செப்டம்பர் 11, 1957 தியாகி இம்மானுவேல் சேகரன் ஆதிக்க சாதியினரால் படுகொலையுண்ட நாள். ஆதிக்கத்திற்கு அடங்க மறுத்த முகவை தலித்துகளின் எழுச்சி முதுகுளத்தூர் கலவரத்தின் முக்கிய காரணம். அடக்கியாளப்பட்ட மக்கள் தங்கள் அடிமைத்தனத்தை உடைத்தெறிக்க முற்படும்போது அவை கலவரமாக மாறும் என்பதுதான் உலக வரலாறு. ‘அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும்’ என்ற மார்க்சிய விதிக்கு ஏற்ப தலித்துக்கள் அதிகமாக வாழ்ந்த முகவை மாவட்டத்தில் 52 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த எழுச்சியின் அதிர்வுகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

முகவை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தியாகி இம்மானுவேல் சேகரன். 1943 ஆம் ஆண்டு இந்திய இரானுவத்தில் சேர்ந்த அவர், தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, அப்பணியிலிருந்து விலகி, 1952 முதல் தமது 33 வயதில் ஆதிக்க சாதிய வெறியர்களால் கொலை செய்யப்படும் வரை முழு நேர சமூகப் போராளியாக மக்கள் பணியாற்றியுள்ளார்.

Immanuvel

1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியதும் தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக களப்பணிக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும்.

வரலாறுகளை புதிய பார்வையில் அணுகும் பொழுது அவை சொல்லும் செய்திகள் என்பது, ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை தகர்க்கக் கூடியதாக இருக்கும் என்பது தவிர்க்க இயலாதது. மாறும் என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் மாறும் என்று சொன்ன மார்க்சின் தத்துவத்தை புரிந்து கொள்வதில் மார்க்சிஸ்ட்களுக்கு ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் (தலித்துகள் - வர்க்கம் குறித்த பார்வை) சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னே ஏற்பட்டிருப்பின், இந்தியாவின் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை இன்றைய அளவிற்கு இருந்திருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

முதுகுளத்தூர் கலவரம் குறித்த அன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு இன்றும் தலித் அறிவு ஜீவிகளால் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.

சாதி இந்துக்கள் உழைக்கும் மக்களாக இருப்பினும் அவர்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை காண கம்யூனிஸ்ட்டுகள் மறுத்தனர். ‘முதுகுளத்தூர் கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்டுகளால் முன்வைக்கப்பட்டதே தவிர, அடக்கு முறை, அதற்கு எதிரான சமூக எழுச்சி போன்ற காரணங்களை அவர்கள் ஆராயவில்லை’ என்பது தலித் பகுதியினர் கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு.

வர்க்கப் போராட்டம் குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் புரிதல் அன்றைக்கு அத்தகைய நிலைப்பாடு எடுக்க வைத்ததா? அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடு என்பது முத்துராமலிங்கத் தேவர் ஆதரவு நிலைப்பாட்டில் போய்முடிந்ததா என்ற கேள்விகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கே இக்கலவரம் தூண்டப்பட்டுள்ளது என்பது போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிக்கைகள் பிரச்சனையின் முழுப்பரிமாணத்தையும் காண மறுத்ததின் வெளிப்பாடு ஆகும். இந்நிலைப்பாடு அப்பகுதி தலித் மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகளை அந்நியப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், அவர்களை காங்கிரசுக்கு மேலும் நெருக்கமாக்கியது.

பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று 1950களில் அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலான தலித்துக்கள் தங்களை இணைத்துக் கொள்வது இதனால் தடைப்பட்டது. தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடான தலித் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் என்பது வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை தலித்துக்ளில் ஒரு பகுதியினர் நம்ப மறுப்பதற்கான காரணம் இன்னும் முதுகுளத்தூர் கலவரத்தின் காயங்கள் அவர்கள் மனதில் வடுக்களாக இருப்பதால் தான்.

இருப்பினும் மார்க்சிஸ்ட்டுகளின் தற்போதைய தீவிர தலித் ஆதரவுக் கொள்கை, மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. சித்தாந்த ரீதியில் ஏற்பட்டிருக்கக்கூடிய இம்மாற்றம் நிச்சயமாக தேர்தல் அரசியலை முன்வைத்து அல்ல என்பதை மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும். இருப்பினும் வர்க்க போராட்டம் குறித்த 1990களுக்குப் பின்னான மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டினை அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பினும், பெண்கள் குறித்து பல பிற்போக்கு கருத்துக்கள் கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறும் கட்சி, தலித்துகள் குறித்தும் இத்தகைய பார்வை, கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறி, அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல” என்ற யதார்த்தத்தை தலித்துகளும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

தலித் மக்களின் விடியலுக்கு உண்மையாக பாடுபடும் தலித் தலைவர்கள் கம்யூனிஸ்ட்டுகளோடு இணைந்து இயக்கம் நடத்திட முன்வர வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்களும், தலித் இயக்கங்களும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆதிக்க சக்திகளுக்கு அடங்க மறுத்து எழுச்சியுறும் ஒரு இனம், தனக்கும் கீழாக ஒரு இனம் இருக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கைவிடுதல் என்பது தலித் மக்களின் ஒற்றுமைக்கான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

பூர்ஷ்வா கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து தலித் தலைவர்கள் சட்டமன்றங்களில், பாராளுமன்றஙகளில் உறுப்பினராக இருப்பதால் மட்டும் தலித் விடியலுக்கான முழுமையான தீர்வு கிடைக்காது என்பதனையும், ஜனநாயக மன்றங்களுக்கு வெளியேயும் தங்களது போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் போராட்ட குணங்களை வளர்த்தெடுப்பது என்பது தலித் விடுதலையின் ஒரு பகுதியே என்பதையும் தலித் மக்கள் உணர வேண்டும்.

நிறைவாக, மேல் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தியாகி. இம்மானுவேல் சேகரனை “சமூக உரிமைப் போராளி” என்று தங்களது சமீபத்திய பரிணாம வளர்ச்சியின் பார்வை மூலம் மார்க்சிஸ்ட்கள் அங்கீகரிக்க வேண்டும். அணுகுமுறைகள் மாறும்பொழுது பின்னேற்பு செய்வது அவசியம் தானே? கலிலியோவுக்கு கொடுத்த தண்டனைக்கு திருச்சபை வருந்தியது என்பது ஒரு பின்னேற்பு தானே?

- சிவசு.முகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

14 comments

14
தியாகு
சிவபாலன்

//பூர்ஷ்வா கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து தலித் தலைவர்கள் சட்டமன்றங்களில், பாராளுமன்றஙகளில் உறுப்பினராக இருப்பதால் மட்டும் தலித் விடியலுக்கான முழுமையான தீர்வு கிடைக்காது என்பதனையும், ஜனநாயக மன்றங்களுக்கு வெளியேயும் தங்களது போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் போராட்ட குணங்களை வளர்த்தெடுப்பது என்பது தலித் விடுதலையின் ஒரு பகுதியே என்பதையும் தலித் மக்கள் உணர வேண்டும்//
போலி கம்யூனிஸ்டுகளை விடுங்கள் வி.சிறுத்தைகளே ஓட்டு வங்கி அரசியலுக்கு போய் தலித்தியத்தை தலைமுழுகியதை என்ன சொல்வது
இவான்
இமானுவேல் சேகரன் படுகொலை, முதுகுளத்தூர் கலவரம், அதுக்கு காரணமான முத்துராமலிங்க தேவர் - எல்லாவற்றையும் பற்றி தமிழ் தேசியர்கள் நிலைபாடு என்ன? என்றும் கேட்க்க வேண்டும்.
==========

வேறு கட்டுரையில் வந்த பின்னூட்டம்:

//////மிகப் பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக தன் வாழ்ந்த காலம் முழுவதையும் அர்பணித்தது மட்டும் அல்லாமல் ; தன் சொத்துக்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு மறைந்த முத்துராமலிங்கத் தேவர், உங்களை பொருத்தமட்டும் சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டவர்.
.....
.....
.....
.....
அவர் வழியில் வந்த நாங்கள் ஈழ மக்களுக்காக போராடவில்லையா..? இல்லை அதரவுதான் தெரிவிக்கவில்லையா..?

கொஞ்சம் யோசியுங்களடா.. முட்டாள்களா..../////////
==========

இவர்களையும் உள்ளபடியே (சுயசாதி அபிமானத்தை/சாதி வெறியை அம்பலப்படுத்தாமல், தகர்த்தெறியாமல்) அப்படியே ஏற்றுகொள்வது தான் தமிழ்தேசியமாம்!

//////பூர்ஷ்வா கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து தலித் தலைவர்கள் சட்டமன்றங்களில், பாராளுமன்றஙகளில் உறுப்பினராக இருப்பதால் மட்டும் தலித் விடியலுக்கான முழுமையான தீர்வு கிடைக்காது என்பதனையும்,/////////

ஆதிக்க சாதியினருடனும், சுயசாதி அபிமானமுடையவருடனும், ஒடுக்கும் தமிழ் முதலாளியுடனும் கூட்டணி சேர்ந்து பிற தேசிய ஒடுக்கப்படும் வர்க்கத்துடனும், தொழிலாளர் வர்க்கத்துடனும், நட்பு சக்திகளுடனும் பகைமையை வளர்த்துக்கொண்டு தமிழ் தேசியம் படைப்போ....................
யப்பா தலை சுற்றுகிறது!
s suresh
mr.thiagu, iin this article mr. sivasumukilan has done the constructive criticism about the stand taken by the communists in 1957 and also he appreciates their current strategies about dalit issues.He also gives some suggestions to the dalit leaders. these things are should be approached in a positive way.
ஊர்வைத் தமிழன்
இவான் அவர்களே ,
நீங்கள் உ.முத்துராமலிங்கம் அவர்களின் உண்மையான வரலாரை நீங்கள் அறிவீரா? முத்துராமலிங்கம் அவர்களுக்குச் சொந்தமானது 321/2 கிராமமாகும். இந்த நிலங்கள் முத்துராமலிங்க சேதுபதியால், இலவசமாக உ.முத்துராமலிங்கத்தின் முன்னோரான ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டது.பின்னாளில் அது உ.முத்துராமலிங்கம் அவர்களிடம் வந்தது. தான் இறப்பதக்கு(1962) முன்னாள் 1960 ல் 17 பாகங்களாக பிரித்தார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்கொண்டு மீதியை 16 பேருக்கு பிரித்து கொடுத்தார். அதில் 14 பேர் கள்ளர்கள், இருவர் ஒடுக்கப்பட்ட சாதியை சார்தவர்கள். அந்த இருவரும் உ.முத்துராமலிங்கத்திற்கு கைக்கூலியாக செயல்பட்டவர்கள். பின்னர் அவரின் இறப்புக்கு பின் உ.முத்துராமலிங்கத்தின் அறக்கட்டளைக்கு அந்த இருவரிடம் இருந்து அவரின் உறவினர்களால் அந்நிலங்கள் பறிக்கப்பட்டன. வேண்டுமானால் நீங்கள் அது பற்றி விசாரித்துப்பாருங்கள் உண்மை தெரியும்.இனிமேல் எவனாவது , உ.முத்துராமலிங்கம் தாழ்த்தப்பட்டோர்க்கு நிலங்களை பிரித்துக்கொடுத்தார் என்று பொய் பிரச்சாரம் செய்தால் இருக்கு கதை!

திரு முகிலன் அவர்களே,

நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். மருத நிலத்தின் மக்கள். குடும்பர், மள்ளர் என்று சங்க காலத்திலும் இலக்கியத்திலும் அழைக்கப்பட்டவர்கள் .சேர சோழ பாண்டிய பேரரசுகளை தோற்றுவித்தவர்கள் . எங்களைப்பற்றிய உண்மை வரலாறுகளை எழுதாமல் இருந்தாலும், எங்களை தலித் என்று சொல்லி முடக்காதீர்கள். இம்மண்ணில் பிழைக்க வந்தவனுக்கும்
திருடி பிழைப்பவனுக்கும் உள்ள உரிமை கூட இம்மண்ணில் மைந்தர்களுக்கு இல்லாமல் போனது எப்படி?
- சேதுபதி
சிவசு.முகிலன் அவர்களே....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, "பாசிடிவ் அப்ரோச்" என்ற நிலையில் நின்று அணுகியுள்ளீர்கள். அதற்காக முதலில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

சர்வதேசியம் பேசும் - வர்க்கப் பார்வை கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு, சாதி, இனம், மொழி போன்ற பிரச்சனைகளை கைக்கொள்வதில் சிக்கல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது இந்தியாவில் கட்சி துவக்கப்பட்ட 1920 காலத்தில் இருந்து நீடிக்கிறது. இன்றும்கூட பல்வேறு சமயங்களில் அவை முன்னுக்கு வரத்தான் செய்கின்றன.

சாதி என்பது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய மிகமிக முக்கியச் சிக்கல்தான் என்பதில் ஆரம்ப காலம் தொட்டே கம்யூனிஸ்டுகளுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சிந்தாந்தம்தான் கம்யூனிஸ்டுகளுடையது. எனவே ஒரு ஒடுக்குமுறையை எதிர்ப்பது, இன்னொரு விதமான ஒடுக்குமுறை ஆதரிப்பது என்பதெல்லாம் சாத்தியமே கிடையாது.

வர்க்கப் போராட்டமே சாதியையும் ஒழித்துக் கட்டி விடும்; சாதிக்கு எதிரான தனித்த போராட்டங்கள் அவசியமில்லை என்று ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்டுகள் கருதினார்கள். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை வர்க்கம்தான் சாதியாக இருக்கிறது... என்று தலித்திய சிந்தனையாளர்கள் குறிப்பிட்டார்கள். டாக்டர் அம்பேத்கரோடு, கம்யூனிஸ்டுகள் முரண்பட்ட இடம்கூட இதுதான்.

இன்றைய சூழலில், வர்க்கப் போராட்டத்தையும்- சாதிய கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர நடத்துவதே சரியானது என்ற முடிவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்திருக்கிறது.

எனினும், தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலைச் சம்பவம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் பார்வை குறித்து சிவசு.முகிலன் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவையே... அதுதொடர்பான மறு ஆய்வு தேவை என்பதுதான் என் போன்றோரின் கருத்தும்.

மற்றபடி விடுதலைப் போராட்ட காலத்திலும், கைரேகை சட்ட ஒழிப்புக்கான போராட்டத்திலும், மதுரை கோட்ஸ் தொழிலாளர் போராட்டங்களிலும், அதுபோக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டங்களிலும் முத்துராமலிங்கத் தேவரோடு கம்யூனிஸ்டுகள் இணைந்து நின்றார்கள் என்பது உண்மைதான்.

எனினும், தேவரின் சாதிவெறி நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகள் துணை நின்றார்கள் என்று கூற முடியாது. தோழர் இமானுவேல் சேகரனாரின் படுகொலைச் சம்பவத்தைப் பொறுத்தவரை, சேகரனாரின் படுகொலையைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆதாயம் பெற முயல்கிறது என்றுதான் கம்யூனிஸ்டுகள் கூறினார்கள்.

கம்யூனிஸ்டுகள் கூறியபடி, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை, இராமநாதபுரம் பகுதியில் பெற்றது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

விமர்சனத்திற்கு உரியவையோ, அற்றவையோ இவையெல்லாம் கடந்த காலத்திய சம்பவங்கள். அதுவும் அப்போது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாத காலம் (அதற்காக மறு ஆய்வு தேவை இல்லை என்று கூறவரவில்லை).

நடப்பில் கம்யூனிஸ்டுகளின் நிலை என்ன?

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று "சிண்டுமுடி" கலைஞர் மதுரையில் கூறியபோது, "அந்த முடிவை மறுபரிலீனை செய்ய வேண்டும்" என்று கூறிய ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.

ஆனால், அதே காலகட்டத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவுநாளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நெல்லை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதையும் இங்கு குறிப்பிட வேண்டியது இருக்கிறது.
suresh s
com.sethupathi, yourcomment is wonderful .
கவுதம சக்திவேல்
தென்மாவட்ட தலித் மக்களின் போராட்ட வரலாறு தலித் அரசியலாளர்களாலும் எழுத்தாளர்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவருகிறது என்றே கூறலாம். தலித் அரசியலின் தொடக்கமாக அயோத்திதாசரையே தலித் வரலாற்று ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டில் பரமக்குடியில் நடந்த தென்மாவட்ட தலித்துகளின் மாநாடுதான் எழுதப்பட்ட வரலாற்றில் முதல் மாநாடாகும். அது மட்டுமல்லாது அயோத்திதாசரின் அரசியல் பயணத்திற்கு முன்பாகவே பல மாநாடுகள் , போராட்டங்கள் தென்மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன. அதுபோலவே அம்பேத்கரின் சாதியொழிப்பு வரையறைப்படி அகமணமுறைக்கு எதிராக நானூறு ஆண்டுகளுக்கு முனபாகவே கிளர்ந்தெழுந்த மதுரைவீரன் பற்றிய சொல்லாடல்களும் தலித் அரசியல் வரலாற்றில் மறுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுவுடைமையாளர்களும் சாதியொழிப்புப் போராளிகளும் மதுரை வீரன் என்ற சாதியொழிப்பு பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்தி போராடாதவரை சாதியொழிப்பு சாத்தியமில்லை.
மதுரை வீரன் , இமானுவேல் சேகரன் போன்ற சாதியொழிப்புப் போராளிகளை பொதுவுடமையாளர்கள் சாதியொழிப்புப்போரின் குறியீடுகளாக ஏந்தவேண்டும். இதுவே நம் எதிர்பார்ப்பு.
suresh s
Mr.gowtham. vanakkam. In south districts especially in ramnad and madurai Dalit literaturist are very rare .This is also one of the reason for your opinion.How it will be corrected.
S.Kannan
Sivasu mugilan's comment on the particular issue of Imanuel Sekaran is good. Ofcourse Communist party of india (marxisit) have many self critical approch in various issues. CpI(M) always says that Caste and Class are interlinked. EMS, BTR, and Sitram Yetury are the main stream leaders of the party they had written in such away. Here in tamilnadu except communist party no one including dalit parties can claim for the struggle in support of oppressed. Even some so called ultra left crirtisised cpi(m), with out have knowledge on the history of communist movement. During Immanuel Sekran's murder or before 62, it was un divided communist party. Split took place on the understanding of indian bourgeosis. Naxels also went away from cpi(m) becaue of the understanding on class and time of revolution. It is unavoidable in communist movement but at the same time communist and democrats must be united for the rights of dalits. That is the comment of Sivasumugilan. It is good.
rajarajan
தலித்துக்களை பற்றி எழுதுபவர்கள் தலித் என்றால் யார் என்பதை பற்றிய வரையறையை தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது///// இந்தியா உருவாகும் வரை சமூக நிலையில் திருட்டுக் கூட்டமாகவும், காலனிய காலத்தின் குற்ற பரம்பரையாகவும், சுதந்திர(?) இந்தியாவின், தமிழகத்தின்(சமூக அரசியல்) பரிணாம தோற்றத்தில் கள்ளச்சாராயம்- சேப்படி, வழிப்பறி கொள்ளை- ஆள் கடத்தல்- வீட்டை காலி செய்தல்- மீட்டர் வட்டி- கூலிக்கு கொலை செய்தல்- சிறை செல்தல்- அரசியல் கொலைகள்- சிறை பறவை- செயலாளர்கள்(கி.செ கள்., மா.செ கள் ) தமிழக சாதிக்கட்சிகளில் (திராவிடக்கட்சிகளில்,கம்யூனிச கட்சிகளில், பார்வர்ட் பிளாக் கட்சியில், இந்திய பேராய கட்சியில்), ஒப்பந்தக்காரர்கள் ( பல்வேறு அரசு பணிகள்)என உயர்ந்து அவற்றிலும் கொள்ளைகள் பல அடித்து என பரிமாணங்கள் பல அடைந்து இன்று பண்பாடு ரீதியான ஆதிக்கத்தை கட்டமைக்க நினைக்கும் கூட்டத்துக்கும் தலித் எழுத்து வியாபாரிகளுக்கும் சொல்லிகொள்வது என்னவென்றால் தேவேந்திரர்கள் என்போர் தேவேந்திரர்கள். யார் தாழ்த்தப்பட்ட மக்கள் ?///// தன் சொத்துக்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு //// உ.முத்துராமலிங்கம் தான் இறப்பதக்கு(1962) முன்னாள் 1960 ல் 17 பாகங்களாக பிரித்தார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்கொண்டு மீதியை 16 பேருக்கு பிரித்து கொடுத்தார். அதில் 14 பேர் கள்ளர்கள். இந்த கள்ளர்களே தாழ்த்தப்பட்ட மக்கள். எனவே மேலுள்ள பரிமாணங்கள் பலஅடைந்தவர்களை தலித் வியாபாரிகள் தலித் என பாராட்டலாம். நாட்டுக்கு இன்று வரை சோறுபோடும் தேவேந்திரர்களை அல்ல.
thennarasu
Thevar helped for the daliths to enter into them,madurai meenakshi temple. But the dalith people have been forgot. because those people who identified themself as a dalith leaders were hided of Thevar's service to the dalith people and his sacrifices for the independence of India
balamurugan,
thalthappatta makkalin pattalan pallar padyi makkal thanmanathe thallivan
Balamurugan
Indiranagar
Ramanathapuram
thondaiman
To avoid conversion of Devendrar caste people to christianity, they spread fallacious things like chola, chera and pandiyan...hearing this anybody tend to lough by their *** *****.. there is no doubt about that devebdar are eena jaathi...however iam totally against caste oppression...
vasudevan.Bsc
எப்படி இருந்தாலும் இனியாவது தமில் இனத்தில் சம தர்ம சமுதா யம் மலரட்டும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.