மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவை மாநகரில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அநேகமாக இம்மாநாட்டின் பல்வேறு செய்திகளையும், நடவடிக்கைகளையும் அனைத்து ஊடகங்களும் ஏதோ ஒரு விதத்தில் பதிவு செய்துள்ளன. இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது, இந்த மாநாடு என்ன சாதித்தது என்பதுதான். பல்வேறு விசயங்களை முன்வைத்து ஊடகங்கள் எழுதியிருந்தாலும் இந்த மாநாட்டின் மையமான அரசியல் அம்சத்தை விமர்சனப்பூர்வமாக ஆய்வு செய்திருக்கின்றனவா என்றால் அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

இங்கே அதன் மைய அம்சங்களை முன்வைத்து ஒரு விவாதத்தை நடத்துவதே எமது நோக்கம். அதன் வழியாக இந்த மாநாட்டின் அரசியல் முக்கியத்துவத்தை சொல்ல முயல்கிறோம்.

மாநாட்டிற்கு முன்பும், மாநாடு நடைபெற்ற சமயங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி மூன்றாவது மாற்று அணியை உருவாக்குவது பற்றி பல்வேறு ஊடகங்கள் பேசின. ஆனால் அதை மக்கள் மத்தியில் விளக்குவது பற்றி எந்தத் தெளிவான செய்தியும் ஊடகங்களால் முன்வைக்கப்படவில்லை. மேலும் மூன்றாவது அணி வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி அவை அலசியதன் மூலம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே அவை செயலாற்றின அல்லது அவை குழம்பிப் போயுள்ளன என்று சொல்லலாம்.

இந்த மாநாட்டின் முடிவாக மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டமான ஒரு அரசியல் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. அதன் சாரம்சத்தை பின்வருமாறு கூறலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த பலத்தை மக்கள் போராட்டங்கள் மூலமாக அதிகரிப்பது, ஒரு அகில இந்திய கட்சி என்ற முறையில் நாடு தழுவிய வளர்ச்சிக்கு முயற்சி செய்வது. இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்துவது. இதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு எதிரான, காங்கிரஸ் அல்லாத இதரக் கட்சிகளை சேர்த்து ஒரு மாற்று அணியை உருவாக்குவது. இப்படி உருவாக்கப்படும் அணி இயல்பிலேயே மதவெறியை எதிர்க்கக்கூடியதாகவும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதார கொள்கைகளை பின்பற்றக்கூடியதாகவும் இருக்கும்.

இப்படி உருவாக்கப்படும் மூன்றாவது அணி என்பது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கக் கூடியதாகவும், சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை பின்பற்றக்கூடியதாகவும், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்கக்கூடிய தலித்துக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்..

இந்த அணியை உருவாக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த வளர்ச்சிக்காக முன்வைக்கும் ஒரு ஏற்பாடு அல்ல. மாறாக கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்திய அரசியலில் நிகழ்ந்துவரும் செயல்பாடுகளின் அனுபவத்தை ஆய்வு செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்பதை தனது திட்டமாகக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அதை நோக்கிய பயணத்தில் ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறது. எனினும் தற்போது கோவை மாநாட்டில் சொல்லப்பட்டிருக்கும் மூன்றாவது மாற்று அணி என்பது இடதுசாரி ஜனநாயக மாற்று என்று குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. அது வேறு, இது வேறு. மூன்றாவது மாற்று அணி என்பது இடது ஜனநாயக அணியை நோக்கிய பயணத்தில் ஒரு இடைக்கட்டம்தான்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி அரசு, 1996 ல் ஐக்கிய முன்னணி அரசு ஆகிய இரு கூட்டணி அரசுகள் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத அணிகளாக ஆட்சியில் அமர்ந்தன. ஆனால் அவை இரண்டும் தங்கள் முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் கவிழ்க்கப்பட்டுவிட்டன. இடைப்பட்ட காலத்தில் இந்த அணியை சிதறடித்து இதில் இருந்த பல்வேறு கட்சிகளை அணிச் சேர்த்து வகுப்புவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியதுடன் ஆறாண்டு காலம் ஆட்சி செய்யவும் முடிந்தது.

இந்த காலத்தின் அனுபவம் எதை உணர்த்துகிறது? ஒரு தெளிவான மாற்றுக் கொள்கை இல்லாமல் கூட்டாஞ்சோறாக உருவாக்கப்படும் அணி என்பது நிலைக்காது என்பதுதான். இத்தகைய சந்தர்ப்பத்தில் வகுப்புவாத சக்திகள் மக்கள் தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாக திசை திருப்பிக் கொள்ளவும் முடிகிறது என்பது அதன் தொடர்ச்சியான விளைவாக இருக்கிறது.

தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும் இதில் காங்கிரஸ் கட்சி தனது பாரம்பரியமான எதேச்சதிகார குணத்தோடு தாராளமயப் பொருளாதாரக் கொள்கையையே தொடர்கிறது என்பதுதான் கடந்த நான்காண்டு கால அனுபவமாக இருக்கிறது.

இத்தகைய அனைத்து மையமான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் 1989 ம் ஆண்டு தொடங்கிய கூட்டணி சகாப்தத்தின் அனுபவங்களாகும். 1989 முதல் 2008 வரை இந்த இருபது ஆண்டுகளில் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 1991-1996 ஒரு ஐந்தாண்டு காலத்தில் மட்டுமே காங்கிரஸ் தனி அரசு நடந்தது. 1989, 1996 ஆகிய இரு முறை ஏற்கெனவே சொன்னதுபோல காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத அரசுகள் ஆட்சி அமைத்தன. 1998-99, 1999-2004 ஆகிய இரு முறை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.

இந்த அனைத்துத் தேர்தல்களையும் அதற்கு பிந்தைய அரசியல் அணிச் சேர்க்கைகளையும் கூர்ந்து ஆய்வு செய்தால் காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ தனித்த பெரும்பான்மை பெறவில்லை என்பது மட்டுமல்ல, இதர மாநில, பிராந்திய கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் கணிசமான அளவு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளனர் என்பதையும் காணலாம்.

இதன் அர்த்தம் என்னவென்றால் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அணியின் தேவையை மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலமாக உணர்த்தி வருகின்றனர் என்பதுதான். அதாவது பாரதிய ஜனதாவின் வகுப்புவெறியை நிராகரிப்பதுடன், காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் போட்டி போட்டு பின்பற்றும் எதேச்சதிகாரமான தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

அதே சமயம் மக்கள் வழங்கும் தீர்ப்பு ஒரு தெளிவான அரசியல் வடிவம் பெற முடியாதபடி பாரதிய ஜனதாவும், காங்கிரசும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றன. இது போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு இடையேயும் மறுபடியும், மறுபடியும் இரு பெரும் கட்சிகள் அல்லாத மாற்றுக் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறவும், அவற்றின் போட்டிக்களம் என்பது பரஸ்பரம் பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே என மாறுவதும் புதிய அறிகுறிகளாக இந்திய அரசியலில் முன்னுக்கு வருகின்றன.

மேற்சொன்ன ஒட்டுமொத்த அனுபவத்தின் வாயிலாகத்தான் மதவெறி எதிர்ப்பு, மக்கள் நல பொருளாதார நடவடிக்கைகள், சுயேட்சையான அயலுறவுக் கொள்கை என்ற அடிப்படையில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி முயல்கிறது. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இந்த அணி சிதறுண்டு போகாமல் இருக்க வேண்டுமானால் அவை மேற்சொன்ன கொள்கைகளை மையப்படுத்தியதாகவும், தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள், கிளர்ச்சிகளால் உருவாக்கப்பட்டு ஒன்றுபடுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இதன் மூலமாகத்தான் இந்திய மக்களின் ஜனநாயகப்பூர்வமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒரு மாற்று மேடையாக இது இருக்க முடியும்.

இதுதான் 19வது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி வடித்திருக்கும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படை நோக்கம். இது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இத்தகைய ஒரு அணியை உருவாக்குவது என்று வரும்போது பாரதிய ஜனதா எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இதில் சேரக்கூடாது என்பது உள்ளபடியே ஆளும் வர்க்க சார்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் இத்தகைய ஒரு மாற்று என்பது நடைமுறையில் உருப்பெற்று இந்திய மக்களிடம் நிலைபெறுமானால் பிற்பாடு பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் மக்கள் தளம் கடுமையான அரிப்பைச் சந்திக்கும் என்பதும், சீர்குலைவு மதவெறி, பொருளாதார கொள்கைகளை தானடித்த மூப்பாக சுலபமான முறையில் திணிக்க முடியாது என்பதும்தான். எனவேதான் இந்தியாவின் பெரு முதலாளிகளால் நடத்தப்படும் பல்வேறு ஊடகங்களும் இத்தகைய ஒரு அணி உருவாக்கத்தைப் பற்றி கடுமையான எதிர் விமர்சனத்தை வைத்து குழப்புகின்றன.

அதே சமயம் காலத்தின் அனுபவம் இத்தகைய அணி சாத்தியமானதே என்பதை தெளிவாக காட்டுகிறது. மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி தனது சொந்த பலத்தை அதிகப்படுத்தி, இடதுசாரி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலமாகவும் இந்த அணி உருவாதற்கான அடிப்படை உத்தரவாதத்தை உறுதிப்படுத்துகிறது. ஏனோதானோ என்றில்லாமல் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் அதே சமயம் எதிர்காலத்தின் முன்னறிவிப்பாளனாகவும் மார்க்சிஸ்ட் கட்சி தனது அரசியல் நிலைபாட்டை தீர்மானித்துள்ளது. இது வெற்றி பெற வேண்டியது மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த நன்மைக்காக அல்ல, இந்த நாட்டின் நல்லெதிர் காலத்தின் நன்மைக்கான ஒரு உத்தரவாதமாகும். இது வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்றே தீரும். இனி வரும் காலம் அதை நடைமுறை அனுபவமாக உறுதிப்படுத்தும். இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் முக்கியத்துவம்.

- மதுராஜன்

Pin It