kovai newbridgeஎதுக்கு இத்தனை வேகம். வேகமாய் போய் போய் தானே இந்த பூமி இந்த நிலைமைல இருக்கு. அப்புறம் எதுக்கு இத்தனை வேகம். என்ன சாதிக்க இத்தனை அலட்சியம்.

கோவையில் மிக உயர்ந்து நிற்கும் புது மேம்பாலத்தில்... எதிரே வரும் பெரும்பாலும் அத்தனை கார்களும் ஏறித்தான் வருகின்றன. சாலையோ சரியாக இந்த பக்கம் ஒரு வாகனம் போகலாம். அந்த பக்கம் ஒரு வாகனம் வரலாம் அளவுக்கு தான்.

இதில் எதிரே எப்போதும் ஏறி வரும் கார்கள் கிட்டத்தட்ட இடது புற தடுப்புக்கே வருவதெல்லாம் கேடு கெட்ட விதி மீறல். மேலே ஒரு வண்டி மீது இன்னொரு வண்டி மோதினாலோ... மோதுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சித்தாலோ தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே தான் விழ வேண்டி இருக்கும்.

கீழே சிவன்னேனு போய்க் கொண்டிருப்பவனும்...என்ன நடந்தது என்று உணர்வதற்குள்... கழுத்துடைந்து காலி ஆக வேண்டியது தான்.

மேம்பாலத்தை பார்த்ததுமே வேகமெடுக்க வேண்டும் என்று தோன்றி விடுமா... அது என்ன சர்க்கஸ் மரண கிணறா. பேசாமல் இனி இரு சக்கர வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லக் கூடாது என்று ஆணை பிறப்பித்து விடலாம் போல.

கார்காரர்களின் அட்டூழியம் அதி பயங்கரம். சாதாரண சாலையாக இருந்தால் கூட ஏறி வந்து விட்டதை எப்படியாவது சமாளிக்க... வண்டியை இந்த பக்கம் போட்டு அந்த பக்கம் எகிறி... உருண்டு புரண்டு கை காலை உடைத்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள போராடவாவது செய்யலாம்.

அத்தனை உயரத்தில்... ஒரு மண்ணும் வேலைக்காகாது. யோசிக்கவே விடாத அளவு தான் அந்த குறுகிய சாலை இருக்கிறது.

எதிரே வரும் ஒவ்வொரு வண்டியும் ஒரு எமனை சுமந்து கொண்டு வருவதை... அச்சத்தோடு காண்கிறேன். இப்படி ஏறி போனால்... எதிரே வருபவன் என்ன செய்வான் என்று ஏன் காரோட்டிகள் யோசிப்பதே இல்லை. மயிர் போற வேலையாவே இருக்கட்டுமே. எதிரே வருவது உயிர் என்று யோசிக்க கூடாதா.

எத்தனை விபத்துகளை சந்திக்கிறோம். அதுவும் இப்போது பூமி இருக்கும் சூழலில்... விபத்துக்கு நேரம் இருக்கிறதா என்ன.

வாய் கிழிய உரிமை பேசும்... வசதிக்கு தகுந்தாற் போல உணர்வு பேசும்... தன் பக்கம் மட்டுமே இருக்கும் பரிணாமத்தில் உண்மை பேசும் நவநாகரிக டிஜிட்டல் மனிதர்கள் சாலை விதிகளை மட்டும் கடை பிடிக்க நினைப்பதில்லை. மஞ்சள் லைட் போட்டால் தான் வேகமெடுக்கும் மனநிலை... என்ன விதமான இயங்கு நிலை.

அதுவும் வறட்டு வறட்டென்று கத்திக் கொண்டு வரும் உயரமான பைக்கில் ஓட்டுபவன் கூட சுமாராகத்தான் ஸீன் போடுகிறான். பின்னால் அத்தனை உயரத்திற்கு உட்கார்ந்திருக்கும் ஒட்டுண்ணி கோமாளிகள் தான் தலையை எதிர் காற்றில் கோதிக் கொண்டே இருக்கிறார்கள்.

காண சகியாத காட்சி அது. இதில் ஓட்டுபவன் கழுத்துக்கு மொபைலை அணை கொடுத்திருப்பான். என்னவோ சீன பூச்சிக்கு மருந்து கண்டு பிடிச்சவன் மாதிரி. தானும் செத்து சும்மா போகிறவனையும் சாகடிக்கும் யூஸ்லெஸ் எமன்கள்.

இனி மேம்பாலத்தில் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். தெரியாமல் சாவது உலக விதி. தெரிந்தே சாவது உண்மையில் என்ன விதி.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக மேம்பால தடுப்பு சுவர் ஓரத்தில்... ஒரு ஹெல்மெட் உடைந்துக் கிடந்ததைக் காண முடிந்தது. ஒரு கார் சக்கரத்தின் உடைந்த பாகத்தை காண முடிந்தது. எல்லாவற்றுக்கும் சாட்சியாக நேற்று ஒரு பூனை செத்து கிடந்தது. இன்றும் தரையோடு தரையாக ஒட்டி காய்ந்து கிடந்த அதன் மிச்சம் மீதிதான் இதை எழுத வைத்தது.

- கவிஜி

Pin It