இந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று!
இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்பவில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின் அறிக்கை, இந்தியக் கல்விச்சூழலின் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வுகளாக அவர்கள் தருபவை சரியானவை தானா என்பதில்தான் பிரச்னை.
1) உலகம் முழுவதுமே, ‘பின்லாந்து போல கல்விச் சூழலை உருவாக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேர்கிறார்கள். ஏழு வயதில்தான் முறையான கல்வி தொடங்குகிறது. ஆனால், நம் தேசியக் கல்விக் கொள்கை, மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக் கல்விக்குள் கொண்டு வருகிறது.
2) கிராமப்புற ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதில் அங்கன்வாடிக்குப் போய் சத்து உருண்டையும், சத்துணவும், முட்டையும் சாப்பிட்டபடி பொழுதைப் போக்குகின்றன. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பில் இந்த அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரவேண்டும் என்பதுதான் இந்த அங்கன்வாடி களின் இலக்கே தவிர, கல்வி தருவது அல்ல! அதனால், பெயரளவில் பாடங்கள் நடத்தப்படு கின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் யாரும் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.
3) இன்னொரு பக்கம் நகர்ப்புற பணக்காரக் குழந்தைகள், மூன்றரை வயதில் உயர்தரமான கான்வென்ட்டில் எல்.கே.ஜி படிக்கப் போகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அங்கன்வாடி குழந்தைகள் இவர்களுடன்தான் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் போட்டியிட வேண்டும்.
4) அங்கன்வாடிகளோ, கே.ஜி வகுப்புகளோ பள்ளிக் கல்வியின் அங்கமாக இல்லை. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறும் தேசிய கல்விக் கொள்கை, குழந்தைகளை மூன்று வயதிலிருந்தே பள்ளிக் கல்வி வரம்புக்குள் கொண்டு வரச் சொல்கிறது. எனவே, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அங்கன்வாடிகள் இனி கல்வித்துறையின் அங்கமாக ஆகிவிடும். அங்கன்வாடிகளையும் பள்ளிகளையும் இணைத்துக் கல்வி வளாகங்களை உருவாக்கச் சொல்கிறது கஸ்தூரிரங்கன் கமிட்டி.
5) இப்போது இருக்கும் பத்தாவது மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி முறையும் மாற்றப்படுகிறது. பள்ளிக் கல்வி என்பது இனி 15 ஆண்டுகள். மூன்று வயது முதல் ஐந்து ஆண்டுகள் அடிப்படைக் கல்வி. பிறகு மூன்று ஆண்டுகள் ஆரம்பக் கல்வி. மூன்று ஆண்டுகள் நடுநிலைக் கல்வி. நான்கு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வி (5+3+3+4=15), மேல் நிலைக் கல்வி எனத் தனியாக இனி இருக்காது. அது உயர்நிலைக் கல்வியாக மாற்றப்படும்.
6) 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் முறை அமலுக்கு வரும். பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கிடையாது. அதற்குப் பதிலாக நான்கு ஆண்டுகளில் எட்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். (கல்லூரிகளில் இளநிலைப் பட்டம் படிக்கச் சேர்வதற்கே நீட் போல ஒரு தேர்வு கொண்டு வரும் உத்தேசத்தில் உள்ளது மத்திய அரசு. இனி எந்தக் கல்லூரியில் சேர்வதற்கும் தனித் தேர்வு எழுத வேண்டிய சூழல் வந்துவிடும் என்பதால், பிளஸ் 2 என்பது தனியாகத் தேவைப்படாது.)
7) இப்போது கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி தருவது அமலில் உள்ளது. இதை 12-ம் வகுப்பு வரை விரிவுபடுத்துமாறு தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
8) ஆசிரியர், மாணவர் விகிதம் 1:30 என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.
9) ஆரம்பப் பள்ளி முடித்துவரும் மாணவர்களில் பலர் எழுத்துக் கூட்டிப் பாடங்களைப் படிக்கத் தெரியாதவர்களாகவோ, அடிப்படைக் கணக்கு களைக்கூட போடத் தெரியாதவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் படிக்கவும் கணக்குகள் போடவும் புதுமையாகச் சிந்திக்கவும் பாடவேளை ஒதுக்கப்படும்.
10) மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவை சிறப்பாகத் தோன்றும். ஆனால், இவற்றை நடைமுறையில் சாத்தியமாக்க எந்த வழிமுறையும் பரிந்துரைகளில் சொல்லப்பட வில்லை. குருகுலப் பள்ளி முதல் சர்வதேசப் பள்ளி வரை இந்தியாவில் ஒன்பது விதமான பள்ளிகள் உள்ளன. கரும்பலகையும் ஆசிரியர்களும்கூட இல்லாத பள்ளிகள் ஒரு பக்கம்; ஸ்மார்ட் வகுப்பறைகளும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களும் கொண்ட பள்ளிகள் இன்னொரு பக்கம். இங்கு ‘சம வாய்ப்பு’ எப்படி வரும்? அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைப்பது பெருமளவு நிதி தேவைப்படும் விஷயம். அதை செலவிடுவது மாநில அரசா, மத்திய அரசா? ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையே மாநில அரசுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன. புதிய ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்?
11) மூன்றாம் வகுப்பு முதல் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். இதற்காக ‘மனிதவள மேம்பாட்டுத் துறை’ என்ற பெயரையே ‘கல்வித் துறை’ என மாற்றச் சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை. எனில், மாநில அரசுகள் இனி என்ன செய்யும்? இப்படி விடை தெரியாத பல கேள்விகளை அந்தரத்தில் விட்டுச் செல்கிறது இந்தப் புதிய கொள்கை.
12) உயர்கல்வி விஷயத்திலும் இப்படித்தான் உள்ளது. ஆசிரியர்களின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் கஸ்தூரிரங்கன் கமிட்டி, புற்றீசல் போல தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை மூடச் சொல்கிறது. இளங்கலைப் படிப்பும் பி.எட் படிப்பும் இணைந்து நான்கு ஆண்டு பட்டம் புதிதாகத் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இப்படி பல விஷயங்கள் ஒழிக்கப்படுகின்றன.
13) பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப் படும். அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் ஒரே அமைப்பாக இது இருக்கும். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) போன்ற அமைப்புகள் வெறுமனே தொழில்நுட்பத் தரத்தை வரையறுக்கும் அமைப்புகளாக மட்டுமே இருக்கும்.
14) கல்லூரிகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெறும் முறை ஒழிக்கப்படும். ஒவ்வொரு உயர்கல்வி நிலையமும் சுயேச்சை யாகச் செயல்படும். வரும் 2032-ம் ஆண்டுக்குள் கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகவோ, தனி பல்கலைக்கழகமாகவோ மாறிவிட வேண்டும். அல்லது ஏதாவது பல்கலைக் கழகத்துடன் இணைந்துவிட வேண்டும்.
15) 2020-ம் ஆண்டுக்குப் பிறகு தன்னாட்சிக் கல்லூரிகளை மட்டுமே புதிதாகத் தொடங்க முடியும். எந்த புதுக் கல்லூரியும் பல்கலைக்கழக இணைப்பு பெற முடியாது.
16) இளங்கலை, இளம் அறிவியல் பட்டங்கள் பலவும் நான்கு ஆண்டுகள் படிப்பதுபோல பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
17) எம்.ஃபில் ஆராய்ச்சிப் பட்டம் கைவிடப்படும். இனி பிஹெச்.டி மட்டுமே ஆராய்ச்சிப் படிப்பாக இருக்கும்.
18) நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பது இனி இருக்காது. இனி பல்கலைக்கழகங்களின் வேலை, கல்லூரிகளைக் கண்காணிப்பது அல்ல... ஆராய்ச்சி செய்வதும் பாடம் நடத்துவதும் மட்டுமே.
இவ்வளவையும் விவரிக்கும் கல்விக் கொள்கை, கடைசியாக வைத்திருப்பதுதான் ட்விஸ்ட். திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தராத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் மோடி. இப்போது ‘ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்’ என்ற பெயரில், தேசிய கல்வி ஆணையம் அமைய உள்ளது. பிரதமர்தான் இதன் தலைவர். கல்லூரி அங்கீகாரம் தருவது முதல் ஸ்காலர்ஷிப் தருவது வரை இந்தியாவில் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் எல்லா அமைப்புகளும் இதன் கட்டுப்பாட்டில் வந்து விடும். இந்த அமைப்புக்கு வழிகாட்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்படும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் இதில் இருப்பார்கள். எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப் படுவார்கள் என தேசிய கல்விக் கொள்கை எதையும் சொல்லவில்லை.
கல்லூரிகளுக்குக்கூட தன்னாட்சி வழங்கத் தயாராக இருக்கிற கல்விக் கொள்கை, ‘கல்வி விஷயத்தில் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் தரத் தயாராக இல்லை’ என்பதையே சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறது! தமிழில் வேண்டும்!
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. மே 31ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜூன் 30 வரை இந்த வரைவு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து அளிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘சுமார் 400 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இதைப் படித்து கருத்துச் சொல்ல போதுமான காலக்கெடு வேண்டும். தமிழ் உட்பட மாநில மொழிகளில் இதைத் தர வேண்டும்’ எனக் கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை கஸ்தூரிரங்கன் கமிட்டி ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரிடம் கடந்த 2018 டிசம்பர் 15ஆம் தேதி கொடுத்தது. ஆனால், அது ஆறு மாதங்களாக அப்படியே தூசு படிந்து கிடந்தது. இப்போது ரமேஷ் போக்ரியால் இந்தத் துறையின் அமைச்சரானதும் அவரிடம் மீண்டும் தரப்பட்டு, அவசர அவசரமாக இதைச் சட்டமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இவ்வளவு அவசரம் ஏன்?’ என்பதுதான் கல்வியாளர்களின் கேள்வி.