கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

medical 2622020 - 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை 99,300 கோடி. சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 69,000 கோடி. பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் 4 இலட்சத்து 71ஆயிரத்து 378 கோடி ரூபாய். நாட்டின் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 7 மடங்கு அதிகம்.

அதிலும் குறிப்பாக ஊழல் பெருமளவில் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்த ரபேல் போர் விமானங்களுக்கு மட்டும் 59,000 கோடி மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ரபேல் விமானத்தின் விலை மட்டும் 670 கோடி கொடுத்து பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்திய அரசாங்கம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1947 - ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு மொழி பேசும் கலாச்சாரங்களைக் கொண்ட, மனிதர்கள் இறந்தபின்பு செய்யும் சடங்கு சம்பிரதாயங்களில் கூட தெருவுக்குத் தெரு மாறுபடும் பழக்கவழக்கங்களைக் கொண்ட பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் அன்று இருந்த முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் பங்கு பெற்றிருந்த பெரிய அரசியல் கட்சியான காங்கிரசிடம் தங்களது கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை ஒப்படைத்து சென்றனர் இங்கிலாந்து பெருமுதலாளிகள்.

அந்த ஆகஸ்ட் 15 ஆம் நாளை நாம் இந்திய ஒன்றியத்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் எது சுதந்திரம்? யாருக்கான சுதந்திரம்? 70 ஆண்டுகளாக என்ன மாதிரியான சுதந்திரத்தை இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்கள் அனுபவித்து என்பது கேள்விக்குறிய ஒன்று. ஆனால் எந்த தொலைக்காட்சியும் மக்களின் நிலை குறித்து விவாதிக்க தயாரில்லை.

இந்த 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் யார் இந்த குடியரசின் தலைவர்? யார் பிரதமர்? யார் முதலமைச்சர்? என்று நிறைய பொது அறிவு கேள்விகளுக்கு போட்டித்தேர்வுகளில் வங்கி கடன் வாங்கி கல்வி கற்கும் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் பல காலமாக பதிலளித்து வருகின்றனர்.

சரி, 70 ஆண்டுகளாக இந்திய மக்களின் நிலை என்ன? நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகள், மகன், நண்பர்கள் மற்றும் மாதக்கூலி, தினக்கூலி, ஒப்பந்தக்கூலி தொழிலாளர்களின் நிலை என்ன? என்ன படித்தார்கள்? என்ன நோய்க்கு மருத்துவம் பார்த்தார்கள்?

எவ்வளவு செலவு செய்தார்கள்? அவர்களின் வருமான நிலை என்ன? அவர்களுக்கு சொந்தமாக வீடு, நிலம் இருக்கிறதா? வேலை இருக்கிறதா? எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார்கள்? இந்திய ஒன்றியத்தை ஆளும், ஆண்ட கட்சிகள் என்ன செய்தன? எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிதான் என்ன?

இருக்க வீடு, உடுக்க உடை, உண்ண உணவு, சமுதாயத்தில் கௌரவமாக வாழ வேலைவாய்ப்பு எல்லாம் இந்திய ஒன்றியத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் கிடைத்ததா? என் இந்திய 120 கோடி உழைக்கும் மக்களின் உழைப்பில் பெற்ற செல்வத்தை வைத்து ஆட்சி நடத்துபவர்கள், எல்லா வரியும் செலுத்தும் இந்த மக்களுக்கு என்ன நலன் செய்தார்கள்?

இப்படி பல கேள்விகள் போட்டித் தேர்வுகளின் வினாக்களில் கேட்கப்படாமலே இருப்பதால் இந்த கேள்விகளுக்கு பதிலும் கிட்டவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

நாம் யாரைப்பற்றி சிந்திக்க வேண்டும், நம்மைப்பற்றியா? நம்மை ஆள்வோரைப் பற்றியா? தேர்தலை வாக்குறுதிகளைப் பற்றியா? தேசபக்தி பற்றியா? நம் வாழ்நிலை மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் வாழ்நிலைப் பற்றியா? இராமர் கோவில் கட்ட நிதி தாருங்கள் என்ற விளம்பரம் பற்றியா? சொந்த வீடு கூட இல்லாத நமது வீட்டு வாடகை பற்றியா? ரபேல் விமானத்தின் விலையைப் பற்றியா? இந்த மாத கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்பது பற்றியா?

சீனாவைப் பற்றியா? சீனா இந்தியாவுக்கு மருந்து தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை குறைந்த விலையில் சப்ளை செய்வதைப் பற்றியா? அந்த மூலப் பொருட்களை இந்திய ஒன்றிய அரசு பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வழங்கி அதிக லாபம் பெற வழிவகை செய்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை நடத்துவோர் பற்றியா? பாகிஸ்தானில் நடக்கும் குண்டிவெடிப்பை பற்றியா? பாகிஸ்தான் நமக்கு சப்ளை செய்யும் சிமெண்ட் மூட்டைகளைப்பற்றியா? தூத்துக்குடியில் 13 உயிர்களை நமது அரசாங்கமே காவல்துறை மூலம் சுட்டுக்கொன்றதே அதைப்பற்றியா? எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்...?

இலவசக்கல்வி பற்றியா? அனைவருக்கும் இலவச மருத்துவம் பற்றியா? இலவசம் என்று சொல்வதை விட அடிப்படைத்தேவை என்பதுதானே உண்மை. ஆனால் எல்லாமே சந்தைப்பொருளாக மாறிவிட்ட இந்திய ஒன்றியத்தில் இலவசம் என்று கூறினால் தவறில்லை.

ஆம் கல்வியும், மருத்துவமும் குடிக்கும் தண்ணீரைப்போன்று நம் அனைவரது குடும்பத்தின் அடிப்படைத்தேவைகள் தானே?

நம் நாட்டு பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகியோர் நாம் கட்டும் வீட்டுவரி, நிலவரி, தண்ணீர்வரி, தொழில்வரி, வருமான வரி, சேவை வரி, ஜி.எஸ். டி என அனைத்து வரிகளின் வாயிலாக மக்களிடமிருந்து பிடுங்கும் பணத்தை வைத்துக் கொண்டு, எந்த வேலையும் செய்யாமல் இலவசமாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மருத்துவம் பார்த்துக்கொள்கிறார்கள். அமைச்சர் பெருமக்கள் தன் பிள்ளைகளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்கிறார்கள்.

பிரதமருக்கு கிடைக்கும் அத்தனை சலுகையும், நமக்கும் நம் ஊர்க்காரர்களுக்கும் கிடைத்தால்தானே அதற்குப்பெயர் மக்களாட்சி. அப்படியானால் இந்தியா மக்களாட்சி நாடு என்பது உண்மைதானா? இல்லை பொய்யா? இந்தியா குடிமக்களுக்கான நாடா?

ஆயுதங்களும் போர் விமானங்களும் வாங்குவதற்கு ஒதுக்கப்படும் நிதியில் கால்வாசி கூட மக்களாகிய நமக்கான படிப்புக்கும், நம் குடும்பத்தாரின் மருத்துவச் செலவையும் குறைக்கும் வண்ணம் நிதி ஒதுக்கி அரசு நிறுவனங்களை, மருத்துவமனைகளையே பராமரிப்பதில்லையே ஏன்?

இன்று நாம் எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் ? எதைப்பற்றி பேச வேண்டும் என யார் தீர்மானிக்கிறார்கள்?

இது கொரோனா தொற்று நோய்க்காலம். இப்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்தைப்பற்றித்தான் பேச வேண்டும். ரெம்டெசிவர், ஆக்சிஜன், தடுப்பூசி என்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள். மத்திய அரசாங்கமோ மருந்து தயார் செய்யும் தனியார் கம்பெனிகளுக்கு புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது.

சரி, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த போலி தேசபக்தர்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓட்டு போட்ட நாம் ஏன் தினமும் வயிற்று பிழைப்புக்காக இந்த பாடு, நொந்த பாடு படுகிறோம் ?

காவல்துறையும், இராணுவமும் இந்திய ஒன்றியத்தின் மக்களான நமக்காக உருவாக்கப்பட்டவைதானா? ஆம் என்றால் நாம் இந்த சமூகத்தில் பாதுகாப்பற்ற உணர்வோடு வாழ்ந்து வருகின்றோம். நம் மனதில் எழும் கேள்விகள் மற்றும் கோடிட்ட இடங்களை யார் தான் நிரப்புவது ?

அரசு பொதுத்துறை நிறுவனங்களை தரம் உயர்த்தாமல் எந்த தரத்தைப்பற்றி மத்தியில் ஆளும் போலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வளர்ச்சி என்கிறார்களே? அது யாருக்கான வளர்ச்சியாக இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டுமே நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. சுகாதாரமான வாழ்வுக்கு இந்திய மக்கள் தகுதியானவர்கள் இல்லையா? அனைத்து இந்திய மாணவர்களும் உயர்கல்வி பெற தகுதியானவர்கள் இல்லையா?

சரி, தகுதி என்றால் என்ன? அரசியல் தேர்தலில் வேட்பாளர்களின் தகுதிதான் என்ன?

குறைந்த கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கு உயர்கல்வி படித்தவர்களை நியமனம் செய்யக்கூடாது என்று சொல்கிறதே, ‘பெக்” அலோவன்ஸ் வாங்கும் நீதிபதிகளைக்கொண்ட நம் மாண்பமை நீதிமன்றம்.

இந்திய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைதான் என்ன?

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று சொல்லலாமா? இந்தியா என்ன? அமெரிக்கா என்ன? வாடகை வீட்டில் வாழ்ந்து வருடம் பூரா வாங்கிய கடனை கட்டி, வெந்ததை தின்று நொந்து சாகிறோம் என்கிறீர்களா?

ஓர் அரசு தனது மக்களுக்கு கொடுக்கும் மருத்துவம் என்பது சலுகை அல்ல. அது மக்களின் அடிப்படை உரிமை.

ஏகாதிபத்திய சுரண்டல்காரனுக்கு பதில் அளிப்பதைக்காட்டிலும் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் தேவைகளுக்கு ஏற்றார்போல புரட்சிகரமாக கல்வி இருக்க வேண்டும என்றார் மகாத்மா ‘காந்தி”.

1998 ஆம் ஆண்டில் உலகவர்த்தகக்கழகத்தில் கல்வியை ஒரு சந்தைப்பொருளாக மாற்ற வேண்டும் என்ற கருத்து முதன்முதலில் பேசப்பட்டது. கல்வி சந்தையை உலக வர்த்தக கழகத்தினர் ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.

1) ஆரம்பகல்வி

2) மேல்நிலைக்கல்வி

3) உயர்நிலைக்கல்வி

4) வயது வந்தோர் கல்வி - முறைசாரா கல்விமுறை அதாவது பொது கல்வி, ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி மூலம் பரப்புரை செய்யப்படுவது.

5) மற்ற கல்வி சேவைகள் - முதியோருக்கான முறைசார் பள்ளிமுறை, பள்ளிக்கூட கட்டிடங்கள், ஆசிரியர் பயிற்சி கூடங்கள், ஆலோசனை மையங்கள் போன்றவை.

இதன் அடிப்படையில் உலக வங்கியானது 2002 - ல் உலகம் முழுவதும் கல்வியானது 2 டிரில்லியன்கள் மதிப்புள்ள சந்தை என அறிவித்தது.

இந்தியாவில் மத்திய பட்ஜெட்டின் மொத்த நிதியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே இன்றுவரை கல்விக்கான நிதியாக ஒதுக்கப்படுகிறது. மற்ற பணமெல்லாம் கார்ப்பரேட் நிறுவன கைக்கூலிகளால் கடன் தள்ளுபடி, வரிக்குறைப்பு என்ற பெயரில் பதுக்கப்படுகிறது. குறிப்பாக வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த 2000 ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கு மத்திய அரசு செலவு செய்யும் தொகையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த உலக வர்த்தக கழகக் கூட்டத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகள் உணவு தானியங்களை சேமிக்க கூடாது என வளர்ந்த நாடுகள் கட்டளையிட்டது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் மக்கள் அத்தியாவசிய உணவுத்தேவைக்காக கூட கையேந்தும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளின் எண்ணமாக உள்ளது.

உலக வங்கியும், உலக வர்த்தக கழகமும் திரும்ப திரும்ப பேசுவது ‘ கல்வி என்பது சந்தை என்ற கருத்தையே”. அடிப்படையில் கல்வி ஒரு சந்தையா? என்றால் இல்லை. கல்வி என்பது நமது அடிப்படை உரிமை.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு பாகுபாடுமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதே நியாயமானது. ஆனால் இன்று இந்தியாவை ஆளும் ஜார் மன்னரின் வாரிசுகளான போலி தேசபக்தர்களால் கல்வி ஒரு சந்தைப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கயவர்களின் தவறான சட்டதிட்டங்களால் பெரும்பான்மையரான உழைக்கும் மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கல்வி உரிமைச்சட்டம் என்னும் பெயரில் 25 சதவீதம் இடங்களை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க ஒதுக்க வேண்டும் என கூறும் போலிகளின் அரசாங்கம், மீதமுள்ள 75 சதவீதம் இடங்களை காசுக்காக விற்பனை செய்யும் அசிங்கத்திற்கு துணை போவது என்ன மாதிரியான தேசபக்தியோ? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து நிற்கிறது.

வங்கியில் கடன்பெற்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் உரிய வேலைவாய்ப்பின்றி வாங்கிய வங்கி கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மோசமான நிலையை சர்வ வல்லமை பொருந்திய அனைத்து அதிகாரங்களையும் தன் கைகளில் வைத்திருக்கும் இந்திய ஒன்றிய அரசு முன்னின்று வேடிக்கை பார்க்கிறது.

படிக்க வரும் மாணவனை கடன்காரனாக மாற்றுவதை என்ன மாதிரியான தேசபக்தி என்பது. பெறும் கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகளில் கடனாகப்பெற்ற பல இலட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மத்திய அரசாங்கம் தன் சொந்த மக்களின் பிள்ளைகள் படிப்பதற்காக பெற்ற சில இலட்சம் ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்யாமல் கண்ணிருந்தும் குருடாய் ஆட்சி நடத்துகிறது.

இந்திய மாணவர்களை கடனின்றி படிக்கவைக்க லாயக்கற்ற அரசாங்கமாக ஆளும் முதலாளிகளின் மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது.

மேலும், சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால், 1995 - ஆண்டிலேயே சுகாதாரத்தை தனியாருக்கு அளிக்க உலக வர்த்தக கழகத்தின் சேவை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டுவிட்டது.

இந்தியா தனது மொத்த செலவினத்தில் வெறும் 1.1 சதவீதம் நிதியை மட்டுமே இந்திய மக்களுக்கான மருத்துவத்திற்கு ஒதுக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கல்வியையும் மருத்துவத்தையும் சந்தைப்பொருளாக்கி விற்பனை செய்துகொண்டிருக்கும் ஆளும் மத்திய அரசாங்கத்தை நடத்துவோர் இந்திய மக்களின் துரோகிகள் என்றால் அது மிகையல்ல. இன்றைய கொரோனா தொற்றுநோய்க்காலம் அதனை உறுதிசெய்கிறது.

- சுடலைமாடன்