மலேசியாவில் இன்று தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருவதனை ஆட்சீபித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அண்மைக்கால செய்திகள் மூலமாக அறிய கூடியதாக உள்ளது. இந்து உரிமைகள் செயற்பாட்டுக் குழு தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் தடியடிகளை நடாத்தியதுடன் கண்ணீர்ப் புகையையும் பிரயோகித்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அதனையொட்டி எழுந்த தாக்குதல்கள் குறித்து மலேசிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவர் டத்தோ சாமிவேலு அவர்களின் பார்வை இவ்வாறு அமைந்திருக்கின்றது

Malaysia“மலேசியாவின் இந்தியவம்சாவளியினர் (மலேசியத் தமிழர் என்ற பதத்தினையே பிரயோகிக்க விரும்புகின்றேன் - கட்டுரையாசிரியர்) புறக்கணிக்கப்படுவதில்லை. இந்தியாவில் செயற்பட்டு வரும் அமைப்பும் மலேசிய எதிர்க்கட்சிகளும் தான் இந்துக்கள் போராட்டம் நடத்துவதற்கு பின்னணியில் உள்ளனர். இந்துக்களாக போராட்டம் நடாத்திவரும் ‘pண்ட்ராப் அமைப்பு மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு கெட்ட பெயரைத் தான் சம்பாதித்து கொடுத்துள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் பத்துலட்சம் அமெரிக்க டொலர் தருவதாக கூறினால், கூட்டத்தை கூட்டுவது மிகவும் எளிது. அன்றும் அது தான் நடந்தது. ஒட்டு மொத்த இந்துக்களும் கொந்தளிப்பில் உள்ளனர் என்று கூறிவிட முடியாது. ஒரு சிறிய கூட்டம் தான் போராட்டத்தில் குதித்துள்ளது.

‘pண்ட்ராப் அமைப்பை நடத்துவது சட்டத்தரணிகள். அவர்கள் தங்களை ஒரு அரசாக நினைத்துக் கொண்டு விட்டனர். மலேசியாவில் விரைவில் நடக்க உள்ள தேர்தலில் இந்த போராட்டம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடாது. உண்மையை நாங்கள் எடுத்துக் கூறுவோம். மலேசியாவில் பல இன மக்கள் வசித்து வந்தாலும் அவர்களிடம் கருத்து வேறுபாடு கிடையாது. ஒற்றுமையே எங்கள் வலிமை.1

இவ்வாறானதோர் சூழலில் தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக மலேசிய தமிழர்கள் செயற்பட்டால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மலேசிய பிரதமர் அப்துல்லா அமுத் பதாவி எச்சரிக்கை செய்துள்ளதுடன் மலேசிய தமிழர்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுமுள்ளார். அவ்வகையில் இவ்வார்ப்பாட்டமானது சர்வதேச கணிப்பை பெற்றுள்ள இன்றைய நாளில் அதனை பல தீவிரவாத இயக்கங்களுடன் இணைத்து போராட்டங்களை சிதைக்கின்ற முயற்சியிலும் அதனை கொச்சைப்படுத்த முனையும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டு வருவதை அவதானிக்கலாம். இப்பின்புலத்தில் இவ்வார்ப்பாட்டங்கள் தற்செயலாக இடம் பெற்ற ஒன்றா, அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி என்ன? என்பன குறித்து நோக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இவ்விடயம் குறித்து சிந்திக்கின்ற போது மலேசிய தமிழரின் சமூக பொருளாதார பண்பாடு குறித்த தெளிவுணர்வு அவசியமாகின்றது.

மலேசியாவில் இந்தியர்களின் வருகையானது கிறிஸ்த்துவிற்கு முன்னரே இடம்பெற்று வந்திருப்பினும் அவை ஒரு சமூக குழுமத் தன்மையை ஏற்படுத்தாது இருப்பதை அவதானிக்கலாம். இவ்வகையில் நோக்குகின்றபோது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் தான் இம்மக்கள் பெருந்தொகையினராக மலேசிய நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழில் புரட்சியுடன் உருவாகிய பிரித்தானிய காலனித்துவம் தமது முதலாளித்துவ வயிற்றுப் பசிக்கு உகந்த வகையில் பொருளாதார அரசியல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது.

‘எந்த பழைய உலகத்திலிருந்து அது தன்னை படைத்துக் கொண்டதோ, அந்த பழைய உலகத்தை, தனது தேச எல்லைகளுக்கு அப்பால் கூட வைத்திருக்க அது விரும்பவில்லை. எல்லாத்தேசங்களையும் தனது காலனிய, அரசியல் ஆதிக்க முறைக்கு கொண்டுவர ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இறங்கியது. நவீன துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தியது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது அரசியல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவை கொண்டு வந்து சேர்த்தது. ’இந்திய மக்கள் தமது பழைய உலகத்தை இழந்தனர். சுயதேவை பொருளாதாரத்தை மிக எளிமையான கருவிகளைக் கொண்டே உற்பத்தி செயலில் ஈடுபட்டிருந்த இந்திய கிராமங்கள், சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருந்தன. நீர்ப்பாசனம் அரசின் நடவடிக்கையாக இருந்ததனால் ஒவ்வொரு கிராமங்களும் தமது பொருளுற்பத்திக்கு அரசை சார்ந்தே இருக்க வேண்டி இருந்தது. இவ்விதத்தில் அரசு சமூக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இதனை காலனித்துவ அரசின் வருகை உடைத்தெறிந்தது. விவசாயம் சீர்குலைக்கப்பட்டு விவசாயிகள் நடுத்தெருவிற்கு வர, பிரிட்டன் காரணமாய் இருந்தது”2

இவ்வாறாக தென்னிந்திய தமிழ் கிராம மக்கள் வறுமைக்கும் சாதிய அடக்குமுறைக்கும் உட்பட்டு மிக கொடூரமான வாழ்க்கையை அனுபவித்தனர். ஒரு புறம் நிலப் பிரபுத்துவ பொருளாதார சுரண்டலும் மறுபுறம் சாதிய அடக்குமுறைகளும் இம்மக்களின் வாழ்க்கையை வேதனைக்குள்ளாக்கியது. இச்சூழலில்தான் தொழில் புரட்சியும் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கமும் இம்மக்களின் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்தை உருவாக்கியது. வறுமை, பஞ்சம், பசி இம்மக்களை பெரிதும் வாட்டியது. அவர்களை ரொட்டித்துண்டுகளுக்கு முன் மண்டியிட வைத்தது. அவர்கள் பிறந்த மண்ணை துறந்து புதுவாழ்வு தேடி வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமது உழைப்புச்சக்தியை குறைந்த விலையில் விற்பதற்கு தயாரானார்கள்.

பிரித்தானியர்கள் தமது காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஒப்பந்த கூலிகளை அழைத்து செல்வதற்கு பல்வேறு போலி விளம்பரங்களை பிரச்சாரப்படுத்தினர். தென்னிந்தியாவில் இருந்து இலங்கை மலையகத்திற்கு அழைத்து வருகின்றபோது தேங்காயும் மாசியும் தேயிலைக்கடியில் இருக்கின்றது என பிரச்சாரம் செய்யப்பட்டது போன்று, அவர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றபோது ‘காகத்திற்கு சீனி ஊட்டுவதற்காகவே” அழைத்துச் செல்வதாக பிரசாரங்கள் செய்யப்பட்டன.

இவ்வாறு ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து வந்த ஏனைய வர்க்கத்தினரும் ‘மலேசியத் தமிழர்” என்று அழைக்கப்படுகின்றனர். இது இவ்வாறிருக்க ஆரம்பகாலம் தொடக்கம் இரப்பர் தோட்டங்களிலும் ரயில் பாதைகள் அமைக்கும் தொழில்களிலும் துரைமார்களாக இலங்கையின் யாழ்ப்பாண தமிழர்கள் கடமையாற்றி வந்துள்ளனர்.

யாழ்ப்பாண தமிழர்களில் சிலர் காலத்திற்கு காலம் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலும் இப்புலம் பெயர்வை அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் மலேசிய பிரஜாவுரிமையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். ‘யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம்” என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணத் தமிழரைப் பிரதிநிதித்துவபடுத்துகின்றது என்பதை விட அங்கு வாழ்கின்ற யாழ்ப்பாண சமூக அமைப்பின் மேட்டு குடியினரையே பிரதிநிதித்துவபடுத்துகின்றது. என்பதே பொருத்தமுடைய கூற்றாகும்.

மிக அண்மைக்காலங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்கென ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு மலேசியாவிற்கு வருகின்றனர். அவர்களில் இலங்கை இந்திய தமிழ் தொழிலாளர்களும் அடங்குவர். மலேசிய தமிழரும் மேற்குறிப்பிட்ட மேற்குடித் தமிழரும் தமிழர் என்ற அடிப்படையில் ஒற்றுமை கொண்டிருப்பினும் இவர்களிடையே சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பாரிய வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்கலாம்.

மூன்றாவது தேசிய இனம் மலேசிய நாட்டின் சமூக பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் மலேசியத் தமிழர் எனும் உழைக்கும் மக்கள் குழுமத்தினருக்கு முக்கிய பங்குண்டு. இவர்கள் ரயில்பாதை மற்றும் வீதிகள் அமைக்கும் பணிகளிலும் மற்றும் ஈயம் தோண்டும் பணிகளிலும், இரப்பர், செம்பனைத் தோட்டத் தொழில்களிலும் ஈடுபட்டனர். அவ்வகையில் ஒரு காலகட்ட சூழலில் மலேசிய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பலமான அடித்தளத்தை இட்டதில் மலேசிய தமிழர் முக்கிய பங்களிப்பு நல்கியுள்ளனர், இன்றும் நல்கி வருகின்றனர்.

மலேசியத் தமிழர் பொதுவாக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியமானது தென்னிந்தியத் தமிழர்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை கொண்டிருப்பினும் அவை மலேசிய சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய பரிணாமம் அடைந்து விளங்குவதைக் காணலாம். மலேசிய பிரதேச உற்பத்தி அமைப்பும், உற்பத்தியை தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட சமூக கட்டமைப்பும் அவற்றை தீர்மானம் செய்கின்ற உற்பத்தி முறை உற்பத்தி உறவுகளும் சார்ந்தது யதார்த்தமாகியுள்ள வர்க்க முரண்பாடுகளே இப்பண்பாட்டை தோற்றுவிக்கின்றன.

மலேசியாவில் அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் மலேசிய தமிழர் ஒரு தனித்துவமான பண்பாட்டை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். மலேசியாவில் வாழ்கின்றன பிறமக்கள் தொகுதியினரான சீனர்கள், மலாயர்கள் மற்றும் ஏனைய இனத்தவரிலிருந்து பிரித்தறியக் கூடிய உடலமைப்பு, குணநெறிகளை கொண்டதோர் சமூகமாக விளங்குகின்றனர். இப்பின்னணியில் அம்மக்களின் அரசியல் சமூக பொருளாதார, பண்பாட்டு அம்சங்கள் குறித்து நோக்குகின்ற போது இம்மக்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் நியாயமானதே.

மலேசிய தமிழர்கள் குறிப்பாக அடிநிலை மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்லர். எந்தவொரு நாகரிக சமூகத்தின் மூலத்தைப் போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதோர் பொருளாதார துறையை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் அமைத்த இந்த பொருளாதார துறையும் அவை சார்ந்த அமைப்புகளும் இன்று மலேசிய நாட்டின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இம்மண்ணின் மக்களே என்பதை ஆதாரப்படுத்துகின்றன. ஒருபுறமான காலனித்துவ ஆதிக்கமும் மறுபுறமான சமூகவுருவாக்கமும் இணைந்து, தாம் தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறுவிதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன் வைக்க ஒரு பிற்போக்குவாதியின் பார்வையும் ஒரு மார்க்ஸிய வாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பட்ட சிந்தாந்தங்களை கொண்டவையாகும்.

மலேசிய தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும். ஆனால் இன்று வரை மலேசிய அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற்காக ‘இந்தியத் தமிழர்” என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது மலேசிய பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இன, மத, மொழி அரசியல் பொருளாதார, பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலேசிய தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.

மலேசியாவில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலேசியத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப்பிரிவினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் மலேசிய தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய மலேசிய நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான4 சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலேசிய தமிழர் சமுதாயத்தில் தோன்றிய தரகு முதலாளித்துவ வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு சாதகமாக காட்டி அதனூடாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ‘இந்திய தமிழர்” என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர்.

தேசிய சிறுபான்மை இனத்தரகு முதலாளித்துவ வர்க்கம் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்தும்போக்கு மலேசியாவிற்கு மட்டும் உரித்தானதொன்றல்ல. பர்மாவிலே இந்திய நிலவுடைமையாளர்களும் பூர்ஷ்வாக்களும் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சீன பூர்ஷ்வாக்களும், மலேசியாவில் சீன, இந்திய பூர்ஷ்வாக்களும் இவ்வாறே ஆதிக்கம் செலுத்தினர். இதற்கான காரணம் யாதெனில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூலதனத் திரட்சி மிகவும் மந்தமாக இருந்தபடியால் ஓரளவு வர்த்தக மூலதனத்துவ வளர்ச்சி பெற்ற அண்டை ஆசிய நாடுகளைச் சேர்ந்த பூர்ஷ்வாக்கள் வர்த்தகத்துறையை கைப்பற்றிக் கொண்டனர் என்பதேயாகும்.6

இவ்விடத்தில் மலேசியாவின் சூழலை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானதாக அமையும். ‘இங்கு நகரத்தை மையமாகக் கொண்ட பெரும் வர்த்தக பூர்ஷ்வாக்கள் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதே சமயம் அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத அதே சமூகத்தை சார்ந்த பெருமளவு மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து கொண்டு தனியான மக்கள் குழுவாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பூர்ஷ்வாக்கள் தோன்றி வளர ஆரம்பித்த போது இந்த ‘அந்நிய பூர்ஷ்வாக்களுக்கு” எதிராக தேசியவாதம் கிளப்பப்பட்டது. அத்தேசியவாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராகவும் திசை திரும்பியது. அதை விட முக்கியமான விடயம் யாதெனில் அதுவரை தம் சமூகத்தைப் பற்றி கவலைப்படாத தேசியச் சிறுபான்மை பூர்ஷ்வாக்கள் தமக்குப் பிரச்சினை வந்தபோது தமக்கு எதிராக தேசியவாதம் எழுப்பப்பட்டபோது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிலாளரிடம் ஓடினர். அவர்கள் மத்தியில் தேசிய வாதத்தைத் தட்டி எழுப்பி அவர்களை ஸ்தாபனப்படுத்தினர். ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் கொடுத்தனர். தேசிய இயக்கங்களைத் தொடக்கி தலைமைத் தாங்கினர்.”3

மறுபுறமாக மலேசிய தமிழர் என்ற உணர்வு அதன் வெளிப்பாடான தேசியமானது மலேசிய தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். இன ஒடுக்கு முறைகள் இலங்கை மலையகத்தைப் போன்று ஒரு தொழிலாளி ஓய்வு பெற்றபின் தொடர்ச்சியாக அக்குடியிருப்பில் வாழக்கூடிய உரிமை மலேசிய தோட்டத் தொழிலாளிக்கு இல்லை. இதன் காரணமாக ஓய்வு பெறுகின்ற தொழிலாளர்களும் அவர் சார்ந்த குடும்பமும் (குடும்பத்தில் எவரேனும் வேலையற்று இருப்பின்) வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மலேசியாவில் பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் இன்று தொழிலாளர்கள் பெரும்பாலும் தோட்டங்களிலிருந்து விலகி செல்கின்றனர். இன்று ஒவ்வொரு தோட்டங்களிலும் பத்து அல்லது பதினைந்து தமிழ் குடும்பங்களையே காணக்கூடியதாக உள்ளது. தோழிலாளி ஒருவர் ஐம்பத்தைந்து வயதை அடைந்தவுடன் அவரது சந்ததியினர் எவரும் அத்தோட்டத்தில் வேலை செய்யாதிருப்பின் தோட்ட முதலாளிக்கு சொந்தமான வீட்டை ஒப்படைக்க வேண்டும் அப்படி ஒப்படைக்க தவறுமிடத்து அவரது ஓய்வூதிய பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன் குறித்த அந்நபருக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந் நிலையில் தமது ஓய்வு காலத்தின் பின்னர் தமக்கென ஒரு குடிசை கூட இல்லாத நிலையில் அல்லல்லுறுவதுடன் அத்தோட்டங்களிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்கள் பல்வேறு மானிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றமையினால் ஓர் இனமாக கூடி வாழுகின்ற தன்மை சிதைக்கப்படுகின்றது. மறுபுறமாக அம்மண்னிற்கும் அம்மக்களுக்கும் இடையிலான உறவு சிதைக்கப்படுகின்றது.

இன்று வரை பல்வேறுவிதமான பிரச்சினைகளை தொழிலாளர்கள் குடியிருப்பு தொடர்பில் அனுபவித்து வருகின்றனர். இச்சதித்திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஆங்காங்கே சில போராட்டங்களை நடத்தி வந்திருப்பினும் அவை ஒரு இயக்கம் சார்ந்த போராட்டமாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மறுபுறமாக இந்நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் மலேசியத் தமிழர் பரந்துபட்ட பிரதேசத்தில் ஓர் இனமாக கூடி வாழ்வதை சிதைக்கின்றன. அவர்களுக்கான இனத்துவ அடையாள ங்களைச் சிதைத்துச் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியாத வகையில் இக்குடியேற்ற திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சூழலில் தழிழர்கள் பெறும்பாலும் பிற இடங்களுக்கு சென்று தமது கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை நிறுவ முனைகின்ற போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் ஏற்கனவே அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள இவர்களது கலாச்சார வழிபாட்டு எச்சங்கள் அழிக்கப்படுவதுடன் புதிய சூழலிலும் அவர்களது கலாச்சார பண்பாட்டு வழிபாட்டு முறைகளை பேணமுடியாத நிலையில் உள்ளனர். மலேசியாவை காலத்திற்கு காலம் ஆட்சி செய்தவர்கள் மலாயர்களின் இன, மத, மொழி, தூய்மையை வலியுறுத்தியதுடன் அவர்களை பூமி புத்திராகளாக கருதி சிறப்பு சலுகை வழங்கி வந்துள்ளார்கள். இதன் காரணமாக மலாயர்கள் தங்களை இந் நாட்டின் உயர் வர்க்கமாக கருதியதுடன் ஏனைய மக்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை அழிக்கவும் தலைப்பட்டனர். எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவங்களை கூறலாம்.

“பதிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் - மலாயக்காரர்கள் மோதல் கெர்லிங்கில் நிகழ்ந்தது. இதற்கு முன்னதாக முஸ்லிம் மதவெறியர்கள் மலாக்கா, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் டிசம்பர் 1977 முதல் ஆகஸ்டு 1978 ஆம் ஆண்டு வரை மொத்தம் 28 இந்துக்கோவில்கள் உடைத்து தகர்த்தனர். இவ்வாறான கோவில் உடைப்பு சம்பவங்கள் 9 மாதங்களுக்குத் தொடர்ந்தன. ஆனால் அரசாங்கமும் காவல் துறையினரும் இந்த மத வெறியர்கள் மீதே எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இந்துக்கள் தங்கள் ஆலயங்களைத் தற்காத்துக் கொள்ள கட்டாயமான சூழலில் வன்முறையில் இறங்கினர். ஆயுதங்களை கையில் ஏந்தினர். 19 ஆகஸ்டு 1978 - இல் கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை தற்காத்துக் கொள்வதற்காக அக்கோவிலை உடைக்க வந்த 4 முஸ்லிம்களை வெட்டிக் கொன்றனர். மேலும் ஒருவரை கடுமையான காயங்களுக்கு ஆளாக்கி விட்டனர்.

ஆலயம் உடைப்பதை தற்காக்க போராடியவர்களை காவல் துறையினர் அவர்களை 2 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் வரை சிறையிலிட்டனர். எனினும் இந்துக்கள் மத்தியில் இவர்கள் நாயகனாகத் திகழ்கின்றனர் காரணம் அதற்கு பிறகு ஆலய உடைப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை.”

தவிரவும் காலத்திற்கு காலம் மலேசிய அரசாங்கத்தினால் பல இந்து கோயில்கள் உடைக்கப்பட்டு வந்துள்ளன. இதற்கு மாறாக இஸ்லாமிய பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் மலேசிய நாட்டை இஸ்லாமிய நாடாக காட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரப்படுவதும் இடம்பெற்று வருகின்றன. இன்னொரு புறமாக மலேசிய தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகளும் காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதனையும் அறிய முடிகின்றது. 1969 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த இனக்கலவரம் இன்று வரை பலருக்கு அந்நாட்டின் மீது அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இக்கலவரம் மே 13 கலவரமென அழைக்கப்படுகின்றது. இவ்வாறே மார்ச் மாதம் 2001 இல் நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை தமிழர்களை அதிகமாக பாதித்த ஓர் நிகழ்வாகும். இச்சம்பவத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து மலாயப் பல்கலைக்கழக அவசர சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் அப்துல் அலி ராஜா முகமட் அவர்களின் கூற்று பின்வருமாறு “எனது வாழ்வில் மிகவும் துன்பகரமான அனுபவம், கம்போங் மேடான் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது தான். அவர்கள் உடம்பு முழுவதும் வெட்டுக் காயங்கள். அந்த மூன்று நாள்களில் நாங்கள் (உயிருக்குப் போராடிய) 90 க்கும் அதிகமானோரைக் காப்பாற்றியிருக்கிறோம். மனிதன் இவ்வளவு கொடூரமாகவும் இருக்க முடியும் என்பதை, அப்போதுதான் உணர்ந்தேன். இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துள்ளோம். அவை விதி என்று ஆறுதல் அடையாலம். ஆனால் ஒரு மனிதன் இன்னொருவனை வேண்டுமென்றே வெட்டுவது. மனதை நடுங்க வைக்கும் அனுபவமாகும்.”4

இச்சம்பவம் குறித்து வெளிவந்த மார்ச் 8 என்ற நூல் இன்று மலேசியா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு நடவடிக்கையே அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் அது குறித்து ஆளும் வர்க்கம் மேற்கொண்ட நடவடிக்கையுமாகும். மலேசியத் தமிழர்களின் கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியங்கள் நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மலேசிய அரசாங்கமானது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முனைப்புபடுத்தியுள்ளதுடன் ஏனைய மக்கள் குழுமத்தினரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளங்களை நாளுக்குநாள் அழித்து வருகின்றது. மலேசியாவில் பல பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்கள் இடித்து உடைக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்கு சொந்தமான பல நிலங்கள் அரசால் அபகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வகையில் நோக்குகின்ற போது மலேசிய தமிழர்களின் கலாசார பண்பாட்டுக் கூறுகள் திட்டமிடப்பட்ட வகையில் மலேசிய பெருந்தேசியவாதிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் சிங்கள பெருந்தேசியவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக எத்தகைய கலாசார பண்பாட்டு ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றார்களோ அவ்வாறே மலேசியாவில் மலாய பெருந்தேசிய வாதிகள் தமிழர்களுக்கு எதிரான கலாசார பண்பாட்டு ஒடுக்கு முறைகளை நடாத்தி வருகின்றனர்.

உலகமயம் என்பது ஒரு பன்முக நிகழ்ச்சிப் போக்கு. இது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் முக்கிய தாக்கம் செலுத்தி வருகின்றது. இன்று உலகமயமாதல் என்கின்ற சிந்தனை போக்கானது ஏகாதிபத்திய சிந்தனை போக்காகவே வெளிப்பட்டு நிற்கின்றது. இதனை முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டம் என்பர். ஏகாதிபத்திய நாடுகள் தமது தேச எல்லையைக் கடந்து ஏனைய நாடுகளில் தமது மூலதனத்தை முதலீடு செய்து அந்நாடுகளின் வளங்களை ஈவு இரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். தமது ஏகபோக நலன்களுக்கு சாதகமாக பண்பாட்டு கூறுகளையும் அந்நாடுகளில் உருவாக்க முனைகின்றனர்.

இப்போக்கை நாம் மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற தொழிற்துறை வளர்ச்சியிலும் காணக்கூடியதாக உள்ளது. இன்று மலேசியாவில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தனியார் கம்பனிகள் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு நிதி முதலீட்டின் மூலமாக நாட்டை அபிவிருத்தி செய்தல் என்ற திட்டங்களின் மூலம் இந்நாடு கொள்ளையடிக்கப்படுகின்றது. குறிப்பாக இவ் அபிவிருத்தி திட்டங்களும் தமிழரை பெரிதும் பாதித்து வருகின்றன. நகர அபிவிருத்தி திட்டங்களினூடாக தமிழர் ஓர் இனமாக கூடி வாழ்ந்த பிரதேசங்கள் சுவீகரிக்கப்பட்டு அவர்கள் வேறு இடங்களுக்கு பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக கோலாலம்பூர், சாலாம் முதலிய பிரதேசங்கள் தமிழர் ஓர் இனமாக செறிவாக வாழ்ந்த பிரதேசமாக காணப்பட்டன.

தொழில்கள்

மலேசிய தமிழர் மிக குறைந்த தொகையினர் தனியார் கம்பெனிகளிலும், விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஏனைய அரச தொழில்களிலும் ஈடுபடக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். பெரும்பாலானோர் அடிநிலை உழைப்பவர்களாகவே காணப்படுகின்றனர். ஆரம்ப காலங்களில் மலேசிய தமிழர் பெரும்பாலானோர் இரப்பர் தோட்டங்களிலும் ரயில் பாதை அமைத்தல், ஈயம் தோண்டுதல், ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆரம்ப காலங்களில் சிறு அளவிலாக பயிர்செய்யப்பட்ட செம்பனை பயிர்செய்கையானது காலப்போக்கில் அதன் அருமை அதிகரிக்க முக்கிய பெருந்தோட்ட பயிர் செய்கை முறையாக வளர்ந்து வந்துள்ளது.

செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளியொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒருசொட்டு இரத்தத்தையாவது சிந்தியே உழைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் இத்தோட்டங்கள் யாவும் தனியாருக்கு விற்கப்பட்டதன் விளைவாக மக்களின் கூலி குறைக்கப்பட்டுள்ளதுடன் வேலை சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தோட்டங்களை பெருமளவிற்கு வாங்கியவர்கள் சீன முதலாளிகள். சீனர்கள் பொதுவாகவே கடின உழைப்பில் ஈடுபடுகின்றவர்கள் என்றவகையிலும் இன்று அவர்கள் பணம் சம்பாதிப்பதையே முக்கிய இலக்காக கொண்டிருக்கின்றமையினாலும் மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் ஆன்மா நசுக்கப்பட்டு அவர்களின் உடலுழைப்பு பிழிந்து எடுக்கப்படுகின்றது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான வசதிகள் கூட இன்று மறுக்கப்பட்டு வருகின்றன.

மறுப்புறமாக இந்நாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக பிறநாட்டு தொழிலாளர்களை (தற்காலிக தொழிலாளர்கள்) பயன்படுத்துகின்ற சூழல் இன்று மலேசியாவில் உருவாகி வருகின்றது. குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட ரீதியாகவும் சட்ட முரணானதாகவும் வேலை தேடி மலேசியாவிற்கு வருகின்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் (குறிப்பாக இந்தோனேசியா, மியன்மார், லாவோஸ், இலங்கை, இந்தியா முதலிய நாடுகளிலிருந்து) குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்பவர்களாக காணப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக மலேசிய தொழிலாளர்கள் 25 வெள்ளிகளுக்கு வேலை செய்பவர்களாக காணப்பட்டால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 15 வெள்ளிக்கு வேலை செய்ய தயாரானவர்களாக காணப்படுகின்றனர். எனவே தனியார் கம்பெனிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தவே விரும்புகின்றனர். இவ்வாறு மலேசிய தொழிலாளர்களுக்கு எதிராக பிறநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற நிறுவனங்கள் அத் தொழிலாளர்களின் உழைப்பையும் உதிரத்தையும் கசக்கி பிழியவும் தயங்குவதில்லை.

இந்த நிலைமைகள் காரணமாக தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறி செல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நகரை ஒட்டி கீழ்நிலை தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே சாரதிகளாகவும் மற்றும் தற்காலிகமாக தனியார் கம்பனிகளில் கிடைக்க கூடிய மத்தியதர தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அத்தோட்டங்களிலே கங்காணிகளாகவும், அலுவலக பணிகளிலும் மற்றும் செம்பனைப் பயிர்களுக்கு இடையில் வளர்கின்ற களையெடுக்கின்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க ஒப்பந்தக்காரர்களின் கீழ் கொத்தடிமை முறையில் வாழ்ந்து வருகின்ற தமிழ் தொழிலாளர்களும் மலேசியாவில் காணப்படுகின்றனர். ஒப்பந்தக்காரர்கள் தம்மிடம் பெற்ற கடன்களுக்காக இவர்களை தமது சொந்த அடிமை போல் நடத்துகின்றனர். இவர்களின் அனுமதியின்றி அவர்கள் வெளியில் செல்லுகின்ற உரிமையோ அல்லது வேறு எவருடனும் தொடர்பு கொள்கின்ற உரிமையோ அவர்களுக்கு கிடையாது. இவர்கள் உழைப்பில் ஈடுபடாத போதோ அல்லது தமக்கு வெறுப்பு வருகின்ற போதோ அவர்களை தடி கொண்டு அடிக்கின்ற உரிமையையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். தமக்கு அடிமைகளாக இருக்கின்ற பெண்களை போகப் பொருளாகவும் பாவித்து வருகின்றனர். பருவம் அடையாத சில பெண்களை இந்த ஒப்பந்தக்காரர்கள் கற்பழிப்பு செய்த சம்பவங்கள் ஏராளம். இவர்கள் அரசு துறை சார்ந்தவர்களையும் பொலிசாரையும் தமக்கு சாதகமான வகையில் திசை திருப்பிக் கொள்கின்றார்கள்.

இரப்பர், செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்து தமக்கு அடிமையாக கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களை அத்தொழில்களில் ஈடுபடுத்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றார்கள். மிக சொற்ப கூலியையே அத்தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். அக் கூலியானது அவர்களின் வயிற்றை நிரப்பிக் கொள்ளக் கூட போதாது. அத்துடன் தேவையேற்படின் தமக்கு கீழ் இருக்கின்ற தொழிலாளர்களை வேறொரு முதலாளிக்கு விற்பனை செய்யக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வடிமை முறையானது இந்தியாவிலிருந்த பண்ணை அடிமை முறையை விட கொடூரமானது.

கல்வி உரிமைகள்

மலேசிய தமிழர்கள் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின்படி மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் கொண்ட குடிமக்களாவர். அந்த உரிமைகளில் ஒரு தனிமனிதன் ஒரு சமூகம் விரும்பும் இலக்குகளை அடைவதற்கு, சுதந்திரமாக வாழ்வதற்கு, முன்னேறுவதற்கு, மேம்பாடு அடைவதற்கு, பாதுகாப்பு பெறுவதற்கு உரிய உரிமைகளும் அடங்கும். அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதற்கு இவ்வுரிமைகள் குடிமக்களுக்கு உரித்தாகும் என அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மொழி மலேசிய தமிழர்கள் ஒப்பந்தப் பிணைப்பின் அடிப்படையில் கூலிகளாக கொண்டு வருவதற்கு முன்னரே வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களை தொடர்ந்து வந்த படையினர் மூலமாக அந்நாட்டை வந்தடைந்தது.

‘முன்சி‘ அப்துல்லா (1796-1854) தான் தமிழ்க்கல்வி கற்க அனுப்பப்பட்டது பற்றி கூறியிருக்கிறார். தமிழ் மொழி எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வணிக மொழியாக இருந்ததால் அவரின் தந்தை அவரை தமிழ் கற்க செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் தமிழ் கற்றிருந்தனர். ஆனால் தாய்மொழியை (மலாய்) கற்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது என்றார். (“Munshi Abdullah himself is said to have referred to Tamil as a universal language and that there was no necessity for studying the ‘mother tongue’ meaning Malay”)5

மலாக்காவில் மட்டுமன்று ஏனைய கெடா, பேராக், பகாங் முதலிய மாநிலங்களிலும் தமிழ் மொழி சிறப்பு பெற்று விளங்கியதை அறியக் கூடியதாக உள்ளது. அத்துடன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல நிலப்பத்திரங்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன.

‘இத்தகைய தேவையின் பின்னணியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. அவ்வகையில் மலேசியாவில் தோன்றிய முதல் தமிழ்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறித்துவர்களால் துவக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் பள்ளிகளின் வரலாறு இருநூறாண்டுகளை அடையும். முதல் சீனப் பள்ளி 1815ஆம் ஆண்டில் துவங்கியது. பிரிட்டிஸார் காலத்தில் தோட்டங்களிலும் நகர் புறங்களிலும் தமிழ் பள்ளிகள் தோன்றின. பொருளாதார வளமற்ற தமிழ்ப்பள்ளிகள் தோட்ட உரிமையாளர்களின் தயவிலும் அரசாங்க உதவியாரும் இன்னும் சில தனியாரின் ஆதரவோடும் வளர்ந்த தமிழ் பள்ளிகள் நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் எண்ணிக்கையில் 888 ஆக இருந்தன. சீனப் பள்ளிகளின் எண்ணிக்கை 1343 ஆகும்‘. காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் தான் மலேசிய நாட்டில் தமிழ் பள்ளிகள் தோன்றின. 1900 களில் அந்நாட்டிற்கு அதிகமாக வந்திறங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்காக பிரித்தானிய அரசு 1912 இல் தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தோட்ட நிருவாகம் தமிழ் பள்ளிகளை உருவாக்கியது.6

1930இல் 333 ஆக இருந்த தமிழ் பள்ளிகள் 1938 இல் 547 ஆக அதிகரித்தது. 1947இல் 741 ஆகவும் 1957 இல் 888 ஆகவும் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மலேசிய தமிழர்களிடையே கல்விக்கான தேவை உணரப்பட்டு வருகின்றது. எனவே கல்வி ஆற்றலில் பங்கு பற்றுகின்ற மலேசிய தமிழர்களின் அளவும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறானதோர் சூழலில் தமிழருக்கு எதிராக கொண்டு வரப்பட்டு சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தமிழர்களின் கல்வித் துறையையும் பாதிப்பதாக அமைந்தது. இதன் காரணமாக தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை 1963ஆம் ஆண்டு 720 ஆக குறைந்தது.

தொடர்ந்து 1969ஆம் ஆண்டு 662 ஆகவும் 1973ஆம் ஆண்டு 631ஆகவும், 1998ஆம் ஆண்டு 530 ஆகவும், 2000இல் 526 ஆகவும் 2006 ஆம் ஆண்டு 523 ஆகவும் குறைந்து விட்டன. இவ்வாறு காலத்திற்கு காலம் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் மலேசியாவில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள எட்டாவது ஒன்பதாவது மலேசிய திட்டங்களில் தமிழ் பள்ளி கட்டுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. இது போக தமிழ் பள்ளிகளை இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் மட்டும் தொடர்ந்துள்ளன.

மேலும் தமிழ் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியின் அளவும் மிகவும் குறைவாகவே உள்ளன. பல பாடசாலைகளின் கட்டிடங்கள் கறையான் அரித்த நிலையில் இடித்து விழுகின்றவையாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மிக பின்தங்கிய பாடசாலையிலேயே கல்வி கற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக சிரம்பான் மாநிலத்தில் அமைந்துள்ள ரீஜண்ட் தோட்ட தமிழ் பாடசாலை, லங்காவி, சுங்கை ராயா தோட்ட தமிழ் பாடசாலை முதலியவற்றினைக் குறிப்பிடலாம்.

‘சீன தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைகளும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் குறைவு கண்டுள்ளன. சீனமக்களின் எண்ணிக்கை உயர்ந்து, சீன மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும் புதிய சீனப்பள்ளிக் கூடங்கள் தேவைக்கேற்ற அளவில் கட்டப்படவில்லை. சீனர்களின் இடைநிலைப் பள்ளிகளுக்கு, அதாவது மெண்டரினை போதனை மொழியாகக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு, அரசாங்க நிதி ஒதுக்கீடு கிடையாது. அப்பள்ளிகள் ‘independent secondary schools” என்று அழைக்கப்படுகின்றன.

தமிழர்களுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளிகள் கிடையாது. மேற்குறிப்பிட்ட சீன இடைநிலைப்பள்ளிகள் அனைத்தும் சீன சமூகம் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இயங்குகின்றன. சீன அமைப்புகளின் வலுவான ஆதரவு அவற்றிற்கு உண்டு. ஆனால் தமிழ் பள்ளிகளை சீன பள்ளியின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகின்ற போதும் தமிழ் பள்ளிகளின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகின்றன. தமிழ் பள்ளிகள் வளர்ச்சியின் நன்கொடைகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன.7

மலேசிய தேசிய கல்விக் கொள்கையில் காணப்படுகின்ற பிறிதொரு பாரபட்சம் சிறுபான்மையினத்தினருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மொழிக் கொள்கையாகும். 1957 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விச் சட்டமானது (விதி 3ல்) எல்லா இனங்களையும் இணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்க வகை செய்யும் வாசகங்கள் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பினும் நடைமுறையில் அவை ஏட்டு சுரக்காயாகவே அமைந்து காணப்பட்டன.

அத்தகைய குறைந்தபட்ச வாசகங்கள் கூட 1961 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விச் சட்டத்தில் (விதி 3இல்) நீக்கப்பட்டுள்ளன. இவ்வம்சம் எதனை உணர்த்துகின்றது? மலாயர்கள் அல்லாதோரின் மொழி, கலாசாரம், கல்வி உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சதி திட்டமாகவே மேற்குறித்த கல்வித் திட்டம் அமைந்துள்ளது எனலாம். இச்சட்டத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் ‘விதி21 (2) ஆகும்.

இந்த விதி கல்வி அமைச்சர் விரும்பிய நேரத்தில் தாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட தமிழ் அல்லது சீன தொடக்கப்பள்ளியை அரசாங்க மலாய்த் தொடக்க பள்ளியாக மாற்றுவதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்த் தொடக்கப்பள்ளியை மலாய்த்தொடக்கப்பள்ளியாக மாற்றும் முழு அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சர் பெறுகிறார்.‘8

மேலும் பல்லின கலாசாரத்தை கொண்ட மலேசிய நாட்டில் சகல தேசிய சிறுபான்மையினரதும் மொழி கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை தகர்த்திவிட்டு ஓரின கலாசார கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு மேலும் வகை செய்யப்பட்ட புதிய கல்விச் சட்டம் 1996 இயற்றப்பட்டு ஜுலை மாதம் 1997 இல் அமுல்படுத்தப்பட்டது. இக்கல்விச் சட்டத்தின்படி தேசிய மாதிரி தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தங்களின் படிப்பை தொடர்வதற்காக மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் தமிழ் பள்ளிகளிலேயே போதிக்கப்படுகின்றன. தமிழ் தொடக்கப் பள்ளிகளின் வளர்ச்சிகள், தமிழ்மொழி கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மிக குறைவானதாகவே காணப்படுகின்றன. தமிழ் மற்றும் சீன தொடக்கப்பள்ளிகள் ஆறாம் வகுப்புடன் முடிவடைந்து விடுகின்றன. மலாய் தொடக்கப்பள்ளிகள் மாத்திரம் தொடர்ந்து அரசாங்க நிதியில் இயங்கி வருகின்றன.

சில தேசிய பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படினும் அதனால் எவ்விதமான பலன்களையும் எதிர்பார்க்க முடியாது. தமிழ்மொழி பாடமானது கட்டாயமான பாடமாக இல்லாமையினாலும் மற்றும் தொழில் வாய்ப்பினை பெறுதற்கு குறித்த மாணவரொருவர் மலாய் ஆங்கிலம் முதலிய மொழிகளிலே தேர்ச்சி பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமையினாலும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி கற்றலிலானது ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.

தாய்மொழியே சிந்தனைக்கான கருவி. அதன் காரணமாக அது சிறந்த பயிற்று ஊடகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மொழியே சிந்தனைக்கான அடிப்படை எனவும் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் அவற்றின் வேறுபட்ட இயல்புகள் காரணமாக தம்மளவில் வெவ்வேறு உலகில் வாழ்கின்றனர் என மொழியியலாளர்கள் கூறுகின்றார்கள். எனவே ஒருவர் தனது உள்ளார்ந்த உணர்வுகளை தனது சொந்த மொழியில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.7 அந்தவகையில் மலேசிய தமிழ் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சியும் ஆக்கத்திறன் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுவதுடன் சமுதாய உணர்விலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் மலேசிய தமிழர்களின் கல்வியுரிமையானது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றது. கல்வித்துறையில் வழங்கப்படுகின்ற பூமி புத்திரர்களுக்கான சலுகை பூமிபுதிராக்கள் அல்லாத ஏனைய சிறுபான்மை இனத்தவரை அதிகமாக பாதித்து வருகின்றது. பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான நுழைவில் காட்டப்படுகின்ற பாரபட்சம் விளைவாக சிறுபான்மையினர் தமது கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். அத்துடன் தமிழ் பாடசாலைகளிலான ஆசிரியர் பற்றாக்குறை, பரீட்சை மதிப்பீடுகளில் காணப்படுகின்ற பாரபட்சம், மற்றும் கற்று பட்டங்கள் பெற்ற பின்னரும் அரச தொழில்களை பெறுவதில் உள்ள பாரபட்சங்கள் மலேசிய தமிழ் மாணவர்களை வெகுவாக பாதித்ததுடன் அவர்கள் கல்வியில் விரக்தி கொண்டு, அதிலிருந்து விலகி செல்கின்ற நிலைமையும் இன்று உருவாகி வந்துள்ளது. தமிழர் ஒருவர் தாம் கல்வித்துறையில் எத்தகைய சிறப்பு தேர்ச்சிகளையும் பட்டங்களையும் பெற்றிருப்பினும் கூட அவர் ஒரு மாவட்ட அதிகாரியாக கூட வர முடியாத சூழல் இன்று மலேசியாவில் காணப்படுகின்றது.

இவ்வாறிருக்க, மலேசிய தமிழர்களில் சிலர் பேராசிரியர்களாக, சட்டத்தரணிகளாக, அதிகாரிகளாக மற்றும் இராஜதந்திரிகளாகவும் சமூக பெயர்ச்சியை அடைந்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. குறித்த இச்சிறுகுழுவினரின் வளர்ச்சியை மையமாக கொண்டு ஒட்டுமொத்தமான சமூகத்தின் வளர்ச்சியையும் மதிப்பிட முடியுமா?

ஒரு நாட்டில் விவசாயி அல்லது தொழிலாளி ஒருவர் பிரதமமந்திரியாகிவிட்டார் என்றதற்காக அச்சமூகத்தினர் அனைவரும் முன்னேறிவிட்டார்கள் எனக் கருத முடியாது. அவ்வாறே பெண் ஒருவர் பிரதமமந்திரியாகிவிட்டார் என்பதற்காக அந்நாட்டின் முழு பெண்களும் விடுதலை அடைந்து விட்டார்கள் எனக் கூற முடியாது. ஒரு சமூகத்திலான சிறு குழுவினரின் வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்கான குறிகாட்டிகளாக அமையாது. இருப்பினும் இச்சிறு தொகையினரின் வளர்ச்சியும் கவனத்திலெடுத்தல் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதுவே முழு வளர்ச்சியாகிவிடாது.

அந்தவகையில் மலேசிய தமிழர்களின் கல்வி உரிமையானது பல வழிகளில் மலேசிய அரசாங்கத்தாலும், ஏகபோக சக்திகளாலும், மற்றும் தேசிய பெருந்தேசியவாதிகளாலும் பாதிக்கப்பட்டு வந்துள்ளன வருகின்றன. எனவே மலேசிய தமிழர்களின் சமூக மாற்ற போராட்டத்தின் அங்கமாக கல்வியுரிமையும் விளங்குகின்றது.

அரசியல் தொழிற்சங்க அமைப்புகள்

எங்கெல்லாம் ஒடுக்கு முறைகளும் அடக்குமுறைகளும் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் போராட்டங்களும் போராட்ட இயக்கங்களும் அவை சார்ந்த வீரர்களும் தோன்றுவது இயற்கையின் நியதி. அவ்வகையில் ஆரம்ப காலங்களில் (1910 -1920) மலேசிய தமிழர்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியான போராட்டங்களாக முகிழ்ந்த போதிலும் அவை ஒரு இயக்கமாக ஸ்தாபன மயமாக்கப்படவில்லை. ஆரம்பகால போராட்டங்கள் பொதுவாக கங்காணித்துவ மற்றும் நிர்வாக அடக்கு முறைகளை எதிர்த்து எழுந்தவையாகும். ஒரு தொழிலாளிக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராக ஏனைய சக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள்.

ஒரு வகையில் தொழிலாளர்களின் ஆரம்ப காலப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் அவற்றினை சிதைப்பதிலும் காலனித்துவவாதிகள் ஓரளவு வெற்றியும் கண்டனர் எனலாம். அத்துடன் இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இக்காலச் சூழலில் ‘இந்திய தொழிலாளர்களிடமிருந்து தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி ஏதும் தொடங்கவில்லை. இதற்கு சில காரணங்கள் கூறலாம். ஒன்று இந்திய தொழிலாளர்கள் ரப்பர் தோட்டங்கள் போன்ற துண்டித்து தனிமையாக்கப்பட்ட குறுகிய சமூக, பொருளாதார உலகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். மேலும், இந்திய தொழிலாளர்கள் ஒருபோதும் அரசியல் சார்பு கொண்டிருக்கவில்லை.

1930 இன் பிற்பகுதியில் தோன்றிய தீவிரமான இந்திய தேசியம், தோட்டத் தொழிலாளர்களின் விழிப்புணர்ச்சிக்கும் போராட்ட உணர்விற்கும் வித்துகளை விதைத்தது. தோட்டத் தொழிலாளிகளின் மத்தியில் 1936 இல் அமைக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர் சங்கம் (CIAM) பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளைப் பரப்பியது. இந்திய அமைப்பு 1938இல் தனது விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து பிறர் உதவியுடன் குடியேறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது”15

1940களில் இவ்வியக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியது. விலைவாசியின் ஏற்றத்தைக் கருத்திற் கொண்டு சீன மற்றும் மலாய தொழிலாளர்களின் சம்பளம் எவ்வாறு உயர்த்தப்பட்டதோ அவ்வாறே மலேசிய தோட்டத் தமிழ் தொழிலாளர்களினதும் சம்பளம் உயர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடியது. வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டமாக மட்டுமன்று, அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாகவும் அது திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.

அவ்வகையில் கிள்ளான் மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்டங்கள் முக்கியமானவையாகும். இதன் இன்னொரு வளர்ச்சிக் கட்டமாகவே மலேய தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தை (Pan - malayan Federative of Trade Unions- PMFTN) குறிப்பிடலாம். 1945க்கும் 1947க்கும் இடையிலான காலப்பகுதியில் மலேசியாவில் உருவான பல தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர்கள் சார்பான உறுதிமிக்க போராட்டங்களை நடாத்தியது. குறிப்பாக இவ்வமைப்பானது தொழிற்சங்கம் எனும் விடயத்தை கடந்து பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் சித்தாந்த கோட்பாட்டினைக் கொண்டிருந்தமை இதன் பலமான அம்சமாக காணப்பட்டது. சகல நேசசக்திகளும் ஒன்றிணைத்திருந்தனர். நண்பன் யார், எதிரி யார் என்பதில் மிக தெளிவான பார்வையையே கொண்டிருந்தனர்.

1940களின் பிற்பகுதியில் மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்து ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியது. அவ்வமைப்பானது முதலாளித்துவ முறைமைகளையும் அடக்கு முறைகளையும் மாற்றி அமைப்பதற்காக கடுமையாக போராடியது. குறிப்பாக இரப்பர் தோட்டங்களிலும் நிலக்கரி, ஈய சுரங்கங்களிலும் கடுமையாக சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கையை முன்வைத்து அப்போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அவை வெறுமனே தொழில் பிரச்சனைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்றி, அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு விடுதலையையும் வேண்டி நின்றமை அதன் பலமான அம்சமாகும். இச்சூழலானது அ.ம.தொ.ச அமைப்பை பலப்படுத்தியது. இதன் வெளிப்பாடாக தொழிலாளர்கள் தமது கூலி, உரிமைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்தனர். சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடந்தேறிய போராட்டங்களும் மலேசியாவில் தாக்கம் செலுத்த தொடங்கியிருந்தது.

மலேசியாவில் இவ்வெழுச்சியானது ஆளும் வர்க்கத்;தினரையும் ஏனைய இதர வர்க்கத்தினரையும் அதிர்ச்சிகொள்ள செய்திருந்தது. எனவே 2ம் உலகப் போரின்போது மலேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.ம.தொ.க ஆகிய இயக்கங்களும் சட்ட பூர்வமான இயக்கங்கள் அல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தச் சட்ட திருத்தங்கள் அனைத்தும் அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தை (PMFTU) அழிப்பதற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.

புதிதாக திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் 1946ம் ஆண்டு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் 03-11-1946 ஆம் ஆண்டு தன்னை ஒரு சம்மேளனமாக பதிவு செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட மனு 12-06-1948 இல் நிராகரிக்கப்பட்டதாகக் காலனித்துவ அரசு பி.எம்.எப்.டி.யு (PMFTU) விடம் தெரிவித்தது. அதாவது இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முன்பு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனு, அந்த மனுவை நிராகரிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் தேதியில் ‘பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்பு” என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட்டால் வர்ணிக்கப்பட்ட அகில மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது.9

இக்காலப்பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பலர் கொன்று குவிக்கப்பட்டனர். சிலர் காடுகளில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தனர். தமிழர்களிடையே பொதுவுடைமை சித்தாந்தத்தை கட்டி வளர்த்த கணபதி தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இறையானார். இது இவ்வாறிருக்க மக்களிடையே கட்டி வளர்க்கப்பட்ட போராட்ட உணர்வுகளும் குணாதிசயங்களும் ஆதிக்க சக்திகளை நிலைத்தடுமாற வைத்ததுடன் அவர்களை சிந்திக்கவும் வைத்தது. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த வர்க்க உணர்வை கூர்மழுங்கச் செய்வதற்காக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் மிக முக்கியமானதோர் சூழ்ச்சியை செய்தது.

அதன் முதற்கட்ட அம்சமாக போர்க்குணம் மிக்க தொழிற்சங்கத்திற்கும் அதன் அரசியல் உணர்விற்கும் பதிலாக அடிமையுணர்வை வளர்க்கக் கூடிய தொழிற்சங்கத்தை உருவாக்கியது. 1946 இல் தேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் காலனித்துவவாதிகளின் அற்ப சலுகைகளுக்கும் அடி வருடியாக இருக்கக் கூடிய P.P நாராயணன் என்ற இடைத் தரகரை காலனித்துவ அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. இவ்விடைத்தரகரே இவ்வமைப்பின் ஏகபோக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். ஒரு தொழிற்துறைக்கு ஓர் தொழிற்சங்கமே அமைக்க முடியும் என்ற மலேசிய தொழிற்சங்க சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களையும் உரிமைகளையும் மழுங்கடிப்பதில் ஆதிக்க வர்க்கமும் இடைத்தரகர்களும் ஓரளவு வெற்றியும் கண்டனர்.

‘நாராயணன் போன்றோரின் முயற்சியால் நாட்டின் அரசியலில் அக்கறை ஏதும் கொள்ளாததும், போராட்ட குணம் இல்லாததுமான தொழிற்சங்கத் தலைமையொன்று தோன்றியது. வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்த தொழிற்சங்க இயக்கம் 1948-50 இல் வளர்ச்சி பெற்றது. அதன் முக்கிய செயற்பாடு ஓரளவு ஊதிய உயர்வைப் பெறுவதும் வேலை நிலைமைகளை ஓரளவு மேம்படுத்துவதும்தான். 1950 இல் மலாயா தொழிற்சங்க கவுன்சில் (இது பின்னர் மலேசியா தொழிற்சங்க காங்கிரஸ் எனப்பெயர் மாற்றப்பட்டது) உருவாக்கப்பட்டது. ஒரு தேசிய தொழிற்சங்க மையமாக செயல்படுவதுதான் இதன் குறிக்கோள். அன்று முதல், தொழிற்சங்க நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. சோறும் கறியும் பற்றிய பிரச்சினைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்ற வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளாகிவிட்டன. ழிற்சங்கங்களின் அரசியல், சமூகப் பாத்திரங்கள் அரசாங்கத்தால் அன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன.”10

இவ்வியக்கமானது ஏகாதிபத்திய நலன்களுக்கு தொழிலாளர்களை தாரை வார்ப்பு செய்கின்ற பணியினையும் மறுபுறமாக அவர்களின் குறைந்தபட்ச உரிமை போராட்டங்களை கூட சமரசம் செய்துவிடுகின்ற பணியினையும் சிறப்பாகவே செய்து வருகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் தமது அடையாளங்களை அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டுத் துறையில் இழந்து நிற்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல.

மறுபுறமாக இம்மக்களிடையே எழுந்த மலேசியன் இந்தியன் காங்கிரசானது மலேசிய தமிழரில் தொகையில் கூடிய தொழிலாள வர்க்கமான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இனத் தனித்துவத்தை சிதைப்பதில் ஆளும் வர்க்கத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அவர்களின் வர்க்க இன தனித்துவத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற பெருந்தோட்ட தொழிற் துறையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் மிக வேகமாகவே செயற்படுத்தி வருகின்றது. இதற்கு எதிராக மக்களிடையே எழுகின்ற போர் குணங்களை திசை திருப்பி அதனை சமரசம் செய்துக் கொள்வதன் மூலமாக முழு மந்திரி அரை மந்திரி பதவிகளையும் பெற்றுக் கொள்கின்ற பணியினை ம.இ.க.வும் இது போன்ற அமைப்புகளும் சிறப்பாகவே செய்து வருகின்றன.

சமகால வாழ்க்கை பிரச்சினைகள்

ஆறாவது மலேசிய திட்டத்தை (1990-1995) தவிர ஏனைய மலேசிய திட்டங்கள் யாவும் தோட்டத் தொழிலாளர்களை வறுமையாளர்கள் என இனம் கண்ட போதினும் அவர்களின் வாழ்க்கை தரத்தை சீர் செய்வதற்கான எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக மலேசிய அபிவிருத்தி திட்டங்களில் மலேசிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர், வருகின்றனர். சமுதாயம் மற்றும் பொருளாதார புறக்கணிப்பின் அடிப்படையில் கடந்த இருபது ஆண்டுகளாக தோட்டங்களில் வாழ்ந்த மலேசிய தமிழர்கள் வேலையில்லாப் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்....”

பல காரணங்களுக்காகத் தோட்டங்களின் அளவு குறைந்ததால் தோட்டங்களில் வேலை செய்து அங்கேயே வாழ்ந்து வந்த 300,000 இந்திய தொழிலாளர்கள் 1980 ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரையில் வேலை இழந்துள்ளனர். இவ்வளவு பேர் இருந்த எல்லாவற்றையும் இழந்து தோட்ட புறத்திலிருந்து நகர்புறத்திற்கு வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்து வந்தது தெரிந்திருந்தும் அதிகாரத்திலுள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. 11நகர்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானோர் கீழ்மட்ட வேலைகளிலே ஈடுபடுகின்றனர் பல தமிழ் இளைஞர்கள் சட்ட விரோத செயற்பாடுகளிலும் குண்டர் படை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரலாயினர்.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.5மூ வீதத்தினரே மலேசிய தமிழர்கள். ஆனால் கடுமையான குற்றச் செயல்கள் மற்றும் குண்டர்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகமான தொகையினராக காணப்படுகின்றனர். ..... தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2005ஆம் ஆண்டில் (மார்ச்சு வரை) கைது செய்யப்பட்டு சிம்பாங்ரெங்கம் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 377 பேர் அல்லது 54 விழுக்காடு இந்தியர்கள்25 மலேசிய அரசாங்கமானது இந்த புள்ளி விபரங்களை தமக்கு சாதகமானவகையில் தூக்கி பிடித்து மலேசிய தமிழர்களை குற்றவாளிகளாக காட்ட முனைவது அபத்தமானது. எங்கெல்லாம் சமுதாய உரிமைகளும் நீதியும் மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வாறான குற்றச் செயல்கள் தோன்றுவது இயற்கையின் நியதி. குற்றங்களுக்காக தனி மனிதனை தண்டிப்பதை விட குற்றங்களின் பிறப்பிடங்களை அழித்து விட வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையினை பொறுத்தமட்டில் கல்வியிலிருந்து இடைவிலகி செல்கின்ற மாணவர்களில் அனேகர் மலேசிய தமிழர்களாவர். சிறுபான்மையினருக்கு எதிரான கல்வித்துறையிலும் தொழில் துறையிலும் காணப்படுகின்ற பாராபட்சம் இதற்கு அடிப்படை காரணமாகும். ‘பூமிபுத்திராக்களுக்கான சலுகை” என்பதன் மறுபுறமாக பூமிபுத்திரா வகைப்பாட்டிற்குள் வராத தமிழரும் சீனரும் அதிகமான பாதிப்புக்குட்பட்டு வருகின்றனர். கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை மலாயர்களே பெற்றுள்ளதுடன் 99மூ வீதத்தினர் அரச தொழில்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில உயர் பதவிகள் மலாயகாரருக்கு உரியதாகவே இருந்து வருகின்றது.

மலேசியாவில் காலத்திற்கு காலம் ‘பூமிபுத்திரர்களுக்காக கொண்டு வரப்படுகின்ற சட்டங்கள் பூமிபுத்திரர்கள் அல்லாத ஏனைய சிறுப்பான்மையினரை பெருமளவு பாதித்துள்ளது. ஒன்பதாவது மலேசிய திட்டம் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. காணிகளை கொள்வனவு செய்தல், மற்றும் வங்கியில் கடன் பெறுதல், அதற்கான வட்டி முதலிய துறைகளில் பூமிபுத்திரர்களான மலாயர்களே அதிகமான லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலை மலேசிய தமிழர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் இட்டுச் சென்றுள்ளது. மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தமிழர்களே அதிகமான உளவியல் பாதிப்பிற்குட்பட்டவர்களாகவும் தற்கொலை புரிந்துக் கொள்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

அண்மைக்கால புள்ளி விபரங்களின் படி 100,000 தமிழர்களில் 21.1 வீதமும் 100,000 சீனர்களில் 8.6 வீதமும் 100,000 மலாயர்களில் 2.6வீதமும் தற்கொலைகள் செய்துக் கொண்டதாக அறியப்பட்டுள்ளன.12 இவ்வகையில் மலேசிய தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் அடக்கு முறைகளில் உட்பட்டு வருகின்றனர் என்பது யதார்த்தமாகும்.

நாம் செய்ய வேண்டியவை :

ஒடுக்குதலுக்கு உட்படும் எந்த மக்கள் பிரிவினரும் அந்த ஒடுக்கு முறை எந்த வடிவில் இடம்பெறுகின்றதோ அந்த வடிவத்திற்கு எதிராக போராட வேண்டியது நியாயமானது என்ற வகையில் மலேசிய தமிழர்கள் தமது கலாசார ஒடுக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது முற்போக்கானது. அதே சமயம் அவ்வார்ப்பாட்டங்கள் இந்துத்துவ அடிப்படை வாதத்திற்குள் மூழ்கி விடாமல் இருக்க வேண்டியது முக்கியமாதொன்றாகும் மலேசியாவில் இடம்பெற்ற கலாசார ஒடுக்குமுறைக்கெதிரான இந்து மக்களின் போராட்டங்களை இந்தியாவில் இடம்பெற்று வருகின்ற இந்து தீவிரவாத இயக்கங்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது அது பல்வேறு அம்சங்களில் குணாம்ச ரீதியான வேறுபாடுகளையும் வர்க்க நலன்களையும் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.

இந்தியாவில் இடம்பெற்று வருகின்ற இந்துத்துவவாதிகளின் போராட்டமானது இந்து மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்து காணப்படுகின்றது. ஆனால் மலேசியாவை பொறுத்தமட்டில் தமது உரிமை மீறல்களுக்கெதிராக தமிழர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மலாயர்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் வலியுறுத்த வேண்டும். ஒடுக்கும் இனத்திலுள்ள அனைவரும் இன ஒடுக்கலின் மூலமாக நன்மை பெறுவோரல்ல; பெரும்பாலானோர் பொருளாதார சுரண்டல்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உட்பட்டு வருகின்றவர்கள்.

“அமெரிக்க ( யூ.ஸ்.) நீக்ரோ இன விடுதலை போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களிற் தொடங்கி பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும், அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசாகத் தொடரும்வரை ஒழியப்போவதில்லை. நீக்ரோ மக்களதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ‘pஸ்பானிக் (ஸ்பானிய மொழி பேசும் லத்தின் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லறைத் சீர்திருத்தங்கள் பிரச்சனையின் ஆணிவேரைத் தொட தவறிவிட்டன. எனவே, அவர்களது இன விடுதலை போராட்டம் தொடர்கிறது அவர்களது நீண்ட கால கலாசார வரலாற்று வேறுபாடுகள் அவர்களைத் தனித் தேசிய இனங்களாக அடையாளங் காட்டினாலும் அவர்களது போராட்டம் பிரிவினைப் போராட்டமாக வடிவம் பெற இயலாது.

அமெரிக்க நீக்ரோக்களை ஒரு சுதந்திர தனி நாடாக்கும் கருத்து சில இயக்கங்களால் 60களில் முன் வைக்கப்பட்டு பெருவாரியான நீக்ரோ இனத்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. இன்று தென் ஆபிரிக்கா (அசானியா) வில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் முன்பு ஸிம்பாப்வேயில் நடந்ததும் உள் நாட்டில் இருந்த வெள்ளை இன வெறி அதிகாரத்திற்கு எதிரானவை. வெள்ளை இன மக்களும் ஒடுக்கப்பட்ட ஆபிரிக்கா மக்களும் பெருமளவிற்கு ஒரே தேசத்திற்குரிய இயல்புகளை உடையவர்களல்ல. ஆயினும் அந்த நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் அங்கு வெவ்வேறு சுதந்திர நாடுகளை உருவாக்குவது தொடர்பானவையல்ல. அங்கே, விடுதலைப் போராட்டத்தின் மூல நோக்கம் நிறம், இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒடுக்க அனுமதியாத ஐக்கியமான சுதந்திர தேசத்தை உருவாக்குவதாகும்.13

அந்த வகையில் மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற தமிழர்களின் கலாசார ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமானது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் பின்வரும் அம்சங்களும் இணைக்கப்பட வேண்டுமென்பது காலத்தின் தேவையானது.

மலேசிய தமிழரின் பாரம்பரியமான பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் முழு அதிகாரங்களும் கொண்ட பூரணமான சுயாட்சி முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இப்பிரதேச சுய ஆட்சியின் கீழ் அவர்களின் பொருளாதாரம், நிதி, நிர்வாகம், மொழி கல்வி போன்ற விடயங்கள் நிர்வகிக்கப்படல் வேண்டும். இனம், தேசியம், மதம் அல்லது மொழி என்பவற்றினால் ஒரே மக்கள் கூட்டத்தில் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்ட மக்கள் கூட்டம் என அவர்கள் கொள்வார்களாயின் அந்த இனம் ஒரு தேசிய இனம் என்று அழைக்கப்படலாம் என அண்மைகால சமூகவியல் அறிஞர்கள் எடுத்து கூறியுள்ளனர். அந்த வகையில் மலேசிய தமிழர்கள் தொடர்ச்சியான பிரதேசத்தை கொண்டிராமையின் காரணமாகவும் பெரும்பான்மையின மக்களிடையே பேரினவாத கருத்துக்கள் செல்வாக்கு பெற்றுள்ள மக்களிடையே வாழ்ந்து வருகின்றவர்கள் என்ற வகையிலும் மலேசிய தமிழர்கள் தொடர்பான அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதில் நிதானம் தேவை

மலேசிய தமிழர்களின் இனவொடுக்கு முறைகளுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமானது குறுகிய இனவாதமாகவோ ஏனைய இனங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தனிநபர் குழு போராட்டங்களாகவோ முன்னெடுக்கப்படாமல் பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக அது அமைய வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலேசிய தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது.

இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங்களில் மலேசிய தமிழர்களிடையே எழுந்த மக்கள் இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வியக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.

மலேசிய தமிழர் தமது தன்னடையாளங்களையும் கலாசார பண்பாட்டு பாரம்பரிய கூறுகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் அவசியம். இவற்றை பாதுகாத்தல் என்பதன் மறுபுறமாக தமிழர் சமுதாய அமைப்பில் புரையோடிப் போயிருக்கின்ற பிற்போக்கு கலாசாரத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கவனங் கொள்ளாது விட அவசியமில்லை தமிழர் தமது பண்பாட்டை முன்னோக்கி தள்ள கூடிய நாகரிகமான கலாசார தன்னடையாளங்களை வளர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

மலேசிய அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் கொண்டு வரப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களில் தமிழரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகான போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். தோட்டங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் தோட்டங்களுக்கு அருகாமையிலே குடியிருப்பு திட்டங்களை உருவாக்கி தருவதற்கான முயற்சிகள் மேற்கொளள்ப்பட வேண்டும். குறிப்பாக மலேசியதமிழர்கள் அந்நாட்டின் மூன்றாவது தேசிய இனம் என்ற வகையில் அவர்களின் இனத்துவ அடையாளங்களை சிதைக்காத வகையில் அத்திட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.

குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தொழிலாளர்களுக்கான சுகாதார வசதி, வீட்டு வசதி குழந்தை பராமரிப்பு வசதி என்பன வழங்குவதற்கு அரசை நிர்பந்தித்தல் வேண்டும். மலேசிய தமிழரின் கல்வி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். சகலருக்கும் சமத்துவமான கல்வி என்ற அடிப்படை கோரிக்கையானது கல்விக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதாக மட்டுமன்று கல்வியில் தமது மொழியுரிமையையும் வென்றெடுப்பதாக அமைய வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுபேறு என்பது இன்றைய ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கான கூலி பட்டாளத்தை உருவாக்குகின்ற நோக்கிலிருந்து விடுபட்டு மானுட மேன்மையை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

மலேசிய தமிழருக்கும், சீனருக்கும் - மலாயர்களைப் போல அரச தொழில்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தல் வேண்டும். சில உயர் பதவிகள் மலாயர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி திறமையின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு நியமனம் செய்யப்படல் வேண்டும். மலேசிய தமிழ் பெண்கள் குறித்த விசேட கவனம் செலுத்தல் வேண்டும். உழைப்பு சுரண்டல், போசாக்கின்மை முதலியவற்றில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மற்றும் இன்று மலேசியாவில் புதியதொரு சந்தையாக வளர்ந்து வருகின்ற பாலியல் தொழிலாளர்களின் உடல் விற்பனை மிகுந்த வேதனைக்குரியதொரு விடயமாக காணப்படுகின்றது. இந்நிலைமை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

முடிவுரை

மலேசியாவில் நீதிக்கும் சமத்துவத்துக்கமான போராட்டத்தில் மலேசிய தோட்டத் தொழிலாளர்களை இன ரீதியாக தனிமைப்படுத்தி அவர்களின் சமுதாய உணர்வை சிதைக்கின்ற முயற்சியில் மலேசிய அரசாங்கமும் ஏகபோக வர்க்கமும் ஓரளவு வெற்றிக் கண்டுள்ளது எனக் கூறின் தவறாகாது. இந்நிலiயில் மலேசிய தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்தித்தல் அவசியமாகும். இவ்வமைப்பானது தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற அதே சமயம் அதன் ஜனநாயக சக்திகளை தன்னுள் உள்ளடக்கிய அமைப்பாக வளர வேண்டும். அத்துடன் அவ்வமைப்பானது நீண்ட கால தொழிலாளவர்க்க அரசியலைக் கொண்டு முழுமக்களையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அது முழு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுதல் முக்கியமானதொரு விடயமாகும்.

மலேசிய தமிழரின் அபிலாஷைகள பூர்த்தி செய்ய முடியாது அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைகளால் எதனையும் (தலைவரையும் அவரை சார்ந்தோரின் குடும்ப நலன்கனையும் தவிர) சாதிக்க முடியாது என்பதை ம.இ.க.வினதும் அதன் தலைவர் டத்தோ சாமிவேலுவினதும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இது பேரம் பேசும்அரசியலுக்கும் அதன் தலைவருக்கும் கிடைத்த தோல்வியாகும். இவ்வாறானதோர் சூழல் புதிய தலைமைத்துவத்திற்கான தேவையை தமிழர் மத்தியில் உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் உருவாகின்ற ஸ்தாபனம் ஒன்றின் மூலம் மலேசிய தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும்.

அடிக்குறிப்புகள்

1. மலேசியாவில் இந்துக்கள் புறக்கணிக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் சாமிவேலு கூறுகிறார்.’ –
தினக்குரல குரல் 09ஃ12ஃ2007
2. மார்க்ஸ் கார்ல், ஏங்கல்ஸ் பிரெடரிக், இந்தியாவைப் பற்றி நியூசெஞ்சரி புக் ‘வுஸ் சென்னை
3. மோகன்ராஜ் (1984) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், (மலையக மக்களின் வரலாறு), ஈழம் ஆய்வு நிறுவனம், சென்னை, பக். 70-71.
4. ஆறுமுகம்.கா (2006) மார்ச் 08 செம்பருத்தி பதிப்பகம், கோலாம்பூர். பக். 85.
5. காத்தையா ஜீவி (2007 பெப்ரவரி) ‘தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை, - திட்டமிட்டுக் கொல்லப்படுகின்றது. ஆட்சியில் இருப்பவர்களால்!” செம்பருத்தி இதழ் (கோலாம்பூர்) பக்.08.
6. அதே கட்டுரை பக்.08
7. அதே கட்டுரை பக்.
7b Disanayake J.B. (2002) ‘A Langnage at the Cross Roads: The case in Sinhala’ - C.W.W. Kanangara memorial lecture, N.I.E. Maharagama p.11.
8. வரதராசு,மு. எங்கே என் பங்கு - தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சனைகள், மீடியா பிரிண்டர்ஸ். சென்னை, பக். 32.
9. கந்தையா ஜீவி (2006) ‘மலேசிய தொழிற்சங்க போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் - ஒரு கண்ணோட்டம்” செம்பருத்தி இதழ் (பெப்ரவரி) பக். 36.
10. வரதராசு. மு. மேற்படி நூல் பக்.35
11. கந்தையா ஜீவி (2006) ‘பூமிபுத்திராக்களின் நிறுவன பங்குடமை 18.9 விழுக்காடா? அல்லது 45 விழுக்காடா? அல்லது 50 விழுக்காடா அல்லது 36.64 விழுக்காடா? எது சரி” செம்பருத்தி இதழ் (டிசம்பர்), கோலாலம்பூர். பக்.14.
12. அதே கட்டுரை பக். 20.
13. இமயவரம்பன் (1988), இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும், புதிய பூமி வெளியீட்டகம், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை. பக். 22, 23.

- லெனின் மதிவானம்

Pin It