world politicsஅன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவாக இயங்கும் நாங்கள், ம.க.இ.க குழுமாக இருந்து இப்போது மக்கள் அதிகாரம் குழுமமாக மாறியுள்ள அமைப்பில் உறுப்பினர்களாக செயல்பட்டவர்கள். அமைப்புத் தலைமையின் அரசியல் சித்தாந்த  ஓட்டாண்டித்தனம், அதிகாரத்துவ போக்குகள், ஜனநாயக மத்தியத்துவ மறுப்பு, பல்வேறு வகைப்பட்ட சீரழிவு போக்குகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியதால் தலைமையால் பல்வேறு காலகட்டங்களில் வெளியேற்றப்பட்டவர்களும், வெளியேறியவர்களுமே நாங்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்.

சமீபத்தில் மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஒரு பிரிவான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள், பெல் நிறுவன ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக நடந்த ரூ 100 கோடி மதிப்பிலான நில மோசடியில் தொடர்பு கொண்டிருப்பதாக நக்கீரன் வார இதழ் 29.07.2020 அன்று தனது புலனாய்வு கட்டுரையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நாங்கள் எமது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழு சார்பில்

 1. சீரழிவு சகதியில் மூழ்கிப் போன பு.ஜ.தொ.மு-வும் அதன் சகோதர அமைப்புகளும் (04.08.2020)
 2. மக்கள் அதிகாரம் குழுமத்தின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும் (11.08.2020)
 3. சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொள்ள முற்படும் மக்கள் அதிகாரம் குழுமம் (17.08.2020)

ஆகிய கட்டுரைகளை கீற்று இணையதளத்தில் வெளியிட்டோம்.

நக்கீரன் செய்தி, அதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு.- வின் ரகசிய சுற்றறிக்கை, அவற்றின் அடிப்படையில் ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்தும் வகையில் கீற்று தளத்தில் வெளியான கட்டுரைகள், அவற்றுக்கு பதிலாக மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளின் தலைமைகள் தமது வினவு இணைய தளத்தில் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்திகள் ஆகியவை ஊழல், முறைகேடுகள் அக்குழும அமைப்புகளில் புரையோடி விட்டதை உறுதிப்படுத்தின.

இதைத் தொடர்ந்து "இது போன்ற சீரழிவுகளை அம்பலப்படுத்துவது மட்டுமே அதற்கு தீர்வாகிவிடாது. நீங்கள் என்ன மாற்று வைத்துள்ளீர்கள்" என்று பல தோழர்களும், நண்பர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய சமூகம் பற்றிய புரிதலில் உள்ள போதாமையே இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகளின் பொதுவான அம்சமாக உள்ளது. சமூகத்தின் பருண்மையான நிலைமைகளை மார்க்சிய - லெனினிய முறையில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கட்சித் திட்டம் மற்றும் புரட்சிக்கான போர்த்தந்திரம் செயல்தந்திரம் வகுத்து, மக்களின் சமூக உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதற்கு மாறாக வால் பிடிப்பது.

இதற்கு நேர்மாறாக புறநிலை யதார்த்தத்திற்கு பொருந்தாத திட்டத்தை முன்வைத்து மக்களின் உணர்வு நிலைக்கு அப்பால் நிற்பது ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவ்விரு பிரிவினருமே தம்மைப் பற்றிய மிகைமதிப்பீடு என்ற புதை குழியில் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து மீள்வதற்கான வழி தெரியாமல், அதிலேயே மூழ்கிப் போகின்றனர்.

100 ஆண்டு கால கம்யூனிச இயக்க வரலாற்றில் ஏற்பட்ட பிளவுகள் இந்திய சமூகத்தின் சாராம்சமான அம்சங்கள் தொடர்பான கோட்பாட்டு பிரச்சனைகளின் அடிப்படையில் நிகழவில்லை. கட்சிகளின் திட்டங்களும் இந்திய சமூகம் பற்றிய பருண்மையான ஆய்வு அடிப்படையில் உருவாக்கப்படவில்லை..

இதன் விளைவாக, இன்றைய கம்யூனிச இயக்க அமைப்புகள் புறத்தில் பாசிசத்தாலும், அகத்தில் பல்வேறு அளவிலான கோட்பாட்டு சீரழிவாலும் சூழப்பட்டிருக்கின்றன. தனிச் சிறப்பாக, புரட்சிகர கம்யூனிச அமைப்பு என தங்களை அழைத்துக் கொள்ளும் ம.க.இ.க குழுமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், அதனால் அதன் அணிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் ஆகியவை இந்த நிலைமைகளை பரிசீலனை செய்து வினையாற்ற வேண்டிய கடமையை கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும் கூட,

 • சோசலிச முகாம் இல்லாமல் போயிருப்பது,
 • ஒரு நாடு கூட சோசலிச நாடாக இல்லாமல் இருப்பது,
 • பல்வேறு நாடுகளின் கம்யூனிச கட்சிகளில் ஏற்பட்டிருக்கும் கோட்பாட்டுச் சிக்கல்கள்
 • சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை வழி நடத்த அகிலம் இல்லாமல் இருக்கும் வெற்றிடம்
 • நூறாண்டுகளைக் கடந்த பின்பும் இந்தியாவில் கம்யூனிச அமைப்புகள் சிதறுண்டு, புரட்சி எனும் சொல்லை உச்சரிப்பதற்குக் கூட இயலாமல் போயிருப்பது

இவை அனைத்தையும் உடனடியாக மீளாய்வு செய்து, சுயவிமர்சனம் ஏற்று சரியான திசைவழியை வகுத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் முன் இருக்கும் கடமை..

புரட்சிகரக் கோட்பாட்டால் வழிகாட்டப்பட்டு ஜனநாயக மத்தியத்துவம் என்ற அமைப்பு நடைமுறையை பின்பற்றாத கட்சிகள் புரட்சிக்கு எதிரானதாகவே உள்ளன. இந்நிலையில் இந்தத் தேக்க நிலையை உடைத்து முன்னேற வேண்டிய கடமை புரட்சியை நேசிக்கும் எல்லா கம்யூனிஸ்டுகளையும் போலவே ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவாகிய எங்களுக்கும் இருக்கிறது .

இந்நிலையில் நாங்கள் அடுத்த கட்ட பணிகளாக செய்து வருபவை பற்றிய எங்கள் இந்த முன்னோட்ட அறிக்கையை அளிக்கிறோம்.

எமது பிற பணிகளுக்கு இடையே முதன்மையாக

 1. இந்திய துணைக்கண்டத்தின் சமூக அரசியல் பொருளாதார படிவம்
 2. சர்வதேச நிலைமை

ஆகிய இரண்டு தலைப்புகளிலான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.

எங்கள் குழு மேற்கொண்டுள்ள மேற்கண்ட இரண்டு தலைப்புகளிலான ஆய்வுப் பணி என்பது, இந்திய துணைக் கண்டத்தில் சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேக்க நிலையை தகர்த்து முன்னேறுவதற்கான திசை வழியை கண்டுபிடிப்பதும், 21-ம் நூற்றாண்டில் சர்வதேச நிலைமை பற்றியும் அதற்கு அடித்தளமாக இருக்கிற நாடுகளின், வர்க்கங்களின் பொருளாதார வாழ்வின் அடிப்படைகள் பற்றியும் ஆய்வு செய்வதன் மூலம் சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கு எங்கள் பங்களிப்பை செய்வதும் ஆகும்.

இந்தப் பணிகளை நாங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும், எங்களால் மட்டுமே முடியும் என்ற வரம்பு எதையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அப்படி ஏற்படுத்திக் கொள்ளப் போவதும் இல்லை. சமூக அக்கறையுள்ள, சமூக மாற்றத்தை விரும்புகிற, நேசிக்கிற அனைவரின் பங்களிப்பின் மூலமே இது சாத்தியமாகும் என்றே உளமார கருதுகிறோம். எமது இந்த ஆய்வு தொடர்பான கருத்துக்கள், பங்களிப்புகள், கூடுதல் தரவுகள், ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் தோழர்களிடமிருந்தும் பிற அறிவுத்துறையினரிடமிருந்தும் தோழமையுடன் வரவேற்கிறோம்.

அதாவது, எமது ஆய்வுப் பணியின் இலக்கும், நோக்கமும் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பு செலுத்துவதே அன்றி, ஏற்கனவே செயல்படும் பல நூற்றுக் கணக்கான கம்யூனிஸ்ட் குழுக்களில் இன்னும் ஒன்றாக மாறுவது அல்ல. அனைவரிலும் சிறந்தவர்கள் நாங்கள் மட்டுமே என்று தலைகனத்து திரிவதும் அல்ல.

மேலும், எமது இந்தப் பணி முடிவற்ற, இலக்கற்ற பயணத்தை நோக்கியதும் அல்ல. எமது ஒவ்வொரு மணித்துளி அளவு நேர சிந்தனா முறையையும் புரட்சியை நோக்கிய நடைமுறைக்கானதாகவே அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஆய்வில் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கேள்விகள்

அ. இந்திய துணைக் கண்டத்தின் சமூக அரசியல் பொருளாதார படிவம்

 1. சிந்து சமவெளி நாகரீகம் பற்றியும் ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலவிய உற்பத்தி முறை பற்றியும் மார்க்சிய லெனினிய மதீப்பீடு
 2. இந்தியாவில் மார்க்ஸ் வரையறுத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் நிலவியது என்பது பற்றி பருண்மையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் அது பற்றிய மதிப்பீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கின்றனவா?
 3. இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பான அம்சமான வருணாசிரம/சாதிய கட்டமைவு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மீது தாக்கம் செலுத்தியதா தற்போது அதன் தாக்கம் எப்படி உள்ளது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போர்த் தந்திரம், புரட்சிக்கான திசைவழியில் வருணாசிரமம்/சாதி என்ற அம்சம் புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியானதா?
 4. இந்திய சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் மாற்றமும் உலகின் பிற பகுதிகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த வளர்ச்சிப் போக்கிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? அதன் அடிப்படையில் இந்தியாவின் பருண்மையான நிலைமைகளைப் பற்றிய பருண்மையான ஆய்விலிருந்து இந்தியப் புரட்சிக்கான கோட்பாட்டை உருவாக்குவது. எப்படி?
 5. இந்திய சமூகத்தில் தோன்றிய, பரவிய மதங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் என்ன பங்கை செலுத்தின? அவற்றின் தாக்கம் என்ன? மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம், அதன் பின் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு இணையாக வளர்ந்த புரோட்டஸ்டண்ட் இயக்கத்தின் பங்கு ஆகியவற்றுக்கு இணையாக இந்திய மதங்கள் என்ன பங்களிப்பு செய்தன?
 6. இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு பகுதிகளின் வளர்ச்சிப் போக்குகள் ஒரே மாதிரி இருந்தனவா? இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன? மேலும் ஜம்மு&காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுடனான இந்திய அரசின் உறவுகளின் தன்மை பற்றிய மதிப்பீடு.
 7. இந்தியாவின் தேசிய இனங்கள் முழு வளர்ச்சி பெற முடியாததற்கான தடைகள் குறித்து. இது குறித்து பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்திருக்கும் நிலைப்பாடுகள் சரியானவைதானா?
 8. இன்றைய இந்திய அரசியலில் இந்துத்துவ சக்திகளால் கட்டியமைக்கப்படும் இசுலாமியர் பற்றிய வரலாற்றின் போலித்தனத்தின் பின் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? இந்தியாவில் இஸ்லாமுக்கும் பார்ப்பன மதத்துக்கும் இடையேயான உறவு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் பின்பும் எவ்வாறு இருந்தது? மாற்றமடைந்தது? அது உற்பத்தி சக்திகளின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்தியது?

சர்வதேச நிலைமை

 1. 1990-களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவம்
  1. 19-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவத்திலிருந்தும்,
  2. 20-ம் நூற்றாண்டில் உலகப் போர்களின் போதான உலக முதலாளித்துவத்திலிருந்தும்,
  3. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பனிப்போர் கால உலக முதலாளித்துவத்திலிருந்தும் எப்படி வேறுபடுகிறது?
 2. இன்றைய உலகத்தில் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளை ஆளும் பொருளாதார விதிகள் என்ன?
 3. இன்றைய உலகத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பின்தங்கிய உலக நாடுகளுக்கும் இடையேயான சுரண்டல் உறவு எந்தத் தன்மைகளைக் கொண்டுள்ளது?
 4. இந்த சுரண்டல் உறவுகள் இந்தியா போன்ற பின்தங்கிய உலக நாடுகளின் உள்நாட்டு பொருளாதார உறவுகளில் (வர்க்க உறவுகளில்) எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன? எத்தகைய முரண்பாடுகளையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கின்றன?
 5. இந்த உறவுகள் பற்றிய சர்வதேச மார்க்சிய ஆய்வுகள் எனக் கருதப்படுபவை சரியான முடிவுகளை முன்வைக்கின்றனவா?
 6. இன்றைய உலகம் பற்றிய முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன? ஆளும் வர்க்கங்களின் கொள்கையாக அமல்படுத்தப்படும் இந்தக் கோட்பாடுகள் பற்றிய மார்க்சிய லெனினிய விமர்சனங்கள்.
 7. பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த மாற்றங்களை அரசியல் ரீதியாக எவ்வாறு அணுகுகின்றன? எத்தகைய பங்காற்றுகின்றன?

தொகுப்பாகச் சொன்னால், 21-ம் நூற்றாண்டில் புரட்சிகர உடைப்பை ஏற்படுத்தும் கண்ணி பற்றிய மார்க்சிய கோட்பாடு என்ன?

எது அறிவியல் பூர்வமானதோ அதுவே சரியானதாகும். எது சரியானதோ அதுவே வெற்றிபெறும். எப்படியாவது இன்னும் ஒரு குழுவை, அமைப்பை உருவாக்குவதற்காக, எவ்வித சித்து வேலைகளிலும் நாங்கள் ஈடுபட போவதில்லை. ஏனென்றால் அப்படியான முயற்சிகள் அனைத்தும் அறிவியலுக்கு புறம்பானவையே.

நாங்கள் தோற்பதற்காக ஒன்று சேர்ந்து பணியாற்றவில்ல. ஆனால், எமது வாழ்நாளிலேயே எமது இலக்கை அடைந்து விட வேண்டும் என்ற தனிநபர்வாத, அகநிலைவாத கண்ணோட்டங்களையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்.

மார்க்சிய விஞ்ஞானத்திற்கு புறம்பான எந்தக் கருத்தோடும், தரப்போடும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதற்கான எவ்வித உரிமையும் எமக்கில்லை. கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வையும், விடுதலையையும் அடமானம் வைத்து கூட்டம் சேர்ப்பது சுரண்டும் வர்க்கங்களின் பண்பாகும். கம்யூனிசம் என்ற பெயரில் இந்த இழிவான செயலில் ஈடுபடுவோர் ஆளும் வர்க்கங்களின் அடியாட்கள். எனவே அவர்கள் மக்கள் விரோதிகள் என்பதால் எமக்கும் விரோதிகளே.

எனவே, அத்தகைய மக்கள் விரோதிகளை எதிர்த்து நடத்தும் புரட்சியை நோக்கிய பயணத்தில் உறுதியாக நின்று கொண்டு இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மார்க்சிய லெனினிய வழியில் புரட்சிகர பாதையை செப்பனிடும் இந்தப் பணியில் வாய்ப்பும், திறனும், ஆர்வமும் கொண்ட தோழர்கள் இணைந்து கொள்ளும்படி உரிமையுடன் அழைக்கிறோம்.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு