thirumavalavan 645தோழர் திருமாவளவன் அவர்களை தமிழக கருத்தியல் தலைவராக ஏற்போம்! தமிழ்த் தேசிய ஓர்மையை வலுப்படுத்துவோம்!!

அண்மையில் தோழர் திருமா அவர்கள் இந்து தர்மசாஸ்த்திரம் என்று கூறப்படுகின்ற மனு நூல் பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த பிறகு, மனு நூல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது; ஆகையால் மனு நூல் தடை செய்யப்பட வேண்டும் எனக் குரல் எழும்பியதைத் தொடர்ந்து எதிரும் புதிருமான விவாதங்களும்; பெண்களையும் புனித நூலான மனு ஸ்ம்ரிதியையும் இழிவுபடுத்தியதற்காக திருமா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்னும் குரல்களும் எழுந்த வண்ணமுள்ளன!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்குபங்சர் மருத்துவதிற்காக சென்னையில் தங்கியிருந்தேன்.

அப்போது கொரட்டூரிலிருந்து வடபழனியிலுள்ள. மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் வாடகைக் காரில் பயணிப்போம்.

அந்த நேரத்தில் சாலையோர சுவர்களில் சுவரொட்டிகளாகவும் சுவரெழுத்துக்களாகவும் “எழுச்சித் தமிழர் திருமா வாழ்க” என்றும், "கருத்தியல் தலைவர் திருமா வாழ்க" என்றும் எழுதப்பட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.

தோழர் திருமா அவர்களுக்கு எழுச்சித் தமிழர் என்ற புகழாரம் வெகுகாலமாக உள்ளதுதான். ஆனால் கருத்தியல் தலைவர் என்ற சொல்லாடல் புதிதாகவும் புதுமையாகவுமிருந்தது.

இந்தச் சொல்லாடலுக்கு திருமா பொருத்தமானவரா என்று சென்னை நண்பர்களுடன் விவாதித்தேன். சிலர் மறுத்தனர்; சிலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் என்னுடைய பார்வையில் அது பொருத்தமானது என்றே கருதினேன்.

காரணம், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாடு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் பலரும் உரை நிகழ்த்தினார்கள்.

PUCL இன் பொதுச் செயலாளர் வீ. சுரேஷ், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் மற்றும் சில மாலெ இயக்கத் தோழர்கள் உட்பட பலரும் உரையாற்றினர்.

அந்த நேரத்தில், இடிந்தகரையில், கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது தேசத் துரோகக் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், வீ. சுரேஷ் அவர்கள் தம் உரையைத் தொடங்கும் போது,

“இங்கே பெரும் திரளாகக் கூடியிருக்கும் எனதருமை தேசத் துரோகிளே”

என்று உரையாற்றத் தொடங்கியது பெரும் கை தட்டல்களையும் ஆரவாரத்தையும் பெற்றது.

பிறகு, அணு உலை எதிர்ப்பு என்பது எப்படி உண்மையான தேசப்பற்றுச் செயல் என்பதை பல கோணங்களில் விளக்கினார்.

இறுதியாக, திருமா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அணு உலை எதிர்ப்பாளர்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தொழில் வளர்ச்சிக்கு தடையாக நிற்பவர்கள்; அறிவியல் வளர்ச்சியை மறுக்கும் பிற்போக்காளர்கள் என ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்பட்டதை எடுத்து விளக்கினார்.

அதன் காரணத்தினாலேயே இவர்கள் நாட்டின் எதிரிகள், தேசத் துரோகிகள் என்று ஆட்சியாளர்கள் நம்மை சித்தரிக்கிறார்கள் என்றுரைத்தார்.

ஆனால் நமது போராட்டம் வளர்ச்சி அறிவியலுக்கு எதிரானது அல்ல. மாறாக உலக வல்லரசியம் தம் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அழிவு அறிவியலை நம் மீது திணிக்கிறது.

ஆகவே, நமது போராட்டம் இந்த பூமிப் பந்தையும் மனித குலம் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் பூண்டோடு அழிக்கவல்ல அணு அறிவியலுக்கு எதிரானது என்று சிறப்பாக விளக்கினார்.

மேலும் இது உலகை மேலாதிக்கம் செய்து வரும் உலக வல்லரசியங்களுக்கு எதிரான இயக்கம் என்று முத்தாய்ப்பாகப் பேசி முடித்தார்.

அப்போது அரங்கத்தின் முன் வரிசையில் இருந்த நான் மேடைக்குச் சென்று அவரிடம் இந்தப் போராட்டத்திற்கு ஒரு சரியான கருத்தியல் மற்றும் அரசியல் திசை வழியை (ideological and political direction) வழங்கியதற்கு மிக்க நன்றியென அவரை கட்டித் தழுவி பாராட்டினேன்.

அக்கூட்டத்தில் திருமாவின் கருத்தியல் ஆளுமையை எண்ணி மகிழ்ந்தேன்.

சென்னையில், மேற்கூறியபடி சில வருடங்களுக்குப் பிறகு கருத்தியல் தலைவர் திருமா என்ற வாசகத்தைப் படித்தவுடன் அணு உலை எதிர்ப்பு மாநாட்டில் திருமா ஆற்றிய உரையை நண்பர்களிடம் சுட்டிக் காட்டினேன்.

மருத்துவப் படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் மறுத்தபோது திருமாவின் எதிர்வினை சமூக நீதி மறுக்கப்பட்டது என்பதைக் கடந்து, RSS பாஜக தலைமையிலான மத்திய அரசில் பார்ப்பனியம் எப்படி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று விளக்கியது மட்டுமின்றி, இந்துக்களின் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக எவ்வாறு இந்துக்களில் பெரும்திரள் மக்களுக்கு எதிராக உள்ளது என்ற விளக்கம் திருமாவின் காத்திரமான கருத்தியல் பங்களிப்பாகும்.

ஆளும் கருத்தியல் எப்போதும் ஆளும் வர்க்கங்களின் கருத்தியலே என்ற கார்ல் மார்க்சின் கூற்றை திருமாவின் எதிவினை நினைவூட்டுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் வல்லரசியமும் (புதுக்காலனியமும்) பார்ப்பனியமும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஆளும் கருத்தியலாக அமைந்துள்ளன.

இந்தப் பின்னணியில் இந்தியச் சிறைக் கூடத்திலிருந்து அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வெளியேறுவதுதான் தமிழக மக்களின் நல் வாழ்விற்கு உகந்தது.

ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கல்வி என்னும் ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராக மொழிவழி தேசிய இனங்களின், பல சமயங்களின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் கருத்தியலை உயர்த்திப் பிடிக்க வேண்டும், வலுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் இறையாண்மையைக் காப்பதற்கு பார்ப்பனிய எதிர்ப்பு, வல்லரசிய எதிர்ப்பு உள்ளடக்கிய தமிழ்த் தேசிய ஓர்மையை வலுப்படுத்த வேண்டும்.

சாதியத்தால் பிளவுப்பட்டிருக்கின்ற தமிழகத்தில், சாதியத்தின் ஆணி வேராக இருக்கின்ற பார்ப்பனிய கருத்தியலையும் அதன் ஆட்சியையும் வீழ்த்தியாக வேண்டும்.

அதே போல் முதலாளியத்தை வல்லரசியமாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் புதுக்காலனியத்தையும் வீழ்த்த நடுவண் அரசின் மேலாதிக்கத்தை ஒழித்ததாக வேண்டும்

இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள உழைக்கும் மக்களுக்கு இரண்டு எதிரிகள் என்று அண்ணல் அம்பேத்கர் வரையறுத்தார். ஒன்று சாதியம் மற்றொன்று முதலாளியம் என்றார்.

இந்தியச் சுதந்திரம் என்பது பார்ப்பனிய பனியா கும்பல்களுக்கான சுதந்திரம் என்று பெரியார் சாடினார். அக்காரணத்தால் தமிழ் நாடு தமிழருக்கே என்று குரல் எழுப்பினார்.

ஆகவே, இந்தியச் சிறைக்கூடத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் காஷ்மீரம், பஞ்சாப், மற்றும் வடகிழக்கு மாநில மக்களோடு கைக்கோர்த்து, பயணிப்பது அவசியமாகிறது..

தமிழகத்தில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனை வழியில் நமது செயல்பாட்டை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

அவ்வகையில் திருமாவின் கருத்தியல் தலைமையானது சாதிய தமிழ்ச் சமூக அரசியலை பண்பாட்டு ரீதியாக புரட்டிப் போட வல்லது.

இத்தகைய கருத்தியல் தலைமைக்கு பெரியாரிய உணர்வாளர்களும் தமிழ்த் தேசிய ஆற்றல்களும், வல்லரசிய எதிர்ப்பு இடது சாரி இயக்கங்களும் துணை நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அதேபோல் தோழர் திருமா அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்தின் தலைவர் என்ற நிலையைக் கடந்து பரந்துபட்ட தமிழக மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய கருத்தியல் தலைமையானது எல்லோராலும் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையும்.

தற்போது அவர் முன்வைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு; பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிராக குரல்; புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விமர்சனங்கள் போன்றவை இதற்கு நிச்சயம் வலுசேர்க்கும்.

இவ்விடத்தில் ஓர் எச்சரிக்கையை முன் வைத்தாக வேண்டும்.

தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைப் போரின்போது காங்கிரஸ் தலைமையிலிருந்த கூட்டணியில் இடம் பெற்ற திமுக உரிய அழுத்தத்தைத் தர தவறியது என்ற குற்றச்சாட்டிற்கு திமுக இலக்காகியது.

அவ்வகையில், ஒட்டுமொத்த தமிழக நலனிற்காக கூட்டணி அரசியலில் உரிய பங்களிப்பை ஆற்றுவதின் மூலம் மட்டுமே தோழர் திருமா அவர்கள் கருத்தியல் தலைமையை எட்டுவதும், அதனைத் தக்க வைப்பதும் சாத்தியமாகும்.

இதற்கு காலம் தக்க விடையளிக்கும் என நம்புவோம்!

- பொன்.சந்திரன்

Pin It