"சோறு கண்ட இடம் சொர்க்கமா...." என்ற பாட்டு வரியை யார் மறந்தாலும் திமுக தலைவர்கள் தற்போது மறக்கமாட்டார்கள் போலிருக்கிறது. மதுரையில் உள்ள மத்தியதொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராசன் மறைவிற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சண்முகம் மறைவிற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் கறிவிருந்து பந்தி வைக்காத திமுக, திருமங்கலம் இடைத்தேர்தலில் தொகுதி முழுவதும் கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டி கறிவிருந்து வைத்தது. 2 ஆயிரம் ஆடுகள், 75 ஆயிரம் கோழிகள், 1 லட்சம் முட்டைகளைக் கொட்டி கருணாநிதியின் மூத்த மகனும், தற்போது தென்மண்டல திமுக அமைப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ள(!) மு.க.அழகிரி நடத்திய கறிவிருந்தின் மணம் இன்னும் அந்த தொகுதியை விட்டு விலகவில்லை.

அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியாத அரசியல் வித்தைகளை தென்மண்டல தளபதி நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். அரசர் காலத்தை நினைவுபடுத்தக்கூடிய வகையில் தண்டோரா போட்டு மக்களுக்கு விருந்து செய்தியைச் சொல்லிய பாங்கு, தளபதியின் தம்பி என்பதை பறைசாற்றியது. விருந்துக்கு வருபவர்களுக்கு இலைக்கு மேல் உணவும், இலைக்கு கீழ் பணமும் வைக்கச் சொன்ன யோசனை, சின்னக்கவுண்டர் படத்தின் மொய் விருந்தை ஞாபகப்படுத்தியது. இந்த வித்தையெல்லாம் புரட்சி தலைவி, நமது அஞ்சா நெஞ்சனிடம் பாடம் படிக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பே "ஹாட்ரிக்" வெற்றி கிடைக்கும் என்று அழகிரி சொன்னது போலவே திருமங்கலத்தில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. இது ஹாட்"டிரிக்" வெற்றி என்று பத்திரிகைகள் எழுதியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என்று திமுகவினரும், மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு பத்திரம் இவ்வெற்றி என்றும் காங்கிரசாரும் தங்களுக்குத் தானே சொல்லி மகிழ்கிறார்கள். இவர்கள் எப்போதும் இப்படி தான் தகரத்தில் மூத்திரம் பெய்த கழுதையைப் போல ஏதாவது கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு செய்துள்ள சாதனைகள் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் என்றால், வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் என்று தொகுதி முழுவதும் பணம் வாரி இறைத்தது ஏன்? கிரைண்டர், மிக்சி, செல்போன் என்ற பரிசுப்பொருட்களை இலவசமாக வாரி இறைத்தது ஏன்? பீகார், உத்திரபிரதேசத்தை விட தேர்தலில் தமிழகம் முதலிடத்தைப் பெற்று விட்டது என்று மத்திய தேர்தல் ஆணையர் கோபால் சாமியிடம் சான்றிதழ் பெற்றது ஏன்? காவல்துறை அதிகாரிகளின் பாரபட்ச அணுகுமுறை என்று மூவர் இடம் மாற்றப்பட்டது ஏன்( மீண்டும் அவர்கள் தேர்தலுக்குப் பின் மதுரைக்கே வந்து விட்டது தனிக்கதை) என்ற கேள்விகள் அறிவுள்ள எவனுக்கும் எழும். ஆனால், கூட்டணிகட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கருணாநிதி பிரச்சனைக்களுக்கு மங்களம் பாடிவிட்டார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நேரடியாக வாரிசுகள் யாரும் இல்லாவிட்டாலும், தனக்கு அடுத்து இவர் தான் என அவர் அடையாளம் காட்டாவிட்டாலும் நான் தான் அவருடைய அரசியல் வாரிசு என ஜெயலலிலதா கூறிவருகிறார். அதற்கு இதுவரை யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து அந்த கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சனை நீருபூத்த நெருப்பாகவே இருக்கிறது. திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று எழுதிய காரணத்திற்காக மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால் மதுரை தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்டதும், அதில் மூன்று பேர் மாண்டு போனதும், திமுகவில் அடுத்த தலைவர் யார் என்ற போட்டியினைத் துவக்கி வைத்தது. இதன் பின் மாறன் சகோதாரர்கள் திமுகவிற்கு எதிராக மல்லுக்கு நின்றதும், பின்பு வாலைக்குலைத்து தேர்தல் பணியாற்றியதும் தேசம் கண்டது. பேரன்களின் சன்டிவி குடைச்சலால் வெறுப்படைந்த கருணாநிதி,தனது மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தந்து டில்லிக்கும் திமுகவிற்கும் கருணாநிதி பாலம் அமைத்தார். எத்தனை நாளுக்குத்தான் பேரனை நம்புவது!

இந்நிலையில் திருமங்கலம் வெற்றியை ஈட்டித்தந்த மு.க.அழகிரி திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் தென்னரசுக்கு பின் நீண்ட காலத்திற்கு பின் இந்த பதவி மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு பொருத்தமான தலைவர்கள் இக்கட்சியில் இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அரிவாளைத் தூக்கிக் கொண்டு கட்சி வளர்த்தவர் என்று சொல்லப்பட்ட தா.கிருட்டிணனும்( ஒரு அதிகாலை பொழுதில் சொந்தக்கட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் யாரும் தண்டிக்கப்படாதது தனிக்கதை), பீல்டு மார்ஷல் என்ற பட்டம் பெற்ற பொன்.முத்துராமலிங்கம் போன்ற பலர் கட்சியில் இருந்தாலும் இந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை.

வடமாவட்டங்கள் என்றால் இளைய மகன் மு.க.ஸ்டாலின், தென்மாவட்டங்கள் என்றால் மூத்தமகன் மு.கஅழகிரி என பங்கிடபட்டது திமுகவையா, அல்லது அரசின் மாநில நிர்வாகக்கட்டுப்பாட்டையா என்ற கேள்வி அலை அலையாக எழும்புகிறது . எனது குடும்பத்தினரை அரசியலில் நுழையவிட மாட்டேன். அப்படி செய்தால் என்னை நடுரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று சொன்ன டாக்டர் இராமதாஸ் அய்யா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை தனது மகன் அன்புமணிக்குப் பெற்றுத் தந்து விட்டு பழைய பேச்சை கெட்டிக்காரத்தனமாக மறந்து போனதை யாரும் மறக்கவில்லை. அதே போல குடும்பமே கழகமாக, கழகமே குடும்பமாக நினைக்கும் முதல்வர் கருணாநிதியையும் பதவிகளைப் பங்கிட குடும்பத்தை மறக்கவில்லை. கட்சி பதவி யாருக்கும் வழங்கப்படலாம். ஆனால் தென்மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி யாரும் சென்னை செல்லவேண்டாம். மதுரை அண்ணனைப் பார்த்தால் போதும் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் என்ன? கட்சியில் பதவியை பங்கு போடலாம். அதற்காக தமிழகத்தையுமா தருவது?

- கமலசாமி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It