவடையாமல் இருப்பதுடன் ஒட்டுமொத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மன அழுத்தம் கூடியுள்ளது.

கானல்நீராகும் அரசு வேலை: 

ஒவ்வொரு கலந்தாய்வின்போதும் பணியிடங்கள் படிப்படியாக சூறையாடப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவது போன்ற ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்குப் பதிலாக ஜீரோ கவுன்சிலிங் என்ற புதிய கலந்தாய்வு முறை ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது திணிக்கப்படுகிறது. பணி நிரவல் செய்வதற்காகவே கண்டறியப்பட்ட கலந்தாய்வு முறையாக இது உள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் சூறையாடப்படுவது என்பது மறுதலையாக அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண் அள்ளிப் போடுவதே அல்லாமல் வேறில்லை. அரசு வேலை என்பது எதிர்காலத்தில் கானல்நீராகும் என்பதன் அறிகுறியாகவே இதை கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட்-2017-இல் 2.8% - ஆக இருந்த தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை வீதம் ஆகஸ்ட்-2021- இல் 6.8% -ஆக அதிகரித்திருக்கிறது என்று சிஎம்ஐஈ ஆய்வறிக்கை சொல்கிறது. நிரந்தர வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது.

பயிற்றுநர்கள் பரோட்டா சூரிகளா? 

2014-ஆம் ஆண்டு எங்கள் மீது திணித்த பணி நிரவல் பாதிப்பிலிருந்து சற்றும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பணி நிரவலைக் கொண்டுவந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பாதிக்கும் வண்ணம் மாநில அளவில் ஒரு ஜீரோ கவுன்சிலிங் நடத்த முற்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.

பணியேற்று 10 முதல் 15 வருடங்கள் கடந்த பணியாளர்களுக்கு மீண்டும் முதலிலிருந்து புதிய பணிநியமனம் தருவது போல உள்ளது. எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு முதலிலிருந்து பரோட்டா சாப்பிட்ட சூரி கதையாகிப் போனது இந்தப் பயிற்றுநர்களின் நிலை.

ஜீரோ ஜீரோதான்: 

மாநில ஜீரோ கவுன்சிலிங்குக்கு பதிலாக மாவட்ட அளவில் ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று சில சங்கங்கள் கோரிக்கை வைப்பதாக அறிகிறோம். அதுவும் பணி நிரவலே அல்லாமல் வேறில்லை. எந்த முறையிலும் எந்த அளவிலும் பணி நிரவலை இந்த அரசு செய்யக்கூடாது என்றும், பணியிடங்கள் முழுமையாகக் காட்டப்பட வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தான் சங்கங்கள் செயல்பட வேண்டும். மாறாக சங்க நிர்வாகிகளுக்கு பலனளிப்பது எது என்று பார்த்தும், பணியிடங்கள் பறிபோவதை உறுதி செய்யும் 134 அரசாணை குறித்த எந்த சிரத்தையும் இல்லாமலும் செயல்படுவது வேதனைக்குரியது. ஜீரோவை எப்படிப் பார்த்தாலும் அது ஜீரோதான்.

மாதிரிக் கள ஆய்வும் ஆசிரியர் பயிற்றுநர் மனநிலையும்: 

தற்போது உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் பெரும்பான்மையாக ஜீரோ கவுன்சிலிங் வேண்டும் என்று கேட்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் உண்மை அறிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்குள் ஒரு மாதிரிக் கள ஆய்வு (சாம்பிள் சர்வே) நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 330 ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை உள்ளீடு செய்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி, 69.1% பேர் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடத்துவது போன்ற பொது மாறுதல் கலந்தாய்வே ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடத்தப்பட வேண்டும் என்றும், 81.6% பேர் மாநில அளவில் ஜீரோ கவுன்சிலிங் நடத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த சர்வேயில் 2006 முதல் 2010 வரை உள்ள ஆண்டுகளில் பணி நியமனம் பெற்ற அனைத்து வருட மற்றும் அனைத்துப் பாடங்களைச் சேர்ந்த பல்வேறு ஆசிரியர் பயிற்றுநர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் 82.4% பேர் முன்னுரிமை எதுவும் இன்றி உள்ளனர். 

ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைப்பதா? 

மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ ஜீரோ கவுன்சிலிங் நடத்தினால் குறிப்பாக 2009-2010-களில் பணிநியமனம் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குப் பந்தாடப்பட்டு மீண்டும் பாதிக்கப்படுவார்கள். 2014-இல் பணிநிரவலால் பாதிக்கப்பட்ட 362 பயிற்றுநர்களுக்கு நிவாரணம் அளிக்க நினைக்கும் அரசின் எண்ணம் உள்ளபடியே மிகுந்த பாராட்டிற்குரியது. வரவேற்கத் தக்கது. ஆனால் இவர்களுக்கு மருந்திடும் அதே அன்புக் கைகள், அதைவிட இரட்டிப்பான எண்ணிக்கையில் புதிதாகப் பல ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இன்னல்களை உருவாக்கிட விழைவது ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது போல்தான் உள்ளது.

சாதாரணமாக ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் அதில் அதற்கு முன்பு பணி நிரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிற ஒரு நடைமுறை. ஆனால் மாநிலம் முழுக்க உள்ள ஆசிரியர் பயிற்றுநர்களை ஜீரோ கவுன்சிலிங் என்ற பெயரால் பாட வாரியான ரேங்க் அடிப்படையில் புதிதாகப் பணி நியமனம் செய்வதைப்போன்ற ஒரு கலந்தாய்வில் 362 பேருக்கு முன்னுரிமை என்பதை, அந்த 362 பேரைத் தவிர பலரும் ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக இதனால் பாதிக்கப்படப்போகும் இதர 2010 நியமன ஆசிரியர் பயிற்றுநர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

நிறைவேற்றத்தக்க எளிய கோரிக்கைகள்: 

ஆசிரியர் பயிற்றுநர்களின் கோரிக்கைகள் எளிமையாக நிறைவேற்றத் தக்கது. யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லாதது. பாதிக்கப்பட்டிருப்போருக்கு நிவாரணம் தருவது. அடிப்படையில் தொழிலாளர் நலனை விரும்பும் இந்த மாநில அரசுக்கு ஆதரவானது.

1. குறைந்தபட்சம் முந்தைய 887 பணியிடங்களுடன் சேர்த்து 1387 காலிப் பணியிடங்களை முழுமையாகக் காண்பிக்க வேண்டும். 

2. வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு போன்றே இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் அவரவர் விருப்பப்படி மாறுதல் கோரும்படியான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 

3. வருடந்தோறும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்ப வேண்டும். 

4. அதனால் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை பள்ளிகளிலிருந்து மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டும் புதிய நியமனங்களைக் கொண்டும் நிரப்பிட வேண்டும். பணியிடங்களைக் குறைக்காமல் வருடந்தோறும் இத்தகைய பணி மாறுதல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 

5. அவ்வாறான பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்குப் பின்பற்றப்படும் அதே நெறிமுறைகள் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். 

- தீவிழி

Pin It