என்னடா தலைப்பு இது, "La Belle Dame Sans Merci !!"-இது நான்

ப்பெரிஞ்ச் பாஸ்,"அழகிய இரக்கமற்ற பெண்ணே!"-னு அர்த்தம்,--இது பாலு

"எப்ப இருந்துடா ப்பெரிஞ்ச் கிளாஸ் எல்லாம் போற, யாருடா அந்த பொண்ணு"

"எப்படி பாஸ் கண்டுபிடிச்சீங்க"

"நீ வேற எதுக்குடா ப்பெரிஞ்ச் கிளாஸ் போவ"

"சந்தியானு பேரு"

"யாருடா நம்ப சன் ம்யூசிக் சந்தியா-வா"

"பாஸ், எந்த காலத்துல இருக்கீங்க, சன் ம்யூசிக் சந்தியா,ஹேமா சின்ஹா எல்லாம் எப்பவோ கல்யாணம் ஆகி போயாச்சி,
இது விசாகபட்டினம் சந்தியா, என்ன அழகா தெலுங்கு பேசுறா தெரியுமா!!"

"ம்ம்ம்ம்"

"பாரதி, "சுந்தர தெலுங்கு"-னு சொன்ன போதெல்லாம் நான் நம்பல"

"உன் காதலுக்கு ஏன்டா பாரதிய இழுக்கிற"

பாலு என் பள்ளி தோழன், நண்பன், ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். பாஸ் என்பான், சில சமயம் வாடா போடா என்பான்.

வாரத்தின் முதல் நாள். அலுவலகம் முடிந்து வீட்டிற்க்கு கிளம்பி கொண்டிருந்தோம். சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன்.
பெங்களுரின் "புகழ் பெற்ற" தொம்லூர் மேம்பாலமும், அதை ஒட்டிய ஏர்போர்ட் ரோடும் வாகன நெரிசலில் வழிந்தது. ரிசப்ஷன் வழியே சென்று கொண்டிருந்தோம்.

"பாலு, நீங்க இன்னும் அந்த Pslam 1562 ஜோக் சொல்லவே இல்ல"--இது பிலோஸியா, அலுவலக ரிசப்ஷனிஸ்ட்,கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் கேரள பெண்.

"பாஸ், ஒரு நிமிஷம், அந்த ஜோக் சொல்லிட்டு வந்துடுறேன்"

"என்னடா சுஜாதா சார் நாவல்-ல வர்ற வசந்த் -னு நெனைப்பா, இவகிட்டயும் ஆரம்பிச்சிடியா", என்று இழுத்துக்கொண்டு லிப்டிற்கு சென்றேன்.

" நாளைக்கு கண்டிப்பா சொல்றேன் பிலோ".

"பாஸ், இலங்கை தமிழர்களுக்கு அடுத்தபடியா அழகா தமிழ் பேசுறது நம்ப பிலோஸியா தான், நீங்க என்ன சொல்றீங்க"

"சும்மா இருடா"

பாலுவிடம் பிடித்தது, அவனது புத்திசாலித்தனம், பிடிக்காதது. உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட எல்லா அழகான பெண்களிடமும் காதல் கொண்டிருக்கிறான். அது காதல் இல்லடா என்றால் ஒப்புக்கொள்ள மாட்டான். இப்போ லேட்டஸ்ட்- சந்தியா.

லிப்டில், வினய்யையும், அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ப்ரீத்தியையும் பார்த்தோம். வினய் எங்க டீமில் புதிதாக சேர்ந்தவன். Protcol stack நிபுணன். இளைஞன், வசீகரமானவன்.ப்ரீத்தி அவனுக்கு தூரத்து சொந்தம் போல. பெங்களூர் பெண்களுக்கென்று இருக்கும் சில வகுக்கப்படாத நியதிகளில் நிச்சயம் பொருந்துவாள். அழகிய வட்ட முகம், பெரிய கண்கள், அலட்சிய புன்னகை, அழுத்தமான உதடு. சிவப்பு நிற சேலை கட்டியிருந்தாள் என்று வர்ணித்தாள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் அது தான் உண்மை. சம்பிரதாய ஹலோ பரிமாறிக் கொண்டோம்.

பார்க்கிங்ல், வினய்யின் பல்சர்-150-ல் நளினமாக உட்கார்ந்தாள். அழகாக வினய்யை அணைத்துக் கொண்டாள். அவளின் கூந்தல் காற்றில் படப்படக்க, பல்சர் பறந்தது. பாலு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"மேட் பார் ஈச் அதர், இல்லயாடா பாலு" - என்றேன்

"இப்பவே சொல்ல முடியாது பாஸ், கல்யாணம் ஆகி பத்து வருசம் கழித்து தான் கமென்ட் பண்ண முடியும்."

"நீ ஒரு பெஸிமிஸ்ட்டா"

"இல்ல பாஸ் நான் சொல்றது தான் நிஜம்"

அவன் சொல்றதும் சரி தான். மனிதனின் தன்மைகள் அடிக்கடி மாறுகிறது.சில நிகழ்வுகள் வாழ்வின் போக்கையே மாற்றிவிடுகிறது. எங்களுக்கும் தெரியவில்லை, அடுத்த அத்தியாயத்தில் அந்த ஜோடி பிரியப்போகிறது என்று.

====================================================================
2

நான் நினைச்ச மாதிரியே பாலு அலுவலகம் வந்தவுடன் சந்தியா புராணம் தான் பாடினான்.

"என்னடா ப்பெரிஞ்ச் கிளாஸ் எல்லாம் எப்படிடா போகுது"

"சந்தியா மாதிரியே ஸோ ச்வீட் பாஸ்"

"டேய் அந்த மங்களூர் பொண்ணு ஷாலினி என்னடா ஆனா?"

ஷாலினி, சந்தியாவுக்கு முன்னாடி பாலு மையல் கொண்ட பெண்.

"ஒரு முயல்-னால அந்த காதல் பிரிஞ்சுடிச்சி பாஸ்"

"என்னடா சொல்ற"

"ஷாலு, என் பிறந்த நாலுக்கு ஒரு முயல் குட்டி கிப்ட் தந்தா"

"ஹ்ம்ம்ம்"

" நம்ப பசங்க கிட்ட இத பத்தி சொன்னேன், அவனுங்களும், "உனக்கு முயல் கறி பிடிக்கும்கிறதாலே தான்
முயல் கிப்ட் பண்ணி இருக்கா"ன்னு சொல்லிட்டு அந்த முயல அப்படியே முயல் வறுவல் பண்ணி சைட் டிஷா சாப்பிட்டோம்"

"ம்ம்ம்ம் அப்புறம்"

"அடுத்த நாள் ஷாலு முயல் எப்படி இருக்கு-ன்னு கேட்டா, நானும் வெகுளியா முயல் கறி சூப்பர்-னு சொன்னேன்,
அவ்வளவு தான், அப்ப அழுந்துட்டு போனவ தான், மறுபடியும் என் கிட்ட பேசவே இல்ல"

"எனக்கு முயல் கறி புடிச்ச மாதிரி, ஷாலுவுக்கு முயல்னா உயிர்னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது"

"நீ திருந்த மாட்டடா"

"சந்தியா-க்கு பர்த்டே வருது பாஸ்,பர்த்டே அப்ப கரேக்டா விஷ் பண்ணா டிரிட் தரேன்னே சொல்லி இருக்கா,
இப்ப அவ பர்த்டே கண்டுபிடிக்கனும்"

"எம்ப்ளாயி டேடாபேஸ்ல பாத்தா தெரியும்"

"அங்க தான் பாஸ் ஒரு கேட்ச், டேடாபேஸ்ல இருக்கிறது, 10-வதுக்காக ஸ்கூல்ல குடுத்த வுடான்ஸ் பர்த்டே,
நேனு நிஜங்கா பர்த்டே ஆமே வெதுக்குதுன்னானு"

"என்னடா சொல்ற"

"பாஸ், இது தெலுங்கு, எப்படியும் அவ உண்மையான பர்த்டே கண்டுபிடிச்சி அவள மடக்கணும்"

" நீ என்னவோ பண்ணு, அந்த மெமரி லீக் ப்ராப்ளம் என்னடா ஆச்சி, ப்ரெஞ்ச்காரன் மெயில் பண்ணியிருக்கான்"

"வினய் பிக்ஸ் பண்ணிட்டான் பாஸ், பக் ரிப்போர்ட் சொல்லுது, இன்னைக்கு ரிலிஸ்ல போயிடும் போல"

வழக்கம் போல டெலி கான்ப்பரன்ஸ்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது என் மொபைல் அழைத்தது. வினய்யின் அப்பா பேசினார். குரல் உடைந்திருந்தது. வினய் அடிபட்டு செயின்ட் ஜான் ஸ் ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கிறார்கள் என்ற அளவுக்கு புரிந்தது. வெறும் அழுகை சத்தம் தான் கேட்டது.

பாலுவை அழைத்துக் கொண்டு அவனது பல்சர்இல் கிளம்பினோம். காலை பதினோரு மணிக்கும் டிராபிக் இருந்தது. ஈஜிபுரா சிக்னல்,சோனி வோர்ல்ட் சிக்னல் தாண்டி, வாட்டர் டேங்க் சந்திப்பில் ஒன்வேயில் குறுக்கு வழியில் புகுந்து ஹாஸ்பிட்டலை அடையும்போது பதினொன்னறை.

வண்டிய பார்க் பண்ணிட்டு, ரிசப்ஷனில் விசாரித்து ICU-யை நோக்கி நடந்தோம். அன்றலர்ந்த மலர்கள் போல அழகழகான குழந்தைகள். சிரிக்கின்றன, சில குழந்தைகள் அழுகின்றன.கீமோதெராபியினால் முடியிழந்த இளைஞன்,நோயுற்ற வயதான பாட்டி, அவரை கூட்டி வரும் வயதான பெரியவர், வாழ்வின் நிலையாமையை பக்கத்தில் இருந்து பார்க்கும் மருத்துவர்கள்.
எல்லோரையும் கடந்து ICU-வை அடைந்தோம்.

ப்ரீத்தி அதே சிகப்பு கலர் சேலையில் இருந்தாள். சேலை கசங்கி இருந்தது.வினையின் அக்கா மடியில் தலை வைத்து அழுதுக் கொண்டிருந்தாள். வினய்யின் அப்பாவும் அம்மாவும் தலையை பிடித்துக்கொண்டு எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். சூழ் நிலையின் தீவிரம் புரியாமல் நாங்கள் விழிக்க, வினையின் அக்கா கணவர், எங்களை வெளியே அழைத்து சென்று சொன்னபோது தான் தெரிந்தது, வினய் இறந்து அரை மணி நேரம் ஆகிறது என்று.

===========================================
3

நேற்று, அந்திம நேரம் கடந்து இன்னர் ரிங் ரோடில் பைக்கை நிறுத்தி பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள், யாரோ நாலு பேர் காரில் வந்திருக்கிறார்கள், உருட்டுக் கட்டை,பேட்,ஹாக்கி ஸ்டிக் எல்லாம் கொண்டு வினய்-யை தாக்கியிருக்கிறார்கள்.

இந்திரா நகர் சப்-இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். பாலுவும் அவரும் ஏதோ பால்ய சிநேகிதர்கள் போல பேசிக்கொண்டனர்.

"சார், இவர் என் பாஸ்"

"பாஸ், இவர் நஞ்சுண்டப்பா,சப்-இன்ஸ்பெக்டர்"

"க்ரைம் இன்னர் ரிங் ரோடில் நடந்ததனால நான் விசாரிக்க வேண்டி இருக்கு" சலித்துக் கொண்டார்.45 அல்லது 50 வயது இருக்கலாம்.பியர் தொப்பை. எதற்காக கூலிங் கிளாஸை கழட்டாமல் இருக்கிறார்? தெரியவில்லை.

"எப்படிடா போலிஸ் எல்லாம் பழக்கம்"

"அக்க்ஷயா பார்-ல நாங்களாம் ரெகுலர் கஸ்டமர்ஸ்,smirnoff உள்ள போச்சின்ன எங்க உலகத்துல யாரும் வர முடியாது"

"நீ திருந்த மாட்டடா"

நான்,நஞ்சுண்டப்பா,பாலு,ப்ரீத்தி மட்டும் தனியாக இருந்தோம். கன்னடா-வில் கேள்வி கேட்டார்.

"சரியா எத்தனை மணிக்கு நீங்க ரிங் ரோட்ல இருந்தீங்க"

"எட்டு எட்டரை மணி இருக்கும்" கொஞ்சம் தேம்பினாள்,விம்மினாள், அழுதாள்.

"அதுக்கு முன்னாடி எங்க போனீங்க"

"பாரிஸ்டா காபி பார்"

"எந்த பாரிஸ்டா"

"கோரமங்களா 5-வது பிளாக்"

"அப்புறம்"

"இன்னர் ரிங் ரோட்ல,அந்த சின்ன பிரிட்ஜ் கிட்ட நின்னுட்டு இருந்தோம்,
flight landing point-la"

"அது என்னடா ப்ளைட் லேண்டிங் பாய்ண்ட்"--இது நான்.

"பாஸ், IRR-ரோட்ல, ஏர்போர்ட் போற வழியில, ஈஜிபுரா சிக்னல் தாண்டி, அந்த சின்ன பிரிட்ஜ்-ல இருந்து பாத்தா
ப்ளைட் லேண்ட் ஆகுறது நல்லா தெரியும்,இப்ப புது ஏர்போர்ட் தேவனஹள்ளிக்கு போயிட்டதால,அது காதலர்களுக்கு
மறைவான இடம்"

"ம்ம்ம்"

"எவ்வளவு பேர் வந்தாங்க"

"நாலஞ்சு பேர் இருப்பாங்க"

"எதுல வந்தாங்க"

"நான் கவனிக்கல"
மறுபடியும் அழுதாள்.எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். எப்படி எப்படி எல்லாம் வாழ வேண்டும் என யோசித்திருப்பார்கள். எவ்வளவு அந்நியோன்யமாக வண்டியில் அவனை அணைத்துக் கொண்டாள், இப்பொழுது அவன் உயிறற்று,இவள் அவன் நினைவுகளோடு மட்டும். வள்ளுவன் சொன்ன "நெருநெல் உளனொருவன்.."
தான் ஞாபகம் வந்தது.

இன்னும் கொஞ்சம் கேள்வி கேட்டார். பின்னர் கொஞ்சம் தேறியவுடன் கேட்கலாம் என விட்டுவிட்டார்.வெளியே வந்தோம்.

"எப்.ஐ.ஆர் போடனும், ப்ரைம பேஸிய எவிடன்ஸ் சேகரிக்கனும், டாக்டர் சர்டிபிகேட், பி.எம் ரிப்போர்ட் எல்லாம் வேணும்,
லாங் வே டு கோ,இந்த சாப்ட்வேர் வந்ததுல இருந்து குற்றம் அதிகமாயிடுச்சி"-என்றார்.

நாங்கள் கிளம்பும்போது தான் பாலு, இன்ஸ்பெக்டரிடம் சொன்னான். "சார், நீங்க ஒரு முறை சுதா-வ விசாரிச்சிடுங்க"

"யாரிந்த சுதா?"

"வினய்-வோட முன்னால் கேர்ள்பிரண்ட்"

==========================================================
4

சமீப காலமாக, ஆஹா FM கேட்பதிலிருந்து மாறி, வெறும் தெலுங்கு பாடல்களா பாலு கேட்டுக் கொண்டிருந்தான்.
சனிக்கிழமை பிற்பகல்.வினய் பற்றிய சோகம் அலுவகத்தில் மறக்கப்பட்டிருந்து. "எப்படிடா வினய்-வோட கேர்ள்பிரண்ட் சுதாவ தெரியும்"

"வினய் புதுசா சேர்ந்ததால, அவனோட இன்கமிங்,அவுட்கோயிங் மெயில செக்குரிட்டிக்காக கொஞ்சம் படிக்கவேண்டியதா இருந்தது, சுதா-னு சொல்லிட்டு ஒரு பொண்ணுகிட்ட இருந்து மெயில், அதும் நம்ப காம்பிடிங் கம்பனில வேலை பண்றா,ஆனா நோ டிரான்ஸ்பர் ஆப் கான்பிடன்ஷியல் இன்போ,பட் "யூ ஆர் மாஸ்குலைன்,ஐ வாண்ட் யூ",மாதிரி
நிறைய மெசெஜஸ்"-னு சொல்லிட்டு ஐந்தாவது முறையாக ஏதோ "நுவு நுவு"-னு தெலுங்கு பாட்டு பாடினான்.

"என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கிற"

"பாஸ்,சந்தியாவுக்கு இன்னைக்கு பர்த்டே,காலைல தான் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி, விஷ் பண்ணேன்"

"எப்படிடா கண்டுபிடிச்சே உண்மையான பர்த்டே-ய"

"மெதொடிகல் அப்ரோச் பாஸ், சந்தியாவோட உண்மையான பர்த்டே யாருக்கு தெரியும்"

"ம்ம்ம்..அவ அப்பா, அம்மா,கூட பிறந்தவங்க,இல்லனா அவ பிரண்ட்ஸ்"

"சரி,அவ விட்டுக்கு கால் பண்ணி, அவளோட தம்பி கிட்ட, நாங்க ICICI-ல இருந்து கால் பண்றோம், வெரிபிகேஷனுக்காக, உங்க அக்காவோட உண்மையான டேட் ஆப் பர்த் சொல்லுங்கனு கேட்டேன், பையன் அப்பாவி பாஸ், அம்மா கிட்ட கேட்டு, கரெக்ட்டா சொல்லிட்டான்"

"வீட்டு போன் நெம்பர் தான் டேடாபேஸ்ல இருக்காதே, எப்படி கிடைச்சுது"

"அது சிம்பிள் பாஸ்,சந்தியாவ பாலோ பண்ணி அவ வீட்டு அட்ரெஸ கண்டுபிடிச்சேன், அப்புறம் karnataka.bsnl.co.in-ல அட்ரெஸ குடுத்தேன், அவ அப்பா பெயர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற வீட்டு நெம்பர கரெக்ட்டா குடுத்துடிச்சு,பிஎஸ்என்எல் வாழ்க"

" நீ திருந்த மாட்டடா, எப்ப உனக்கு ட்ரிட் தர போறா"

"இன்னைக்கு ஈவினிங்"

அப்ப தான் பாலு போன் சிணுங்கியது.
பேசிவிட்டு சொன்னான்.
"பாஸ், நஞ்சுண்டப்பா வரார்.வினய் மர்டர் கேஸ் சால்வ் ஆயிடுச்சாம்"

"என்னது?"

நஞ்சுண்டப்பா வந்தவுடன் நாங்களும் கார் பார்க்கிங் சென்றோம்.

"என்ன சார், சுதா எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாளா"

"சுதா இல்ல பாலு,ப்ரீத்தியையும்,அவ காதலன் நவீனையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்,முதல்ல சந்தேகத்துல தான் அரெஸ்ட் பண்ணோம், அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டாங்க"

"என்ன சார் சொல்றீங்க,ப்ரீத்திக்கு காதலனா,எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ரிலாக்ஸ்"-என்றவர் தொடர்ந்தார்," ரிங் ரோட்ல இது நடந்து இருக்கு,மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல, ஏன்னா வந்து அடிச்சவங்க எதுவும் திருடல,ப்ரீத்தியும், வினய்-யும் அந்த இடத்துக்கு இரவு 7:45க்கு வந்து இருக்காங்க, நவினும் அவன் பிரண்ட்ஸும் வந்து அடிச்சது, சம்வேர் பிட்வீன் 8:00 அண்ட்
8:30"

" நவீன எப்படி புடிச்சீங்க, கதைல அவன் எங்க வந்தான்"

"கதைல அவன் ஆரம்பத்துல இருந்தே இருக்கான், அவன் தான் எல்லாத்தையும் பிளான் பண்ணியது, நவீனும், ப்ரீத்தியும் காதலிக்கறது ப்ரீத்தி வீட்ல பிடிக்கல,ஸோ சொந்தகார பையன் வினய்-யை ப்ரீத்திக்கு நிச்சயித்துயிருக்காங்க,
வினய்கும் இந்த காதல் நல்லா தெரியும், ஆனா ப்ரீத்தி மேல வினய்-க்கு மோகம்ககிறதால, இவனும் ரொம்ப ஆசைபட்டுயிருக்கான்,அதுக்கப்புறம் வினய் ப்ரீத்தியை ரொம்ப தொந்தரவு பண்ணியிருக்கான்.."

"அதுக்காக கொலை பண்றதா"

"இல்ல,சும்மா கொஞ்சம் தட்டி மிரட்டுலாம்னு தான் இவங்க பிளான்,அதனால தான் ப்ரீத்தி வினய்யை அங்க கூட்டிட்டு வந்திருக்கா, ஆனா அது விபரீதமாகி,ஹெட் இன்ச்சூரிஸ்-ல வினய் செத்து போய்ட்டான்"

"சரி, நவீன எப்படி சந்தேகப்பட்டீங்க"

"Modus operandi, மெதொடிகல் அப்ரோச்,பொதுவா உலகத்துல நடக்குற இந்த மாதிரி க்ரைம்க்கு காரணம் ஒண்ணு பணம்,காதல், இல்லனா பழிவாங்கல். இதற்கு மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல.ஸோ காதல்/பழிவாங்கல். போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டும் 8:00 - 9:00-குள்ள நடந்திருக்குன்னு சொல்லுது. ஸோ, சம்பவம் நடந்தன்னைக்கு ஈஜிபுரா சிக்னல், அப்புறம் சோனி வோர்ல்ட் சிக்னல்ல டிராபிக் ரூல்ஸ் வயலேஷன்ஸ்/லைசன்ஸ்க்காக 7:45 இருந்து 9:00 வரை சார்ஜ் ஷீட் பண்ண டூ வீலர்,போர் வீலர் எல்லாரையும் சார்ஜ் ஷீட்ல இருந்த அட்ரேஸ வெச்சி தேடி கண்டுபிடிச்சி விசாரிச்சோம்"

"அப்புறம்.."

"இரண்டு மூனு பேர், அந்த 8 - 8:30 நேரத்துல அந்த ப்ரிட்ஜ் பக்கம், ஒரு போர்ட் எண்டீவர பார்த்திருக்காங்க, ஆனா மறுபடியும் இரண்டாவது முறையா ப்ரீத்திய விசாரிச்சதுல அவ அடிச்சவங்க டூ வீலர்ல வந்தாங்கன்னு சொன்னா,
அப்பவே அவ மேல கொஞ்சம் சந்தேகம்.அப்புறம் திங்ஸ் ஆர் இஸி.. அவளோட மொபைல் போன் கான்வர்ஷேஷன்ஸ்,சிட்டில போர்ட் எண்டீவர் வெச்சியிருக்கவங்க ரொம்ப கம்மி,அவங்கள விசாரிச்சோம்,அதுல ஒருத்தன்
இந்த நவீனோட ப்ரண்ட்.ஸோ....ஒன் ப்ள்ஸ் ஓன் இஸ் டூ..அப்புறம் இந்த நவீனையும்,ப்ரீத்தியையும் தனியே கொஞ்ச நேரம் விசாரிச்சோம், ரொம்ப நேரம் தாங்கல,சொல்லிட்டாங்க"

"அப்ப ஹாஸ்பிடல்ல அழுதது எல்லாம் நீலிக் கண்ணீரா"

"இல்ல அவ அழுதது உண்மை, ஆனா அழுதது வினய்-க்காக இல்ல
இந்த நவீனுக்காக.."

"அடிப்பாவி.."

"சரி நான் கிளம்புறேன்..."

"எங்க சார், கோரமங்களா பக்கமா"

"ஆமா.."

" நான் வண்டி கொண்டுவரல,போரம்ல டிராப் பண்ணிடுங்க, ஒரு டிரிட் இருக்கு"

"யாரு பாலு.."-இது நஞ்சுண்டப்பா

பாலு கண் சிமிட்டினான்.

" நீ திருந்த மாட்டடா..."

- செந்தில் குமார்

Pin It