prankசமீபத்திய குளறுபடி.. விபரீதம்.. எரிச்சல்... prank என்ற வடிவில் வந்திருக்கிறது. 

மிக மிக கேவலமான ஒரு போக்காகவே நான் பார்க்கிறேன். சும்மா போகிறவனை வம்பிழுத்து அவனுக்கு BP ஏற்றி... அதன் பிறகு கேவலமான மன்னிப்பை வாய் கிழிய கேட்டு... சமூக அவலத்தை எடுத்துரைப்பதாக கதை விட்டு... ஒரு மாதிரி அருவருப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது... இந்த சீப் மெத்தட்.

சில சீரியஸ் ஆட்கள் அடிக்க போகிறார்கள். அடித்தும் விடுகிறார்கள். விஷயம் தெரிந்து... அவர்கள் கெஞ்சுவதைப் பார்த்து 'போய்த் தொலை' என்பது போல விட்டொழித்து போகிறார்கள். சத்தியமாக சிரிப்பே வரவில்லை.

அதிலும்.. ஸ்கிரிப்ட் வித் அமெச்சூர் ஆக்டிங் வேறு. திரும்பும் பக்கமெல்லாம்... இந்த prank கொரோனாவை விட மிக மோசமாக பரவி வருகிறது. அதுவும் பெண் பிள்ளைகளிடம் சென்று லவ் பண்றேன் என்று சொல்லி பிராங்க் செய்வதெல்லாம் அட்டூழியம். 

நாலைந்து பெண்கள் வருகையில்... சட்டென்று முன்னால் குதித்து பாம்பு போல ஆடுவது... போனைக் கொடுத்து... ஒரு வீடியோ எடுத்துத் தாங்க என்று சொல்லி காதலியிடம் பேசுவது போல நடித்துக் கொண்டே விஷத்தைக் குடிப்பது போல நடிப்பது. எழவு... கண்றாவி ஸீன் இதெல்லாம். 

பண்ணினது எல்லாம் தவறு. இதுல "தவறா நினைச்சிட வேண்டாம்... பிளீஸ்.. தவறா நினைச்சிட வேண்டா" ன்னு சொல்லி அந்த சூழலில் இருந்து தப்பிப்பதெல்லாம் மகா கேவலமான ஷாட். புகழ் வெளிச்சத்தின் மீதுள்ள மிக மோசமான ஈர்ப்பாகவே இந்த மாதிரி prank-கள் இருக்கின்றன.

ஓவர் நைட்டில்... மக்களிடம் சென்று சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கும் மிக பிற்போக்கான லைம் லைட் கனவின் வெளிப்பாடு. 

கவன ஈர்ப்பு மனோ நிலையாகவும் இருக்கிறது. உற்று நோக்கின் மனம் பிறழ்ந்த வெளிப்பாடாகவும் இருக்கிறது. எதற்கோ அலைந்த மனது.. இங்கே prank -ல் இளைப்பாறுதல் பெறுவது போல.

இதைப் பற்றி 10 வருடங்களுக்கு முன்பே "குடைக்குள் மழை" என்றொரு படம் வந்திருக்கிறது. பார்த்திபன் அவர்களின் சினிமா. சின்ன விளையாட்டு அந்த கதை நாயகனைப் பைத்தியமாகவே ஆக்கி விடும். இவர்கள் செய்வதும் அதே போலொரு பாவனை தான். பாணி தான். யாருக்கு என்ன விபரீதம் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த இடியாட்டிக் ஷோ தொடர்ந்தால்.... அது நிகழும்.

பொது இடத்தில ஷூட்டிங் செய்வதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். இவர்கள் வாங்குவது போல் தெரியவில்லை. அப்படியே செய்தாலும்.. படக்குழுவுக்கு தொடர்பில்லாதவர்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடிப்பது குற்றம்.

டிக் டாக்கிலாவது தங்களை தாங்களே விளம்பரப் படுத்திக் கொண்டார்கள். ஆனால் prank என்ற பெயரில் நிகழ்த்தும் பைத்தியகாரத்தனத்தை எப்படி புரிந்து கொள்வது. எது பேசினாலும் ஏட்டிக்கு போட்டியாக பதில் சொல்வது... கேள்வியை மாற்றி மாற்றி கேட்பது... வாடா போடா.. பொது இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகள்... பேசினாலும் கூடாத வார்த்தைகள்.

நக்கல்... நையாண்டி... குதர்க்கமான முக உடல் பாவனைகள்... இதில் எப்படி நகைச்சுவை வரும்... விழிப்புணர்வு வரும் என்று தெரியவில்லை.

யு டியூப் என்ற வரத்தை இப்படி சுரண்டி காலி செய்வதை எப்படி பொறுத்துக் கொள்வது. 

மளிகைக் கடை.. குப்பைத் தொட்டி... சைக்கிள் கடை... டாஸ்மாக்... பஸ் ஸ்டான்ட்... ஹொட்டேல்... மருத்துக் கடை... ஆட்டோ... கட்டிங் கடை... டாஸ்மாக்... மெக்கானிக் ஷாப்... கார் ஒர்க் சாப் என்று திரும்பும் பக்கமெல்லாம் prank. அதிலும் பலருடையது அமெச்சூர் கண்டெண்ட். 

போகிற வருகிறவர்களை வம்பிழுத்து இம்சை செய்யும் இந்த போக்கை யார் தான் கண்டிப்பது. வம்பிழுக்கப்படுபவர் மிக அவசரமாக ஒரு வேலைக்காக போய்க் கொண்டிருக்கலாம். மருத்துவமனை போகலாம். அலுவலகத்துக்கு போகலாம்.

உயிர் காக்கிற வேலையாகக் கூட இருக்கலாம். அவரின் சிந்தனையைக் களைத்து அவரின் சமநிலையைக் குலைப்பதெல்லாம் கிரிமினல் குற்றத்தில் சேர்க்க பட வேண்டும். ஒருவரின் நேரத்தை அவருக்குத் தெரியாமல் எடுக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

ஒரு வீடியோவில்.. ஒரு பெண்ணிடம் லவ் ப்ரொபோஸ் செய்து அந்த பெண் நிஜமாகவே சரி என்று சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் 'அய்யயோ இது prank என்று வழிகிறார்கள். அந்தப் பெண் திரும்பி நின்று அழுகிறது. அதன் பிறகு சமாதானம் ஆனாலும்.. தன்னை வைத்து காமெடி பண்ணி விட்டார்கள் என்பதை எல்லா மனமும் ஏற்றுக் கொள்ளாது இல்லையா. அது வாழ்நாள் வடுவை மனதில் கீறி விடும்.

யாரை prank செய்ய போகிறார்களோ அவர்களின் தெரிந்த ஒரு நபரை இவர்கள் பேசி வைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில்... சேஃப் கேம் தான். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அந்த நேரம் அந்த நொடியில்... தான் ஏமாற்றப் பட்டோம் என்று தெரிய வருகையில்... எல்லாரும் சிரித்துக் கொண்டு போக மாட்டார்கள்.

கையில் கிடைப்பதை எடுத்து அடித்து விடக் கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். அது படாத இடத்தில் பட்டு விபரீதம் ஏற்பட வாய்ப்பு உண்டு தானே. இப்போதே சராமாரியாக அறை விழுகிறது. ஒரு பெண் செருப்பால் எல்லாம் அடிக்கிறது. இன்றிருக்கும் டெக்னாலஜியை வைத்துக் கொண்டும் செருப்பால் அடி வாங்கி தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா... நண்பா...? 

ஒரு prank- கில் ஒரு ஹீரோ (!) கத்தியை வைத்துக் கொண்டு மாஸ்க் போடவில்லை என்றால்.... வெட்டுவேன் என்று ஊருக்குள் சுற்றுகிறான். ஊர் பசங்கள் சேர்ந்து சற்று நேரத்தில் பொளந்து விட ரவுண்ட் கட்டுகையில்.... அந்த தெரிந்தவர் வந்து காப்பாற்றுகிறார். இது ஒரு பொழப்பு. இன்னொரு சிறுவன்... வீட்டில் அம்மாவுக்கும் அக்காவும் தெரியாமல் prank செய்வதாக நம்மை ஏமாற்றுகிறான். பாவும்.. மூவருக்குமே நடிக்க வரவில்லை.

மாற்றி மாற்றி திட்டிக் கொண்டு... அக்காவும் அம்மாவும் சேர்ந்து அவனை அடித்து உதைத்துக் கொண்டு.. கேட்டால் இது காமெடி. சிம்பு பழைய படங்களில்... அம்மாவுக்கோ அப்பாவுக்கோ... பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் சாப்பிட்டுக் கொண்டே எதிர்வாதம் பேசிக் கொண்டு.. உடலை கோணி கோணி நக்கல் செய்வாரே... அப்படி... ஒரு பரிதாப பாவனை அவைகள்.

சமூக ஊடகத்தின் சுதந்திரம் கட்டவிழ்ந்து கிடப்பதாகவே காண்கிறேன். கட்டற்ற சுதந்திரம்... கட்டுப்பாடற்ற இலக்கை நோக்கி வழி நடத்தும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அது ஆபத்தை சுற்றிலும் எரிய விட்டு நடுவில்... குளிர் காய்வதாக நினைத்துக் கொள்வது.

காமெடி என்ற பெயரில் பெரும்பாலும் அவர்கள் செய்வது எரிச்சலூட்டும் செயல்கள் தான். நிஜமான காமெடி என்பது அற்புதமான ஒரு பதம். அதை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவரை இம்சித்து அதில் எப்படி காமெடி வரும். எப்படி பார்த்தாலும் prank என்ற புது நோய் இளைய சமூகத்தை ஆட்டி தான் வைத்துக் கொண்டிருக்கிறது.

 பொழுது போக்கு என்பதெல்லாம் வேறு. ஒரு வேளை அதில் பொழுது போக்கை உணர்ந்தால் மனம் வக்கிரத்துக்கு வாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். முன் பின் தெரியாதவர்களிடம் நாகரீகமற்று விளையாடுவது அபத்தம். தப்பு. பிற்பாடு காலிலேயே விழுந்து மன்னிப்பு கேட்டாலும். பாதிக்கப்படுவோரின்... ஏமாற்றம் உங்களுக்கு ஜாலி என்றால்.... எதுவோ சமநிலை தவறிக் கொண்டிருக்கிறது. 

"என்னை ஒருத்தன் பொதுவுல வெச்சு ஏமாத்திட்டான்டா" என்பது பின்னாளில் எப்போதாவது பழி வாங்கும் வக்கிரத்தை தூண்டி விடலாம். "ஆடை" படத்தில் அமலா பாலை அம்மணமாக அலைய விட்டது போல எவனாவது செய்ய போகிறான். அப்புறம் கோர்ட் கேஸ்தான்... விளையாட்டு.

பொது மக்கள் இதற்கு சப்போர்ட் செய்யக் கூடாது என்பது தான் முதலில் இந்த நோயை தடுக்க செய்யும் மருந்தாக இருக்கும். பிறகு டிக் டாக்கிற்கு ஏற்பட்ட அழிவு... Prank-கும் வெகு சீக்கிரத்தில் ஏற்படும். ஏற்பட வேண்டும்.

ஏனெனில் எது நிஜம் எது பொய் என்பதற்கான கோட்டை அழிக்கும் வேலையை வெகு லாவகமாக prank செய்து கொண்டிருக்கிறது. அது அத்தனை இயல்பானதாக... ஜாலியாக இல்லை. அதற்குள் எதிர் தரப்பின் சிரித்த வலி இருப்பதை உணர முடிகிறது. 

ஏமாற்றுதல்..... பொய் சொல்லல்... புறம் சொல்லல்... சண்டை இழுத்தல்... வம்பிழுத்தல்... மானபங்கம் செய்தல்....அச்சுறுத்தல்....இப்படி எதெல்லாம் கூடாது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ... அதுவெல்லாம் வெகு அழகாக பின்னணி இசையோடு கையளவு திரையில் நிகழ்கிறது. ஆகவே தான் சொல்கிறேன். கவனம் தேவை.

- கவிஜி

Pin It