தமிழீழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வு நிலை அவ்வப்போது பொங்கி எழுவதும் தணிவதுமாகவே இருந்து வருகிறது. ஈழ மக்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும் போது அது பொங்கும். அந்நெருக்கடி தளரும்போது அது தணியும் என்பது ஒரு புறமிருக்க, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகளின் நிலைபாடும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இக்கட்சிகள் முன் கையெடுக்கும் போது ஈழ ஆதரவுப் போராட்டங்கள் பரவலாக நடக்கும். அல்லாதபோது அதில் ஒரு தேக்கம் நிலவும். தற்போது அப்படி ஒரு தேக்கமே தமிழகத்தில் நிலவுவதாகப் படுகிறது.

Vaikoதமிழகத்தில் நடுவில் எழுந்து கொந்தளித்த ஒகேனக்கல் பிரச்சனை, அதில் அனைவரது கவனம், முதல்வரின் தணிப்பு அறிக்கை முதலானவை சார்ந்த நடவடிக்கைகள் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். இதனால் ஈழ மக்கள் ஏதோ அவர்கள் இலக்கை அடைந்து விட்டது போலவோ அல்லது அப்பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலவோ தமிழகத்தில் அது பற்றிய கவனம் சற்று மட்டுபட்டிருப்பது போலவே படுகிறது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பது போர்க்களம் மற்றும் அரசியல் களம் இரண்டையும் சார்ந்ததாக இருக்கிறது. போர்க்களத்தில் புலிகள் வெல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஏற்கெனவே பலமுறை மெய்ப்பிக்கப்பட்டது மட்டுமல்ல, தற்போதும் வெளி ஒயா ராணுவத் தளத்தின் மீதான விமானத் தாக்குதல் மூலம் அதை மெய்ப்பித்து வருகிறார்கள். ஆனால் அரசியல் களத்தில், இதிலும் புலிகள் மிகவும் சாதுர்ப்பதத்தோடு நடந்து கொண்ட போதிலும், அவர்களின் போராட்ட நியாயத்தை ஏற்று ஈழ மக்களின் தன்னுரிமையை அங்கீகரிக்க உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் தான், ஆதிக்க சக்திகள் கடும் முட்டுக்கட்டை போட்டு, புலிகளுக்கு எதிரான கருத்தைப் பரப்பி வருகின்றன.

அமெரிக்கா புலிகள் அமைப்பை “பயங்கரவாத அமைப்பு” என அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிரான கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா புலிகள் அமைப்பைத் தடைசெய்து சிங்கள இனவெறி அரசுக்குப் பல வகையிலும் உதவி தொடர்ந்து ஈழ மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியல் களத்தில் உலக நாடுகள் தரும் இந்நெருக்கடி போர்க்களத்தில் புலிகளின் வலிமையை பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதாலேயே இது குறித்து அச்சப்பட வேண்டியுள்ளது.

என்னதான் புலிகள் திறமையும் தீரமும் உள்ளவர்கள் என்றாலும், இலங்கை அரசு அன்றாடம் போராளிகளை அடுக்கடுக்காகக் கொன்றுவருவதாக, போராளிகள் சரணடைந்து, வெளிநாட்டில் வேலை வாங்கித்தரக்கோருவதாக, பொய்ச் செய்திகளைப் பரப்பினாலும், இது ஏதோ ஒரு வகையில் சிறிதளவாவது போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற கவலையும் ஏற்படுகிறது. இந்நிலையில்தான் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவளித்தும், வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம் உலக நாடுகளின் கவனத்தை அப்போராட்டத்தின் பக்கம் ஈர்த்தும் அதன் நியாயத்தை உணரச் செய்து வரும் திருவாளர்கள். பழ. நெடுமாறன், வைகோ, ஆகியோரது நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இதில் பழ. நெடுமாறன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, லண்டன் தமிழ் ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதே போல, வை.கோ. அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்க முதலே சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்து இச்சிக்கலுக்கு ஒரு சுமூகத் தீர்வு காண முயன்று வரும் நார்வே நாட்டிற்குச் சென்று அங்கு ‘தெற்காசிய நாடுகளின் அமைதியும், அச்சமும்’ என்கிற அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டு ஈழ ஆதரவுக் குரலை உரத்து எழுப்பியதோடு, நார்வே அமைச்சர் ‘எரிக்சோல் ஹைம்’மையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஒரு நெருக்கடியான சூழலில் இச்சந்திப்பும் பயணமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், இது உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் உள்ளிட்டு சனநாயக உணர்வுள்ள அனைத்து மக்களாலும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் “சிங்கள அரசு எதிர் ஈழப் போராட்டம்” தொடர்பாக இந்திய அரசு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதே தில்லி அரசியல் நோக்கர்கள் கருத்து. அதாவது இந்தியாவை ஏமாற்றி இந்திய அரசிடம் ஆயுதம் வாங்கி வரும் சிங்கள அரவு, சீனா, பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக உறவு வைத்து சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது இந்திய நலனுக்கு உகந்ததல்ல என்பதால் இது ஆட்சியாளர் மத்தியில் புதிய அணுகுமுறைக்கு வித்திடும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தையும் இதற்கு சாதகமாகக் கொள்வதானால் நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் எனறே எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இச்சூழ்நிலையில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்க, தமிழக அரசியல் கட்சிகள், மக்கள் செய்ய வேண்டுவதெல்லாம் புலிகளின் அவ்வப்போதைய தாக்குதலை, அதில் அவர்கள் ஈட்டும் வெற்றியை மட்டுமே பாராட்டி, மகிழ்ந்து, புலிகள் எப்படியும் வெல்வார்கள், ஈழம் மலர்வது உறுதி என்று சும்மா அதையே சொல்லி மன நிறைவடைந்து வாளாயிருக்காமல், ஈழ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இன்னல்களையும் படும் இடர்ப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, அதைக் களையவும் ஈழமக்கள் நலன் காக்கவும் போராடுவதில் தமிழர்கள் என்ற வகையில் நாம் முதன்மையான பங்கு கொண்டு, ஈழ ஆதரவு மக்கள் போராட்டங்களை தமிழகமெங்கும் நடத்த முன் வரவேண்டும் என்பதுதான்.

- மண்மொழி 22, 2008, மே - ஜூன்

Pin It