துயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் தமது பிழைப்புவாத அரசியலுக்கு கட்சிகள் தீக்குளிப்பை ஆயுதமாகப் பாவிக்கும் கொடுமையான மனப்பாங்குக்கு எதிராக தமிழக மக்கள் நின்றாகவேண்டும். கட்சிகளுக்காகவும் தலைவர்களுக்காகவும் தீக்குளிக்குமளவிற்கு மனித உயிர் மலிவாகிப்போகுமெனில், எதிரி எம் மக்களைக் கொல்வதில் மேலோங்கியிருக்கும் மனப்பான்மையை நாம் கேள்விகேட்க அருகதையற்றவர்களாகிவிடுவோம். தமிழக அரசியல்வாதிகள் தொடக்கம் இப்போ புலிகள்வரை இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு நீண்டிருக்கிறது. இதை அவர்கள் உதாசீனம் செய்வது பொறுப்பற்ற செயல்.
தமிழகத்தில் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தின்போது ஒரு (இலங்கைத்) தாய் தன் இருகரங்களையும் கூப்பி தயவுசெய்து இளைஞர்கள் தமது உயிரை இவ்வாறு அழித்துக்கொள்ள வேண்டாம் என்று கதறியழுதபடி கூறினாள். அவள் தாய். உயிரின் பெறுமதி அறிந்தவள். ஆனால் புலிகளும் தமிழின உணர்வாளர்களும் இந்தத் தீக்குளிப்பை கொண்டாடினார்கள் என்று ஒருவர் சொன்னால் அவர்கள் ஆத்திரப்பட எதுவுமில்லை. வைகோவும் நெடுமாறனும் தீக்குளிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதுபோல் தெரிந்தாலும் அவர்களின் உரைகள் பூராவும் தீக்குளிப்பை புனிதமாக்கிக்கொண்டுதான் இருந்தது. திருமாவளவன் இன்னுமின்னும் ஆயிரம் முத்துக்குமாரன்கள் தோன்றுவார்கள் என்று ஒலித்த குரலில் குரூரம்தான் தெரிகிறது. இந்தக் குரல் எதைக் கோருகிறது என்ற கேள்விக்குப் பதில் தற்கொலைகளையன்றி வேறென்ன?.
இங்கு முருகதாஸ் ஒரு நீண்ட கடிதத்தை சர்வதேச சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். யாருக்கு? ருவாண்டாவில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது (6 மாதங்களில் 8 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது) ஏற்கனவே அங்கு நிலைகொண்டிருந்த ஐநாவின் சமாதானப்படை முகாமுக்குள் முடங்கிக்கொண்டிருந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் கோபி அனான் இதை சுயவிமர்சனம் செய்து முட்டைக் கண்ணீர் வடித்தார். இன்று கண் முன்னே விரிந்து கிடக்கும் உதாரணங்கள் காசாவும் ஈராக்கும். கொலைகளையும் இனப்படுகொலைகளையும் குறைந்தபட்சம் சகித்துப் பழகிக் கொண்டவர்களிடம் இந்த தற்கொலைகள் ஒரு அசைவையும் எற்படுத்தாது. அவர்களே உதிர்க்கும் மனிதாபிமானம் ஜனநாயகம் நீதி இறையாண்மை... என இன்னோரன்ன மேக்கப்புகளைக் காட்டித்தான் நாம் வழிமறிக்கலாமேயொழிய அவற்றை பக்திக்கு உரியதாக்கிக் கொண்டல்ல. அவர்களிடம் அந்த நேர்மை இல்லாதபோது... என்று சொல்லவருகிறேன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1976 இல் சிவகுமாரன் அறிமுகப்படுத்திய சயனைட் தற்கொலை புலிகளுக்குள் கடத்தப்பட்டு இன்றுவரை பல போராளிகளின் உயிரை கொண்டுபோய்விட்டது. 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கை வாழ்ந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்வு அவன் உருவாக்கிவைத்த வரலாறு சயனைட் குப்பிகளுக்குள் அடைக்கமுடியாதது. அவன் ஒரு நடமாடும் உதாரணம். தற்கொலைகளை சகித்துக் கொள்ளவும் நியாயம் கற்பிக்கவும் படிப்படியாக எம்முள் புகுந்த அழிப்புக் கோட்பாட்டின் ஆயுதம் சயனைட். சுயமரணத்தைக் கொண்டாடுகிற அதைப் புனிதப்படுத்துகிற மனநிலைகளை போராட்டத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழ்த்துகிறபோது,அதற்கான வார்த்தைகளும் மொழிக்குள் உருவாகிவிடுகின்றன. புனித உடல், புனிதப் புதைகுழி, புனிதப்பேழை, விதைப்பு என்றெல்லாம் அவை பொரித்துவிடுகின்றன.
இளமையில் மரணம் கொடுமையானது என்பர். மனித விழுமியங்களை அது உலுக்கிவிடுகிறது.
முருகதாஸின் கொலையும் எம்மை உலுக்கிவிடுகிறது. அதன் ஆற்றாமையில் வாடும் அவனது குடும்பத்தாருக்கு எமது வார்த்தைகள் பதில்தராது. எமது அனுதாபங்களைத்தான் சொல்லிக்கொள்ள முடியும். அவன் உயிருடனிருந்து எமது மக்களுக்காகச் சாதிக்கும் வீரியத்தை இப்படி திசைதிருப்பியதற்கு யார் பொறுப்புச் சொல்லப்போகிறோம். இது தமிழகம் மலேசியா என தீக்குளிப்புகளில் உயிர்தொலைத்த மனிதர்களுக்கும் பொருந்தும். தமிழக மக்கள் எம் மக்களுக்காக இனத்தின் பெயரால் எடுக்கும் சாத்வீகப் போராட்டங்கள் அல்லலுறும் எம் மக்களுக்கான ஆத்மார்த்த பலத்தைக் கொடுத்துவிடுகிறது. அதேநேரம் தம்மையே அழித்துக் கொள்ளும் போராட்ட வடிவங்கள் கைவிடப்பட வேண்டும். உணர்ச்சி ரீதியில் தரப்படும் முக்கியத்துவத்தைவிட அறிவுரீதியில் தரப்படும் முக்கியத்துவம் மேலோங்கவேண்டும்.
ஜெனீவாவில் நடந்த தன்னுயிர் அழிப்பு என்பது இங்கத்தைய ஊடகங்களில் வராததுக்கு அரசியல் காரணம் இருக்கிறதோ இல்லையோ, அந்த முறை (தனக்குத் தானே தீமூட்டிக் கொள்வது என்பது) இங்கத்தைய வாழ்வியல் நியமங்களுக்குள் உளவியல் ரீதியில் அதிர்ச்சி தரக்கூடியதும்தான்.
தூக்குக் காவடியை அதன் முட்களில் உடல் தொங்குவதைப் பார்த்து சகித்துக் கொள்ளமுடியாமல் கண்களைப் பொத்திக் கொள்பவர்கள் அவர்கள். எமது போராட்ட வடிவங்களும்கூட அந்தந்த சமூக விழுமியங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காமல் இருப்பது முக்கியம். இல்லாதபோது போராட்டத்தின் நியாயம் அல்லது நாம் சொல்வருகிற சேதி அடிபட்டுப் போய்விடும். குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டே துரத்தித் துரத்தி வெட்டும் தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பழகிப்போய்விட்ட எமது உளவியல் அறிவில் இதைப் புரிந்துகொள்வது இடக்குமுடக்காக இருக்கலாம். ஆனால் இப்படியாக உயிர்கள் அநியாயமாக அழிந்துகொள்ளவதும் இது ஒரு போராட்ட முறையாக அறிமுகப்படுத்தப்படுவதும் தடுத்துநிறுத்தப்பட வேண்டியது அவசியம்.
- ரவி (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?
- விவரங்கள்
- ரவி
- பிரிவு: கட்டுரைகள்