பாஜகவின் தற்போதைய மிருகப் பெரும்பான்மை கொண்ட ஆட்சியில் இந்தியாவைப் பிளவுபடுத்தும் சட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக NRC என்ற குடியுரிமைப் பதிவேடு, அதற்குப் பிறகு CAA என்ற குடியுரிமைத் திருத்த மசோதா, அடுத்து NPR என்ற தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பதைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பானது அல்ல என்று நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக அனுதாபிகள் அனைவரும் பேசி வருகின்றனர். இவர்களின் கூற்றுக்களில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்தால் நாட்டின் பிரதமர் தொடங்கி அனைவரும் பொய்யை மிகச் சாதாரணமாக பேசி வருகிறார்கள் என்று தெரிகிறது.

பாஜகவினர் சொல்லும் பொய்கள் ஒவ்வொன்றுக்கான பதில்

பொய் 1: NRC நாடு முழுக்க அமல்படுத்தப்படப் போவதில்லை.

உண்மை: NRC நாடு முழுக்க அமல்படுத்தப்பட இருக்கிறது என அதிகாரப்பூர்வ அரசாணையாகவே வெளிவந்திருக்கிறது (Government gazette).

ஜூலை 31, 2019ல் வெளியான அரசாங்க அரசாணையிலேயே இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆணையில், குடியுரிமைச் சட்டம் 2003ன் துணைப் பிரிவு 3ன் கீழ் (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) மத்திய அரசு, மக்கள் தொகைப் பதிவேடு கணக்கீடு செய்வதற்காக அந்தந்த உள்ளூர் பதிவாளர்கள் மூலம் வீடு வீடாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். இந்த நடவடிக்கை ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை நடைபெறும்.

துணைப் பிரிவு 4ன் கீழ், தேசிய இந்திய மக்கள் குடியுரிமைப் பதிவேட்டை உருவாக்குவதற்கான பணி நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு NRC க்கு பதில் NRIC என்று சேர்க்கப்பட்டிருப்பது ஒன்றே மாற்றமானது.

அதனால், நாடு முழுக்க NRCக்கான் வேலையை அரசு தொடங்கியிருக்கிறது என்ற ஆணித்தரமான முடிவுக்கு வரலாம்.

nrc 1

nrc 2

பொய் 2: குடிமக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசிய இந்தியக் குடியுரிமைப் பதிவேடு (NRIC) இரண்டும் தனித்தனியானது. இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

உண்மை: இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான சட்ட ஆணையில் NRIC தயாரிப்பதற்கான முதல் படிநிலையைக் குறிப்பிடுகிறது. குடியுரிமைச் சட்டம் 2003 விதி 3ன் துணை விதி(5) இவ்வாறு கூறுகிறது, “மக்கள் தொகைப் பதிவேட்டில் (NPR) இருந்து சரிபார்ப்பிற்குப் பிறகு உள்ளூர் குடியுரிமை அடங்கியவர்களின் விவரங்கள் இருக்கும்.

அதாவது, NPRக்குப் பிறகே NRCக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.

nrc 3(NPRக்கும் NRICயையும் இணைக்கும் அரசு ஆவணம்)

சரி, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் NRIC என்றால் என்ன?

குடியுரிமைச் சட்டம் 2003ன் படி, NPR என்பது, மக்கள் தொகைப் பதிவு என்பது ஒரு கிராமம் அல்லது கிரமப்புற பகுதி அல்லது நகரம் அல்லது வார்டு அல்லது எல்லை நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களின் விவரங்களை உள்ளடக்கியது. NRIC என்பது இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் விவரங்களை உள்ளடக்கியது.

மக்கள் தொகைப் பதிவேடு எப்படி NRICக்கு மாற்றப்படும்?

துணை விதி(3), (4) சட்டம் 4ன் படி, உள்ளூர் பதிவாளரால் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் அதன் உண்மைத் தன்மை சரி பார்க்கப்படும். சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, அத்தகைய நபர்களின் விவரங்கள், அதன் குடியிரிமை சந்தேகத்திற்குரியது என்று கருதப்பட்டால் உள்ளூர் பதிவாளரால் மக்கள் தொகைப் பதிவேட்டில் பொருத்தமான குறிப்புடன் மேலதிக விசாரணைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேலும், சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்று முடிவு செய்யப்பட்டால், தனிநபருக்கு அல்லது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தகவலில் தெரிவிக்கப்படும்.

இது வெறும் செயல்முறையை மட்டும் தான் தெரிவிக்கிறது. ஆனால், ஒரு மனிதரை எப்படி சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்று அறிவிக்கப் போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப் படவில்லை. ஆனால், NPRஐ வைத்து தான் NRCக்கான வேலைகள் தொடங்கும் என்பது தெளிவாகிறது.

பொய் 3: NPR/PR & NRIC இவையெல்லாம் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதி தான்.

உண்மை: இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, இரண்டும் வெவ்வேறானது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி எடுக்கப்படக் கூடியது. ஆனால் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது குடியுரிமைச் சட்டம் 1955ன் படியும், குடியுரிமை திருத்தச் சட்டம் 2003ன் கீழும் நடைபெறக் கூடியது. இரண்டுமே வெவ்வேறானவை.

பொய் 4: NPR,NRC எல்லாம் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டது.

உண்மை: இவை 2003ல் வாஜ்பாய் அரசினால் தொடங்கப்பட்டது.

1955ல் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் மக்கள் பதிவேடு (NPR) பற்றி எந்த குறிப்பும் இல்லை. வாஜ்பாய் அரசே இதனை அறிமுகப்படுத்தியது. அதே போல் பிரிவு 14Aன் கீழ் NRICயும் கொண்டு வரப்பட்டது.

பொய் 5: NPR, NRC, CAA மூன்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உண்மை: மூன்றும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் முஸ்லிம்கள் மட்டும் தனிமைப் படுத்தப்படுகிறர்கள்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019(CAA) மூலம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படாது என்று கூறப்பட்டிருக்கிறது.

தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு-2020 என்ற பெயரின் கீழ் வெளியாகியுள்ள விண்ணப்பம் தெளிவாக சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளப் படுத்த முற்படுகிறது.

பக்கம் 2, வரிசை 3ல் “தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம், இந்தியாவுக்குள் இருந்தால், மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரை எழுதுங்கள். இந்தியாவுக்கு வெளியே இருந்தால், நாட்டின் பெயரை எழுதவும்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

nrc 4இப்படி குறிப்பிடும் போது அவர்கள் இந்த இடங்களில் பிறந்ததற்கான சான்றிதழ்களைக் கொடுங்கள். இல்லையென்றால் சந்தேகத்திற்குரிய குடிமக்கள் வரிசையில் இணைக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்தப் பணிகள் முடிக்கப்படும் போது நிரூபிக்க முடியாத முஸ்லிம்கள் மட்டும் CAAவின் மூலம் தனிமைப் படுத்தப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கும் நிலை உருவாகும்.

NPRக்கான அரசாணை வெளியிடும் முன்பாகவே மத்திய அரசு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வைப்பதற்கு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தலா ஒரு தடுப்பு மையத்தையாவது அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இப்போதே நாடு முழுக்க 12 தடுப்பு முகாம்கள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 10 அஸ்ஸாமிலும், ஒன்று மும்பையிலும், ஒன்று பெங்களூரிலும் தயார் செய்யப் பட்டிருக்கிறது.

NPRக்கான வேலை தொடங்கப்பட்டு விட்டதாக சில பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். PTI செய்தி நிறுவனம் அக்டோபர் 11, 2019ல் வெளியிட்ட அறிக்கையில், NPR-க்காக ஏற்கனவே 1200-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 40 நகரங்கள் மற்றும் நகரங்களில் 5218 கணக்கீட்டுத் தொகுதிகள் மூலமாக ஒரு விரைவுத் திட்டத்தை தொடங்கி மக்களிடமிருந்து பல்வேறு தரவுகளை சேகரித்து வருகிறது. இதன் இறுதி கணக்கீடு மட்டுமே ஏப்ரல் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் 2020ல் முடிவடையும்.

இவ்வளவு பெரிய நாசகாரத் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த பாஜக மிகத் திட்டமிட்டு தொடங்கியிருக்கிறது. இவற்றுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று குரல் கொடுத்திருக்கும் வேளையில், தமிழக அரசு மட்டும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வரவேற்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்.

- அபூ சித்திக்

தகவல்: Buisness today 24.12.19

Pin It