சிங்காரவேலர் ஒரு சிறந்த பொதுவுடைமை வாதி, சுதந்திரப் போராட்ட வீரர்; தொழிற்சங்க முன்னோடி; தத்துவச் சிந்தனையாளர்; அரசியல் - சமூகப் போராளி; குறிப்பாக, நமது நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களிடத்தும் அனுதாபம் கொண்டவர். அவர்களுள்ளுந் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களிடத்தும், சிறுபான்மை மக்களிடத்தும் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். இந்தச் சமூக அக்கறையால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக - ஆழ்ந்து சிந்தித்தவர். அக் காலத்திய அரசியல் - சமூகச் சூறாவளியில் அவர் மூழ்கிச் சிக்குண்டிருந்தாலும், அடித்தட்டு மக்களின் எதிர்காலத்திற்காகச் சிந்திப்பதை அவர் ஒரு கடுந்தவமாகவே மேற்கொண்டுள்ளார். இந்தக் கடுந்தவத்தின் காரணமாகத்தான் அவர் இருபது களிலேயே (1920-லிருந்து) சிறுபான்மை மக்களின் முன்னேற்றம் குறித்துத் தொலைநோக்குடன் சிந்தித் துள்ளார். தலித் மக்களைக் குறித்து அவர் எவ்வாறு தொலைநோக்குடன் சிந்தித்துள்ளாரோ அவ்வாறே சிறுபான்மை மக்களாகிய இசுலாமியர்களைப் பற்றியும் சிந்தித்துள்ளார்.

அக்காலத்திய தேசியத் தலைவர்களில் பெரும் பாலோர் இந்துக்களைப் பற்றியே சிந்தித்தனர்; அவ்வாறே இசுலாமியத் தலைவர்கள் தவிர்க்க முடியா வண்ணம் இசுலாமிய மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தனர். தலைவர்களில் சிலரே இவற்றிற்கு மாறு பட்டிருந்தனர்; அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சிங்காரவேலர். சிங்காரவேலர் அடிப்படையில் மார்க்சியச் சிந்தனையாளராக இருந்ததால் அவரது சிந்தனை உலக மானுடத்தைத் தழுவியதாக இருந்தது. அதன் இயல்பாக ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் அவரது சிந்தனை படர்ந்திருந்தது. அதனால் அச் சிந்தனை இசுலாமியர் பக்கமும் திரும்பியது.

இந்திய மக்கள் பிரிவில், இசுலாமிய மக்களே மிகுந்த வறுமைக்கும், இல்லாமைக்கும் உட்பட்டவர் களாக இருந்து வருகின்றனர்; இந்திய அரசால் அமைக்கப்பட்ட (2005) சச்சார் ஆய்வுக்குழு ஒரு திடுக்கிடும் தகவலை அறிவித்துள்ளது. அதனை ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டிய கடமை உள்ளது. குறிப்பாக, தலித் மக்களின் வாழ்க்கையை விட இசுலாமியர்களின் வாழ்க்கையே வறுமை மிக்கதாகவும் துன்பம் மிக்கதாகவும் உள்ளதாக அக்குழு அறிவித்துள்ளது. மேலும் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையிலும் அவர்களே கூடுதலாக உள்ளனர் என்றும் அக்குழு கூறியுள்ளது. நாடு சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகியும் இந்த இழிநிலை உள்ளது எனின், 1920-இல் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமெனச் சிந்தித்தால் அச்சமும் அதிர்ச்சியும்தான் தோன்றும். ஏன் இந்த இழிநிலை? இந்த இழிநிலையை முற்றிலும் நீக்கிட வேண்டாமா? இவற்றைப் பற்றிச் சிந்தித்தவர்தான் சிங்காரவேலர்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும், நம்மவர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து இல்லாமைக்கும் இன்னலுக்கும் உள்ளாகி வருபவர்களில் முதலிடத்தில் உள்ளவர்கள் இசுலாமியர்களே; இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு; அவற்றையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர் பெருமளவு இந்தியாவை ஆண்டவர்கள் மொகலா யர்கள்; ஆங்கிலேயரின் நுழைவின்போது அவர் களைப் பல இடங்களில் எதிர்த்துப் போட்டியிட்ட வர்கள் மொகலாயர். ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்திற்கு இசுலாமியர் பெரும் தடையாக இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இசுலாமியர் புறக்கணிக்கப்பட்டார்கள்; ஒதுக்கப் பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதால், இந்தியாவில் வாழும் இந்திய இசுலாமியரை அந்நியராகவும், எதிரியாகவும் நோக்கும் நிலை வளர்ந்துவிட்டது. இதனால், இசுலாமியரைத் தொடர்ந்து எதிரியாகக் கருதும்நிலை நிலைத்து விட்டது. இது மிகமிகச் சோகமானது; விரும்பத் தகாதது; இசுலாமியர் அல்லாதார் இவ்வாறு இருந்து விட்டதால் இசுலாமியரும் அவர்களை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரு சாராரும் உள்ளன்பின்றி மாறுபட்ட நிலையில் வாழத் தொடங்கிவிட்டனர். ஏதோ காரணமாகச் சச்சரவு ஏற்பட்டால் அது பெரும் சண்டையாகவும் மதக் கலவரமாகவும் மாறும் சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன. இது குறித்துச் சிங்காரவேலர் எழுதி யிருப்பது நோக்கத்தக்கது.

“இந்தியாவில் இந்துக்கள் பதினாறு கோடியும் முகமதியர் ஆறுகோடியும் வாழ்கின்றனர். இவர் களிருவருக்கும் இடையிலுள்ள உறவு பூனைக்கும் எலிக்குமுள்ள உறவு என்றே சொல்லலாம். அடிக்கடி, சொற்பகாரியங்களுக்கெல்லாம் மதத்தை முன்னிட்டுத் தலைகளை உடைத்துக் கொள்கிறார்கள். மதவைராக்கி யத்திற்கு ஒருவரையொருவர் கொல்வது தற்போது உலகில் வேறு எங்குமில்லை. இந்தியாவில் மாத்திரம் தான் இந்த மாச்சரியம் நிகழ்கின்றது. இரு மதத் தலைவர்களும் எரியும் கொள்ளியை ஏற்றித்தள்ள ஆரம்பித்து விட்டார்கள்.”1

இந்தியாவில் அக்காலத்திலுள்ள (இருபதுகளில்) நிலையை அவர் விளக்கியிருக்கிறார். அதே நிலை தான் நம் காலத்திலும் தொடருகிறது. இந்தத் தொடர்ச்சியால் இசுலாமியருக்கும் மற்றவர்களுக்கு மிடையே உள்ள உறவும், நட்பும், நெருக்கமும், அன்பும், ஒற்றுமையும் நொறுங்கத் தொடங்கி விட்டன. இதன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப் பட்டவர்கள் இசுலாமியர்களே. இங்கு எடுத்துக் காட்டிற்கு ஒன்றை நோக்கலாம். சுதந்திரத்துக்கு முன் வடநாட்டில் பல மாநிலங்களில் உருதுமொழி பயிற்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருந்தது. உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கு உருது முதல் மொழியாகவும், இந்தி இரண்டாம் மொழியாகவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்க்கு இந்தி முதல் மொழியாகவும் உருது இரண்டாம் மொழியாகவும் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின் உருது நீக்கப்பட்டு எல்லா இடங்களிலும் இந்தி நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. உருது பாகிஸ்தான் மொழியென மிகத் தவறாகப் பரப்புரை செய்யப்பட்டு அதனைப் புறந்தள்ளினர். மொழி நூலோர் உருதுவை இசையின் மொழி என்பர். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்னும் அரிய தொடரை ஈந்த மொழி உருது. அந்த அரிய மொழியின் மீது பகைமை பாராட்டி, முதன்முதலில் இசுலாமியரை மொழியின்வழிப் பின்தங்கச் செய்துவிட்டனர்.

இசுலாமியர் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதிகளில் அவர்களுக்கெனத் தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நாளடைவில் அதனையும் இல்லாது செய்துவிட்டனர். இதனால், ஆட்சியில் அவர்களின் பங்கேற்பு இல்லாது போய்விட்டது. ஆட்சிப் பங்கேற்பு இருந்திருந்தால் ஓரளவாவது அவர்களின் தேவைகள் நிறைவேறியிருக்கும். அதற்கும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. இந்நிலை இன்றும் தொடர்வதால் இசுலாமியர் வாழும் பகுதிகளில் பள்ளிகளோ கல்லூரிகளோ, மருத்துவ மனைகளோ மின்சார வசதியோ இல்லாத நிலை உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள வசதியோ அவர்களுக்கு யானைக்கு அளிக்கும் சோளப்பொரியாகத்தான் இருந்துள்ளது. இந்த அவல நிலையையும் சச்சார் கமிஷன் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

கல்வி வசதி போதிய அளவு இல்லாததால் பல துறைகளில் அவர்கள் பின்னடைந்துள்ளனர். 1955-இல் குறிப்பாக, தமிழகக் காவல்துறையில் இசுலாமியர் கணிசமான எண்ணிக் கையில் இருந்தனர்; அதாவது 20 விழுக்காட்டில் இருந்தனர். ஆனால் 2004-இல் 88, 524 பேர் இருந்தனர்; அவர்களில் இசுலாமியர் வெறும் 99 பேர்தான். இந்த நிலை பேரச்சத்தைத் தருவதாகவே உள்ளது. சச்சார் கமிஷன் 17. 11. 2006-இல் நடுவண் அரசுக்கு 400 பக்க அளவில் அறிக்கை அளித்தது. இந்திய நகரங்களிலும், சிற்றூர்களிலும் மக்களையும், மத அமைப்புகளையும், பல சங்கங்களையும் அணுகிப் பல தரவுகளைத் திரட்டி இசுலாமியரின் வாழ் நிலையைப் புள்ளிவிவரங்களோடு அறிவித்துள்ளது. இவற்றில் இரு விவரங்களை நோக்கினாலேயே உண்மை நன்கு விளங்கும். அதனைக் கீழே காணலாம்.

தேசிய அளவில் பட்டப் படிப்புப் பெற்ற இந்துக்கள் - 15.4%

தேசிய அளவில் இசுலாமியர்கள் - 3.4%

தேசிய அளவில் கல்வி பயிலும் மற்றவர்கள் - 95%

தேசிய அளவில் கல்வி பயிலும் தலித்துகள் - 90%

தேசிய அளவில் கல்வி பயிலும் இசுலாமியர் - 70%

தேசிய அளவில் பள்ளிக்குச் செல்லும் மற்ற பெண்கள் - 80%

தேசிய அளவில் பள்ளிக்குச் செல்லும் தலித் பெண்கள் - 72%

தேசிய அளவில் பள்ளிக்குச் செல்லும் இசுலாமியப் பெண்கள் - 60%

கல்வி விவரத்தை அறிந்தோம். அடுத்து வேலை வாய்ப்பு விவரத்தை நோக்கலாம். சச்சார்குழுவின் அறிக்கைப்படி இந்தியாவின் மக்கள் தொகையில் இசுலாமியரின் மக்கள் தொகை 13.8 கோடி பேர்; அதாவது, மொத்த மக்கள் தொகையில் 13.4%. இதில் வேலைவாய்ப்புப் பெற்றோர் 4.9% மட்டுமே. அதாவது, மூன்றில் ஒரு பகுதிக்கும் கீழே உள்ளது. பொது ஒழுங்கு, சேவைப் பிரிவுகளில் உயர் சாதியினர் 43%. இசுலாமியரோ 4% மட்டுமே. இராணுவத்துறையிலோ 1% மட்டுமே. இந்த மிக மிகக் குறைவான நிலைக்குக் காரணம், அவர்களால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சமேயாகும். இது வேண்டாத, தவறான அச்சமாகும். நாட்டின் குடியரசுத் தலைவராகவும், முக்கிய அமைச்சர்களாகவும் இசுலாமியர் அணி செய்யும்போது, பாதுகாப்புத்துறையில் அவர்களுக்குப் போதிய இடம் அளிக்காதது வருந்தத்தக்கது. இது மாற்றப்பட வேண்டியது. மேலும் நடுவண் அரசின் 83 அரசுச் செயலாளர்களில் ஒருவர்கூட இசுலாமியர் இல்லையென்பது மிகக் கொடுமையானது. இவை போன்ற அதிர்ச்சி அளிக்கும் பல செய்திகள் அந்த அறிக்கையில் உள்ளன.

சச்சார் கமிஷன் இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியரின் பணிவாய்ப்புகள் எப்படி உள்ளன என்பவற்றையும் துல்லியமாக அறிவித்திருக்கிறது. நாட்டின் உண்மைநிலையை உணர அது பெரிதும் உதவும். அக்கமிஷன் பின் வருமாறு புள்ளி விவரத்தை அளித்துள்ளது. ஐ.ஏ.எஸ் பணியில் – 3%, ஐ.எப்.எஸ் – 18%, ஐ.பி.எஸ் 4%, நீதித்துறை 7.8%, சுகாதாரத்துறை 4.4%, உள்துறை 7.3%, போக்குவரத்துத்துறை 6.5%, கல்வித்துறை 6.5%, பொதுத்துறை 7.2%, மற்றப் பிரிவினரோடு ஒப்பிடும்போது இவ்வாய்ப்பு மிகமிகக் குறை வானது. இந்நிலை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசுத் துறைகளின் வேலை வாய்ப்பு தான் இவ்வாறு இருக்கிறதென்றால் தனிப் பட்ட முறையில் தொழில் செய்வதற்கும் அவர் களுக்கு அரசுக் கடன்களோ, வங்கிக் கடன்களோ கிடைப்பதில்லை என்றும், இசுலாமியர் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் வங்கிகள் நீண்ட தூரத்தில் இருப்பதாகவும் சச்சார் கமிஷன் அறிவித் துள்ளது. இசுலாமியர் ஓரளவு பெரும் எண்ணிக் கையில் குடிசைத் தொழில்களில்தான் ஈடுபடு கின்றனர். குறிப்பாக, துணிதைத்தல், எம்ராய்டரிங், அகர்வத்தி, பீடி தயாரித்தல், சிற்றுணவு தயாரித்தல் போன்ற தொழில்களில் பெரிதும் இசுலாமியப் பெண்களே ஈடுபடுகின்றனர். தேசிய அளவில் இவ்வேலைகளில் ஈடுபடுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் இசுலாமியப் பெண்கள் மட்டும் 70% என்று அக்கமிஷன் அறிவித்துள்ளது. அரசு கடன்களும், வங்கிக் கடன்களும் சிறுஅளவில் கூடக் கிடைக்காததால் அவர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது என்றும், மேலும், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற வகையால், அவர்கள் வாழ்வு மரணக் குழியில் சென்றுவிட்டதாகக் கமிஷன் எச்சரித் துள்ளது.

மேற்குறித்த நெருக்கடிகளையும், துன்பங் களையும் நீக்க, இசுலாமியருக்கு நியாயமான இட ஒதுக்கீடும், தனித்தொகுதி அளிப்பும், ஊர்ப் பஞ் சாயத்து, சட்டசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் பங்கேற்க வைத்தலும் மிக இன்றியமையாதவை என்பதைக் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பின் இவ்வறிவிப்பு வந்துள்ளது. இதனைச் சிங்காரவேலர் அக்காலத் திலேயே கீழுள்ளவாறு சுட்டிக் காட்டியிருப்பது நம் சிந்தனைக்குரியது.

“முகமதியர்களுக்காகிலும் தீண்டாதார்களுக்காகிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெறாதிருக்கும்படி முட்டுக்கட்டைகளைப் போட்டு வருவது ஏன்? காங்கிரசுகாரர்களுக்கு மனம் களங்க மற்றிருந்தால், சட்டசபைகளில் எளியோரும் தொழி லாளியும், தீண்டத்தகாதாரும் வந்து நிறைந்தால் என்ன? அவர்களில் சிலர் நிர்மாண மந்திரிகளாய் (Cabinet Ministers) வந்தால் என்ன? தனித்தொகுதி இருந்தால் மாத்திரம் இந்தப் பாமரமக்களுக்குப் பட்டமும் பதவியும் கிடைக்குமே ஒழிய, பொதுத் தொகுதியில் ஒன்றும் வராது. இது திண்ணம், இதுவே நமது 50 வருஷத்திய அனுபவம்”2

சட்டசபைகளில் பங்கேற்றால் மட்டும் போதாது என்றும், அவர்கள் வெறும் துணை அமைச்சர் களாக அல்லாமல் கேபினட் அமைச்சர்களாக வர வேண்டுமென்று தொலைநோக்கோடும் எச்சரிக்கை யோடும் சிங்காரவேலர் அறிவுறுத்துகிறார். மேற் சாதியினரும், ஆளும் தலைமையினரும், அடித்தட்டு மக்களுக்கு ஏதோ பதவியை அளிக்க வேண்டுமென் பதற்காகத் துணை அமைச்சர்களாக ஆக்கி, முடி வெடுக்கும் சிறப்பைத் தவிர்த்துவிடும் சூழலை ஏற்படுத்தி விடுவர். இது மேல்தட்டு மக்களின் சூட்சுமம்; தந்திரம். இவற்றை நன்கு அறிந்துதான் சிங்காரவேலர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சச்சார் கமிஷன் வேறு சில முக்கிய குறிப்பு களையும் அளித்துள்ளது. அதாவது, உயர்நிலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் (இசுலாமியர் பெரும் பான்மையினராக வாழும் ஊர்களில்) நீண்ட தொலைவில் இருப்பதால் அவர்கள் கல்வி பெற விரும்புவதில்லை என்றும், அதிலும் குறிப்பாக, பெண்கள், வண்டிகளிலும், பேருந்துகளிலும் சென்று கல்வி கற்பதை இயல்பாக வெறுக்கிறார்கள் என்றும், அதற்கு அவர்களின் பழமை நோக்கு காரணமென்றும் அறிவித்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இசுலாமியரில் பெரும்பாலோர் நவீன கல்வியில் ஆர்வம் காட்டவில்லை என்பதை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1835-ஆம் ஆண்டிற்குப் பின் திறக்கப்பட்ட உயர் பள்ளிகளில், கல்லூரிகளில் அளித்த கல்வியைப் பார்ப்பனர்களும், முதலியார்களும், பிள்ளைமார்களும், கிறித்துவர்களும் நன்கு பயன் படுத்திக் கொண்டனர். ஆனால் இசுலாமியர் அதில் போதிய கவனம் கொள்ளவில்லை. சில போது வெறுக்கவும் செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் மதாரசா பள்ளியில் சேர்ந்தனரேயன்றி மற்றப் பள்ளிகளில் சேர விரும்பவில்லை.

மதாரசா பள்ளியில் சேர்ந்து படித்தாலும் தொடர்ந்து உயர்படிப்பைப் படிப்பதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்தே இசுலாமியர் நவீன கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர்களின் கல்வி விகிதம் குறைந்தது. இவர்கள் படிக்காதது மட்டு மன்றி, போதிய கல்விக் கூடங்கள் இல்லாததும் அவர்களின் கல்வி விகிதத்தைக் குறைத்துள்ளது. குறிப்பாக, இசுலாமியர் பெரும் எண்ணிக்கையில் வாழும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில், அவர்கள் வசிக்கும் ஊர்களில் பள்ளிகள் மிகக் குறைவு. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் பள்ளி இல்லாத ஊர்கள் 2943 என்று ஒரு குறிப்பு உள்ளது. ஏறக்குறைய இதுபோன்ற அவலநிலை தான் வேறு சில மாநிலங்களிலும் இருந்துள்ளது.

பள்ளிப் பருவச் சிறுவர்களின் மொத்த எண்ணிக் கையில் 3% மட்டுமே மதாரசா பள்ளிக்குச் செல் கின்றனர் என்றும், 6-வயதிலிருந்து 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 25% பேர் பள்ளிக்கே செல் வதில்லை என்னும் அதிர்ச்சிக் குறிப்பை அக்கமிஷன் தெரிவித்துள்ளது. தப்பித்தவறிப் படித்த சிறுவர்கள் பெரும்பாலும் மேற்கல்வியைத் தொடர்வதில்லை. அவர்களில் சிலர் சுயதொழிலில் ஈடுபட்டு விடு கின்றனர். இந்திய அளவில், இசுலாமியர்களில் கைவினைஞர்களே மிகுதியாக இருப்பதால், அவர்கள் எந்தெந்தத் தொழில்களில் நுணுக்கத் திறன் கொண்டுள்ளனரோ, அத்துறைகளில் அவர் களிடம் பள்ளிப் படிப்பை அளவுகோலாகக் கொள்ளாமல், அவர்களை அங்கீகரித்து வேலை வாய்ப்புகளையும், அரசு உதவிகளையும் அளிக்க வேண்டுமென்று சச்சார் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. கல்வியில் பெண்கள் நிலைதான் மிகப் பரிதாபமானது. அவர்கள் மற்றச் சமூகப் பெண்களைப் போல், நீண்ட தூரம் சென்று கற் பதையோ, கைவண்டியிலோ, பேருந்திலோ சென்று கற்பதையோ, விடுதியில் தங்கிக் கற்பதையோ அவர்கள் சிறிதும் விரும்புவதில்லை. இவர்களுக்குப் போது மான பள்ளிகள் இல்லாத குறை இருந்தாலும், கிடைக்கின்ற சில பள்ளிகளையும் இவர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை. இதற்கும் அவர் களின் பழமையுணர்வே காரணமாகும். இது குறித்தும் சிங்காரவேலர் எச்சரித்துள்ளார்.

“வட இந்தியா முழுமையும் பெண்கள் வெளியே போகவொட்டாது பர்தா என்ற துர்பழக்கம் வாட்டி வருகின்றது. வங்காளத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகச் சாகின்றனர். அதைக்கண்டுதான் ஓர் ஆங்கிலேயர் கல்கத்தா நகரத்தைத் “தாயைக் கொல்லும் நகரம்” (Matricidal City) என்றார். இது பர்தாவின் கொடுமையே; கல்வி பெரும்பான்மையான பெண் களுக்கு எட்டவே இல்லை. நூற்றுக்கு நான்கு பேர் மூன்று பேர் கூடப் படிக்கவில்லை என்றால் இந்தப் பெண்களின் மௌடீகத் தனத்திற்கு எல்லையது அவ்வாறான அந்தகாரம் வேறெங்கு உள்ளது. ஒரு பக்கம் மூடத்தனத்தாலும், மற்றொரு பக்கம் துர் பழக்கவழக்கத்தாலும் இன்னொரு பக்கம் பொருளா தாரக் குறைவினாலும், வேறொரு பக்கம் ஆடவர் ஆதிக்கத்தாலும், வதைபட்டு வாடும் நம் சகோதரிகள் - தாய்மார்களுடைய துர்பாக்கியம் தாந்தே (Dante) என்னும் கவிராயர் கூறும் நரகத்திலும் (Inferno) இல்லை என்று சொல்லலாம்.3

உலகத்தில் எத்தனையோ மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக் கின்றன. மக்களின் உணவிலும் உடையிலும், உறை விடத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பழக்க - வழக்கங்களிலும், கல்வியிலும், நடைமுறையிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே உள்ளது. மாற்றமே வளர்ச்சியாக, முன்னேற்றமாக மாறிவரும் காலம் நம் காலம்; அறிவியலும் தொழில்நுட்பமும் அம் மாற்றத்தை விரைவுபடுத்தியே வருகின்றன. எல்லா நிலைகளிலும் நாம் பழமையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியிருந்தால் அஃது அறிவு பாற்பட்டதன்று. வளர்ச்சியும் அன்று; மனித வாழ்வு எண்ணற்ற மாற்றங்களைக் கண்டு விட்டது. இனியும் கண்டு கொண்டுதான் இருக்கும். மாற்றம் தான் இயற்கை வழி; உண்மை நெறி; மாற்றம் அற்றது செயற்கை வழி; இதனை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.

பர்தா அணியும் வழக்கம் எப்போதோ தோன்றிய ஒன்று; விஞ்ஞான - தொழில் நுட்பத்தால் உலகம் சுருங்கி வருகிறது. மாறிவருகிறது. அரபு நாடு களிலும், ஏனைய இசுலாமிய நாடுகளிலும் பர்தா அணியும் வழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மதப் பழமை நோக்குக் கொண்ட ஆப்கானிஸ்தானி லேயே அப்பழக்கம் குறைந்து வருகிறது. காற்றும் சூரிய ஒளியும் படாதவாறு பர்தா அணிவது உடல் நலத்திற்குக் கேடு நல்குவது. நோய்க்கு உதவுவது. பயனற்ற பழமையை விடுவதற்கு அஞ்சுவதே பர்தா அணியும் பழக்கம். பழமையின் அறிகுறியே பர்தா வாகும். இந்தப் பழமைப் பிடிப்பு மற்றவற்றிலும் பழமையைப் பேண வைக்கிறது; அதனால் எதிலும் புதுமையைக் காண அஞ்சுகிறோம். நாணுகிறோம். பயன்பாட்டை அடைய நாமே மறுக்கிறோம். அதனால் வளர்ச்சி ஏற்படுவதில்லை. இந்தப் பழமைப்பிடிப்பு, கல்வியிலும் எதிரொலிக்கிறது. அதனால் புதுமை பொங்கும் கல்வியையோ, கல்வி மாற்றத்தையோ விரும்பாமல் அந்நியப்பட்டு விடு கின்றனர். இப்படி அந்நியப்பட்டுவிடும் நிலையை எண்ணித்தான் சிங்காரவேலர் மாற்றத்திற்கு எதிரான, வளர்ச்சிக்கு எதிரான பர்தாவை ஒரு குறியீடாக உணர்த்துகின்றார். அதாவது பர்தாவைப் பேணும் பழமைப் பிடிப்பு, கல்வியென்னும் புதுமையை நாடத் தடுக்கிறது என்கிறார். இசுலாமியப் பெரியோரும், சிந்தனையாளரும், மகளிரும், இது பற்றி நீடு சிந்திக்க வேண்டும், உண்மையைக் காண முயல வேண்டும். இசுலாமியப் பெண் கல்வி குறித்து வரலாற்றுப் பேராசிரியரும் சிறந்த சிந்தனையாளருமான கே.என்.பணிக்கர் கூறியிருப்பது நம் கவனத்திற்கு உரியது.

“கல்வியைப் பொறுத்தவரையில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டியுள்ளது. பிற பிரி வினருக்கும் இது தேவை. இருப்பினும் இசுலாமி யருக்கு இது மிகவும் தேவையாகும். ஏனெனில் பெண் கல்வி மிகவும் கீழ்நிலையில் உள்ளது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. இசுலாமிய மக்களின் தலைவர்கள் இன்னும் மிகப் பெரிய அளவில் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்”4

இசுலாமியப் பெண்களிடத்துப் பழமைப் பிடிப்பும் விழிப்புணர்வும் காலம் காலமாகத் தொடர்வதால் அவர்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகத் தலைவர்கள் முயல வேண்டும் என்கிறார் கே.என்.பணிக்கர். தலைவர்களின் முயற்சி இல்லையெனின் அவர்களின் இருண்ட காலம் மேலும் தொடரும் என்பதால்தான் அவர் அவ்வாறு கூறுகிறார். அவர் மற்றொரு தகவலையும் தருகிறார். அதாவது, தேசிய அளவில் வேலை வாய்ப்பில் 26% இசுலாமியப் பெண்கள் மட்டுமே உள்ளனர் என்றும், அதேபோல் கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் 4% பெண்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் இந்த எண்ணிக்கையைப் பிற சமூகத்தாரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது என்றும் கூறு கிறார். இதுதான் நம் நாட்டின் அவலநிலை.

பெண்கல்வியின் நிலை இசுலாமியச் சமு தாயத்தில் மிகக் கீழ்நிலையில் உள்ளது போன்றே ஒட்டுமொத்த இசுலாமியச் சமுதாயத்தின் கல்வி நிலையும் பிறசமூகத்தாரோடு ஒப்பிடும்போதும் அதே நிலையில்தான் இருந்துவருகிறது. இதனை சச்சார் கமிஷன் நன்கு புலப்படுத்தியுள்ளது. இந்தக் கமிஷனில், இரோகேந்திர் சச்சார், எம்.ஏ. பஷீர், சயித்அமித், டாக்டர் பி.கே. ஊமன், டாக்டர் ராகேஷ், பசந், டாக்டர் அக்தர் மஜித், டாக்டர் அபுசலே ஷரிம் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பலவகைகளில் களஆய்வு செய்தே பல புதிய தகவல் களை அளித்துள்ளனர். அறிவியல் நோக்கு கொண்ட அந்த அறிக்கை, இசுலாமியரைப்பற்றிய பல பழைய தகவல்களையும் பொய்யாக்கியுள்ளது.

கேரள அரசால் ஒரு காலத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, பீகார், உத்தர பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலுள்ள இசுலாமியரின் வாழ்க்கை நிலையைக் காட்டிலும், கேரளாவில் நன்றாக உள்ளதென அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. சச்சார் கமிஷனோ அது உண்மைக்கு மாறான தகவலென எடுத்துக்காட்டியுள்ளது. இதுபோன்று பல திடுக்கிடும் தகவல்கள் அந்த அறிக்கையில் உள்ளன. இசுலாமியரின் வாழ்க்கை நன்முறையில் மேம்பட சச்சார்குழு அவர்களின் இடவசதி, பாதுகாப்பு, கல்விவாய்ப்பு, வேலை வாய்ப்பு, தொழில்முன்னேற்றம் குறித்துப் பல பரிந்துரைகளைச் செய்துள்ளது. அவற்றை நடுவண் அரசு காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றுவதற்கு மக்களும் துணை நிற்கவேண்டும். ஏனெனில் இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் காட்டுகிற ஆதரவைப் பிற கட்சிகள் அவ்வளவாகக் காட்டுவ தில்லை. பி.ஜே.பி. கட்சியோ எப்போதும் தடை யாகவே இருக்கும். ஆதலின் மக்களின் ஆதரவோடு ஏனைய கட்சிகள் அதற்குத் துணை நிற்க வேண்டும். 1983-ஆம் ஆண்டில் இந்திராகாந்தி தலைமையமைச் சராக இருந்தபோது கோபால் சிங் தலைமையில் ஒரு கமிஷன் இசுலாமியரின் வாழ்நிலையைக் குறித்து ஒரு அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கை, அறிக்கையாகவே இருந்துவிட்டது. 9 ஆண்டு களுக்குப் பின் வி.பி.சிங் ஆட்சியில் தூசி தட்டி யெடுத்துச் செயல்படுத்த விரும்பியது. ஆனால் பிற் போக்குச் சக்திகளும், மதவாத சக்திகளும் அதனை எப்படியோ தடுத்து நிறுத்திவிட்டன. இந்த நிலை சச்சார் கமிஷன் அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. இதில் மக்களும், பொதுவுடைமை இயக்கங் களும், முற்போக்கு அமைப்புகளும் விழிப்போடு செயல்பட வேண்டும்.

சச்சார் கமிஷன் இசுலாமியரின் முன்னேற்றம் குறித்துப் பல பரிந்துரைகளை அளித்திருப்பதோடு சில எச்சரிக்கைகளையும் விடுவித்து உள்ளது. அதாவது, அரசு உதவிகள், இடஒதுக்கீடுகள் மட்டும் அவர் களுக்குப் போதுமானவை அல்ல என்றும், அவர்கள் முதலில் தம் மனநிலையை மாற்றிக்கொண்டு நவீன கல்வியிலும், புதிய வாய்ப்புகளிலும், புதிய பணி களிலும் உள்நுழைய வேண்டுமென்றும் அறிவுறுத்தி யுள்ளது. இல்லையேல், இந்திய வளர்ச்சி என்னும் நீரோட்டத்தில் அவர்கள் இணைய முடியாதென எச்சரித்துள்ளது. இது மிக முக்கியமான அடிப்படை யான கருத்தாகும். இதனைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ரீசா உல்கரீம் (சுநுஷ்ஹ-ருடு-முஹசுஐஆ) என்பவர் தாம் எழுதிய “இசுலாமியரும் காங்கிரசும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் இசுலாமியர்கள் கல்வியைக் கற்கமுன் வராததாலும், அவர்கள் மதக் கல்விக்கே முன்னுரிமை கொடுத்து வருவதாலும் கல்வியில் பின்தங்கிவிட்டார்கள். இதுவொரு பெரும் குறையேயாகும்”.

இந்தக் குறைதான் மேன்மேலும் தொடருகிறது. இதனைத்தான் சச்சார் கமிஷனும் அறிவுறுத்தி உள்ளது. சச்சார் கமிஷனில் உறுப்பினராக இருந்த பொருளாதார நிபுணர் அபுசலே ஷரீஃப் ‘அவுட்லுக்’ இதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியச் சமூக அமைப்பில் சிறுபான்மைப் பிரிவினரான இசுலாமியர்கள், வாழ்க்கையின் முக்கிய அம்சங்களிலிருந்து தனித்து விலகி இருப் பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களையாமல் இடஒதுக்கீடு போன்ற சலுகைகளாலும், நடவடிக்கைகளாலும் எந்தப் பயனும் இல்லை.”5

இதுதான் மிக மிக அடிப்படையான கருத் தாகும்; உடனே விரைந்து செயல்படுத்தத் தக்கது மாகும். அவர்கள் கல்வியைப் புறக்கணித்தால், பட்டங்களைப் பெற முடியாமற் போனால் இட ஒதுக்கீட்டின் பயனைப் பெற முடியாது. அவ்வாறே தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சியுறாமல், தொழில் முனைவோருக்கான அரசின் உதவியையும் பெற முடியாது. இந்த அவல நிலை நீங்க வேண்டுமானால் அவர்கள் கல்வியில் பெருங் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த மாற்றமே அவர் களின் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் பெருக்கும். மதக் கல்விக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதும், பரம்பரைத் தொழில்களில் மட்டும் ஈடுபடுவதும் மாறிவரும் உலகிற்கு ஏற்றதாக இருக் காது. மாறிவரும் வாய்ப்பு மிகுந்த உலகத்திற்கு அவர் அந்நியர்களாக மாறிவிடுவர். இதனால் அவர்களுக்கு இல்லாமையும், வறுமையும் பெருகு வதோடு அவர்களின் தன்னம்பிக்கைகளையும் குலைத்துவிடும். இவற்றால் அமைதியின்மையும், வெறுப்பும் ஏற்பட்டுப் புதிய மாறுதல்களை ஏற்க முடியாத மனநிலைக்கு அவர்களைத் தள்ளிவிடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் அபுசேலே ஷரிஃப், “வாழ்க்கையின் முக்கிய அம்சங் களிலிருந்து தனித்து விலகியிருக்கக் கூடாது என் கிறார்.

ஒரு காலத்தில் (18-ஆம் நூற்றாண்டில்) இந்திய மக்கள் பழமையில் ஆழ்ந்து புதுமையை எதிர் நோக்காது விழிப்பற்ற சமூகமாக இருந்தபோது இராஜாராம் மோகன் ராய், இந்தியர்கள் விழிப்பும் உலக ஞானமும் பெற ஆங்கிலமொழியையும், மேலைத் தத்துவஞானத்தையும் கற்கவேண்டும் என்றார். அவரை அடியொற்றித் தலைவர்கள் பலர் பரப்புரை செய்ததால்தான் இதிகாச - புராண மனப் போக்குகளிலிருந்து பலர் ஓரளவு விடுதலை பெற முடிந்தது. இசுலாமிய மக்களிடையே நவீன கல்வியைப் புகட்ட வேண்டுமென்பதற்காகத்தான் அலிகார் பல்கலைக்கழகம் (1930) தொடங்கப் பெற்றது. அதனால் சிறிது மாற்றம் ஏற்பட்டது; ஆனால் போதுமானதாக இல்லை. அப்பல்கலைக் கழகத்தைப் போன்று பல இடங்களில் பல்கலைக் கழகங்களை உருவாக்கியிருக்க வேண்டும். மற்றும் தலைவர்களும், இசுலாமியச் சமூகத்தின் கல்வி மான்களும் நவீன கல்வியின் தேவையைப் பரப்புரை செய்திருக்க வேண்டும். இவை நிகழாமல் போயிற்று; மக்களாவது சுற்றுச் சூழலையும், மாறிவரும் உலகிற்கு ஏற்பவும் தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும். எதுவும் நடைபெறாமல் போயிற்று. அச்சமூகத்தின் தேக்க நிலைக்கு இவையே காரண மாகும். இசுலாமிய சமுதாயத்தின் மாற்றம் வேண்டாத மனப்பான்மையைச் சிங்காரவேலர் இருபதுகளிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். அதுவும் இங்கு நோக்கத் தக்கது.

“முகமதியர்கள் சில உத்தியோகங்களையும் (இடஒதுக்கீட்டால்) சட்டசபைகளில் சில முகமதிய அங்கத்தினர்கள் தற்காப்பும் பெறுவார்கள். இது தான் இவர்கள் அடையப் போகிற பயன். நடுவில் பாமர மக்கள் தத்தம் மதத்தலைவர்கள் போனபடி அற்ப-சொற்ப விஷயங்களுக்கெல்லாம் மதத் துவேஷத் தையும், சாதி துவேஷத்தையும் காட்டிக்கொண்டு அவதிப்பட்டுக் கடைசி காலம்வரை பசியும் பட்டினியு மாய் இருந்து கிடந்து உழல வேண்டியதே.”

“ஐரோப்பியர்கள் தங்கள் தேசிய குணங்களைக் கண்டிக்கும் மனப்பான்மையில் அபிமானமுற்றே இருந்து வருகிறார்கள். மெய்ஞ்ஞானம் பாமர மக்களுக்குள் பரவுவதாலும் பரந்த நோக்கமும் உண்டாகுகின்றதாலும் வெளிநாட்டார் சிற்றறிவின் நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதில்லை. பகுத்தறிவைப் பாமர ஜனங்கள் மேன்மேலும் உபயோகிக்குமாறு பல வசதிகளை உருவாக்க வேண்டும்.”

தேர்தலில் நின்று வெற்றி பெறுவோர்கள் முன்னேற்றம் அடையலாம். ஆனால் மக்கள் பலன் பெறுவார்களா? அதுதான் முக்கிய வினா. இட ஒதுக்கீட்டால் சிலர் பயன்பெறலாம்; ஆனால் ஒட்டுமொத்த மக்கள் பயனடைவார்களா? ஆகவே இடஒதுக்கீடு மட்டும் போதாது. அடித்தட்டுச் சமுதாயத்தினரும் பயன்பெற வேண்டும். அதற்காகத் திட்டம் வேண்டும். அந்தத் திட்டத்தோடு மக்களின் மனநிலையும் மாற வேண்டும் என்கிறார். மேலை நாட்டினர் தம் கல்வியறிவாலும், அதனால் ஏற்படும் பரந்த நோக்காலும் சிறுமைகளுக்கு இடம் அளிப்ப தில்லை. அந்த நிலை நம் சமுதாயத்தில் உருவாக வேண்டும் என்கிறார் சிங்காரவேலர். அதாவது மக்கள் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார். இதைத் தான் சச்சார் கமிஷனும் அறிவுறுத்தி உள்ளது. சிங்காரவேலர் ஒரு பொதுவுடைமையாளராகவும், அனைத்துச் சமுதாயத்தினர் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் இருந்திருப்பதால்தான் அவரால் இவ்வாறெல்லாம் சிந்தித்திருக்க முடிகிறது. இசுலாமியச் சமுதாயத்தினர் விரைந்து முன்னேற்றமடைய வேண்டு மென்றால், அச்சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தால்தான் எதிர்கால வளர்ச்சி ஏற்படும்.

சச்சார் குழுவின் அறிக்கைகளுக்குப் பின்னர் இசுலாமிய மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றிப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் சுட்டிக் காட்டியிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தருணத்தில் அதனையும் ஒப்பிட்டு நோக்க வேண்டியது இன்றியமையாதது.

“சச்சார் கமிட்டி இசுலாமியர்களின் நிலை குறித்தும் அரசாங்கம் செய்ய வேண்டியது குறித்தும் கூறியுள்ளது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். அல்லது எடுக்காமலும் போகலாம். அல்லது பகுதி யாகச் செய்யலாம். ஆனால் அந்தச் சமுதாயத்தின் பொறுப்பு என்ன? அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு இது சரியான தருணம் என நான் எண்ணுகிறேன்.

“தங்களை நவீனப்படுத்திக்கொள்ளும் வழிகள் குறித்து இசுலாமியர்கள் யோசிக்க வேண்டும். வேகமாக மாறிவரும் உலகில் தங்கள் மாற்றம் குறித்துச் சிந்திக்க வேண்டும்?

“இஸ்லாமிய மக்கள் ஒரு தெரிவு செய்ய வேண்டிய தருணம் இது. இஸ்லாமிய மக்களை ஜனநாயகரீதியில் முன்னேற்றச் செய்யும் அரசியலை அவர்கள் பிற்பற்றப் போகிறார்களா? அல்லது பின்னோக்கி இழுத்துச் செல்லும் அரசியலைப் பின்பற்றப் போகிறார்களா? இசுலாமிய மக்களின் வளமையான வாழ்க்கையும் சிறந்த எதிர்காலமும் நாட்டின் ஜனநாயக அரசியலுடன் பிணைக்கப் பட்டுள்ளன.”

இம்மேற்கோளில் இறுதியாகக் கூறப்பட்டிருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது, இசுலாமிய மக்கள் தங்கள் மனநிலையை நவீனப்படுத்திக் கொள் வதோடு எத்தகு அரசியலைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும் என்கிறார். அதாவது தங்களை முன்னேற்ற வைக்கும் அரசியலையா அல்லது பின்னிழுத்துச் செல்லும் அரசியலையா? என வினவுகிறார். இதுவும் ஓர் அடிப்படையான சிந்தனையாகும். சரியான அரசியலைத் தெரிவு செய்யாததால்தான் இந்தியச் சமூகம் முன்னேற்ற மின்றி ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் உளுத்துப் போய் உள்ளது. அதனால்தான் அறநெறியில் செயல் பட வேண்டிய அரசியல், அதிகார வெறியில் சிக் குண்டுள்ளது. எந்த அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இசுலாமியச் சமூகம் மட்டு மன்றி, ஒட்டுமொத்தமான இந்தியச் சமுதாயமும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். இசுலாமியர்களுக்கும், ஏனைய அனைவருக்கும் அதுதான் சிறந்த வழி; அவ் வழியை எண்ணிச் சிந்திப்போம்; செயல்படுவோம்.

சான்றுகள்

1.    சிங்காரவேலர் - சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் - தொகுதி - 1 - பக் - 28 - 2006 - தென்னக ஆய்வு மையம் - 17, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை சென்னை - 6000014.

2.    முன்னர் குறிப்பிட்ட நூல் - பக் - 351.

3.    மு.கு. நூல் - பக் - 26 - 27.

4.    கே.என்.பணிக்கர் - நவீன இந்தியச் சமூகத்தில் சிறுபான்மையினர் - பக் - 23 - 2007- பாரதி புத்தகாலயம் - 421, அண்ணாசாலை- தேனாம் பேட்டை, சென்னை- 600018.

5.    அபுசலே ஷரீஃப் - அவுட்லுக் (Outlook) 14. 12. 2006

6.    சிங்காரவேலர் - சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் - பக் - 57 - 381 - 2006.

7.    கே. என். பணிக்கர் - நவீன இந்தியச் சமூகத்தில் சிறுபான்மையினர்- பக் - 21, 22 - 25 - 2007.

Pin It